காந்தி தினசரி சுமார் 80 கடிதங்கள் எழுதியுள்ளார். குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழிலும் எழுதியுள்ளார். சக மனிதர்கள் மீதான அன்பு, கரிசனம், அக்கறை.. ஆகியவற்றை அவரது கடிதங்கள் வழியே அறிய முடிகிறது. பிரபலங்கள் தொடங்கி சிறு பிள்ளைகள் வரை எழுதப்பட்ட பரஸ்பர கடித பரிமாற்றங்கள் வெகு சுவாஷ்யமானவை;
காந்தியின் கடிதங்கள்’ என்ற தலைப்பில், புது தில்லியில் உள்ள காந்தி தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநரான அண்ணாமலை, திருவொற்றியூர் கிளை நூலகத்தில், இரண்டாவது சனியன்று உரையாற்றினார். காந்தியின் எண்ணவோட்டம், எளிமை, அழகியல், வீச்சு என அவரது பல பரிமாணங்களையும் அவரது கடிதங்கள் வாயிலாக விவரித்தார்.
திருவொற்றியூர் அரசு கிளை நூலகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக வாசகர் வட்டம் சார்பில் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிக அளவில் உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பாக நடைபெற்று வரும் அதன் நூலகராக லதா இருக்கிறார்.
காந்தியின் கடிதங்கள் என்ற தலைப்பில், காந்தி தேசிய அருங்காட்சியக இயக்குநர் அண்ணாமலை பேசியதாவது :
‘ காந்தியடிகள் ஒரு நாளைக்கு சராசரியாக 80 கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய 40,000 கடிதங்கள் தில்லி அருங்காட்சியகத்தில் உள்ளன. பல்வேறு நாடுகளில் உள்ளவர்களுக்கு காந்தி கடிதம் எழுதியிருப்பதை இவருக்கு வந்துள்ள கடிதங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். காந்தி தனக்கு வந்த கடிதங்களை பாதுகாத்து வைத்திருக்கிறார்; ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார் என்பது வியப்புக்குரிய செய்தியாகும். காந்தியின் நூறு தொகுப்பு நூல்களை தீனா பட்டேல் என்பவர் மறுபதிப்புச் செய்ய உதவி செய்து வருகிறார்.

1896 ஆம் ஆண்டு கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவி கஸ்தூரிபாய், குழந்தைகளை அழைத்துக் கொண்டு தென்னாப்பிரிகாவிற்குச் செல்கிறார். அப்போது ஒரு நாளிதழில் இவரைப் பற்றி தவறாக வந்த செய்தியைக் கண்டு, கோபம் கொண்ட மக்கள் இவரைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கரையில் காத்திருக்கின்றனர். சில நாட்கள், கப்பலில் இருந்து இறங்காமலே இருக்கிறார். கஸ்தூரிபாய், தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு முதலில் செல்கிறார். பிறகு இவர் செல்லும்போது, அடையாளம் கண்டுகொண்டு தாக்குகின்றார்கள். அந்தச் சமயத்தில் அலெக்சாண்டர், அவரது மனைவி சாரா அலெக்சாண்டர் காந்தியைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார்கள். எனவே அவர்களுக்கு நன்றி தெரிவித்து தென்னாப்பிரிக்க இந்தியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அவர்களுக்கு ஒரு தங்கக் கடிகாரம் பரிசாக அளித்தனர். காந்தியும் தன்னைக் காப்பாற்றியதற்கு அவர்களுக்கு கடிதம் 1897 ல் எழுதியுள்ளார். நான் சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்ற போது அலெக்சாண்டர் தம்பதியினரின் பேத்தி, தென்னாப்பிரிக்க இந்தியர்கள் பரிசாகத் தந்த தங்க கடிகாரத்தை என்னிடம் அளித்தார். அதனை தற்போது புது தில்லி அருங்காட்சியகத்தில் வைத்துள்ளோம். காந்தி எழுதிய கடிதத்தையும் பெற்று இங்கு வைத்துள்ளோம்.
தனது அரசியல் நடவடிக்கைகளை கடிதங்கள் வாயிலாக காந்தி நடத்தியிருக்கிறார். தேச விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு நடந்து கொண்டிருந்த சமயங்களில், அரசியல் நடவடிக்கைகள் மட்டுமின்றி தனிப்பட்ட ஆலோசனைகளையும் இவரிடம் கேட்டிருக்கின்றனர். அதற்கு பொறுப்பாக காந்தி பதிலும் கொடுத்திருக்கிறார். கேரளாவில் இருந்து நாயர் என்பவர் தனக்கு ஏற்பட்டுள்ள மலச்சிக்கல் பற்றி ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்று காந்தி எழுதியிருக்கிறார்; அதுமட்டுமின்றி பதினைந்து நாள் கழித்து எப்படி இருக்கிறது என்று எழுதும்படி கேட்டிருக்கிறார்.

குழந்தைகள் கூட இவரிடம் உரிமை எடுத்துக்கொண்டு கடிதம் எழுதியிருக்கின்றனர். கவிக்குயில் என்று பின்னர் அழைக்கப்பட்ட சரோஜினி நாயுடு ‘டியர் மிக்கி மௌஸ்’ என்று காந்தியை விளித்து கடிதம் எழுதியிருக்கிறார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில், வானரப்படை இருந்திருக்கிறது. அதில் குழந்தையாக இருந்த இந்திரா காந்தி உறுப்பினராக இருந்திருக்கிறார். காந்தி அருங்காட்சியகத்தில் காந்தி இருக்கும் 10,000 படங்கள் உள்ளன. அவைகளில், பின்னாளில் ஆளுமைகளாக உருவான பலர் உள்ளனர். அவர் நடத்திய போராட்டங்கள், அகிம்சை வழியிலான போராட்டமாக இருந்ததற்கு, அவைகளில் பெருமளவில் பெண்கள், குழந்தைகள் பங்குபெற்றது முக்கியமான காரணமாகும்.
தனது கருத்துக்கு விரோதமாக பேசுபவர்களை அவர் அனுமதித்து இருக்கிறார். ராஜ் குமாரி அம்ரித் கௌர் – க்கு எழுதிய கடிதங்களில் டியர் ரிபல், டியர் ரெவலூஷனரி (அன்பார்ந்த புரட்சியாளரே) என்று விளித்து எழுதியிருக்கிறார். அவரை விமர்சித்து வந்தக் கடிதங்களை, சமந்தப்பட்டவர்களின் அனுமதிகேட்டு, பத்திரிகைகளில் வெளியிட்டு, அதற்கான விளக்கங்களையும் எழுதியிருக்கிறார். தன்னுடைய கருத்துக்கு எதிராக எழுதப்பட்ட கடிதங்கள் என மறைத்தது இல்லை. ஒளிவுமறைவற்ற, பகிரங்கதன்மையுடைய வாழ்க்கையை காந்தி வாழ்ந்து இருக்கிறார்.
நேரு இவருக்கு பல கடிதங்கள் எழுதியிருக்கிறார். இவரிடம் பல ஆலோசனைகளை கேட்டிருக்கிறார். இவரை நம்பி சொன்ன விஷயங்களை மற்றவர்களுக்கு இவர் சொன்னதில்லை. ஒருசில கடிதங்களில் ‘R’ வந்தார்; ‘G’ சொன்னார் என வெறும் எழுத்தை மட்டுமே போட்டு இருவரும் உரையாடி இருக்கிறார்கள். அதேபோல பலர் தன்னுடைய அந்தரங்க விவகாரங்களை இவரிடம் கடிதங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள். அதனை காந்தி பகிரங்கப்படுத்தவில்லை. எனவே அத்தகைய கடிதங்களை நாங்களும் பகிரங்கப்படுத்தவில்லை.

ராஜாஜியின் மகளான லட்சுமி, காந்தியின் மகன் தேவதாசை மணந்துகொண்டார். ராஜாஜி அவரது மகளுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதுகிறார். அதை காந்தி கடிந்து கொள்கிறார். உனது மகளின் மொழி தமிழ் அல்லது எனது மகன் மொழியான குஜராத்தியில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் என்று ராஜாஜியை காந்தி கேட்கிறார்.
1914 ல் காந்தி, முதலில் இந்தியில் தட்டுத்தடுமாறி கடிதம் எழுதியிருக்கிறார். பிறகு இந்தி, ஆங்கிலம், குஜராத்தி மொழிகளில் சரளமாக எழுதியிருக்கிறார். தமிழிலும் கடிதங்கள் எழுதியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் தமிழர்களோடு பழகி இருக்கிறார். ‘ரொம்ப பிடிக்கும்’ என்று எழுதியிருக்கிறீர்களே பிடிக்கும் என்பது தெரிகிறது. ‘ரொம்ப’ என்பதற்கு என்ன பொருள் என்று அவர் ராஜாஜிக்கு எழுதுகிறார்.
இறக்கும் வரை புதிதாக எதையாவது கற்றுக் கொள்ளும் ஆர்வம் அவருக்கு இருந்தது. தனது கடைசி காலத்தில் அபா காந்தியிடம் வங்காளம் கற்றுக்கொள்கிறார். எல்லா மொழிகளிலும் காந்திக்கு கையெழுத்து போடத் தெரியும். மகாத்மா காந்தி இந்தியா, மகாத்மா காந்தி இலண்டன், மகாத்மா, காந்தி படம் மட்டுமே என முகவரியில் உள்ள கடிதங்கள் இவருக்கு வந்தடைந்து உள்ளன. வார்தா ஆசிரமத்திற்கு எதிரில் ஒரு தபால் நிலையத்தை ஆங்கில அரசு இவருக்கு வரும் கடிதங்களுக்காக அமைத்தது.

மீரா பென் இவருக்கு தனது பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கடிதம் எழுதியிருக்கிறார். அவரை இவர் ஆற்றுப்படுத்தி இருக்கிறார். இப்படி பலர் இவர்மீது நம்பிக்கை வைத்து பேசியிருக்கிறார்கள். ஜி.ஏ.நடேசனுக்கு இவர் எழுதிய கடிதத்தில் பலவற்றை எழுதிவிட்டு, அவரது அம்மாவின் உடல்நலத்தை விசாரித்துவிட்டு , அவரது அம்மாவை இவருக்கு கடிதம் எழுதச் சொல்லும்படி எழுதுகிறார். இப்படி சம்மந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் ஈடுபடுத்துகிறார். இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களால்தான் மக்கள் அவரை மகாத்மா என அழைத்தனர்.
காந்தி தான் சொல்ல வேண்டியதை விளக்கமாகச் சொல்லிவிடுவார். தந்தியில் வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். காந்தி பக்கம் பக்கமாக தந்தி கொடுத்து இருக்கிறார். சிக்கனமாக செலவு செய்யும் காந்தி, தகவல் சொல்லுவதில் கட்டணத்தைப் பார்ப்பதில்லை.
தனது கப்பற் பயணம், இயற்கைக் காட்சிகள், அனுபவம், தான் வந்த இடம் என பலவற்றையும் கடிதங்களில் விரிவாக எழுதுகிறார். காந்தியின் கடிதங்களைப் படிப்பவர்கள் அவரோடு சேர்ந்து பயணிக்க முடியும். அவரது உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியும். ஆனால் அடுத்தது காந்தி என்ன செய்வார் என்பதை ஊகிக்க முடியாது.

எல்லோரும் காந்தியை மகாத்மா என்று அழைக்கின்றார்கள். ஆனால் அவர் முன்ஷிராமை மகாத்மா என விளித்து காந்தி ஒரு நீண்ட கடிதம் எழுதியிருக்கிறார். ஸ்டாண்டர்நாத் என்பவருக்கு உடல் சரியில்லாதபோது அவரது மனைவி பிரான்சிஸ்கா, காந்தியின் ஆலோசனையைப் பெற்று தனது கணவனை பெரும்பாடு பட்டு காப்பாற்றி விடுகிறார். அவர்கள் ஆஸ்திரியா நாட்டிற்கு திரும்பும்போது தங்களுக்கு ஒரு இந்தியப் பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். அவர்களுக்கு சத்தியவான் – சாவித்திரி என்று பெயரிடுகிறார். நாடு திரும்பியபிறகு அவர்கள் இறக்கும்வரை காந்தி வைத்த இந்தியப் பெயர்களிலேயே கடிதம் எழுதியுள்ளனர். இப்போது அந்தக் கடிதங்களை ஆஸ்திரியா நாட்டு அருங்காட்சியகத்தில் இருந்து பெற்றுள்ளோம்.
இலங்கையில் இருந்து ரங்கூன் செல்லவிருக்கும் நாகலிங்கம் என்பவர் ஆட்டோகிராப் கேட்கிறார். அதற்கு ரூ.5 தர வேண்டும் என்று காந்தி சொல்கிறார். எனக்கு தமிழில் எழுதி தாருங்கள் என இவர் பதில் சொல்லுகிறார். அப்படியானால் அதற்கு ரூ.10 தர வேண்டும் என்கிறார். தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ‘நீரில் எழுத்தாக்கும் யாக்கை’ என்பதை தமிழில் எழுதி ஆட்டோகிராப் போடுகிறார்.
Also read
இவரது நணபரான சி.எப்.ஆண்ட்ரூஸ் டியர் மோகன் என்றே இவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இவரும் டியர் சார்லி என விளித்து எழுதியிருக்கிறார். தென்னாப்பிரிக்கவில் இவரோடு ஒரே வீட்டில் இருந்த காலன்பாக் – ஐ, டியர் லோயர் ஹவுஸ் என விளித்து எழுதி இப்படிக்கு அப்பர் ஹவுஸ் என்று காந்தி கடிதத்தை முடிக்கிறார். காந்தியின் கடிதங்கள் உயிரோட்டமாகவும், உணர்ச்சிகளோடும் உள்ளன.
வாசகர் வட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வை சுப்பிரமணி ஒருங்கிணைத்தார். மதியழகன் வரவேற்றார். காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ‘சிந்தனைச்சாரல்’ அமைப்பு, அரசு நூலகத்தில் 97 வது முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்துவது பாராட்டுக்கு உரிய ஒன்றாகும்.
தொகுப்பு: பீட்டர் துரைராஜ்















மகாத்மாவின் கடிதங்கள் குறித்த அரிய தகவல்கள்…
அருமையான கட்டுரை
மகாத்மா கடிதங்கள் மட்டும் தனி தமிழ் புத்தகம் இருக்கா?