பொது வாழ்வில் புடம் போட்ட தங்கமாக ஜொலித்தவர் ப. மாணிக்கம்!

-காசி விஸ்வநாதன் 

சுதந்திரப் போராட்ட வீரர். தியாகி. எளிமையானவர். கொள்கைப் பிடிப்பும் உறுதியும் மிக்கவர் தோழர் ப.மாணிக்கம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக 1978 முதல் 1992 வரை பணியாற்றிய தலைவர். பொதுவாழ்வில் ஒரு மாணிக்கம் என புகழப்பட்டவர். இன்றைக்கு அவரது பிறந்த நாள்;

கொள்கை பிடிப்பு,  அணிகளை அரவணைத்துக் கொள்ளும் தன்மை, மக்களோடு கலந்துரையாடும் பான்மை கொண்டு தலைமை பண்பு நிறைந்தவராக விளங்கினாலும், சாதாரண தொண்டராக, எளிமையின் இலக்கணமாக இறுதிவரை காட்சியளித்து வந்தார்.

பொது வாழ்க்கை களத்தில் இயல்பாகவே எளிமையும் அடக்கமும் ஒழுக்க முறைகளும் கொண்டவராக ஒருவர் நீடிக்க முடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர் தோழர் மாணிக்கம்.பொது வாழ்க்கையில் மாணிக்கம். ஆகவே அரசியலில் அவரை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மாணிக்கம் 26 10 1921 அன்று தஞ்சை மாவட்டத்தில் வலங்கைமான் அருகில் உள்ள பாடகச்சேரியில் பிறந்தார். தந்தை பக்கிரிசாமி.தாயார் மகமாயி அம்மாள். இவர்களின் வாழ்க்கை நிர்பந்தத்தில் கடலூரில்தந்தையார் குடி புகுந்தார்.

கடலூரில் அஞ்சலை அம்மாளின் தியாக வாழ்க்கையை பார்த்து வியந்து பொது வாழ்க்கைக்கு வந்தவர். ஜீவா நெல்லிக் குப்பத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் உரையாற்ற வரும் பொழுது கொடுத்த சில புத்தகங்களால் பொதுவுடமையை பற்றி அறிந்து கொண்டார்.   சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்தார். உடன் பயின்ற மார்க்சிய அறிஞர் சுப்பிரமணிய சர்மா, பாலன் என்ற பால தண்டாயுதம் போன்றோர் தோழர்களாக அமைந்ததனர். அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் அன்றைய அரசியல் நிகழ்ச்சிகள் மாணிக்கத்தை சிறந்த தேச பக்தனாகவும் பொதுவுடமை போராளியாகவும் உருவாக்கியது.

கட்சியின் கட்டளைக்கேற்ப நெல்லை மாவட்டத்திற்கு வந்தார். மாணவர் பெருமன்றத்தை தமிழ்நாட்டில் கட்டி அமைத்த பெருமை தோழர்கள் பாலனுக்கும், மாணிக்கத்திற்கும் உண்டு. முதல் மாணவர் பெருமன்ற தமிழ்நாடு அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். நெல்லை மாவட்டத்தில் கட்சியை வளர்ப்பதற்கான பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. பாலனுடன் இணைந்து ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சுற்றிச் சூழன்று வந்தார்.

ப. மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வு நடந்த போது!

1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட முதல் மாநாடு வண்ணாரப் பேட்டையில் நடைபெற்றது. ப. மாணிக்கம் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அது ஆண்டு கல்கத்தாவில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி காங்கிரஸ் ( பேராயம்) அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்தது.

காவல் துறை நர வேட்டை ஆடியது தலைவர்களையும்,  முக்கியமான ஊழியர்களையும் கைது செய்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தடை மீறி தலைமறைவு வாழ்க்கைக்கிடையில்  மாணிக்கம் கடும் துயரங்களுக்கு இடையில் பணியாற்றினார்.  இவருடைய சக தோழர்கள் வேலுச்சாமி தேவர்,  நல்லகண்ணு,,  நல்ல சிவம்,  மாயாண்டி பாரதி, பேராசிரியர் நா.வானமாமலை, வழக்கறிஞர் என்.டி. வானமாமலை பலரை குறிப்பிடலாம். தங்களையே அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றிய மாவீரர்கள்.

தோழர், தோழமை என்று சொல்லுக்கு தன் வாழ்க்கையால் அணி சேர்த்தவர் மாணிக்கம். எவரையும் இழக்க அவர் இசைய மாட்டார். அனைவரையும் அனைத்து செல்லும் நீண்ட கரங்கள் அவரிடம் இருந்தது.  எனவே தான் தலைமறைவு வாழ்க்கையிலும் தோழர்களை இணைக்கும் பணி தொடர்ந்தது.

1949 -ஆம் ஆண்டு மே மாதம் மாணிக்கம் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டார். தன் பெயர் வரதன் என்று கூறி தப்பித்து விட்டார்.

ஆனாலும், போலீஸ்காரர்களின் சந்தேக வலையில் அவர் விழுந்து விட்டார். தலைமறைவு வாழ்க்கை நெடுநாள் பட்டினி. கட்சிப் பணிக்காக குற்றாலம் பகுதிக்குச் சென்று இருந்தார். குற்றாலத்தில் ஐந்தருவி செல்லும் சாலையில் புலனாய்வு காவலர் ஒருவர் மாணிக்கத்தை அடையாளம் கண்டு பிடித்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து மாணிக்கம் கடும் சித்திரவதைக்கு உள்ளனர். குற்றாலம், தென்காசி,  அம்பாசமுத்திரம்,  திருநெல்வேலி,  ஸ்ரீவைகுண்டம்,  தூத்துக்குடி என பல காவல் நிலையங்களில் அடித்து நொறுக்கப்பட்டார்.

அன்றுதான் ஆசிரியர் ஆர். எஸ். ஜேக்கப் கைது செய்யப்பட்டிருந்தார். மாணிக்கத்தை சாக்கு முட்டையில் கட்டி கொண்டு வந்து அந்த காவல் நிலையத்தில் போட்டு விட்டார்கள். மாணிக்கம் செத்துப் போய்விட்டார் என்று காவலர்கள் சொல்லிவிட்டார்கள். ரத்தச் சகதியில் கிடந்தவரை கண்டுகொள்ளாமல் ஜேக்கப் பை சித்திரவதை செய்யத் தொடங்கினார்கள். காற்றைக்  குடித்து உயிர் பெற்று எழும் நாகத்தை போல மாணிக்கம் உயிர் பெற்று எழுந்தார் என ஆசிரியர் ஜேக்கப் கூறினார்.

நெல்லை சதி வழக்கில் தொடர்புள்ள ப.மாணிக்கம், வாத்தியார் ஜேக்கப், நல்லகண்ணு

பாளையங்கோட்டை கொக்கரகுளம்  சிறைச்சாலையிலும்,  மதுரை சிறைச்சாலையிலும் அடைத்து வைக்கப்பட்டார். மதுரை சதி வழக்கிலும் நெல்லை சதி வழக்கிலும் மாணிக்கம் சேர்க்கப்பட்டார். மதுரை சதி வழக்கில் நெடுநாள் விசாரணை கைதியாக  சிறையில் இருந்த மாணிக்கம் நெல்லை சதி வழக்கில் குற்றவாளியாக   நிறுத்தப்பட்டார்.

1949 முதல் 1950 ஆம் வரையிலான காலகட்டத்தில் விக்கிரமிசிங்கபுரம், திருநெல்வேலி, களக்காடு, மணியாச்சி,ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி ,கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் என பல பகுதிகளில் பல பதிவான வழக்குகளை  ஒன்றிணைத்து நெல்லைச் சதி வழக்கு போடப்பட்டது.

மத்திய மாநில அரசுகளை கவிழ்க்க சதி செய்ததாகவும், ரயில்,தந்தி போக்கு வரத்தை சீர்குலைக்க முயன்றதாகவும் வெடிபொருட்கள் சட்டத்தை    மீறியதாகவும்,  ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் பொய்க் குற்றங்கள் சுமத்தப்பட்டன.

ஐந்தரை ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு மாணிக்கம் விடுதலை செய்யப்பட்டார். சிறையிலும் இவர் தான் செயலாளர்.

இ. தளவாய் விடுதலைப் போராட்ட வீரர். பொதுவுடைமை இயக்கத்தின் தொண்டர். விக்கிரமசிங்கபுரம் தொழிற்சங்க இயக்கத்தின் தலைவர். சிறைச்சாலையில் மாணிக்கத்தோடு இருந்தவர்.  சிறையில் இருந்து விடுதலையான பின்பு 1955 ஆவது வருடம் தளவாயின் சகோதரி சரஸ்வதியை திருமணம் செய்து கொண்டார், மாணிக்கம். இந்த தம்பதியருக்கு 5 ஆண் மக்கள். ஒரு பெண் குழந்தை. குழந்தைகளின் மீது மாறாத அன்பு கொண்டவர் மாணிக்கம்.

1962 ஆம் ஆண்டு இறுதி வரை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பணியாற்றியவர். 1962 ஆம்  ஆண்டு டிசம்பரில் சென்னை மாநகருக்கு தலைமை பொறுப்பிற்கு வந்தார்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று உலக வரலாறு முதல் உள்ளூர் வரலாறு,  தத்துவம், தொல்லியல் கலை இலக்கியம், பொருளாதாரப் போன்ற எண்ணற்ற பொருள்களில் நூல்களைக் கொண்டு வந்துள்ளார்.

மார்க்சிய கல்வி ஆசிரியராக இருந்து தத்துவ அறிவின் மூலம் ஆற்றல்மிக்க மார்க்சியப் பெரும் படையை உருவாக்கியுள்ளார். தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக 8 ஆண்டுகள் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்து வரலாற்று சிறப்புமிக்க உரைகள் நிகழ்த்தி  உள்ளார். அவை புத்தக வடிவம் பெற்றுள்ளன.

ஜனசக்தி,  தாமரை,  மார்க்சிய ஒளி, கட்சி வாழ்க்கை,  ஆராய்ச்சி, New Age,  Party life, போன்ற பத்திரிகைகளில் கருத்தாழமிக்க கட்டுரைகளை எழுதியுள்ளார். அவருடைய எழுத்துக்கள் சில புத்தக வடிவம் பெற்ற போதிலும், முழுமையான புத்தக வடிவம் பெறவில்லை.

மாநில தலைமையகத்தில், மாநில செயலாளராக செயல்பட்ட காலத்தில் குரோம்பேட்டையில் இருந்து தினமும் மின்சார ரயில் மூலம் மாம்பலம் ரயில் நிலையம் வந்து ரிக்ஷா மூலமாகவே கட்சித் தலைமை  அலுவலகம் வந்து செல்வார். சில நேரங்களில் ஒன்னரை கிலோமீட்டர் தொலைவு நடந்தே வருவார். சில நேரங்களில் அலுவலக சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று வருவார்.

உட்கட்சி பிரச்சனைகள் மேலோங்கிய நேரங்களிலும் கூட தன் நிலையை, கட்சியின் கொள்கையை  விட்டுக் கொடுக்காத மிகச் சிறந்த ஆளுமை. எளிமையின் இலக்கணமாக வாழ்ந்த அவர் தொண்டர்களின் தலைவர்.

கட்சி வாழ்க்கையில் தனி நபர்களின் தவறுகளை சுட்டிக் காட்டும்  வேளையில் அவர்களை பழிவாங்காமல் திருத்துவதற்கு முயற்சிப்பார்.

கட்சி விசுவாசிகளைக் கண்டறிந்து அவர்களை சரியான இடத்தில் பொருத்துவதில் அவருக்கு நிகர்  அவர் தான்.

இந்தக் கட்டுரையாளன் மார்க்சிஸிய கல்வி படிப்பதற்கு ஜெர்மன் சென்று திரும்பிய வேளை…   “இவன் பீல்டு ஒர்க்கர். இவன் களத்தில் பணி செய்யட்டும். நான் பார்த்துக் கொள்கிறேன் “ என்றார். சில மாதங்களில் நெல்லை மாவட்ட நிர்வாக குழு கூட்டம் தூத்துக் குடியில் நடைபெற்ற போது,  அதில் பங்கேற்ற ப. மாணிக்கம் “இவனை நீங்கள் பார்த்துக் கொள்கிறீர்களா?  அல்லது நான் அழைத்துச் செல்லவா? “ என்ற கேள்வியை கேட்டார். தொழிற்சங்க தலைவர் ஆர். கணபதி “தொழிற்சங்க இயக்கத்தில் எனக்கு வாரிசு இல்லை. இவனை நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் “ என்றார். மாணிக்கம் காட்டிய பாதையில் நாம் இன்றும் தொழிற்சங்க இயக்கத்தில்  பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நம்மைப் போன்று ஆயிரம் ஆயிரம் தோழர்களை இனம் கண்டு இயக்கத்தில்  இணைத்து கொண்டவர் மாணிக்கம்.

தத்துவம் வரலாறு கட்சி கோட்பாடு பொருளாதாரம் பண்பாடு வாழ்நிலை போன்ற சமூகத்தில் நிலவிய அக்கால பிரச்சினைகளை தொலைநோக்கோடு விவாதித்துள்ளார். அவை நம் காலத்திற்கு மட்டுமின்றி எதிர்காலத்திற்கும் வழிகாட்டும் ஒளி விளக்காக திகழ்கிறது.

கட்சி அமைப்புகளை உருவாக்குவதிலும், மாநில மாவட்ட அலுவலகங்களையும், மாநில தலைமை அலுவலக வேலை முறைகளை ஒழுங்குபடுத்துவதிலும் அதிக அக்கறை காட்டினார்.  அடுத்த தலைமுறையை பயிற்றுவிக்கும் கடமை உணர்வு என இவற்றையெல்லாம் ஒருங்கே கொண்டிருந்த தலைவராக இருந்தார்.

மாணிக்கம் என்ற பல்கலைக்கழகத்தில் பயின்று பயிற்சி பெற்று மாணவர்கள்,  இளைஞர்கள் பலர் இன்று இயக்க பொறுப்புகளில் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். பல்வேறு ஆய்வுத் துறைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

கட்டுரையாளர்; காசி விஸ்வநாதன் 

தொழிற்சங்கத் தலைவர், எழுத்தாளர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time