வேறெப்போதையும் விட, தற்போது பாரதியார் அதிகம் தேவைப்படுகிறார்…!

சாவித்திரி கண்ணன்

பாரதியை இன்று நினைவு கூர்வதன் வாயிலாக புத்துணர்ச்சி பெறுவது மட்டும் நமது நோக்கமன்று! தற்போதைய சமூகம் பற்றிய புரிதலையும், சமூக ஞானத்தையும் வளர்த்துக் கொள்வதற்கும் தான்! சாதியை,மதத்தை, புராணங்களை,வேதங்களை பாரதியார் எவ்வாறு நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது இன்றைக்கும் நமக்கு பல குழப்பங்களை விளக்கி, தெளிவை ஏற்படுத்தும்!

பாரதியாரும், காந்தியும் முன்னெப்போதையும் விட தற்போது அதிகமாக நினைவு கூறப்பட வேண்டியர்களாக உள்ளனர்.

பாரதியார் பெரும் புரட்சியாளர், வெடித்து நேர்பட உரைத்து,உடனே செயல்பட்டுவிடுவார்! காந்தியார் நடைமுறை செயல்திட்டத்தின் வழியே சாத்தியமான வகையிலே புரட்சியை அணுகுபவர்!

பிற்போக்குவாதிகளும், மதவெறியர்களும் இவர்கள் இருவரையும் வாழும் காலத்தில் ஏற்கவில்லை! பாரதியை முற்றாக புறக்கணித்தார்கள். அதேசமயம் காந்திக்குள்ள செல்வாக்கு, மற்றும் மிதவாத அணுகுமுறை காரணமாக மேட்டுகுடியினரில் ஒரு பகுதியினர் எதிர்த்தாலும், மற்றொரு பிரிவினர் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர்! அந்த ஆதரவும் இந்து, முஸ்லீம் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த போது விடைபெற்றுக் கொண்டது!

மனிதர்களை சரி நிகர் சமானமாக மதிக்க வேண்டும். ஏற்ற தாழ்வுகளை ஏற்கலாகாது என்பதே இருவர் இயக்கங்களின் அடி நாதமாக இருந்தது.

ஜாதி,ஏற்றத் தாழ்வுகளை சாடியதில் பாரதிக்கு நிகர் பாரதியே! மத நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் ஏமாற்றுகளை அம்பலப்படுத்தியதிலும் பாரதி ஒரு சூராதி சூரரே!

அவருடைய ’மிளகாய்பழ சாமியாரும்,வாழைப்பழ சாமியாரும்’ கதை ஒன்று போதும் போலிச் சாமியார்களை புட்டு,புட்டு வைத்திருப்பார்!

‘’உண்மையின் பேர் தெய்வமென்போம் – அன்றி

ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்!

 உண்மைகள் வேதங்கள் என்போம் – பிறிது

உள்ள மறைகள் கதையனக் கண்டோம்!’’

தெய்வம் என்பது என்ன? அது உண்மையின் அம்சம்! உண்மைவழி நிற்றலே தெய்வ வழி செல்வதாகும்! மற்றபடி நாம் பெயர்வைத்து கும்பிடுவதெல்லாம் பொய்தான்! அதே போல எது உண்மையோ அதுவே வேதம்! மற்றபடி நீ வேதங்கள் எனக் கூறி விதந்தோதி போற்றி கூறுவதெல்லாம் கதை தான்! என்கிறர்.

எவ்வளவு தெளிவும்,திடமும் இருந்தால்,பாரதி இப்படி எழுதியிருப்பான்!

‘’சூத்திரனுக்கு ஒரு நீதி! – தண்டச்

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி!

சாத்திரம் சொல்லிடுமாயின் -அது

சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.’’

என்று ஒரு பிராமணராக பிறந்தவர் எழுதி,பெரும் பகையை சொந்த சாதிக்குள்ளே தேடிக் கொண்டு தனிமைப்பட்டதை என்னென்பது?

இத்துடன் நிறுத்தினாரா? என்றால், அது தான் இல்லை!

நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் – இந்த

நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்,

எந்தக் குலத்தினரேனும் – உணர்

வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்!

இது ,தன் சொந்த சாதியாருக்கு அவன் விடுத்த அறைகூவலாகும்!

டேய், நீங்கள்ளாம் பிறப்பால் உங்களை பார்ப்பனராக கருதி பீத்திக்கிறீங்க, ஆனால், உங்களால் சிவன் கோயிலுக்குள் நுழைய மறுக்கப்பட்ட நிலையில், அப்படி நுழைய முற்பட்டால் உயிருக்கு உத்திரவாதமில்லை என உணர்ந்தும், தன் உயிரை இழந்தாலும் பரவாயில்லை ஈசனை நினைக்கும் உணர்வின்பத்தின் உச்சத்தை அடைந்தே தீருவேன் என திமிறி தீக்கிரையானானே….அடடா என் சொல்வேன்? அவனன்றோ பார்ப்பான்! அவனுக்கு ஈடு நான் உட்பட யாருமே இல்லை.’’ என பிரகடனப்படுத்தினானே பாரதி! இவனன்றோ ஒரு நிஜமான யுககவி!

கண்ணனை தாயாக பாவித்து எழுதிடும் கவிதையிலும் காண்பது என்ன? எனப் பார்க்கையில் வியப்பே மேலிடுகிறது..!

சாத்திரம் கோடி வைத்தாள் – அவை

தம்மினும் உயர்ந்ததோர் ஞானம்வைத்தாள்!

மீத்திடும் பொழுதினிலே – நான்

வேடிக்கையுறக் கண்டு நகைப்பதற்கே

கோத்த பொய் வேதங்களும் – மதக்

கொலைகளும்,அரசர் தம் கூத்துகளும்

மூத்தவர் பொய் நடையும் – இள

மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள்!

வேதங்கள் என்பவை வேடிக்கையுறக் கண்டு நகைப்பதற்கான பொய்மை கலந்தவை என பாரதி நமக்கு சொன்னதோடு, இந்த பொய்மையின் தொடர்ச்சியாக நடந்த மதக் கொலைகளையும் அவர் சுட்டிக் காட்டத் தயங்கவில்லை!

அரசர்கள் என்பவர்கள் தெய்வத்திற்கு நிகராக கருதப்பட்ட மன்னராட்சி காலத்தில் அந்த அரசர்கள் அதிகாரபித்தால் செய்த கூத்துகளையும் பாரதியார் கிண்டலடிக்கிறார்! பெரியவர்கள் சொல்லிச் சென்ற பல பொய்மைகளும்,அதை அப்படியே நம்பியதன் வாயிலாக இளைஞர்களுக்கு ஏற்படும் மூடக் கவலைகளையும் கண்ணன் பாடல் வழியே அவர் அடையாளம் காட்டுகிறார்!

வாழ்க்கையை சமூகப் பொறுப்புடன் அணுகி, சுய நலம் துறந்து பொது நலன் விழைபவர்கள் தங்களுக்கான சுதந்திரத்தை தாங்களே கட்டமைத்துக் கொள்வர்! அந்த வழியில் எதிர்படும் இன்னல்கள் எல்லாவற்றையும் இன்பமாக மாற்றிக் கொள்வர்!

சுதந்திரமில்லா வாழ்க்கையில் கிடைக்கும் வசதி வாய்ப்புகளுக்காக மானம்,மரியாதை இழந்து வாழ்வதும் ஒரு வாழ்வாகுமா?

மானம் சிறிதென்றெண்ணி

வாழ்வு பெரிதென்று எண்ணும்

ஈனர்க் குலகந்தனில் – கிளியே

இருக்க நிலைமை உண்டோ…!

இதை, இன்றைய தினம் அரசியலில்,அலுவலகங்களில்,குடும்பங்களில் அடிமையாக உழன்று கொண்டிருப்பவர்கள் மனதில் கொள்ள வேண்டும்!

‘இதந்தறும் மனையின் நீங்கி

இடர்மிகு சிறைபட்டாலும்

பதந்திரு இரண்டும் மாறி

பழிமிகுந் திழிவுற் றாலும்

விதந்தரு கோடி இன்னல்

விளைந்தென்னை அழித்திட்டாலும்

சுதந்திர தேவி நின்னை

தொழுதிடல் மறக்கி லேனே’

ஆம், அவரவர் சுதந்திரத்திற்கும், அடிமைத் தனத்திற்கும் அவரவர் மனோபாவமே காரணமாகும்!

நம்மை சுற்றிப் பிணைக்க வரும் அடிமைத் தளையைத் தூக்கி எறிவதும்,சுதந்திரமான வாழ்வியலை உருவாக்கி கொள்வதும் அவரவர் மனநிலை சார்ந்த அணுகுமுறையால் சாத்தியப்படுவதேயாகும்! ஒருவர் மேட்டுக்குடியில் பிறப்பதும், தாழ்த்தப்பட்டவராக பிறப்பதும் ஒரு விபத்தே! அதன் பிறகு தன் வாழ்க்கையை அவர் எப்படி உண்மையாகவும், சுதந்திரமாகவும் கட்டமைத்துக் கொள்கிறார் என்பது அவரது முயற்சியில் உள்ளது!

சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time