வனப் பாதுகாப்பா? மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பா?

வனத்தையும் வன உயிரினங்களையும் பாதுகாப்பதா? அல்லது அப்பகுதியில் ஐந்து தலைமுறையாக விவசாயம் செய்து வாழும் மக்களை பாதுகாப்பதா? என்ற கேள்வி வருஷ நாடு பகுதியில் எழுந்துள்ளது. இதில் பன்னெடுங்காலமாக வசிக்கும் மலைவாழ் பழங்குடிகளின் வாழ்வும் கேள்விக்குறியாகி உள்ளது;

வன உயிரினங்களின் சுதந்திரத்தை உறுதிபடுத்தவும், புலிகளை பாதுகாக்கவும் மேகமலை புலிகள் காப்பகத்தின் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததையடுத்து பகுதிகளில் நான்கைந்து தலைமுறைகளாக வாழ்வோரின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது.

தேனி வனக்கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, மேகமலை வன உயிரின சரணாலயம் உருவாக்கப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் ரோட்டிற்கு கிழக்கு பகுதியில் உள்ள கம்பம் கிழக்கு, சின்னமனூர், மேகமலை, வருஷ நாடு, கண்டமனூர், ஆண்டிபட்டியின் ஒரு பகுதி என வனப்பகுதிகள் கொண்டு வரப்பட்டது. இவை புலிகள் காப்பக துணை இயக்குநர் கட்டுப்பாட்டிலும்,  மேற்கு பகுதியில் குமுளியில் இருந்து போடி, பெரியகுளம் வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் காப்பு காடுகளாக உள்ளன. இவை மாவட்ட வன அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ளது.
புலிகள் காப்பகத்தில் புலிகள், யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்த வனத்துறையினர் தீவிர அக்கறை காட்டுகின்றனர்.

இதனால் அங்கு விவசாயம் செய்து வாழும் மக்களை வெளியேற்றும் நோக்கத்தில்  தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்கின்ற பளியர் பழங்குடி மக்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுகளைச் சுமத்தி மலைகளிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது அங்கு வாழும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், பதட்டத்தையும்  உருவாக்கி உள்ளது.

வருசநாடு மலைப்பகுதிகளில் பிரிட்டிஷார் ஆட்சியில் இரயத்துவாரி முறையில் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களில் விவசாயம் செழித்து இருந்தது. கடந்த 1974ஆம் ஆண்டு சிறார், உடங்கலார், மூலவைகை ஆற்றுப் படுகை மற்றும் சிற்றாறுகளின் கரையோரங்களில் இருந்த மக்கள் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த வன நிலங்களை சீர்படுத்தி விளைநிலங்களை உண்டாக்கி பயிர் செய்யத் தொடங்கி ஐம்பது வருடங்கள் உருண்டோடி விட்டன.

இதற்கும் முன்பாக 1964ஆம் ஆண்டு தென் மாவட்டங்களில் நிலவிய கடும் வறட்சியை சமாளிக்கவும், வயிற்றுப்பசியை தீர்க்கவும் தும்மக்குண்டு, உப்புத்துறை, வெட்டுக்காடு,  காந்திகிராமம், கோடாரி யூத்து,  கட்சிக்காடு, கோரையூத்து, மஞ்சள் ஊத்து, இந்திராநகர் அரசரடி பூசாரி புதுக்கோட்டை, அரண்மனை புதூர் , பொம்மு ராஜபுரம், வாலிபரை,  தண்டிகுலம், கொடிக்குளம் குடிசை காமராஜபுரம் ஆகிய மலை கிராமங்களில் பொது மக்கள் குடியேறினர்.

இவர்களுக்கு இடைப்படு காடுகள் திட்டத்தின் விளை நிலங்களை சீர்திருத்தி மரங்களை நடவும் ஊடு பயிரிட்டு கொள்ளவும் காமராஜர் ஆட்சியில் வனத்துறை அனுமதி அளித்தது. தற்போது மேகமலையின் மலை கிராமங்களில் 6,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 60,925 ஏக்கர் வன நிலங்களில் விவசாயம் செய்து மூன்று தலைமுறைக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர்..

மேகமலை-வருசநாடு வனப்பகுதி கடந்த 2012ஆம் ஆண்டு மேகமலை வன உயிரின சரணாலயமாகவும், கடந்த 2021 பிப்ரவரி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தப் பகுதியில் காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்படுவதால் சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

எழில்மிக்க மலைப் பகுதியும், அங்கு குவியும் நெகிழிப் பைகளும்!

சுற்றுச் சூழலை பாதுகாக்க நீதிமன்ற உத்தரவிட்டது. அதன்படி மேகமலை, வருஷநாடு வனப்பகுதியிலிருந்து மலை கிராம மக்களை வெளியேற்றி விவசாயத்தை தடுக்கவும், அம் மக்களை வெளியேற்றவும் வனத்துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். வனப்பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறுமாறு விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மலை கிராமங்களில் இருந்து பொது மக்களை வெளியேற்றும் அறிவிப்பு விவசாயிகளிடையே கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.

இதற்கிடையில் சுற்றுச் சூழல் பாதுகாக்கவும், காடுகளை பாதுகாத்து வன உயிரினங்களை அதிகரிக்கச் செய்யவும் மேகமலை வருஷநாடு மலை கிராமங்களின் மக்களுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் வனத்துறை கெடுபிடி காட்டி வருகிறது. மேகமலை பகுதியில் புலிகள் சரணாலயம் 2021 ல் மத்திய அரசு அறிவித்தது. ஆயினும் தேர்தல் நேரங்களில் இவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று திமுக, அதிமுக கட்சிகள் வாக்குறுதி அளித்து அதிகாரத்திற்கு தொடர்ந்து வந்தன.

தேனி மாவட்டம் போடி வட்டத்தில் அகமலை, அண்ணாநகர், ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, சொக்கன்அலை, படப்பம்பாறை உள்ளிட்ட ஏராளமான மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு காபி, வாழை, எலுமிச்சை, மிளகு உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதி கிராம மக்கள் அரசாங்கத்திடம் தங்களை வெளியேற்றக் கூடாது என மன்றாடி வருகின்றனர். “5 தலைமுறையாக இங்கு வசித்து வருகிறோம். எங்களுக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது. ஆகவே வனத்துறை எங்கள் மீது நெருக்கடி செய்வதை நிறுத்த வேண்டும். விவசாயம் தடையின்றி தொடர உரிய வழிவகை செய்ய வேண்டும்” என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதே சமயம் காடுகளை அழித்து பயிர் செய்திருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அடிவார பகுதிகளில் காட்டு யானை, காட்டு மாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனி மாட்டத்தில் தேவாரம், பண்ணைபுரம், போடி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக கடமலைக்குண்டு ஒன்றியம், வருசநாடு, தேவாரம், பண்ணைபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்  காட்டு யானை, காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமட்டங்கள் அதிகரித்து வருகிறது. இந்த விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து காய்கறிகளையும், பயிர்களையும் சேதப்படுத்தி பசியாறுகின்றன. சில சமயங்களில் காட்டு மாடு, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அங்குள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களையும் தாக்கி விடுவதால் மரணங்களும் ஏற்படுகின்றன.

ஆக, மேகமலை மற்றும் வருஷ நாடு பதுகிதிகளில் உள்ள விலங்குகளின்  வாழ்வாதாரத்தையும், சுதந்திரத்தையும் உறுதிபடுத்துவதா? அல்லது அங்கு வாழும் சுமார் 1,600 குடும்பங்களை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்துவதா? 1,679 ஏக்கர்  நிலத்தில் நடக்கும் பசுமையான விவசாயத்தை கைவிடுவதா? தொடர்வதா?  என்ற இடியாப்ப சிக்கல் எழுந்துள்ளது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்புகள், வனப் பாதுகாப்பு சட்டங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு சர்வதேச அளவில் தரப்படும் முக்கியத்துவம் ஆகியவற்றை கொண்டு பார்க்கும் போது, மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

அதே சமயம் இந்த வனப் பகுதிகளில் 12 சட்ட விரோத சொகுசு ரிசார்ட்டுகள் கட்டப்பட்டு உள்ளன. சில வணிக மற்றும் தொழில் கேந்திரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது ஒரு பெரிய சுற்றுலா தளமாக உள்ளது. இதை வனத் துறை எப்படி அனுமதித்தது? செல்வாக்குள்ளவர்கள் எதுவும் செய்யலாம். ஆனால், எளிய மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற இரட்டை அளவுகோல் ஜனநாயகமாகுமா? என்ற கேள்வி அலட்சியப்படுத்த முடியாத ஒன்றாகும்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time