அமெரிக்க டிரம்ப்பும், சீன ஜிஜி பிங்கிற்குமான பேச்சு வார்த்தையின் விளைவு என்ன? அமெரிக்காவின் வரி யுத்தம் முடிவுக்கு வருமா? நாம் அதிகம் ஏற்றுமதி செய்யும் அமெரிக்க நம்மீது அதிக வரியை விதித்ததன் காரணம் என்ன? நாம் அதிகமாக இறக்குமதி செய்கின்ற சீனாவுடன் நமக்கு முரண்பாடுகள் அதிகரிப்பது ஏன்? ஒரு சர்வதேச அலசல்;
தென்கொரியாவின் பூசான் மாநகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும், சீன அதிபர் ஜி ஜின் பிங் கிற்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை (tariff) 57% விழுக்காட்டிலிருந்து 47% ஆக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
ஃபென்டானில் (Fentanyl) தயாரிப்புக்கு உதவும் மூலப் பொருட்களை கட்டுக்குள் கொண்டு வர சீனா ஒத்துக் கொண்டதால், பேச்சு வார்த்தைகள் வெற்றி பெற்றன. வரிகள் குறைக்கப்படுகின்றன என்று டிரம்ப் பெருமிதத்துடன் கூறுகிறார்.
உலகின் வல்லரசான அமெரிக்கா அதற்கடுத்த வல்லரசான சீனத்துடன் உடன்பாடு ஏற்பட்டு நட்புறவோடு திகழ்வது, அமெரிக்கா சீனாவிற்கு இடையேயான வரி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆனால் இதன் மூலம் உலகில் பதட்டம் தணியும் என்று சிலர் கருத்து தெரிவிக்கும் வேளையில் , ‘அமெரிக்க – சீன உடன்பாடு ‘ சில சக்திகளுக்கு குறிப்பாக இந்திய பாஜக அரசுக்கு வயிற்றில் புளியை கரைத்தது போல் இருக்கிறது!
இரண்டாவது முறையாக டிரம்ப் ஆட்சியில் அமர்ந்தவுடன், அவர் தொடங்கிய வரி யுத்தம் சீனாவிற்கு மட்டுமின்றி, அனைத்து உலக நாடுகளுக்கும் எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் தான். இந்த விவகாரத்தில் வரிவிதிப்பை அமெரிக்காவின் அயல்நாட்டுக் கொள்கை ஆயுதமாக மாற்றி போரை தொடங்கியுள்ளார் டிரம்ப்.

இதன் விளைவாக மேற்கத்திய நாடுகளால் நேற்று வரை பெருமையாக பேசப்பட்ட ரூல்ஸ் பேஸ்டு குளோமல் ஆர்டர் (1995 ல் நிறுவப்பட்ட உலக வர்த்தக அமைப்பின் மூலம் -WTO- ஏற்படுத்தப்பட்ட சட்டத்திற்குட்பட்ட உலக நடைமுறைகள் ) இன்று டிரம்பினால் தூக்கி எறியப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் பிற உறவுகளை சட்டவழியாக தீர்மானிப்பதை விடுத்து தான்தோன்றிதனமாக தீர்மானிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த இந்த முயற்சி வரி யுத்தத்தில் வந்து முடிந்துள்ளது. இதன் போக்கில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளான ஐரோப்பிய யூனியனை சார்ந்த பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அமெரிக்காவால் கைவிடப்பட்ட நிலையில், இந்தியா போன்ற ‘சார்பு நாடுகளின்’ நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
ஆப் கி பார், டிரம்ப் சர்க்கார் என்று மோடி முழங்கினாலும், டிரம்ப் இந்தியா மீது 51% வரிகளை விதித்து வதை செய்து வருகிறார்.
அமெரிக்காவின் “அடியாளாக” தெற்காசியாவில் வலம் வரலாம் , இதன் மூலம், குவாட் கூட்டமைப்பில் (QUAD) முக்கிய பங்காற்றி சீனத்தின் எழுச்சியை தடுத்து நிறுத்தலாம் என பகல்கனவு கண்டு கொண்டிருந்த இந்திய ஆளும் சக்திகளுக்கு அமெரிக்க சீன உறவுகள் சீரடைவது கலக்கத்தை கொடுக்கின்றன. உலகின் இரு பெரும் வல்லரசுகளும் ஒருவரோடொருவர் மோதாமல் ஒற்றுமையாக நடந்தால் கூத்தாடிகளுக்கு திண்டாட்டம் என்பதை போல் மோடியின் அரசு இப்பொழுது எப் பக்கம் சாய்வது என்று பேதலித்துள்ளது.

அமெரிக்கா சீனா இடையே ஏற்பட்டுள்ள இந்த இணக்கம் எதிர்காலத்தில் தொடருமா? உலக வர்த்தக உறவுகள் பன்முகத் தன்மையுடையதாக மாறுமா? அல்லது இரு வல்லரசுகளின் ஆதிக்க பகுதிகளாக பிரியுமா?
அல்லது இரு வல்லரசுகளின் (G2) பிடியில் உலகம் சிறுமைப்படுமா? என பல கேள்விகள் எழுகின்றன.
இதற்கு விடை காண நாம் சில் மாறுதல்களை உள்வாங்கி கொள்வது அவசியமாகிறது.முதலில் இரண்டாவது உலகப்போரின் முடிவில் ஒரு துருவமாக உருவெடுத்த அமெரிக்கா, சோவியத் யூனியனுக்கெதிரான பனிப்போரில் (Cold war) வெற்றி பெற்று, உலகின் ஒரே துருவமாக (வல்லரசாக) 1992 முதல் வலம் வந்த நிலைமை இப்பொழுது இல்லை.
1980 களில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இன்று அமெரிக்க பொருளாதாரத்திற்கும், தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கும் சவால் விடும் சக்தியாக சீனா உருவெடுத்து, தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக வளர்ந்துள்ளது.

மூன்றாவதாக 1945 முதல் உலக நாடுகளின் நாணயமாக அமெரிக்காவின் டாலரை முன்னிறுத்தி, உலகின் நிதி அமைப்பை , உலக வங்கிகளின் நிதிப் பரிவர்த்தனையை அமெரிக்க நாடு தன்கட்டுக்குள் வைத்திருந்த நிலைமைக்கு இன்று சீனா “வேட்டு “ வைத்துள்ளது.
இவ்வாறு அமெரிக்காவின் நாணய ஆதிக்கத்தை (Currency Dominance) தகர்க்கும் நிலையில் சீனா இருப்பதால், தொழில் நுட்பத் திறனிலும் அமெரிக்கா தனது முதன்மை இடத்தை இழக்க விரும்பாத அமெரிக்கா, தன்னை தற்காத்துக் கொள்ள சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதற்காகவே அமெரிக்க அரசின் வர்த்தகத் துறை (Department of Commerce) 2025 செப்டம்பர் 29 அன்று ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிகளை (Export Control Rules issued on September 29,2025) அறிவித்தது. இதன்படி அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த கட்டுப்பாடு முதலில் சுமார் 1,200 நிறுவனங்களில் தொடங்கி இறுதியாக 20,000 சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தன. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் சிப் தொழில் நுட்பத்தை சீனாவிற்கு வழங்குவதை தடுக்க அமெரிக்கா முயல்கிறது.
இதற்கு பதிலடியாகவே சீனா அரிய வகை மண் தாதுக்களை, அதன் வழி உற்பத்தியான பேட்டரி மற்றும் மாக்னெட் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்தது. உலகெங்கும் உள்ள ஊடகங்கள் சீனாவின் இந்த தடை கட்டுப்பாடுகளை கேள்வி கேட்டனவே ஒழிய, இதற்கு வித்திட்ட அமெரிக்க அரசின் ஏற்றுமதி கட்டுபாட்டு விதிகளை (செப்.29) பற்றி வாய் திறக்கவில்லை.
சிப் தொழில்நுட்பத்தில் சீனா அமெரிக்காவை விஞ்சிவிடக்கூடாது என பல கட்டுப்பாடுகளை விதிக்கும் அமெரிக்க அரசு , தைவான் போன்ற பிற நாடுகளையும் , சிப் உற்பத்தி செய்யும் நிறுவனங்களையும் சீனாவுடனான உறவுகளை முறித்துக் கொள்ள வற்புறுத்தி வருகிறது. சப்ளை செயின் என்று சொல்லக்கூடிய அளிப்பு தொடரை அறுத்தெறிய அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆனால், அதே சமயம் அரிய வகை தாதுக்களை சீனா தங்கு தடையின்றி தங்களுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்பில் நியாயமும், நேர்மையும் சிறிதும் இல்லை என்பது உலக ரகசியமாகும் .
உலகின் அரியவகை தாது உற்பத்தியில் 99% சீனாவில் தான் நடக்கிறது. இதன் பொருள் அரியவகை தாது சுரங்கங்கள் சீனாவின் வசம் உள்ளன என்பதல்ல. அந்த அரிய மூலத்தாதுக்களில் இருந்து தாது பொருட்களை (minerals) பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் சீனாவிடம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகப் புகழ்பெற்ற கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் சீனத்தின் கட்டுபாட்டை தகர்க்க மேலை நாடுகளுக்கு இன்னும் பத்து ஆண்டுகள் பிடிக்கும் என கூறியுள்ளது.

இத்தகைய சூழலில் அமெரிக்காவின் கரன்சியான டாலரின் ஆதிக்கத்தை சீனம் எதிர்க்கத் துணிந்துள்ளது. பெட்ரோ டாலர் என்பது இன்று பழங்கதையாக மாறி, சீனாவின் வர்த்தக பரிவர்த்தனைகள் யாவும் யுவான் நாணயத்தினடிப்படையில் நடைபெறத் துவங்கியுள்ளன. ஸ்விஃப்ட் (swift) வங்கி முறைக்கு மாற்றாக SIPS என்ற துரித சேவையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
உற்பத்தியும் , அதற்கு வேண்டிய அளிப்பு தொடரும் ( production and the supply chain) இன்று முன்னைக் காட்டிலும் சிக்கல் நிறைந்த பல வழிப்பாதையாக மாறிய சூழலில் இன்று அமெரிக்காவிற்கு இருக்கும் ஒரே பலம் அதனது ராணுவ வலிமை மட்டுமே .
சமீபத்தில் டொனால்டு டிரம்ப் , அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடரும் என அறிவித்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
இந்த ராணுவ வலிமையை வைத்துக் கொண்டு, வரி யுத்தங்களின் மூலமும், டாலர் ஆதிக்கத்தின் மூலமும் உலகப் பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்த முனைகிறது அமெரிக்கா..!

டிரம்ப் நடத்தும் வரி விதிப்பு யுத்தத்தின் அடிப்படை நோக்கமும் இது தான். இந்த யுத்தத்தைதனது எதிரிகள் மீது மட்டுமல்ல, தனது கூட்டாளிகள் (ஐரோப்பிய நாடுகள்) மீதும், தங்களுக்கு ஊழியஞ்செய்யும் நாடான இந்தியா மீதும் டிரம்ப் போர் தொடுத்துள்ளார் என்பதே பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
சீனாவுடன் அமெரிக்கா இடைக் காலத்தில் சமரசப் போக்கை கடைப் பிடித்தால், அமெரிக்கா சீனா மோதலில் நாம் குளிர் காயலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் இந்துத்துவ ஆளும் வர்க்கங்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. இவர்கள் இதுவரை கூவி வந்த ‘சட்டவழியான வர்த்தக உறவுகள், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான நேவிகேஷன் என்ற முன்னேற்பாடுகளும், குவாட் (QUAD) கூட்டமைப்பின் திட்டங்கள் எல்லாம் காலாவதியாகும் நிலையில் உள்ளன. இதில் ராஜாவே (டிரம்ப்) தடம் மாறுகையில், சுயத்தை இழந்து பின்னால் செல்லும் அரசுகளின் (இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா) நிலை என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தனித்து இயங்க வழியில்லை
மோடி மட்டுமல்ல, இந்திய அதிகார கூட்டம் முழுமையுமே தங்களது அயலுறவு கொள்கைகளை அயல்நாட்டு வர்த்தக உறவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உலகப் பொருளாதாரம் இன்று முன்னைக் காட்டிலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இயங்குவதால் நாடுகள் தனித்து இயங்குவதோ, சுதேசி என்றோ கதையளக்க முடியாது.
எடுத்துகாட்டாக, அன்று ஒரு கார் உற்பத்திக்கு தேவையான கம்பஸ்டின் எஞ்சினைத் தவிர 100 உதிரி பாகங்கள் தேவை பட்டதென்றால், இன்று அதே கார் அல்லது மின்சாரத்தில் இயங்கும் காரை உற்பத்தி செய்ய சுமார் 2,000 உதிரி பாகங்கள் தேவைப்படுகிறது. மேலும், இவற்றில் எலெக்ட்ரானிக் சிப்களின் பங்கு 40 விழுக்காடாக உள்ளது. இவ்வாறு உலக பொருள் உற்பத்தி
முழுவதுமே சிக்கலான பிணைப்பில் இயங்கும் பொழுது உலக பொருளாதாரத்தை முன்பிருந்தது போல் சோவியத் முகாம் நாடுகள், முதலாளித்துவ முகாம் நாடுகள் என பிரித்து பார்க்க இயலாது. அவ்வாறு பாவித்தால் உற்பத்தியும் சீராக நடக்காது.
இந்த நிலையில் இந்தியாவோ அல்லது ஏனைய நாடுகளோ சுயசார்பு என்றோ சுதேசி என்றோ கூறுவதெல்லாம் வெற்று கோஷங்களே ஒழிய வேறில்லை.
Also read
நாடுகள் தங்களது பலத்தை புரிந்து கொண்டு அதனடிப்படையில் பிற நாடுகளுடன் தமது பொருளாதார உறவுகளை நியாயமான முறைகளில் நடத்த வேண்டும். இதனை பற்றி சிந்திக்காமல் ஆத்மநிருபர பாரதம் என கூவிக் கொண்டே அமெரிக்க முகாமில் இந்தியாவை பிணைக்கும் மோடி அரசின் முனைப்பில் அமெரிக்க சீன உடன்பாடு மண்ணை அள்ளி போட்டுள்ளது. எந்த நாட்டிற்கு நாம் அதிகம் ஏற்றுமதி செய்கிறோமோ அந்த அமெரிக்க நாடு நம்மீது அதிக வரியை விதிக்கிறது, எந்த நாட்டில் இருந்து நாம் அதிகம் இறக்குமதி செய்கிறோமோ அந்த சீன நாட்டுடன் நமது உறவுகள் சீராக இல்லை. ஆனால், இந்தியா விரும்புவது பன்முனை உலகம் தான் (multipolar world) என்று கூறிக் கொண்டே அமெரிக்க குடையின் கீழ் இந்தியாவை நிறுத்தும் முயற்சியை இந்திய அரசு கைவிட வேண்டும்.
இந்திய நாட்டின் உண்மையான நலன்களை முன்னெடுக்க, நமது பலத்தையும், பலவீனத்தையும் கணக்கில் கொண்டு பிற நாடுகளுடனான நமது உறவை வளர்க்க வேண்டிய தேவை இப்பொழுது உள்ளது.
மோடி அரசிடம் இத்தகைய விவேகத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனமோ…!
ச.அருணாசலம்




















Leave a Reply