கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் கேட்போர் நெஞ்சை கொந்தளிக்க வைக்கிறது. நாளுக்கு நாள் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலைமைக்கு பொறுப்பேற்க வேண்டியது யார்..?
கோவை விமான நிலையம் அருகே மனித நடமாற்றமற்ற புதர் மண்டிய பகுதியில் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு வேளையில் கல்லூரி மாணவியும், அவரது காதலனும் காரில் சென்று ஒதுங்கிய சூழலில், 3 பேர் கொண்ட கும்பல், காதலனை அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டு, மாணவியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தருகிறது.
இது தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் மூவரையும் சுட்டுப் பிடித்துள்ளனர் என சொல்லப்படுகிறது. உண்மையிலேயே நமது காவல் துறை திறமைசாலிகள் தாம்.
ஆண்-பெண் பழக்கம் என்பது கட்டுப்பாடற்ற சுதந்திர செயல்படாக இன்றைய சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதில் பிழையில்லை. அதே சமயம் சுயகட்டுப்பாட்டை கற்றுத் தருவது பெற்றோர்களின் பொறுப்பாகும்.
ஆள் அரவமற்ற ஒரு பகுதியில் – சமூக விரோத சக்திகளின் குற்றச் செயல்பாடுகளுக்கு வாய்ப்புள்ள பகுதியில் – ஆபத்து நிறைந்த ஒரு சூழலை தேடிக் கண்டடைந்து – தங்களை தனிமைப்படுத்திக் கொண்ட இளம் ஜோடிகளின் நோக்கம் காதல் மாத்திரமல்ல. ..என்பது சொல்லாமலே விளங்கும்.

பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்ளும் உத்தேசத்தில் இது போல இளம் ஜோடிகள் ஆள் நடமாட்டமில்லாத பொட்டல்காடுகளையோ, மலைப் பகுதியையோ.. தேர்ந்தெடுத்து ஒதுங்குவதானது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது பாலியல் வெறியோடு அலையும் தீயவர்களுக்கு நல் வாய்ப்பாக இருக்கிறது.
மேற்படி சம்பவத்தில் அதிரடியாக சுட்டுபிடிக்கப்பட்டுள்ள மூன்று பேருமே ஏற்கனவே கொலை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் பலவற்றில் சம்பந்தப்பட்டு கைதானவர்களே. இப்படிப்பட்ட ஆபத்தான சமூக விரோதிகளை மிகச் சுலபத்தில் தப்பிக்க விடக் கூடிய அளவுக்கு நமது காவல் துறையின் செயல்பாடு இருக்கிறது என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும்.
7 வயது சிறுமியை கதறக்கதறக் கற்பழித்துக் கொன்று எரித்ததோடு மட்டுமின்றி, தன் தாயையே கொடூரமாக கொன்ற மோசமான சைக்கோ குற்றவாளி தஷ்வந்துக்கு தண்டனையை உறுதிப்படுத்தும் வகையில் சி.சி.டி.வி ஆதாரங்கள், சாட்சியங்கள்..உள்ளிட்ட அனைத்திலும் அலட்சியம் காட்டி அவன் விடுதலையாவதற்கு துணை போன தமிழக காவல்துறையை உச்ச நீதிமன்றமே கண்டித்தது நினைவிருக்கலாம்.
நெல்லை கவின் ஆணவப் படுகொலையில் காவல் துறையின் பொறுப்பான பதவியில் இருந்த பெண்ணின் பெற்றோர்களே சம்பந்தப்பட்டு இருந்ததையும், அவர்களை தப்புவிக்க காவல் துறையே முயற்சிகள் மேற்கொண்டதையும் நாம் பார்த்தோமே..!
மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருளை சர்வதேச கடத்தல் கும்பல் ஆதரவுடன் விற்பனை செய்தவர்கள், சென்னை அசோக்நகர் கான்ஸ்டபிள் ஜேம்ஸ், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய முதல் நிலை காவலர்கள் ஆனந்தன், சமீர் மற்றும் அருண் பாண்டியன் என்பதும் இன்றைக்கு காவல்துறையின் சரிவுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கில் சரித்திர பதிவு கொடூர குற்றவாளி ஞானசேகரன் வெளியில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டு ஏராளமான குற்றங்களை தொடர்ந்து செய்ய அனுமதிக்கப்பட்டதன் பின்னணியில் அவரிடம் தொடர்ந்து ஓசியில் பிரியாணி வாங்கி தின்ற காவல்துறை அதிகாரிகள் கடைசி வரை தண்டிக்கப்படவேயில்லை…என்றால், அவர்கள் அதே போல இன்னொரு குற்றவாளியை உருவாக்கமாட்டார்களா?
இன்று தமிழகமெங்கும் கொடூர குற்றவாளிகள் அரசியல் கட்சிகளால் பயன்படுத்தப்படுகிறார்கள். இதில் பாஜகவில் குற்றவாளிகள் பலர் இணைந்து பாதுகாப்பு பெற்ற நிகழ்வு அவமானகரமானதில்லையா?
சென்னை அண்ணா நகர் பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிக்கு ஆதரவாக, சிறுமியின் பெற்றோரை தாக்கி, வழக்கை மடைமாற்றம் செய்த மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜியை காப்பாற்ற உச்ச நீதிமன்றம் வரை ஆட்சியாளர்கள் சென்றார்கள் என்றால், காவல்துறையை மோசமான வகையில் வளர்த்தெடுத்துக் கொண்டிருப்பது யார்? என்பது சொல்ல வேண்டியதில்லை.
Also read
தமிழகத்தில் டாஸ்மாக் விற்னையில் பேரார்வம் காட்டி குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரிப்பதை பற்றி கவலைப்படாத முன்னாள், இன்னாள் ஆட்சியாளர்களை நாம் பெற்று இருப்பது ஒரு வகையில் நமது சாபக்கேடே!
நிர்வாகத் திறனோ, ஆளுமைப் பண்போ இல்லாத முதல்வர் ஸ்டாலின் பலமான கண்டணங்களை பெற்ற பின்பும் தொடர்ந்து காவல்துறையை தன் கட்டுபாட்டிலேயே தான் வைத்திருப்பேன் என அடம்பிடிப்பது தமிழக மக்கள் நலன்களுக்கு எதிரானதாகும்.
எனில், இந்த காவல்துறை யாருக்கானது? அதிகாரத்தில் உள்ளவர்களின் ஏவலாளிகளாக மட்டுமே செயல்படக் கூடியதாக காவல்துறையை வழி நடத்தும் ஆட்சியாளர்கள் நெஞ்சைத் தொட்டு சிந்திக்க வேண்டும்.
சாவித்திரி கண்ணன்

















Leave a Reply