ஒப்பந்தப் பணி, குழந்தை கடத்தல், என்கெளண்டர்!

-சாவித்திரி கண்ணன்

மும்பையில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி அனைவரையும் பதைபதைக்க வைத்த சம்பவம் நெஞ்சைப் பிழிகிறது. ஒரு சிறந்த ஆவணப்பட இயக்குனர், பல விழிப்புணர்வு  டாக்குமெண்டரிகளை உருவாக்கிய ஒரு கலைஞன் எப்படி குழந்தைகள் கடத்தல் செயலில் ஈடுபட்டார் என்பதன் பின்னணி மனதை உலுக்கிறது;

மும்பையின் போவாய் பகுதியில் ஆடிஷன் நடத்துவதாக 17 குழந்தைகளை வர வழைத்து அக் குழந்தைகளையும், இரு பெரியவர்களையும் பணயக் கைதிகளாக வைத்திருந்த சம்பவத்தில் – அரசியல்வாதி ஒருவராலும், கல்வித் துறை அதிகாரிகளாலும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளான – ரோஹித் ஆர்யா என்ற நபர் மேற்படி விவகாரத்தில் என்கெளண்டர் செய்யப்பட்டுள்ளார்.

சிவசேனாவின் தீபக் கேசர்க்கர் கல்வி அமைச்சராக இருந்த போது 2022ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை, Swachhata Monitor என்னும் ஒரு திட்டத்தின் புராஜக்ட் டைரக்டராக வேலை பார்த்து தயாரித்து தந்துள்ளார், ரோஹித். இரண்டாண்டு கடுமையான உழைப்பில் அந்த திட்டத்துக்காக,  நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிகளுக்கு சென்று தூய்மை குறித்த விழிப்புணர்வுக்காக அவர் எடுத்த ஆவணப்படங்களையும், குறும்படங்களையும் பயன்படுத்திக் கொண்ட கல்வித் துறை, அதற்காக அவருக்கு பணம் கொடுக்காமல் – என்னென்னெவோ கொரி வைத்து இழுத்தடித்துள்ளது. இதன் பின்னணியில் அமைச்சர் தீபக் கேசர்கர் இருந்துள்ளார்.

இந்த பிராஜெக்டின் மதிப்பு இரண்டு கோடி. இந்தப் பணத்தை கடன் வாங்கித் தான் ரோகித் செலவழித்துள்ளார். இதற்காக ஓராண்டாக அலைந்து, திரிந்து, சிவசேனாவின் தீபக் கேசர்க்கரை கெஞ்சிக் கதறி எதுவும் பயனற்று போன நிலையில், நீண்ட நெடிய உண்ணாவிரதம் ஒன்றையும் இருந்து பார்த்துள்ளார். அமைச்சர் இல்லத்திற்கு பல முறை சென்று வேண்டியுள்ளார். எதுவும் நடக்காததால் பெரும் விரக்திக்கு உண்டான ரோகித் ஆர்யா இறுதியில் தற்கொலை முடிவெடுக்க யோசித்து, அப்படி செய்தால் கவனிப்பாரற்று மறக்கப்பட்டுவிடுவோம் என மிக முட்டாள் தனமாக குழந்தைகளை பயணக் கைதியாக வைத்து பேசியது பெரும் அதிர்ச்சியாகும்.

ரோகித் ஆர்யா, சிவசேனை அமைச்சர் தீபக் கேசர்கர்

“நான் ரோஹித் ஆர்யா. தற்கொலை செய்து கொள்வதற்குப் பதிலாக, நான் ஒரு திட்டத்தை வகுத்து, சில குழந்தைகளை இங்கே பிணைக் கைதிகளாக வைத்திருக்கிறேன். எனக்கு எந்தக் கோரிக்கைகளும் இல்லை.

தார்மீக மற்றும் நெறிமுறை சார்ந்த கோரிக்கைகள் மட்டுமே உள்ளன. எனக்கு சில கேள்விகள் உள்ளன. நான் சிலரிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். நான் ஒரு பயங்கரவாதியும் இல்லை, எனக்கு பணம் சார்ந்த கோரிக்கைகளும் இல்லை. நான் ஒரு எளிய உரையாடலை மட்டுமே விரும்புகிறேன்.அதனால் தான், இந்தக் குழந்தைகளை நான் பிணைக் கைதிகளாகப் பிடித்துள்ளேன்…என்றெல்லாம் பேசிய நபரிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்ற போலீசார் என்கெளண்டர் செய்ய நேரிட்டுள்ளது.

மேற்படி நபருக்கு குழந்தைகளை கொல்லும் அளவிலான கொடூர நோக்கமோ, அதற்கான மனோ திடமோ கிடையாது என்பது அவரது பேச்சின் முறைமையிலேயே வெளிப்பட்டது. ஆனாலும், பெற்றோர்களின் பதற்றம், பொதுமக்களின் அச்சம் இந்த விவகாரத்தை நீண்ட நேரத்திற்கு நீடித்துக் கொண்டு போக முடியாத சூழலை உருவாக்கி விட்டது.  இதனால், பெரிய அதிரடி படையை களத்தில் இறக்கி சம்பந்தப்பட்ட நபரை சுட்டுக் கொன்றனர்.

தன் துயரத்தை பல குடும்பங்களின் துயரமாக மாற்ற முனைந்து நிதானத்தையும், அறிவையும் இழந்த இந்த நபர் இறுதியில் அழிவைத் தேடிக் கொண்டார். குழந்தைகளின் பெற்றோர்களும், உறவினர்களும் அந்த மூன்று மணி நேரத்தில் அடைந்த மன உளைச்சலை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இதை நேரலையில் ஒளிபரப்பிய போது பார்த்த மக்களூம் பதைபதைத்தார்கள். எப்படியோ குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர். அனைவருக்கும் நிம்மதி திரும்பியது.

ரோகித்தின் மனைவி மீடியாக்களில் பேசிய போது, ’’என் கணவரால் இப்படி செய்ய முடியுமா என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால், அவர் அலைக்கழிக்கப்பட்டதிலும், துச்சமாக மதித்து அவமானப்படுத்தப்பட்டதிலும் ரொம்பவே மனம் உடைந்து போயிருந்தார். விரக்தியின் விளிம்பில் இருந்தார். பணம் கூட அடுத்தபட்சம் தான்! ஆனால், அவரிடம் காட்டப்பட்ட அலட்சியம், அராஜகம், அவமரியாதையில் செய்யக் கூடாத வழிமுறைக்கு போய்விட்டார் என்று தோன்றுகிறது’’ எனக் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் லேசுபட்டவர்களா?

நூலகத்துறைக்கு புத்தகங்களை அனுப்பிவிட்டு ஆண்டுக்கணக்கில் அலைகழிக்கப்படும் பதிப்பாளர்கள்,

அரசுத் துறையில் ஒப்பந்தப் பணிகளை முடித்துக் கொடுத்து மாதக்கணக்கில் தேவிடு காத்துக் கொண்டிருப்பவர்கள்…,

அரசுத் துறைக்கு மேஜை நாற்காலிகள் என பர்னிச்சர்களை சப்ளை பண்ணிவிட்டு காத்திருப்பவர்கள்..

இவர்களை கேட்டால் சொல்கிறார்கள்; அரசு ஒப்பந்தப் பணிகளை செய்வோருக்கு இரும்பு நெஞ்சமும், ஈடு இணையற்ற பொறுமையும் இருந்தால் மட்டுமே இயங்க முடியுமாம்.

ஒரு ஒப்பந்தப் பணியை முடித்தவுடன் அல்லது ஒரு சேவையை பெற்றவுடன் இத்தனை நாட்களில் அதற்கான பணத்தை செட்டில்மெண்ட் செய்ய வேண்டும் என ஒரு கறாரான விதியை வகுக்க வேண்டும். அதை மீறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time