ஆம்ஸ்டிராங் கொலையில் உண்மை குற்றவாளிகள் யார்?

-அஜிதகேச கம்பளன்

பகுஜன் சமாஜ் கட்​சி​யின் ஆம்​ஸ்ட்​ராங் 2024 ஜூலை 5-ம் தேதி பெரம்​பூரில் வெட்​டிப் படு​கொலை செய்​யப்​பட்​டார். இந்த வழக்கில் தமிழக போலீசார் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று ஆம்ஸ்டிராங் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என இரண்டுமே சி.பி.ஐ விசாரணைக்கு உத்திரவிட்டும் தமிழக அரசு மறுப்பது ஏன்?

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட போது ஆற்காடு சுரேஷின் தம்பி பொண்ணை பாலு திருவேங்கடம் , திருமலை ,ராமு ,செல்வராஜ் உள்ளிட்ட எட்டு பேர் சரணடைந்தனர். அப்போது ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பலியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

இந்த வழக்​கில் சிறை​யில் உள்ள பிரபல ரவுடி நாகேந்​திரன், அவரது மகனும், முன்​னாள் இளைஞர் காங்​கிரஸ் நிர்​வாகி​யு​மான வழக்​கறிஞர் அஸ்​வத்​தாமன், ரவுடி ஆற்​காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அஞ்​சலை, காங்கிரஸ், பாஜக, அதிமுக என பல்​வேறு அரசி​யல் கட்​சிகளைச் சேர்ந்தவர்​கள், 10 வழக்​கறிஞர்​கள், பெண்​கள் என மொத்​தம் 27 பேர் போலீ​ஸா​ரால் சிறை​யில் அடைக்கப்பட்டனர். இவ்வளவு பேரை சம்பந்தப்படுத்தி இந்தக் கொலை நடந்துள்ளது என்பதும், இந்த கொலைக்கு பெரிய அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பதும் இந்தக் கொலையின் பின்னணியில் பணபலமிக்க ஒரு செல்வாக்கான பெருபுள்ளி இருக்கும் வாய்ப்பு இருப்பதான சந்தேகத்தையே வலுப்படுத்துகிறது.

ஆம்ஸ்டிராங் கொலையில் கைதானவர்களில் சிலர்

இதில் தாமாக சரணடைந்த  திரு​வேங்​கடம்  போலீ​ஸா​ரால் என்​க​வுண்​டர் செய்​யப்​பட்​டார்.  நாகேந்திரன் சிறையில் உடல் நிலை சரியில்லாமல் மரணமடைந்தார் எனச் சொல்லப்பட்டது. இந்த வழக்​கில் தொடர்ந்து தலைமறை​வாக உள்ள சம்போ செந்​தில் மற்​றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீ​ஸார் கடந்த ஓராண்​டாக தேடி வரு​வதாகச் சொல்வது ஏற்கத்தக்கதாக இல்லை எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில். இந்த வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட நபர்​கள் மீது செம்​பி​யம் போலீ​ஸார் 5 ஆயிரம் பக்​கங்​கள் கொண்ட குற்​றப்​பத்​திரி​கையை எழும்​பூர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தனர்.

இந்​நிலை​யில் ”இந்த வழக்கை போலீ​ஸார் முறை​யாக விசா​ரிக்​க​வில்லை” எனக்​கூறி, ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் கீனோஸ் உயர்நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். அதில், ‘ஒரு தேசிய கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ராக பதவி வகித்த தனது சகோ​தரரின் படு​கொலை வழக்கை செம்​பி​யம் போலீ​ஸார் முறை​யாக விசா​ரிக்​க​வில்​லை.இந்த கொலை​யில் பல முக்​கிய அரசி​யல் புள்​ளி​களுக்கு தொடர்பு இருக்​கலாம் என்ற சந்​தேகம் உள்​ளது. கொலை​யில் தொடர்​புடைய சம்போ செந்​தில் மற்​றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை பிடிக்க தமிழக போலீ​ஸார் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை’ என மனுவில் கூறியிருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்​முரு​கன் முன்​பாக நடந்து வந்​தது. அப்​போது காவல்​துறை தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர்.முனியப்​ப​ராஜ், ”இந்த வழக்​கில் உடனடி​யாக 27 பேர் கைது செய்​யப்​பட்டு அவர்​களுக்கு எதி​ராக குற்​றப்​பத்​திரி​கை​யும் தாக்​கல் செய்​யப்​பட்​டு​விட்​டது. நீதி​மன்​றத்​தில் விசா​ரணை சரி​யான கோணத்​தில் தான் நடந்து வரு​கிறது” என வாதிட்டார்.

மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் யோகேஷ் கண்​ணா, ”இந்த வழக்​கில் முதல் குற்​ற​வாளி​யாக​வுள்ள ரவுடி நாகேந்​திரனுடன் நெருக்​க​மாக இருந்த தமிழக காங்​கிரஸில் முக்​கிய பொறுப்​பில் உள்ள தலை​வரிடம் இது​வரை எந்த விசா​ரணை​யும் நடத்​தப்​பட​வில்​லை. இந்த வழக்​கில் கைதான திரு​வேங்​கடம் ஏன் என்​க​வுண்​டர் செய்​யப்​பட்​டார் என்​பது குறித்​தும் போலீ​ஸார் தெளிவுபடுத்​த​வில்​லை. பல உண்​மை​களை மறைத்து போலீ​ஸார் அவசரக​தி​யில் குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்​துள்​ளனர். எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்​டும்” என வாதிட்​டிருந்​தார்.

இருதரப்​பிலும் வாதங்​கள் நிறைவடைந்த நிலை​யில்  நீதிபதி பி.வேல்​முரு​கன்  தனது தீர்ப்​பில், ”இந்த வழக்கு விசா​ரணையை சிபிஐ-க்கு மாற்​றி​யும், சிபிஐ அதி​காரி​கள் அரசி​யல் குறுக்​கீடோ, ஊடக குறுக்​கீடோ இல்​லாமல் சுதந்​திர​மாக விசா​ரித்து 6 மாதங்​களில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய வேண்​டும்” என உத்​தர​விட்​டு இருந்தார்.

ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக இடைக்காலத் தடை கோரியும், சிபிஐ விசாரணை உத்தரவை ரத்து செய்யவும் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சரியா அமர்வில் நீதிபதிகள், “ஹைகோர்ட்டின் சிபிஐ விசாரணை உத்தரவு நீடிக்கும்; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எந்தத் தடையும் இல்லை” என்று தெளிவுபடுத்தினர். இதனை தொடர்ந்து, ‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு உத்தரவிட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்து உள்ளது.

ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில், ‘ உச்ச நீதி​மன்ற அல்​லது உயர்நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிபதி தலை​மை​யில் குழு அமைத்து சி.பி.ஐ விசாரிக்கக் கோரி’, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்​கொடி இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​ததுள்ளார். இதைப் போலவே இந்த வழக்கில் கைதாகியுள்ள அஸ்வத்தாமனும் ‘இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கோரி’ இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ஆம்ஸ்டிராங் வழக்கில் தமிழக அரசை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி அறிக்கை விடுத்துள்ளார். அதில், ”தமிழகத்தை உலுக்கிய மிக முக்கிய கொலை வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அடுத்தடுத்து திமுக அரசு முட்டுக்கட்டைகளை போடுவது கண்டிக்கத்தக்கது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல்வாதிகள் சிலருக்கும், அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களை பலிகடாக்களாக மாற்றி விசாரணை வளையம் விரிவடையாமல் தடுக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் படுகொலை செய்யப்பட்டதில் தொடங்கி, சிபிஐ விசாரணையை தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்திருப்பது வரை திமுக அரசின் அனைத்து செயல்பாடுகளும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையிலேயே உள்ளன” என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சென்ற ஆண்டு, ‘ஆம்ஸ்டிராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சி, நீலம் பண்பாட்டு மையம் ஆகியவை சார்பில் எழும்பூர் முதல் வள்ளுவர் கோட்டம் வரை பேரணியும், போராட்டமும் நடத்தப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்ற ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, அவரது 2 வயது மகள் சாவித்திரி பாய், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட 1,500 க்கும் மேற்பட்டோர் மீது நுங்கம்பாக்கம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது நினைவிருக்கலாம்.

இந்த வழக்கில் முறையாக விசாரணை நடைபெற்று சமரசமில்லாமல் குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும் பட்சத்தில் தமிழக அரசுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்திருக்கும்.

அஜிதகேச கம்பளன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time