தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை, ‘பிரவுன்ஃபீல்ட் பல்கலைக்கழகங்கள்’ என்பதாக தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்களாக்கும் மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றம் அக்டோபேர்-17, 2025-ல் நிறைவேற்றியுள்ளது. இதன் விளைவுகளை, பாதிப்புகளை அலசுகிறது இந்தக் கட்டுரை;
இந்த சட்டம் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு உதவிபெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகமாக மாறுவதற்கு வழிகோலுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கல்வியின் தரம் உயரப் போவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் சட்டமன்றத்தில் அறிவித்தார். உண்மையில் கல்வியின் தரம் உயருமா? ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வியை உத்திரவாதப்படுத்துமா?, அக்கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர் பணி இடங்கள் எதிர்காலத்தில் இருக்குமா? போன்ற பல கேள்விகளை இக்கட்டுரை அலசுகிறது.
தனியார் பல்கலைக்கழகங்களாக மாறும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள்
இந்த சட்டத்தின்படி ஒரு அரசு உதவிபெறும் கல்லூரி தனியார் பல்கலைக்கழகமாக மாற விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த உடனேயே அது அரசு உதவிபெறும் கல்லூரி தகுதியை இழந்துவிடும். அக்கல்லூரிக்கான அனைத்து அரசு மானியங்களும் நிறுத்தப்படும். பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி மானியங்களையும் அந்தக் கல்லூரி இழக்க நேரிடும். அதிகபட்சமாக அக்கல்லூரியில் தற்பொழுது படிக்கும் மாணவர்கள் தமது படிப்பிற்கான பட்டத்தை தாம் இணைப்பு பெற்ற பல்கலைக்கழகத்திடமிருந்து பெறலாம். அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தமது பணிக்காலம் முடிந்தவுடன் அந்தக் காலியிடத்தில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் அனைத்துப் பணி இடங்களும் நிரந்தரமாக மூடப்படும்.
மக்கள் வரிப் பணத்தில் வளர்ச்சி பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார்கள் சொத்தாக தாரை வார்ப்பு
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தோன்றிய மாபெரும் மனிதர்களான ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர், ஜோதிராவ் பூலே, சாவித்திரி பாய் பூலே, லாலா லஜ்பத் ராய் போன்றோர் அனைவருக்குமான கல்விச் சாலைகளை உருவாக்கினர். லாலா லஜபதி ராய் தனது ‘தேசியக் கல்வி’ என்ற புத்தகத்தில் ஏழை மக்கள் வாழும் இந்தியாவில் மாணவர்களிடம் கல்விக் கட்டணங்கள் பெற்று கல்வி நிறுவனங்களை நடத்தும் கோட்பாட்டிற்கு எதிராக அனைவருக்கும் கல்வி வழங்குவது அரசாங்கத்தின் கடமை என்றார்.

வேலையின்மை தலைவிரித்தாடும் சூழலில் லட்சக்கணக்கான மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு அரசின் தயவில் தான் இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் 163 அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பான வரலாறுண்டு. சுதந்திரத்திற்கு முன்பு துவக்கப்பட்ட சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி, சென்னை கிருஸ்துவக் கல்லூரி, திருச்சி நேஷனல் கல்லூரி, திருச்சி புனித ஜோசப் கல்லூரி, மதுரை தியாகராயர் கல்விக் குழுமம், மதுரை பாத்திமா கல்லூரி, மதுரை லேடி டோக் கல்லூரி, கோவை பி எஸ் ஜி கல்விக் குழுமம், பாளையம்கோட்டை புனித சேவியர் கல்லூரி, வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி, வேலூர் வூரீஸ் கல்லூரி உள்ளிட்ட பற்பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஏழை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை வழங்கும் தொண்டு நோக்கத்தோடு இது வரை இயங்கி வந்துள்ளன.
இக்கல்லூரிகளிலிருந்து ஏழை எளிய பிரிவினரைச் சேர்ந்த முதல் தலைமுறையின் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற்று புகழ் பெற்ற நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருந்து பெரும் தொண்டாற்றியிருக்கிறார்கள். அதற்கு அடிப்படைக் காரணமே இக்கல்லூரிகளில் மிகக் குறைந்த கல்விக் கட்டணமும், தலை சிறந்த ஆசிரியர்கள் இங்கு பணியாற்றியதும் தான்.
இக் கல்லூரிகளில் பல சுதந்திரத்திற்கு முன்பு தனியார்களால் கொடை உள்ளத்தோடு துவங்கப்பட்டு, சுதந்திரத்திற்குப் பின் படிப்படியாக இவை தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்று சட்டம் 1976 கீழ் வந்தன. இதன் மூலம் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பணி வரையறைகள் யாவும் அரசின் நிதி உதவியின் கீழ் இக்கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இருப்பினும் தற்பொழுது மத்திய மாநில கல்விக் கொள்கைகளால் போதுமான நிதி ஒதுக்கப்படாமல் பல்வேறு சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகின்றன. அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய தமிழ்நாடு அரசாங்கம் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வை வழங்க மறுக்கிறது. இந்தச் சூழலில் தற்பொழுது இக்கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என எந்தப் பிரிவினரையும் கலந்தாலோசிக்காமல் ஒரே சட்டத்தின் மூலம் தனியார் நிர்வாகத்திற்கு தாரை வார்க்கிறது, தமிழ்நாடு அரசாங்கம்.
தனியார் மயக்கல்வியும், தளர்த்தப்படும் விதிகளும்!
2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் பிரிவு 4, தனியார் பல்கலைக்கழகம் அமைக்கக் குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் தேவை எனக் குறிப்பிடுகிறது. ஆனால், இந்தத் திருத்தத்தின் மூலம் பிரவுன்ஃபீல்ட் பல்கலைக்கழகங்களுக்கான குறைந்தபட்ச நிலத் தேவை குறைக்கப்பட்டுள்ளது:
மாநகராட்சிப் பகுதிகளில்: 25 ஏக்கர்
நகராட்சி அல்லது பேரூராட்சிப் பகுதிகளில்: 35 ஏக்கர்
பிற பகுதிகளில்: 50 ஏக்கர்
பெரும்பாலான அரசு உதவி பெறும் கல்லூரிகள் குறைவான நிலப்பரப்பை கொண்டுள்ளன. மேற்கண்ட நிலத்தேவை குறைப்பு இந்தத் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற உதவவே செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாகவே இந்த அரசு உதவிபெறும் கல்லூரிகள் பலவும் தனியார் பல்கலைக்கழகமாக மாறிவிடும்.

ஏற்கனவே தனியார் சுயநிதிப் பல்கலைக்கழகங்களில் கல்வியின் பெயரில் பகல் கொள்ளை நடந்து வருகிறது. டொனேஷனாக பெறப்பட்டுவந்த பெருந்தொகை தற்பொழுது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் உதவியோடு சட்டபூர்வமாக கல்விக் கட்டணமாகவே வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத் திருத்தத்தினால் ஏழை நடுத்தர மாணவர்களுக்கு உயர்கல்வி பெரும் வாய்ப்பு முற்றிலும் நிராகரிக்கப்படும்.
தேசியக் கல்வி கொள்கை 2020 -ன் வழியில் தமிழ்நாடு உயர்கல்வி தனியார் மயமாக்கப்படுகிறது!
தேசிய கல்விக் கொள்கை 2020 தனியார் மயத்தை ஊக்குவிக்கிறது. ஆனால், அதை எதிர்ப்பதாக நாடகமாடி வந்த தமிழ்நாடு அரசாங்கம் பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை அதன் பல அம்சங்களை ஆரம்பத்தில் இருந்தே அமல்படுத்தி வருகிறது. அதற்கு கல்வித் தரத்தை உயர்த்தவே தாம் இதை செய்வதாக சப்பைக்கட்டு கட்டுகிறது.

ஒரு கல்லூரி பல்கலைக்கழகமான உடனேயே அங்கு கல்வித் தரம் உயர்ந்துவிடுவதில்லை. கல்வியின் தரம் என்பது அங்குள்ள ஆசிரியர்களின் தரத்தையும் தரமான பரிசோதனை கூடங்கள், மற்றும்மாணவர்களின் தரத்தை பொருத்தும் இருக்கிறது.
அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகமாகிய பின்னர் முதலாவதாக பாதிக்கப்படப்போவது பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பு, இடஒதுக்கீடு அடிப்படையிலான சேர்க்கை முறையும் தான். மேலும், ஆசிரியர்களின் சம்பளம் குறைக்கப்படும். ஆய்வக வசதிகள் குறைத்துவிடும். மேலும் இந்தியாவில் உள்ள எந்த ஒரு தனியார் பல்கலைக்கழகமும் உலகத் தரத்தில் இல்லை என்பதை எவரேனும் மறுக்க இயலுமா?
தேசியக் கல்விக் கொள்கை கல்வியில் தனியார் மயம், வியாபாரமயம் என இரண்டு கட்டங்களாக அமலாகிறது. முதலில் கல்லூரிகளுக்கு சுயாட்சி வழங்குவது, பின்னர் அக் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக்குவது. இந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் சுயாட்சி அந்தஸ்து (Autonomous Status) பெற்ற பல கல்லூரிகள் தாறுமாறாக புதுப்புது பாடப்பிரிவுகளை துவக்குவது லாப நோக்கத்தை கொண்டதாகும். இக் கல்லூரிகள் பல்கலைக்கழகமாவதும் இத்தகைய குறுக்கு வழியில் பெரும் லாபம் மீட்டும் நோக்கத்தில் தான். அதிகக் கல்விக் கட்டணத்தை வசூலிப்பதே பிரதான நோக்கமாக இருக்கையில், தகுதி வாய்ந்த மாணவர்கள் சேர்க்கை என்பது இரண்டாம் பட்சமே. எனவே, இயற்கையாகவே அங்குக் கல்வியின் தரம் வீழவே செய்யும்.
ஆகவே, இந்தத் தனியார் பல்கலைக்கழக திருத்தச் சட்டம் தகுதிவாய்ந்த லட்சக்கணக்கான ஏழை நடுத்தர வர்க்க மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை கேள்விக்குறியாக்கிவிட்டது. மேலும், தனியார் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளமும் இல்லை. மரியாதையும் இல்லை என்பதே தற்போதைய நிலைமையாகும். எனவே கல்வி, தனியார்மயமாவது கல்வியின் தரத்தை தான் வீழ்த்தியுள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி, சீனாவில் இலவசக் கல்வியால் சமூக முன்னேற்றம்!
பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் கல்வியில் தனியார்மயம் என்பது மிகவும் சொற்பமே. அங்கு மக்களின் விழிப்புணர்வாலும், ஜனநாயகப் போராட்டங்களாலும் உயர்கல்வி வரை இலவசக் கல்வி தான்!. இதனால், மாணவர் சேர்க்கை என்பது கல்வித் தகுதியின் அடிப்டையிலேயே நடக்கிறது. எனவே, கல்வியில் தரம் இயற்கையாகவே நிலைநிறுத்தப்படுகிறது. இதனால் அறிவியல், தொழில் நுட்பத்தில் இந்நாடுகள் தற்சார்பு நிலையை அடைந்ததோடு, உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களை இவை கொண்டுள்ளன. சொல்லப் போனால் அறிவியலிலும் ஆராய்ச்சியிலும் தொழில் நுட்பத்திலும் இன்று முதல் நிலைக்கு சீனா சென்றுவிட்டது.
தமிழ்நாட்டில் உயர்கல்வியின் வீழ்ச்சி!
தேசியக் கல்விக் கொள்கை அமலாக்கத்தால் மத்திய பல்கலைக்கழக மானியக் குழுவும், தமிழ்நாடு உயர்கல்வி மாநிலக் கவுன்சிலும் (TANSCHE) பல்கலைக்கழக இணைப்பு பெற்றக் கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி பெற்றக் கல்லூரிகளில் தலையிட்டு பாடத்திட்டம் உள்ளிட்ட பல அம்சங்களில் மாற்றங்களை செய்து வருவது உயர் கல்வியின் தரத்தை சீரழித்து வருகிறது.
Also read
மேலும், புகழ்மிக்க சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் போன்றவற்றுக்கு தமிழ்நாடு அரசாங்கம் நிதி வழங்க மறுத்து அவற்றை சீரழித்து வருகிறது. நூற்றுக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் இப் பல்கலைக்கழகங்கள் நிலை குலைந்துள்ளன. அரசுக் கல்லூரிகளில் 7,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டு, வெறும் 25,000 ரூபாய் சம்பளத்திற்குப் பணியாற்றிட ஆசிரியர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக போராடியும் அவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. பள்ளிக் கல்வியின் நிலையோ அந்தோ பரிதாபம். கல்வியை முழுவதுமாக சீரழித்துவிட்டு, ”தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றப் போகிறேன்” என்று முதலமைச்சர் மார் தட்டுவது பெரும் வெட்கக் கேடாகும்.
போர்க்கொடி தூக்கியுள்ள கல்வியாளர்கள், ஆசிரியர், மாணவர் சங்கங்கள்!
தமிழ்நாடு அரசாங்கம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் சங்கங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக கொண்டு வந்திருக்கும் தனியார் கல்வி திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராகப் போராட ஆசிரியர்களும் மாணவர்களும் ஆயத்தமாகி வருகின்றனர். ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்பை தட்டிப் பறிக்கும் இந்தத் தனியார் பல்கலைக்கழக மசோதாவுக்கு எதிராக இவர்கள் போராடுவது வரவேற்கத் தகுந்த விடயமாக இருந்தாலும், சமுதாயத்தையே பாதிக்கும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார்மயமாக்கும் சட்டத்தை முற்றிலும் முறியடிக்க வேண்டுமெனில், அது ஒரு சமூக எழுச்சியை வேண்டி நிற்கிறது.
க.யோகராஜன்
மாநிலச் செயலாளர்
அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, தமிழ்நாடு

















Village administration officer for the government