திகில் நிறைந்த சூழ்ச்சி களத்தில் எதிர்கட்சிகள்..!

ச.அருணாசலம்

பீகார் தேர்தல் களத்தையே பாஜகவிற்கு ஆதரவாக பட்டவர்த்தனமாக தேர்தல் ஆணையம் மாற்றியுள்ள சூழலில் – 45 லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்ட நிலையில் – ஆட்சியாளர்கள் பெண்களுக்கு ரூ 10,000  அறிவித்துள்ள தேர்தல் களத்தில் எதிர்கட்சிகள் என்ன செய்ய முடியும்?

நவம்பர் 6 மற்றும் 11 என இரு கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்ற தேர்தல்  களம் தற்போது சூடு பிடித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்துள்ள நிதீஷ் குமார் தலைமையிலான NDA அரசு, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பகீரத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

பல கூட்டணிகளுக்கு தாவி ஆட்சியில் கெட்டியாக அமர்ந்துள்ளதால் பல்டி குமார் என்ற பட்டப் பெயரை பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள (JDU) தலைவர் நிதிஷ் குமார் இப்பொழுது உடல்நலம் குன்றிய நிலையில் உள்ளார் . பல வருடங்களாக பார்த்து பார்த்து சலித்து போன பீகார் மக்கள் நிதீஷ் குமார் அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆனாலும், நிதீஷை விட பீகார் தேர்தலில் வெற்றி பெறுவது மோடிக்கு மிக மிக அவசியமாக இருப்பதால், அவர் தேர்தல் ஆணையத்தையும், மகளிருக்கு தரும் ரூ10,000 த்தையும் நம்பியுள்ளார் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இதை மெய்ப்பிக்கும் வகையில் தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலை வெட்டி ஏறத்தாழ 45 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கி புதிய பட்டியல் வெளியிட்டுள்ளது.

இப்படி ஒருதலைபட்சமான முறையில் வாக்காளர் பட்டியலை திருத்தி எதிர்கட்சிகளின் வெற்றி வாய்ப்பை தடுக்க தேர்தல் ஆணையம் செயல்பட்டத்தை எதிர்த்து அனைத்து எதிர்கட்சிகளும் போராடின. உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆனாலும் நீதியரசர் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மாலா பக்‌ஷி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தேர்தல் ஆணையத்தை கண்டித்த போதிலும்,  பல குளறுபடிகள் நடந்திருப்பதை ஒத்துக் கொண்டாலும் தடை விதிக்கவில்லை!

இதனால் குளிர்விட்ட தேர்தல் ஆணையம் தனது “நடவடிக்கைகளை” தொடர்ந்து செய்து வருகிறது. ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகள் வாக்காளர் அதிகார யாத்திரையை பீகாரில் நடத்தி மக்களை தட்டி எழுப்பிய நிலையில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. வெளிநாட்டவர்களும் , ஊடுருவல்காரர்களும் பீகார் வாக்காளர்பட்டியலில் இருப்பதாக கூறிய

தே. ஆணையம் 45 லட்சம் வாக்காளர்களை நீக்கிய பிறகும், அதில் வெளிநாட்டவர்கள், ஊடுருவல்காரர்கள் இருக்கிறார்கள் என்ற குற்றசாட்டை நிரூபிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மையினர் (இஸ்லாமிய மக்கள் ) மற்றும் மகளிர் பெயர்களை சகட்டுமேனிக்கு நீக்கியுள்ள தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்ற அறிவுரைகளை உதாசீனப்படுத்தி வருகிறது. இதை உச்சநீதிமன்றம் சகித்துக் கொண்டு வழக்கை நீட்டிப்பது ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவில் சமூக அமைப்பினரும், ஜனநாயக தேர்தல் முறையில் அக்கறையுள்ள முன்னாள் அதிகாரிகளும் பீகார் தேர்தலை அரசியல் கட்சிகள் – குறிப்பாக எதிர்கட்சிகள்- தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலின் போதும், அதன்பிறகு நடந்த மகராஷ்டிரா, ஹரியானா மற்றும் தில்லி தேர்தல்களிலும் வாக்காளர் பட்டியலில் தான் தோன்றித்தனமாக, பெருமளவு மாற்றங்களை  ( நீக்கங்கள் மற்றும் சேர்க்கைகள்) பாஜக , தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் செய்ததை எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி அம்பலப்படுத்திய பிறகு தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை மக்களுக்கு வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் மேலும் பல குளறுபடிகளை வெளிக்கொணர்வேன். அவை ஹைட்ரஜன் குண்டு போல் வெடிக்கும் என்ற ராகுலின் பேச்சு மக்களின் ஆர்வத்தை தூண்டிய வேளையில் பீகார் தேர்தல் நடக்கிறது.

எனவே, இத்தகைய தீவிர திருத்தங்களை, குறுகிய இடைவெளியில் முறையற்ற தன்மையில் தே. ஆணையம் நடத்துவதை எதிர்த்து எதிர்கட்சிகள் – குறிப்பாக காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள் போன்ற கட்சிகள் – தேர்தலை புறக்கணிக்கும் என்ற எதிர்பார்ப்பு பொது வெளியில் இருந்தது.

தேர்தல் ஆணையம் நடுநிலை தவறி ஆளுபவர்களின் கைப்பாவையாக , ஏவல்நாயாக மாறி வாக்காளர் பட்டியலை வெட்டியும், ஒட்டியும் மாற்றினால் அங்கு தேர்தல் நடக்கு முன்னரே ஜனநாயகத்தின் கழுத்து நெறிக்கப்பட்டதை யே அது உணர்த்துகிறது. இதை தட்டி கேட்க உச்ச நீதிமன்றம் தயங்கினால், ஆட்சியாளர்களின் வாக்கு திருட்டை யாரால் தடுக்க முடியும்? எனவே, இத்தகைய குறைபாடுள்ள வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு நடத்தும் தேர்தலில் உண்மையான மக்களின் விருப்பங்கள், உணர்வுகள் வெளிப்படுமா? என பலரும் எண்ணுகின்றனர்.

ஆனால் , ‘குறைபாடுள்ள பட்டியலின்அடிப்படையில் தேர்தலில் பங்கேற்றால், அது ஆட்சியாளர்களின் திருட்டை நியாயப்படுத்துவதாகவே முடியும் என்ற வாதத்திற்கு அரசியல் கட்சிகளிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை!

வாக்காளர் அதிகாரம் என்ற யாத்திரை ராகுல் காந்தியால் பீகாரில் முன்னெடுக்கப்பட்டு மக்களிடையே பெரும் எழுச்சியை, தேர்தல் ஆணையத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவர். ஆனால் அந்த யாத்திரை எழுப்பிய கேள்விகளுக்கு விடை கிடைத்ததா?. வாக்குத் திருடர்களே பதவியை விட்டு இறங்குங்கள் என்ற முழக்கத்திற்கு

பதில் கிடைத்ததா?. தேர்தல் ஆணையம் எந்தக் கேள்விக்கும் உரிய பதிலை கொடுக்கவில்லை. தவறுகளை களையவோ, அனைவரையும் கலந்து ஆலோசிக்கவோ முன்வரவில்லை. ஏன், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைக் கூட அமல் செய்ய முன்வரவில்லை.

வரைவு பட்டியலில் 65 லட்சம் வாக்காளர் பெயர்களை நீக்கிய தே. ஆணையம் இறுதி அறிக்கையில் 45 லட்சம் வாக்காளர்களை நீக்கி பட்டியலை வெளியிட்டுள்ளது. ஏன் ?, எதற்காக? யார்? யார்? நீக்கப்பட்டார்கள் என்ற விவரங்கள் யாருக்கும் தெரிவிக்கப்படாத நிலையில், வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையிலிருக்கும் போதே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. அதுவும் மோடி பீகார் வாழ் மகளிருக்கு ரூ 10,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து தேர்தல்கள் அறிவிக்கப்படுகின்றன.

வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுல் காந்தியும் பிற தலைவர்களும் எழுப்பிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலே தேர்தல் வந்துள்ளது. ராகுல் காந்தி இந்த இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு நக்ர்த்துவதை விட்டுவிட்டு, தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளுகிறார். பிற எதிர்கட்சிகள் வாக்கு அதிகாரக் கோரிக்கைகளை மறந்துவிட்டு, தேர்தல் கூட்டணியில் அதிக தொகுதிகளை பெறுவதில் கவனத்தை செலுத்துகின்றனர்.

அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முன்னெடுப்புகளை செய்யாமல் நாடகத்தில் காட்சிகளை மாற்றுவது போல் அடுத்த காட்சியான தேர்தலில் குதித்து வெற்றி பெற முயற்சிக்கின்றனர்.

வாக்காளர் பட்டியலே குளறுபடியாக ஒருதலைபட்சமாக வெட்டி ஒட்டப்பட்டிருக்கும் வேளையில், தேர்தல்கள் நியாயமாக நடைபெறுமா? திருவுளச்சீட்டு முறை போல் தேர்தல் முடிவுகளும் கேலி கூத்து ஆகிவிடாதா? என்ற கேள்விகள் எழுவது இயல்பு தானே?

இதற்கு முடிவுகட்ட எதிர்கட்சிகள் என்ன செய்கின்றன? என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

எதிர்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி பிற கட்சிகளுடன் கலந்து இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஆனால், காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கும் ( ராஷ்டிரிய ஜனதா தள், திரிணாமுல் காங்., தி மு க மற்றும் இடது சாரிகள் ) இடையே இதில் ஒருமித்த கருத்து உள்ளதா? என்பது தெரியவில்லை. தேர்தலை புறக்கணித்தால்

வெற்றி பெறுவோம் என்று எண்ணும் தேஜஸ்வி அதற்கு ஒத்துக் கொள்வாரா என்பதும், மே. வங்கத்தில் தேர்தலை ம்ம்தா புறக்கணித்தால் அவர் பதவியில் நீடிக்க முடியுமா? என்பதும் தமிழ்நாட்டில் தேர்தலை புறக்கணித்து ஸ்டாலின் முதல்வர் பதவியில் நீடிக்க இயலுமா? என்ற கேள்விகள் உள்ளன. இவற்றை சீர்தூக்கி இந்திய ஜனநாயகத்தை நிலை நாட்ட எதிர்கட்சிகள் முன்வர வேண்டும், அதற்காக எந்த விலையையும் கொடுக்க தயாராக அவர்கள் இருக்க வேண்டும் . அத்தகைய துணிவு இன்றைய தலைவர்களிடம் உள்ளதா என்பது கேள்விக்குறி.

இந்த நிலையில் – உச்ச நீதி மன்றம் முன்வந்து குளறுபடிகளை தடுக்காத நிலையில், அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு எந்த தியாகத்திற்கும் தயாராக இல்லாத நிலையில் – பீகார் தேர்தலின் முடிவுகள் உண்மையில் மக்களின் முடிவுகளா என்ற விவாதம் தொடரும்!

ஆளுங்கூட்டணியன பாஜக வும், ஐக்கிய ஜனதா தளமும் மகளிருக்கு 10,000/- ரூபாய் வழங்கி இந்த தேர்தலை சந்திக்கின்றனர். அப்பட்டமான இத்தகைய கையூட்டை வளர்ச்சி என்ற பெயரில் மோடியும் நிதிஷ் குமாரும் நடத்துகின்றனர். ஏற்கனவே தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று இஸ்லாமியரையும், மகளிரையும் பெருமளவு நீக்கி தேர்தலை சந்திக்கின்ற இவ்விரு கட்சிகளும் இத்தேர்தலில் தலா 101 இடங்களில் போட்டி போடுகின்றனர் . முதலமைச்சராக யாரை முன்னிறுத்துவது என்பதில் இந்த கூட்டணிக்குள் குழப்பம் இருக்கிறது.

அமீத் ஷாவும் மோடியும் நிதீஷ் தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்று கூறினாலும், பா ஜ கவினர் தேர்தலுக்கு பின் முதல்வரை தேர்ந்தெடுப்போம் என்று கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் பீகார் மக்கள் தனது தந்தை நிதிஷ் குமாரை மீண்டும் முதல்வர் ஆக்க தேசீய ஜனதா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

கூலி கொடுத்தால் அரசியல் கட்சிகளுக்கு வியூக வகுப்பாளராக செயலாற்றி வந்த பிரசாந்த கிஷோர் (PK) இப்பொழுது பீகாரில் ஜன் சூரஜ் என்ற கட்சியை தொடங்கி தானே தேர்தலை சந்திக்கிறார். சாதி அரசியலுக்கு பெயர்போன பீகாரில் சாதி வாரியாக மக்களை திரட்டுவதோ அணி சேர்ப்பதோ தேவையில்லை என்று தனது பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளார். தான் போட்டியில் இருந்து விலகுவதாக கிஷோர் அறிவித்தாலும் இவரது வரவால் பீகாரில் உள்ள நடுத்தட்டு மக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் இவரது செல்வாக்கு உயர்ந்து உள்ளது என கூறுகின்றனர். இதனால் பாதிப்பிற்குள்ளாவது ஆளும் கூட்டணி என்பதும் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

இந்தியா கூட்டணிக்குள் ஒரு வழியாக தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டாலும், நட்பு ரீதியான மோதல்கள் தொடர்கின்றன. இதற்கிடையில் சிராக் பாஸ்வான் 29 தொகுதிகளில் போட்டியிடுவதும், பீகாரின் தலைமையிடத்திற்கு புது முகமாக தன்னை முன்னிறுத்துவதும் பரபரப்பை கூட்டுகிறது.

ஓவைசி கட்சியும் சிறு பான்மையினரின் வாக்குகளை பிரிக்க வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கி வருகிறது. இந்தியா கூட்டணியில் லல்லு கட்சியும் காங்கிரஸ் கட்சி, விகாஸ் இன்ஷான் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மா லெ) இந்திய கம்யூ., மார்க்சிஸ்டு கட்சி ஆகியவை தொகுதிகளை பங்கிட்டு கொண்டாலும் இழுபறி நிலை இன்னும் நீடிக்கிறது.

மகளிருக்காக ரூ 10,000 வழங்குவது, வாக்காளர் பட்டியலை கள்ளத்தனமாகவும், தேர்தல் ஆணையத்தின் ஆசியுடனும் திருத்துவது , பண பலத்தையும்,படை பலத்தையும் இறக்குவது என்ற எத்தனிப்பில் பா ஜ க (BJP-JDU Alliance ) கூட்டணி களம் இறங்கியுள்ளது.

வாக்காளர் அதிகாரம் என முன்னெடுப்பு செய்த இந்தியா கூட்டணியும் களத்தில் இறங்கியுள்ளது.

தேர்தல்கள் நேர்மையாகவும் ,வெளிப்படைதனத்துடனும், சம தளத்தில் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யாத பொழுது, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் சார்பும் கேள்விக்குள்ளான இத் தேர்தலில் யார்வெல்லுவார்கள்என கருத்து கூறுவதோ, என்ன காரணிகளினால் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்க படுகின்றன என்பது பற்றி விளக்குவதோ புத்திசாலியின் கடமையல்ல. காரணம், வாக்காளரின் அதிகாரம் களவு போன நிலையில் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆட்டுவித்தால் ஆடாதார் யாரே..? என்ற கேள்வி எழுகின்றதல்லவா?

இந்த (சூ)தாட்டத்தில் பங்கு பெறுவதும், இதில் யார் வெற்றி பெறுவார்கள்? என ஆருடம் கூறுவதும் இந்திய ஜனநாயகத்திற்கு வலு சேர்க்குமா?

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time