தமிழக காவல்துறையின் உண்மையான தலைமை எது?

சபாஷ்! டிஜிபி நியமன விவகாரத்தில் தில்லாக நம் தமிழக அரசு மத்திய அரசுடன் மோதுவது பெருமையாகவே உள்ளது.

அடிப்படையில் மாநில உரிமைகளுக்கு மதிப்பு கொடுப்பதற்கே நம் முன்னுரிமை என்ற வகையில் தமிழ்நாடு அரசிற்கே நம் ஆதரவு!

அதே சமயம், ‘’தமிழ்நாடு அரசு தனக்கு வேண்டப்பட்ட நபரை புதிய டி.ஜி.பியாக அமர்த்த வேண்டும் என்பதல்ல இங்கே உள்ள பிரச்சினை. சட்டம் – ஒழுங்கு தொடர்பாக மாநில அரசின் கருத்துக்களைப் புறக்கணித்து, தனக்கு வேண்டப்பட்ட நபர்களைத் தமிழ்நாட்டில் டி.ஜி.பி.ஆக அமர்த்துவதற்கு ஒன்றிய அரசு முயலும் அடாவடி தான் புதிய டிஜிபி நியமனத்தில் தமிழ்நாடு அரசு சந்திக்கும் பிரச்சினை…” என்று அமைச்சர் ரகுபதியார் சொல்வதைத் தான் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.!

சட்டம் ஒழுங்கு தொடர்பாக தமிழக அரசிற்கு என்று தனிக் கருத்து என்பதாக ஏதேனும் இது வரை இருந்ததா என்ன? அந்த அளவுக்கு தனித்துவத்துடன் தமிழக காவல்துறை செயல்பட்டதா என்ன?

டெல்லி மேலிடத்தில் என்ன விரும்புகிறார்களோ.., அதைத் தானே தமிழக போலீஸ் நிறைவேற்றி வந்தது!

ஒன்றா? இரண்டா? ஏராளமான சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன..!

# மகாத்மா காந்தியின் நினைவு நாளை மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவித்து செயல்பட்ட இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு காவல்துறையால் தரப்பட்ட நெருக்கடிகள் கொஞ்சமா? நஞ்சமா? கோட்சே தான் காந்தியைக் கொன்றார் என தோழர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதும், காவல் துறை அதிகாரி பாய்ந்து வந்து மைக்கை பிடுங்கி, அதெப்படி கோட்சே கொன்றதாகச் சொல்லலாம்? நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கமாட்டோம் என கொந்தளித்தது இந்த ஆட்சியின் காவல்துறை தான்.

# குஜராத் கலவரத்தில் மோடி அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்த பி.பி.சி ஆவணப் படத்தை தமிழகத்தில்  திராவிட அமைப்புகளும், முற்போக்கு அமைப்புகளும் திரையிடக் கூடாது என மூர்க்கமாக தடுத்ததும், தன்னுடைய கைபேசியில் அதைப் பார்த்த சி.பி.எம்.கவுன்சிலரை கைது செய்ததும் இந்த ஆட்சியில் தான்.

# வேங்கை வயல் சம்பவத்தில் உண்மையான குற்றவாளியைக் காப்பாற்ற, ‘பட்டியல் இனத்தவர்களே தங்கள் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தார்கள்’ என்று அழிச்சாட்டியம் செய்து நிரூபிக்க அந்த மக்களையே துன்புறுத்தி வற்புறுத்தியதும் இந்த ஆட்சி தான்.

# நெல்லை கவின் ஆணவக் கொலையில் ஈடுபட்ட காவல்துறை தம்பதிகளை தப்பிக்க வைக்க இல்லாத தகிடுதத்தங்களை அரங்கேற்றி, பிறகு அம்பலப்பட்டதும் இந்த ஆட்சியின் காவல் துறை தான்.

# கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் புரிந்த ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான பள்ளிக்கூட  முதலாளியை காப்பாற்ற உறுதி குலையாமல் இன்று வரை நிற்பதும் இந்த ஆட்சியின் காவல்துறை தான்.

# தமிழகத்தின் பிரபல ரவுடிகள் பலர் பாஜகவில் சேர்ந்தால் பாதுகாப்பு கிடைக்கும் என நம்பி தொடர்ந்து கூட்டம், கூட்டமாக சேர்ந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடிந்ததும் இந்த ஆட்சியில் தான்!

# தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் துள்ள துடிதுடிக்க 14 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்ற காவலர்களை தண்டிக்கச் சொல்லி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தையே மறைத்து, சம்பந்தப்பட்ட கொடூர குற்றமிழைத்த காவலர்களுக்கு பதவி உயர்வு தந்தது இந்த ஆட்சி தான்!

# மடப்புர அம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரை அள்ளிச் சென்று கொடூரமாக கொன்று போட்ட காவலர்களை தண்டிக்க பயந்து, சி.பி.ஐ விசாரணைக்கு உத்திரவிட்டது இந்த ஆட்சி தான்!

#  கைது செய்யப்பட்டவர்களை கடுமையாகத் தாக்கி பற்களை பிடுங்கிய சைக்கோ போலீஸ் அதிகாரி பல்பிடுங்கி பல்வீர் சிங் ஐ.பி.எஸ் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சி, பாதுகாத்தது யார்? அவர் மீது அமுதா ஐ.ஏ.எஸ் தந்த அறிக்கையை ரகசியமாக வைத்து,  அநீதிக்கு துணை போய்க் கொண்டிருப்பது யார்?

# அமைதியான முறையில் சாம்சன் தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டத்தை இரவோடு இரவாக பந்தலை பிய்த்தெறிந்து, தொழிற்சங்கத் தலைவர்களை நள்ளிரவில் வீடு சென்று வேட்டையாடியது எந்த ஆட்சியின் காவல்துறை..?

#  7 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்று எரித்து, தன் தாயையும் கொன்று கொடூர குற்றவாளியை தண்டனை வாங்கித் தருவதில் – குற்றத்தை நிருபிப்பதில் – எந்த அக்கறையும் செலுத்தாமல் –  சி.சி.டி.வி காட்சிகள், மரபணு சோதனை, வீடியோக்கள் என எல்லாவற்றிலும் கோட்டைவிட்டு உச்ச நீதிமன்றத்தின் கண்டணத்தை பெற்ற காவல்துறை யாருக்கானது?

# ”எங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே” எனக் கூறி, பிளாட்பாரத்தில் அமர்ந்து அகிம்சை வழியில் போராடிய பெண் தூய்மை தொழிலாளர்களை நள்ளிரவில் அடாவடியாக கைது செய்து அராஜகத்தை அரங்கேற்றியது எந்த ஆட்சியின் காவல்துறை?

# ”தமிழ்நாட்டில் காவல்துறைக்கு தலைமை தாங்குவது தமிழ் நாட்டு முதல்வரா? அல்லது அமித்ஷாவா?” என மேடை போட்டு பகிரங்கமாக கேள்வி கேட்டது, எதிர்கட்சித் தலைவரல்ல, திமுகவின் விசுவாசமான கூட்டணிக் கட்சித் தலைவர் திருமாவளவன் தானே!

இதற்கு மேல் இங்கு திராவிட மாடல் என்ற பெயரில் தில்லிக்கு திறமையாக சேவகம் செய்த காவல்துறையை வழி நடத்திய முதல்வர் ஸ்டாலின் குறித்து வேறு யார் அம்பலப்படுத்த முடியும்?

தமிழகத்தின் தற்போதைய பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன்

மக்கள் நலன் சார்ந்து காவல்துறையை வழி நடத்திச் செயல்பட்டிருந்தால், மாநில உரிமைக்காக டிஜிபி விவகாரத்தில் தமிழக முதல்வர் டெல்லியோடு முரண்படுகிறார் என நாம் ஸ்டாலின் கை ஓங்க குரல் கொடுக்கலாம். ஆனால், அவரோ டெல்லி விசுவாசியாக இத்தனை நாள் சேவகம் செய்ததற்கு பரிசாக தேர்தல் நேரத்தில் தனக்கு சேவகம் செய்யும் டிஜிபியை டெல்லி விட்டுக் கொடுத்து வேடிக்கை பார்க்கும் எனக் கனவு கண்டார்.

டெல்லி எஜமானர்கள் எமகாதகர்களன்றோ..? இது நாள் வரை தங்களுக்கு சேவகம் செய்ததால், போகும் வரை போகட்டும் என நூலை விட்டுப் பார்த்துவிட்டு, தற்போது தேர்தல் நெருங்குகையில் சுதாரித்துக் கொண்டு கயிற்றை இறுக்குகின்றனர்.

ஆக, இந்த விவகாரத்தில் மத்திய அரசும் சரி,  மாநில அரசும் சரி மக்கள் நலன் சார்ந்தோ, மனித உரிமை சார்ந்தோ காவல்துறை தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் இல்லாதவர்கள் என்பது மட்டுமல்ல, தங்கள் அரசியல் நலன் மற்றும் தேர்தல் ஆதாயம் கருதியே ஒருவருக்கொருவர் மோதுகின்றனர்.

இதில் வெற்றி பெறப் போவது விடாக்கண்டனா?  அல்லது கொடாக்கண்டனா? என்பது விரைவில் தெரிந்து விடும்.

ஒரு மாநிலத்திற்கு உறுதி வாய்ந்த காவல்துறை தலைவர் மிக அத்தியாவசியமாகும். மக்களின் பாதுகாப்பு குறித்த கவலை பின்னுக்கு தள்ளப்படும் அளவுக்கு அரசியல் ஆதாயக் கணக்குகள் போடப்படுமானால், இந்தச் சூழல் குற்றவாளிகளுக்கு கொண்டாட்டமான காலகட்டமாகிவிடும்

இந்தச் சூழலில் பொறுப்பு டிஜிபி என்ற பெயரில் பொருத்தமற்ற ஒருவரை நீண்ட காலம் டிஜிபியாக செயல்பட அனுமதிக்க வழியில்லை என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காண்பித்துள்ளது கவனத்திற்குரியதாகும்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time