காவல்துறை அதன் செயல்பாடுகள் வழியாகவே மக்களிடம் நல்ல பெயர் பெற முடியுமே அன்றி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வழியாக கருத்துருவாக்கத்தை கட்டமைக்க முடியாது; மக்களைக் காப்பாற்ற காவல்துறை என்ற நிலை மாறி, மக்களிடம் இருந்து காவல் துறையைக் காப்பாற்ற என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார்கள்…என ஒரு அலசல்;
தமிழ்நாட்டின் காவல்துறையில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி என்ற புதிய ஏற்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக ஊடகங்கள் இந்த கோரிக்கையை எழுப்பவில்லை!
முக்கியமாக காவல்துறை செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் தாங்கள் தொடர்பு கொண்டு செய்தி பெற இத்தகைய ஏற்பாடு வேண்டும் என கேட்கவில்லை.
மாறாக, பல்லாண்டுகளாக பத்திரிகை துறையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு காவல் துறையில் “செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி” என்ற புதிய பதவி முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளதானது வியப்பையே ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசுக்கென்று செய்தி மக்கள் தொடர்புத் துறை என தனிப் பிரிவே உள்ளது. தற்போது வரை அதன் வேலை என்பது அரசாங்கத்தின் திட்டங்கள் செயல்பாடுகள் போன்றவற்றை ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசாங்கம் குறித்த ஒரு பாசிடிவ்வான தோற்றத்தை மக்களிடையே பரப்புவதாகும். கிட்டத்தட்ட அரசின் விளம்பரத் துறை என்று கூட புரிந்து கொள்ளலாம்.
இப்படியான செய்தி மக்கள் தொடர்புத் துறை காவல் துறையில் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் தான் என்ன? காவல்துறையில் கடை நிலையில் உள்ள ஏட்டையா தொடங்கி இன்ஸ்பெக்டர், ஏசி, டிசி, டிஎஸ்பி, எஸ்.பி..தொடங்கி அனைவருமே மக்கள் தொடர்பாளர்கள் தான்! யாரும் இவர்களை சந்திக்க முடியும். பத்திரிகையாளர்களும் சந்தித்து மக்கள் பிரச்சினை தொடர்பான நடவடிக்கைகள் குறித்தவற்றை கேட்டறிய முடியும்.

அப்படித்தான் இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்த இயல்பான சூழலை தற்போதைய ஆட்சியாளர்கள் விரும்பவில்லை போலும்.
தேர்தல் நெருங்கி வருகிறது. தமிழக காவல்துறை அரசியல் அழுத்தங்களால் ஒரு தேக்க நிலையை பெற்றுள்ளது. காவலர்களின் கை கட்டப்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தொடங்கி கட்சியின் மாவட்டச் செயலாளர், ஒன்றிய மற்றும் வட்டச் செயலாளர்கள் வரை ஆங்காங்கே நடைபெறும் குற்றச் செயல்களில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாத வண்ணம் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
அதிகரிக்கும் குற்றச் செயல்கள், படுகொலைகள், வன்முறை சம்பவங்கள், ஏமாற்று, மோசடிச் செயல்கள் வெளிப்படும் போது ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. ஆகவே இவற்றை பத்திரிகையாளர்கள் வெளிக் கொண்டு வருவதை தடுக்க ஒரு செக் வைக்கவே இந்த செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பதவி உருவாக்கப்பட்டுள்ளது என்பதே அனுபவமுள்ள பத்திரிகையாளர்கள் பலரின் கருத்தாகும். இந்த புதிய ஏற்பாட்டின் மூலம் களத்தில் செய்தி சேகரித்து புலனாய்வு செய்தி கட்டுரைகளை எழுதக் கூடிய அல்லது காட்சி ஊடகங்கள் வாயிலாக குற்றப் புலனாய்வுச் செய்தியை விவரிக்கக் கூடிய ஊடகவியலாளர்களுக்கு என்னென்ன நெருக்கடிகள் தரப்போகிறார்களோ..? தெரியவில்லை. ஆகவே தான் ஊடக நண்பர்கள் பலரிடமும் இந்த புதிய ஏற்பாடு குறித்த சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளன.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், அண்ணா பல்கலைக் கழக மாணவி ஒரு திமுக பிரமுகரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான செய்தியை வெளியிட்ட சென்னை பத்திரிகையாளர்கள் எந்த அளவுக்கு அச்சுறுத்தப்பட்டார்கள்…, அவர்கள் செல்போன்களை பறித்து வைத்துக் கொண்டு சென்னை காவல்துறை செய்த அராஜகங்கள் என்னென்ன..? என்பதெல்லாம் லேசில் மறக்கக் கூடியதல்ல. சென்னை பத்திரிகையாளர் மன்றம் போராட்டங்கள் நடத்தி தான் பத்திரிகையாளர்களின் செல்போன்களை திரும்ப பெற முடிந்தது.
தமிழ்நாடு என்பது ஒரு விரிந்து பரந்துபட்ட நிலமாகும். இங்கே எந்த மூலையில் வேண்டுமானாலும் குற்றச் செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது. நடந்து கொண்டுமுள்ளது. அப்படி இருக்க ஆங்காங்கே நடைபெறும் குற்றச் செயல்கள், அதன் மீதான நடவடிக்கைகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட இடத்தில் களத்தில் உள்ள காவலர்களும், காவல் அதிகாரிகளுமே அத்தாரிட்டியாய் சொல்ல முடியும். எல்லாவற்றையும் சென்னையில் உட்கார்ந்துள்ள ஒரு ஒற்றை மக்கள் தொடர்பு அதிகாரி விவரித்துக் கொண்டிருக்க வாய்ப்பே இல்லை. சாத்தியமும் இல்லை.
‘இப்படி களத்தில் உள்ள அதிகாரிகளோ, காவலர்களோ இனி வாய் திறந்து லோக்கல் ரிப்போர்ட்டர்களிடம் பேசிவிடக் கூடாது’ என்ற நோக்கத்தில் தான் இந்த மக்கள் தொடர்பு அதிகாரி பதவி உருவாக்கப்பட்டுள்ளதா? எனத் தெரியவில்லை.
இந்த பொறுப்புக்கு சென்னை சட்டம் மற்றும் ஒழுங்கு உதவி ஆணையராக பணியாற்றிய ஜெ. முத்தரசி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.தனிப்பட்ட முறையில் இவர் மிகச் சிறந்த திறமையாளராகக் கூட இருக்கலாம். ஆனால், இந்தப் பணி என்பது, ‘அரசின் நற்பெயரை காப்பாற்றும் ஒற்றை நோக்கத்திற்கானது’ என்ற வகையில், அவர் பல முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து வித்தை காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படவே வாய்ப்புகள் அதிகம்.
‘தமிழ்நாட்டில் தகவல் பெறும் ஆணையத்தை தகவல் மறுக்கும் ஆணையமாக மாற்றி வைத்திருக்கும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் காவல் துறையை கமுக்கத் துறையாக்கிட விதவிதமாக யோசித்து புதிது, புதிதாக திட்டமிடுகிறார்கள்…’ என்பது தான் என்னைப் போன்ற பத்திரிகையாளர்களை கவலை கொள்ள வைக்கிறது.
Also read
இந்தப் புதிய ஏற்பாட்டின் மூலம், காவல்துறையின் செய்தித் தொடர்பு மற்றும் ஊடக ஒருங்கிணைப்பு உறவுகள் வலுப்பெறுவதற்கு வாய்ப்பில்லை. மாறாக மோசமடையவே வாய்ப்புகள் அதிகம்.
மையப்படுத்தப்பட்ட ஒற்றை அதிகார மையம் என்பது எப்போதும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆபத்தானதும் கூட. இந்த ஏற்பாட்டின் மூலம் காவல்துறையின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குள்ளாகும். இறுதியில் காவல்துறைக்கு கெட்ட பெயரே விஞ்சும்.
ஆகவே, ”காவல்துறையை அதன் இயல்பான போக்கில் இயங்க விடுங்கள். புதுப் புதுச் சிக்கல்களை வலிந்து உருவாக்கிக் கொள்ளாதீர்கள்” என்பதே நாம் ஆட்சியாளர்களுக்கு வைக்கும் கோரிக்கையாகும்.
சாவித்திரி கண்ணன்


















Leave a Reply