சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயிலுக்கு வெளியில், சில தினங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி என்ற வழக்கறிஞரின் இருசக்கர வாகனம் மீது விசிக தலைவர் திருமாவளவன் கார் மோதியதுடன், அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். அவரது இரு சக்கர வாகனத்தை சாலையில் தள்ளி சேதப்படுத்தி உள்ளனர்.
உயிருக்கு பயந்து ராஜீவ் காந்தி பார் கவுன்சில் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், அந்த அலுவலகத்திற்கு உள்ளேயே அத்துமீறி நுழைந்த வி.சி.கவினர் ராஜீவ் காந்தியை சரமாரியாக தாக்கியதுடன் பார் கவுன்சில் பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். பார் கவுன்சில் சிசிடிவியில் பதிவான தாக்குதல் நிகழ்வை காவல்துறை வைத்துள்ளனர். நடவடிக்கை எப்போது?
வழக்கறிஞர் ராஜீவ்காந்தி தாக்கப்பட்ட நிகழ்வு பார் கவுன்சில் அலுவலக சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இச்சம்பவத்தை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பார்த்து தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அரசியல் காரணங்களுக்காக பழி போடுவதாக கூறுவார்கள் என்பதால், இச்சம்பவம் தொடர்பாக நான் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தேன்.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக திருமாவளவன் ஊடகங்களில் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்ததோடு ’’எங்களைப் பார்த்து முறைத்ததற்காக எங்கள் கட்சியினர் நாலு தட்டு தட்டினார்கள். அதையும் ஒழுங்காக கூட செய்யவில்லை. அவர் எந்த ஜாதி என்று பார்த்து அடிக்கவில்லை’’ என்று ஆணவமாக கருத்து தெரிவித்து உள்ளார் இது வன்மையாகக் கண்டிக்க தக்கது.
பார்கவுன்சில் அலுவலகத்திலிருந்து சிசிடிவி பதிவை கைப்பற்றிய காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ராஜீவ் காந்தி அளித்த புகார் மீது இதுவரையில் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் பார் கவுன்சில் அலுவலகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக பார் கவுன்சிலும் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்காததோடு அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. விசிக தலைவர் திருமாவளவன் பார் கவுன்சிலில் பதிவு செய்த ஒரு வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உயர்நீதிமன்றத்தின் முன் நிகழ்ந்த இந்தக் கொடிய தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக பார் கவுன்சில் நிர்வாகிகள் மீது தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த விவகாரத்தில் பார் கவுன்சில் அதன் கடமையைச் செய்ய வேண்டும் என்று என பார் கவுன்சில் தலைவர் சகோதரர் திரு அமல்ராஜ் அவர்களிடம் தெரிவித்தேன். அதன் பிறகும் அவர் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாமல் அமைதி காத்து வருவது பெரும் கவலை அளிக்கிறது. வழக்கறிஞர் நலனை பாதுகாக்க வேண்டியது தான் பார் கவுன்சிலின் முதன்மைக் கடமை ஆகும்.
உயர்நீதிமன்றத்தின் முன் நடந்த நிகழ்வு எதிர்பாராத ஒன்றாக, திடீர் கோபத்தின் விளைவாக இருந்து, பாதிக்கப்பட்டவரிடம் தாக்குதல் நடத்தியவர்கள் வருத்தம் தெரிவித்திருந்தால் இதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கருதி கடந்து சென்றிருக்கலாம். உண்மையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை அவர்களின் தலைவர் திருமாவளவன் அவர்களே கண்டித்திருக்க வேண்டும். ஆனால், உயர்நீதிமன்ற வாயில் முன்பாக காவல்துறையினர் முன்னிலையில் வழக்கறிஞரை தாக்கியவர்களை பாதுகாக்கும் வகையில், திருமாவளவன் தொடர்ந்து ஆணவத்துடன் கருத்து தெரிவித்து வருவது வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
உயர்நீதிமன்ற வாயில் முன் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஒரு புறமிருக்க, பார் கவுன்சில் வளாகத்திற்குள் நுழைந்தும் அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் புனிதம் கறைபட்டிருக்கிறது. பார் கவுன்சில் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்து அவர்களை கைது செய்து தண்டிக்க வைப்பது; வழக்கறிஞர்களான அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றின் மூலமாக மட்டுமே பார்கவுன்சிலின் புனிதத்திற்கு ஏற்பட்ட கறையை கழுவ முடியும். பார் கவுன்சில் நிர்வாகம் அதை செய்யப் போகிறதா அல்லது புனிதத்தைக் கெடுத்தவர்களை பாதுகாக்கப் போகிறதா? என்பது தான் எனது வினா.
இந்திய பார்கவுன்சில் மற்றும் அதன் கீழ் இயங்கும் மாநில பார் கவுன்சில்கள் 1961-ஆம் ஆண்டின் வழக்கறிஞர்கள் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டவை ஆகும். அந்த சட்டத்தின் 6-ஆவது பிரிவில் மாநில பார் கவுன்சில்களின் கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதில் உட்பிரிவு டி -யில் பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் வழக்கறிஞர்களின் உரிமைகள், சிறப்புரிமைகள், நலன்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டியது மாநில பார் கவுன்சிலின் கடமை ((d) to safeguard the rights, privileges and interests of advocates on its roll;) என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்தக் கடமையை செய்ய முடியாமல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதைக் கண்டு, அதன் உறுப்பினர், இணைத் தலைவர், வழக்கறிஞர் பதிவுக் குழு தலைவர் என்ற முறையில் நான் தலை குனிகிறேன்.
சர்வாதிகாரம் கொண்ட ஆணவப் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதே செயலை வேறொரு கட்சியை சார்ந்தவர் அல்லது வேறொரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் மேற்கொண்டு இருந்தால் இதே நிலைப்பாட்டைத் தான் பார் கவுன்சில் மேற்கொண்டு இருக்குமா? என்ற கேள்வியை என் பெருமதிப்பிற்குரிய பார் கவுன்சில் உறுப்பினர்கள் முன் நான் எழுப்ப விரும்புகிறேன்.
நிலைமையை உணர்ந்து பார் கவுன்சில் தலைவர் பார் கவுன்சில் பொதுக்குழுவை உடனடியாக கூட்டி விவாதித்து, கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீதும் அதற்கு காரணமான விசிக தலைவர் திருமாவளவன் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
வழக்கறிஞர் கே பாலு
இணைத்தலைவர் மற்றும்
தலைவர் வழக்கறிஞர் பதிவுக் குழு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்














, ஆட்சியில் பங்கு இல்லாத போதே இவ்வளவு ஆட்டம். பங்கிருந்தால் கேட்கவே வேண்டாம். ஆளும் கட்சியுடன் கூட்டணியுடன் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.