வட கிழக்கு பருவமழை தமிழக விவசாயிகளை இந்த ஆண்டு வாட்டி வதைப்பதாக அமைந்துவிட்டது. முன்னேற்பாடு நடவடிக்கைகளில் எப்போதும் பின் தங்கி இருப்பதில் சாதனை படைப்பவர்களான நம் ஆட்சியாளர்கள் மழைக்காலங்களில் மீட்பர்களாகிவிடுகின்றனர். ஆயினும் விவசாயிகள் எதிர்கொள்ளும் இழப்புகள், சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல;
எந்த ஒரு நல்லாட்சிக்குமான அளவுகோல் ஏரி, குளங்களை கண் போல பாதுகாத்து சேதாரமில்லாமல் நீரை தேக்கி வைப்பதும், அறுவடையான நெல்லை பாதுகாப்பாக மழையில் அழிந்து விடாமல் பாதுகாப்பதும் தான். அந்த வகையில் பார்த்தால் நமது ஆட்சியாளர்கள் மிகப் பெரிய தொடர் தோல்வியைத் தான் நீர் மேலாண்மை விவகாரத்திலும், உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் சந்தித்து வருகின்றனர்.
ஒரு மிகப் பெரிய அரசு நிர்வாகம் இருந்தும், அதற்கு அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் பெரும் ஊழியர் படை இருந்தும் ஆண்டுக்கு ஆண்டு பல லட்சம் நெல் மூட்டைகள் மழையில் அழிவதை தடுக்க முடியவில்லை. பாதுகாப்பான நெல் கொள்முதல் நிலையங்கள் என்பவை இன்னும் கூட நிறைவேறாத கனவாக உள்ளது.
உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை கொண்டுள்ளது நம் நாடு. அந்த அளவுக்கு பல லட்சம் கோடிகள் ராணுவத் தளவாடங்கள், அணு ஆயுதங்கள் ஆகியவற்றுக்கு செலவழிக்க வசதியுள்ள நாட்டால் -, ஐ.டி தகவல் தொழில் நுட்ப செயல்பாடுகளுக்காக ஏராளமான பள பளக்கும் வானுயர்ந்த கட்டிடங்களை கட்ட முடிந்த நாட்டால் – வயிற்றுப் பசிக்கு சோறாகும் நெல்மணிகளை பாதுகாக்க கொடவுன்களை கட்ட முடியவில்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது.

ஒவ்வொரு நெல் கொள் முதல் நிலையங்களிலும் 10,000 முதல் 20,000 மூட்டைகள் பாதுகாப்பின்றி அழிகின்றன. நெல்லை அறுவடை செய்து எடுத்த பிறகு நெல் கொள்முதலுக்காக நீண்ட காத்திருப்பில் சாலைகளில் கொட்டி வைக்கப்பட்ட நெல்மணிகள் அழிந்ததற்கு யார் பொறுப்பேற்பது…?
”விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல் மூட்டைகள் தேங்க காரணம்.” என தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி விளக்கமளித்துள்ளதானது அதிர்ச்சியளிக்கிறது. இதற்காக டெண்டர் விடப்பட்டு 5 ஒப்பந்தக்காரர்கள் மூலம் விவசாயிகளிடம் பெறப்பட்ட 34 ஆயிரம் டன் நெல்கள் வாங்கிய நிலையில் அவற்றில் 100 கிலோ அரிசிக்கு 1 கிலோ வீதம் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க வேண்டியுள்ளது. இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு அரிசியை அனுப்பியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். ”செறிவூட்டப்பட்ட அரிசி ஆபத்தானது, தேவையில்லை” என உணவு மருத்துவர்கள் உரக்க சொல்லிய பிறகும் இந்த அட்டூழியங்களை அரங்கேற்றுகின்றன மத்திய, மாநில அரசுகள்!
ஒரு ஏக்கர் பயிர் உற்பத்திக்கு 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை கடனை வாங்கி செலவழித்து விற்ற பிறகு கடனை அடைக்க நினைத்திருந்த விவசாயியின் துன்பத்தை என்னவென்பது?

இவை ஒருபுறமிருக்க, மறுபுறம் அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கும் சம்பா மற்றும் குறுவை பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும் சொல்லொண்ணா சோகத்திற்கு இயற்கை மட்டுமா பொறுப்பு? நீர் நிலைகளுக்கு முறையாக செல்ல வேண்டிய தண்ணீர் தடத்தை ஆக்கிரமித்து அது வயல் வரப்புக்குள் வருவதற்கு காரணமானது யார்?
நீர் நிலைகளை தூர்வாறுவது அதிகமாக ஊழல் செய்ய வாய்ப்பாக உள்ளது, என்ற கோணத்திலேயே ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் செயல்படுவதன் விளைவை நாம் இந்த கனமழைக் காலத்தில் எதிர்கொள்கிறோம். மாநகர்களில் மழை நீர் வடிகால் வாய்க்கால் பணி என்பது மலை விழுங்கி ஒப்பந்ததாரர்களால் நிறைவேற்றப்படுகிற வரை தீர்வில்லை.
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்மழையையடுத்து மழைநீர் சூழ்ந்ததால் 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. அறுவடைக்கு தயாரான குறுவை நெற் கதிர்கள் அம்போவென வெள்ளத்தால் விழுங்கப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், சாலியமங்கலம், பூண்டி, நல்லவன்னியன் குடிகாடு, அம்மாபேட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர், ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாரான பல்லாயிரம் ஏக்கர் நெற்கதிர்கள் மழையால் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன.
இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் குறுவை, மற்றும் இளம் சம்பா பயிர்கள்,
மயிலாடுதுறை மாவட்டத்தில் 10,500 ஏக்கர் குறுவை மற்றும் இளம் சம்பா பயிர்கள்,
நாகை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கர் இளம் சம்பா மற்றும் குறுவை பயிர்கள்
மழைநீரில் மூழ்கி உள்ளன.

இந்த மழைநீர் வடிந்து குறுவை நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியுமா? என்ற சந்தேகம் டெல்டா விவசாயிகளிடையே வலுத்துள்ளது. இப்படியே தொடர்ந்தால் , அறுவடைக்கு தயாரான நெற்கதிர்களில் நெல்மணிகள் முளைத்துவிடக்கூடும் அல்லது நீரிலேயே அழுகி நாசமாகிவிடலாம் விடும் என்ற சூழல் விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வளவு அதிக மழையால் தமிழகத்தின் பிரதான நீர் தேக்கமான மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 120 அடி இருந்ததுள்ளது. அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வருவதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 35 ,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்புள்ளதாம். இந்த அணையில் மூன்றில் ஒரு பங்கு மணலால் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல பவானிசாகரிலும் முழுமையான கொள்ளவான 102 அடி தண்ணீர் நிரம்பிவிட்டதால் கணிசமான நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றதாம்.
கிருஷ்ணகிரி அணையில் 50 மில்லியன் கன அடியும், மணிமுத்தாறு அணையில் 94.5 மில்லியன் கன அடியும் இருப்புள்ளதாம்..!
தென்காசியில் இந்த மாத இயல்பான மழை அளவு 16.60 செ.மீ. காட்டிலும் அதிகமாக 25 செ.மீ. மழை பெய்துள்ளது. ஆனபோதிலும் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டிலும் உள்ள 957 குளங்களில் 28 சதவீத குளங்கள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளனவாம்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போது நெற் கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், வயல் பரப்பெங்கும் தண்ணீர் தேங்கி நெற்கதிர்கள் தண்ணீரில் சாய்ந்து மூழ்கியுள்ளன.
ஆற்றோரங்களில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவது விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் நுழைவதற்கான பிரதான காரணம். இப்படி ஆண்டுக்காண்டு சோக அனுபவங்கள் ஏற்பட்டும் மணல் கொள்ளைகளை தடுக்க அரசு முனையவில்லை என்பது தான் வேதனை!
சாவித்திரி கண்ணன்






















Leave a Reply