கரூர் கூட்ட நெரிசல் மரண விவகாரத்தில் திமுக ஆதரவான பார்வைகளே அதிகம் வெளிப்பட்டு வந்த சூழலில், த.வெ.க தரப்பிலான குரல்கள் தற்போது உச்சநீதிமன்றத்தில் ஒலித்துள்ளது. நீதிபதிகள் வழக்கை அணுகிய விதம் அரசியல் அழுத்தங்களை கடந்து நீதி நிலை நாட்டப்படும், உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது;
ஆனால், பெரும்பாலான தமிழக ஊடகங்கள் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நடந்தவற்றை முழுமையாக வெளியிடாமல் மேம்போக்காக பிரசுரித்துள்ளனர். இது எந்த அளவுக்கு அரசியல் அழுத்தங்கள் ஊடகங்களின் மீது இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது அல்லது ஊடகங்கள் அவற்றுக்கு இடம் தருகின்றன என்பதற்கு உதாரணமாகும்.
கரூர் கூட்ட நெரிசல் அசம்பாவிதங்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு காத்திரமான முறையில் கேள்விகள் எழுப்பி உள்ளனர்;
# கரூர் நெரிசல் சம்பவத்தின் வழக்கு உயர்நீதிமன்ற மதுரையின் விசாரணை வரம்பிற்கு உட்பட்டது. மதுரை அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த பிறகு அதை சென்னை உயர்நீதிமன்றத் தனி நீதிபதி ( செந்தில்குமார்) விசாரித்தது ஏன்?
# சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கானது சாலையில் நடக்கும் அரசியல் கூட்டங்களை முறைப்படுத்துவது தொடர்பாக நிலையான செயல்பாட்டு நடைமுறையை வகுக்கக் கோரும் மனுவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் போது, இந்த வழக்கை வலிந்து கிரிமினல் வழக்காக மாற்றி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து எப்படி சிறப்பு விசாரணை குழுவின் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தார்?
# இரு நீதிபதிகள் ஒரு வழக்கை விசாரிக்கும் போது, அதே வழக்கை ஒரு தனி நீதிபதி தானும் விசாரிக்க துணிவதில்லை. அவர் தானாக பின் வாங்கி விடுவதைத் தான் அனுபவத்தில் கண்டுள்ளோம். ஆனால், சென்னையிலோ மனுதாரரின் கோரிக்கையையும் தாண்டி, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்திரவிட்டது எப்படி? என்பது எங்களுக்கு புரியவில்லை.
# நெரிசல் நடந்த 3 முதல் 4 மணி நேரத்தில் ( 39 உடல்கள்) பிரேதப் பரிசோதனை நடந்துள்ளது. அங்கே கரூரில் பிணக்கூறாய்வு செய்வதற்கான கட்டமைப்பு உள்ளதா? இதற்காக எத்தனை டேபிள்கள் இருந்தன? இந்த நிகழ்வுக்கு காவல் துறையோ அல்லது வேறு அரசியல்வாதிகளோ காரணம் என சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இப்படி செய்யப்பட்டதா?

தவெக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், “உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையில் தவெக இணைக்கப்படாத நிலையில் எங்களுக்கு உரிய வாய்ப்பளிக்காமல், த.வெ.க தலைவர் விஜய் மற்றும் தவெக தலைவர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஓடிவிட்டதாகவும் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க, உடனடியாக வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தியதால் தான், கரூரில் இருந்து விஜய் புறப்பட்டு சென்றார். அத்துடன் அங்கிருந்த த.வெ.க., நிர்வாகிகள், பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை. பொது ஒழுங்கை நிலைநாட்டவே எனது கட்சிக்காரர் (விஜய்) அந்த இடத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவ எங்கள் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையில் தவெக தரப்பை விசாரிக்கவோ, எது ஒன்றையும் கேட்கவோ இல்லை. ஆனாலும் முதல் நாளிலேயே நீதிமன்றத்தால் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதோடு, தவெக மற்றும் விஜய்க்கு எதிராக உயர்நீதிமன்ற தனி நீதிபதி கடுமையான கருத்துக்களை வெளியிட்டார். இது விசாரணை நேர்மையாக நடைபெறுவதை பாதிக்கும்.
மேலும், மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, ”கரூரில் அதிமுகவின் சாலை பேரணிக்கு மாநில காவல்துறை அனுமதி மறுத்தது. அது ஒரு குறுகிய இடம் என்றும், ஏதேனும் அசம்பாவிதம் நடக்கலாம் என்று கூறி இருந்த நிலையில், தவெக கட்சிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? அரசு நியாயமாக இருந்திருந்தால் ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்திருக்கலாம். கூட்ட நெரிசல் தன்னிச்சையாக நிகழ்ந்தது அல்ல. அன்று பிற்பகல் 3 மணி முதல் சில திமுகவினர்கள் கூட்டத்தில் ஊடுருவி ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகின்றது என பேசிக்கொண்டிருந்தனர்.

ஒரே குடும்பத்தில் இரு பெண்களை பலி கொடுத்த பிரபாகரன் என்பவர் தரப்பில் தன் தங்கையையும், கல்யாணம் செய்யவிருந்த முறைப்பெண்ணையும் இழந்த சூழலில் கூறியதாவது; காவல்துறை காரணமே இல்லாமல் லத்தி சார்ஜ் செய்து நெரிசலில் உழன்ற மக்களை சிதறடித்தது… திமுகவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நம்பர் பிளேட் இல்லாத ஆம்புலன்ஸ்கள் நெரிசல் மிக்க கூட்டத்தில் ஊடுருவியது, சமூக விரோத கும்பல் கூட்டத்தில் செருப்பு உள்ளிட்டவற்றை வீசியது..’’ என வாதிடப்பட்டது.
ஏற்கனவே தமிழக அரசு தனி நபர் விசாரணை ஆணையத்தை நியமித்த நிலையில் சிறப்பு விசாரணைக் குழுவை யாருமே கேட்காத நிலையில் – அதுவும் குற்றச்சாட்டுக்கு உள்ளான – காவல்துறையில் உள்ள அதிகாரிகளைக் கொண்டே தன்னிச்சையாக அறிவித்துள்ளது அரசியல் நோக்கம் உள்ளதாகும். இது விசாரணையின் போக்கை சிதறடிக்கும் என்பதால் மையப்படுத்தப்பட்ட ஒரே அமைப்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்’’ என்றனர்.
தன் மகனை பறிகொடுத்த தந்தை ஒருவரும் சம்பவத்திற்கு காரணமான காவல் துறை மீது நம்பிக்கை இல்லை. ஆகவே சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றார்.
இதற்கு தமிழ் நாட்டரசு சார்பிலான வழக்கறிஞர்கள் சிபிஐ முன்பு அதிக அளவிலான வழக்குகள் குவிந்து கிடக்கும். ஆனால், சிபிஐக்கு இருப்பதோ Limited Resource தான். விதி விலக்கான சூழலில் மட்டுமே சிபிஐ வழக்கை விசாரிக்கும்” என வாதிட்டனர். மேலும், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐக்கு வழக்கை மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
Also read
சபாஷ். மதுரை மடப்புறம் அம்மன் கோவில் காவலாளி கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக போலீசே எளிதில் விசாரிக்க முடிந்த ஒரு எளிய வழக்கில் யாரிடமிருந்தும் கோரிக்கை வராமலே முதல்வர் ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு அதை தள்ளி விட்டார் என்பது நினைவு கூறத்தக்கது.
தமிழ் நாடு அரசு வழக்கறிஞர் வில்சன், தற்போது வரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் நேரில் சென்று பார்க்கவில்லை என நீதிமன்றத்தில் கூறினார். இதற்கு நீதிபதிகள் தரப்பில் வழக்கு சிபிஐ விசாரணை தேவையா? என்பது குறித்தானது. அதற்கும் நீங்கள் குறிப்பிடும் செய்திக்கும் தொடர்பில்லை என்றனர்.
பார்ப்போம், அடுத்தடுத்து விசாரணை எப்படி போகிறது? என!
சாவித்திரி கண்ணன்















கடமை கண்ணியம் கட்டுப்பாடு வாழ்க!
உங்களின் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாது. விஜய் போன்ற நபர் நமது ஜனநாயக நாட்டுக்கு ஆபத்தான அரசியல் கொரோனா கிருமி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
SK is known for soft peddaling or supporting vijay right from the beginning.. we can see it very clearly from his (biased) articles in the past. With this, one is added to the list. Nothing to say..