காந்தியடிகள் கல்வி பற்றி ஆழமான கருத்துகளைக் கொண்டவர். மெக்காலே கல்வி முறை மீது காந்திக்கு உடன்பாடு இல்லை. தாய்மொழிக் கல்வி, சுற்றுச் சூழல் கல்வி, குடிமைப் பண்புகளை வளர்க்கும் கல்வியை வலியுறுத்தி உள்ளார். காந்தியின் கல்வி சார்ந்த கண்ணோட்டங்கள் இந்த சமூகத்தை மனித நேயமுள்ளதாக கட்டமைக்கும் வல்லமை பெற்றவை;
காந்தி ஒழுக்கம் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் தருகிறார். ”கல்வியானது, சுயமரியாதையோடு வாழச் செய்ய வேண்டும்” என்கிறார். ‘சுயமரியாதை’ என்ற சொல்லை அதிகம் பயன்படுத்தியவர் காந்தி.
காந்தி அரசியல் குறித்து பேசியது எல்லாருக்கும் தெரியும். ஆனால் சமுதாயத்தில் இருக்கும் எல்லா பிரச்சினைகளைக் குறித்தும் அவர் பேசியிருக்கிறார். ஒவ்வொரு பிரச்சினை பற்றியும் காந்திக்கு தீர்மானகரமான எண்ணங்கள் இருந்திருக்கின்றன. அவைகளை தனது கட்டுரைகளில், கடிதங்களில், பேச்சுகளில், நேர்காணலில், உரையாடல்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார்.
கதர், கடவுளும் சமயமும், சமய நல்லிணக்கம், கல்வி போன்ற 17 தலைப்புகளில் காந்தியின் நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. இதில் 12 வது தொகுதி கல்வி பற்றியதாகும். இத்தகைய முயற்சி தமிழில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தைவேலு ஆங்கிலத்தில் தொகுத்ததை, ராமரத்தினம் என்பவர் மொழி பெயர்த்துள்ளார். காந்தி நினைவு நிதி வாயிலாக இவை 1957 ல் வெளி வந்துள்ளன.
இந்த நூலில் 13 அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் சராசரியாக 20 வீதம், மொத்தமாக 200 கட்டுரைகள் உள்ளன. குழந்தைக் கல்வி, இராணுவக் கல்வி , பெண்கள் கல்வி , பள்ளிக் கல்வி, அரசு உதவி, தனியார் உதவி, இலக்கியக் கல்வி போன்ற நோக்கங்களுக்காக அவர் பேசியிருக்கிறார். அவருடைய பேச்சுகள், எழுத்துகள், கடிதங்கள், உரையாடல்கள், கல்லூரி – பல்கலைக் கழகங்களில் எழுப்பப்பட்ட கேள்வி – பதில்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் செய்முறை மூலமாக கல்வி கற்றுக் கொள்ள வேண்டும். படங்களை வரையச் செய்ய வேண்டும்; அதன் பிறகு தான் குழந்தைகளுக்கு எழுதச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று ஆதாரக் கல்வி பற்றி பேசுகிறார்.
பச்சையப்பன் கல்லூரியில், ”விதவைப் பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று 1920 ல் மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார். ‘விதவை மணம் இந்து மதத்திற்கு எதிரானது’ என்று, வங்காளத்தில் இருந்து காந்தியை விமர்சித்து ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார். ”பெண்கள் துர்நடத்தைக்கு ஆளாகாமல் இருக்க இத்தகைய திருமணங்கள் அவசியம். இதனால் மதம் அழிந்து போகும் என்றால், அப்படிப்பட்ட இந்து மதம் நாசமாகப் போகட்டும்” என்று அவருக்கு காந்தி பதில் எழுதியிருக்கிறார்.
1915 ல் அவர் பிரபலமாகவில்லை. அப்போதே அவர் தாழ்த்தப்பட்டோர் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறார். 1933 க்குப் பிறகு அதிகமான மாணவர்களை அவர் சந்தித்து இருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய டால்ஸ்டாய் பண்ணை, பீனிக்ஸ் பண்ணையில் கல்வி குறித்த பல பரிசோதனை செய்திருக்கிறார். 1920 ல் ஆண்களும், பெண்களும் ஒன்றாக கல்வி கற்கக் கூடாது என்றவர், 1940 களில் தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்கிறார்.

”ஆசிரியர்களுக்கு பணத்தில் நாட்டம் கொள்ளும் மனோ நிலை வரக் கூடாது. பாடபுத்தகங்கள் ஆசிரியர்களுக்கு மட்டுமே தேவை; மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் தேவையில்லை. எனவே அதிக அளவில் புத்தகங்களை அச்சிடுவது தேவையற்றது” என்கிறார் காந்தி. ”ஆசிரியர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும். குடிப்பழக்கம் இல்லாதவர்களாக இருத்தல் வேண்டும். மழலைப் பள்ளி ஆசிரியர்கள் மிகச் சிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். அவர்களுக்கு தொடக்க நிலை அறிவு அவசியம். ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை தாமே உருவாக்க வேண்டும். ஒரு கிராமத்தில் இருக்கும் மரங்கள் மற்ற கிராமங்களில் இருப்பதில்லை. எனவே அதற்கேற்றபடி சுற்றுச் சூழலை உள்வாங்கி கற்கும் பாடத் திட்டங்களை ஆசிரியர்கள் தயாரிக்க வேண்டும்” என்கிறார்.
”சுற்றுச் சூழலைப் பற்றித் தெரியாத கல்வி என்ன கல்வி?” என்று கேட்கிறார். ”உடல், மனம், ஆன்மா இவை மூன்றையும் கல்வியானது மேம்படுத்த வேண்டும்” என்கிறார். ”உடல் உழைப்பை கேவலமாக கருதச் செய்யும் கல்வி தவறானது. உடல் உழைப்பின் உன்னதத்தை சொல்வதே கல்வி” என்கிறார், காந்தி.
”விடுதி ஆசிரியர்கள் ஒரு தாய் போல, மாணவர்களின் சுக, துக்கங்களை கருத வேண்டும். பொது இடங்களில், வீடுகளில் எப்படி நடந்து கொள்வது? பொதுப் பணிகளில் நாட்டம் கொள்வது.. போன்ற குடிமைப் பண்புகளைத் தராத கல்வியால் பலனில்லை” என்று கூறுகிறார். உயர்ந்த படிப்பு படிப்பவர்கள் பொது இடங்களில் அந்நியப்பட்டு இருப்பது பற்றி கவலைப்படுகிறார். காந்தி நிறைய படித்தவர்கள் மேல் பெரிதாக நம்பிக்கை வைக்கவில்லை. வெளிநாடுகளில் அதி சொகுசாக படிக்கும் மாணவர்கள் பொதுச் சமூகத்தில் இருந்து அந்நியமாகி விடுவார்கள் என்று நம்பினார். நன்கு படித்து, நிறைய மதிப்பெண் வாங்கி, சம்பாதிக்கும் வழிமுறையை காந்தி கல்வியாக அங்கீகரிக்கவில்லை.
காந்தி நடத்திய வார்தா ஆசிரமத்தில் இருந்த ஆசிரியர்கள் அடிப்படை கல்வி பற்றிய புத்தகங்களை அச்சிட்டு பக்கத்து கிராமங்களுக்கு வழங்கியுள்ளனர். சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் ஏற்படும் விளைவுகள், தூய்மை, சுகாதாரம்..போன்றவற்றை விளக்கி சிறு புத்தகங்கள் வெளியிட்டுள்ளனர்.

மெக்காலே கல்விமுறை மீது காந்திக்கு உடன்பாடு இல்லை. அந்த முறை எழுத்தர்களை, மொழி பெயர்ப்பாளர்களை உருவாக்குகிறது என்கிறார். சத்தியாகிரகப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது தேசியப் பள்ளிகளைத் தொடங்கினார். அவர் ஆரம்பித்த குஜராத் வித்யா பீடம் இன்று ஆலமரம் போல வளர்ந்துள்ளது. அதற்கு ஜே.சி.குமாரப்பாவை ஆசிரியராக, வேந்தரான (Chancellor) நான் நியமிக்கிறேன் என்று மகிழ்ச்சியோடு அவரிடம் சொல்கிறார். பீகார் வித்யா பீடம், ஜாமியா இஸ்லாமிய கல்லூரி போன்றவை தேசியப் பள்ளிகளாக ஆரம்பிக்கப் பட்டவையாகும். தேசியப் பள்ளிகளை ஆரம்பிக்க காங்கிரஸ் கட்சி முன் முயற்சி எடுத்தது.
இளம் சிறார்கள் குற்றவாளிகளாக இருக்கும் சீர்திருத்த பள்ளியில் கதர் நூற்கச் செய்தமையால் விளைந்த நன்மைகளைப் பற்றி அதன் ஆசிரியர் காந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
”நூலகர்கள் புத்தகங்களை வெறுமனே அடுக்கி வைப்பவர்களாக இருக்கக் கூடாது . புத்தகங்கள் கிழிந்தாலோ, சேதமடைந்தாலோ அதற்கு ஈட்டுத் தொகை வசூலிக்கக் கூடாது. ஏழைகள், அரிசனங்களுக்கு நூல்களை இலவசமாக படிக்கத் தர வேண்டும்” என்கிறார். ஏரவாடா சிறையில் இருந்து, வார்தா ஆசிரமத்தில் உள்ள நூலகத்தில் இருந்து யார் யாருக்கு புத்தகம் கொடுத்துள்ளேன், எப்படி புத்தகங்களுக்கு பட்டியல் போட வேண்டும் என கடிதம் எழுதியிருக்கிறார். சபர்மதி ஆசிரமத்தில் உள்ள கழிப்பறையில் சில புத்தகங்களை வைத்திருக்கிறார்.
காந்தி விவிலியம் (Bible) பற்றி வகுப்பு எடுத்திருக்கிறார். கிராமத்தை நோக்கிய கல்வியை முன்னெடுக்கிறார் காந்தி.
ஓர் இலக்கிய மாநாட்டில் காந்தி தலைமையுரை ஆற்றியது பற்றி அவரது செயலாளரான மகாதேவ தேசாய் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். காந்தியின் வருகைக்குப் பின்பு, குஜராத் மொழி வளம் பெற்றதாக மாறியது. தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை தொடர்ந்து பேசி வந்துள்ளார் காந்தி.
1915 ல் காந்தி இந்தியா திரும்பிய பிறகு பதிவாகியுள்ள அவரது கருத்துகள் இந்த 1021 பக்க நூலில் உள்ளன. அவர் சென்ற பள்ளிகள், கல்லூரிகள், சந்தித்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் அவரது விசுவரூபம் நமக்குத் தெரியவரும்.

(சென்னை தியாராய நகர் தக்கர்பாபா வளாகத்தில் உள்ள காந்தி கல்வி நிலையம் ஏற்பாடு செய்த புதன் வாசகர் வட்டத்தில், கல்வி பற்றி, காந்தி எத்தகைய கருத்துகளைக் கொண்டிருந்தார் என்பதை குறித்து சித்ரா பாலசுப்பிரமணியன் பேசியது)
தொகுப்பு : பீட்டர் துரைராஜ்
















Leave a Reply