குற்றவாளி நேரு மட்டுமா..?

-சாவித்திரி கண்ணன்

யாரைத் தான் நம்புவதோ..? தெரியவில்லை…! 2,500 பேர் சம்பந்தப்பட்ட வேலை வழங்கலில் பல நூறு கோடிகள் லஞ்சம் பல்வேறு தரகர்களின் வழியாக நடந்துள்ள  ஆதாரங்களை டெல்லி அமலாக்கத் துறை  கடந்த ஏப்ரலில் கண்டறிந்த பிறகும் நவம்பர் வரை கமுக்கமாக வைத்திருந்து டீல் செய்வதன் பின்னணி என்ன..?

இந்த அரசு வேலைக்காக ஒரு லட்சத்து இருபதாயிரம் இளைஞர்களின்  படிப்பும், உழைப்பும், தவிப்பும் தகர்க்கப்பட்டுள்ளது.

இவ்வளவு பெரிய மோசடி 2500 பேர் சம்பந்தப்பட்ட வேலை வழங்கலில் – ஒவ்வொரு வேலைக்கும் தலா 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை வாங்கிய – பல நூறு கோடிகள் லஞ்சம் பல்வேறு தரகர்களின் வழியாக நடந்துள்ளதை டெல்லி அமலாக்கத் துறை சொல்லித் தான் நமக்கு தெரிகிறதென்றால், லஞ்ச ஒழிப்புத் துறை என்ன செய்கிறது? ஊடகங்கள் ஏன் கண்ணையும், காதையும் மூடிக் கொண்டிருந்தன…? எதிர்கட்சிகள்  ஏன் கேள்வி எழுப்பவில்லை?

வேலை கொடுப்பதற்குகே.என்.நேருவின் அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் பல கேள்விகள், சந்தேகங்கள் எழுகின்றன;

அரசு வேலை வாய்ப்பு என்பதற்காக லட்சோப லட்சம் இளைஞர்கள் படித்து தங்களை தயார்படுத்திக் கொண்டு காத்திருக்கும் சூழலில் நேர்மையான முறையில்<  உண்மையான திறமையாளர்கள் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட டி.என்.பிஎஸ்.சி தவிர்க்கப்பட்டது ஏன்? அப்படி தவிர்த்து பணம் வாங்கி வேலை கொடுக்கும் அணுகுமுறையை அமலாக்கத்துறை அம்பலப்படுத்தும் வரை எதிர்கட்சிகள், கூட்டணிக் கட்சிகளுக்கு தெரியாமல் நிகழ்ந்திருக்குமா? இப்போதும் கம்யூனிஸ்டுகள் வாய் திறக்காமல்  தங்கள் கள்ள மெளனத்தை நீடிப்பார்களா? லஞ்ச ஒழிப்புத் துறை என்ன செய்கிறது? ஊடகங்கள் ஏன் கண்ணையும், காதையும் மூடிக் கொண்டிருந்தன…?

அண்ணா பல்கலைக் கழகம் இது போன்ற ஒரு சூழ்ச்சி நிறைந்த மோசடி தேர்வு முறையை நடத்திக் கொடுப்பார்கள் எனில், அது கல்வி நிறுவனமா? களவாணிகளின் நிறுவனமா?

பல லட்சங்கள் கொடுத்து அரசு வேலைக்கு வருபவர் நேர்மையான முறையில் செயல்பட முடியுமா? நகராட்சி, குடி நீர் வழங்கல் நிர்வாகத்தில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித்தரவே அக்கிரமமான முறையில் லஞ்சம் வாங்கி பொதுமக்களை  துன்பத்திற்கு உள்ளாக்குவர்.

2,538 அரசு வேலையில் 150 இடங்களுக்கு மட்டுமே நேரு பணம் பெற்றுள்ளது உறுதியாகி உள்ளது. அப்படியானால், மற்ற வேலைகளுக்கான பணத்தை யார் வசூலித்தார்கள்? அது குறித்த தகவல்கள் ஏன் வெளிவரவில்லை…? இது பற்றி விசாரணை நடக்குமா? இல்லை தவிர்க்கப்படுமா? ஏனென்றால், திமுகவின் தலைமை குடும்பம் அவ்வளவு சுலபத்தில் நேர்மையான வேலை வாய்ப்புகளை அனுமதிக்காது.

வாங்கப்பட்ட லஞ்சப் பணம் என்பது  நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், நகர திட்ட செயலாக்க அதிகாரி மற்றும் ஜுனியர் எஞ்ஞினியர் .. உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு எனும் போது  உள்ளாட்சித் துறையின் தூய்மைபணியாளர்களை ஒப்பந்தக் கூலிகளுக்கு தூக்கி கொடுப்பதற்கு இவர்கள் பெற்ற கமிஷனையும் கண்டுபிடித்து அம்பலப்படுத்தி தண்டிக்க வேண்டும்.

ஏப்ரல் மாத ரெய்டுவில் கிடைத்த இந்த மோசடி ஆவணங்களை  பல மாதங்கள் ரகசியமாக வைத்திருந்து காலதாமதமாக வெளியிடுவதற்கான காரணம் யாதோ?

மேற்படி அரசு வேலைகளுக்கான ஆர்டர் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தமிழக முதல்வரால் விழா எடுத்து தரப்பட்ட போது கூட வாய் திறக்காமல் அமலாக்கத்துறை கமுக்கமாக இருந்ததன் காரணம் என்ன?

ஏற்கனவே கே.என் . நேரு குடும்பத்தினர் காற்றாலை ஆரம்பிக்கவென்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ 36 கோடிகள் கடன் வாங்கி நான்காண்டுகளாக எதுவும் செய்யாமல் வாங்கிய கடனை வேறு மூன்று நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற்றிய விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ளாமல் விட்டதால் நீதிமன்றம் சென்று நேருவை தப்பிக்கவிட்டது என்பது ஞாபகம் வருகிறது.

அதே போல இந்த விவகாரத்திலும் வெறும் பரபரப்பை மட்டும் ஏற்படுத்தி கடந்து விடுவார்களா? மத்திய ஆட்சியாளர்கள். இவ்வளவு நடந்த விவகாரத்தில் யாரேனும் ஒருவர் மூலம் பொது நல வழக்கையேனும் தொடர வைத்து நீதிமன்றத்தின் மூலம் எப்.ஐ.ஆர் பதிய காவல்துறைக்கு கட்டளையிட வைத்திருக்காமே. அதை ஏன் செய்யவில்லை…?

பாஜக அரசு கையாளும் விவகாரத்தை பார்த்தால் இரு தரப்புக்கும் இடையில் பேரம் முடிவுக்கு வராததால் அம்பலப்படுத்தியதை போலத் தான் தெரிகிறது.

உச்சபட்ச ஊழல், லஞ்சம், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, குற்றவாளிகளை காப்பாற்றும் போக்கு ஆகிய திமுகவின் அனைத்து செயல்பாடுகளையும், பெயரளவுக்கு எதிர்த்துவிட்டுக் கண்டும் காணாமல் போவதாகத் தான் மத்திய பாஜக அரசு இது வரை இருக்கிறது.

ஏற்கனவே வாஜ்பாய் காலத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கான ஆதரவை கைவிட்ட போது ஓடிப் போய் ஒட்டிக் கொண்ட கட்சியான திமுக தற்போது சந்திரபாபு நாயுடு சந்தர்ப்பம் பார்த்து பின்வாங்கினாலோ, நிதீஸ்குமார் தங்களை நிராகரித்தாலோ அபத்பாந்தனாக வருவதற்கு தயாராக இருப்பதால் திமுகவின் திகுதிகு ஊழல்களில்  உறுதியான நடவடிக்கைகள் இன்றி உதார் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக அரசு என்பது தான் உண்மை.

யாரைத் தான் நம்புவதோ..?

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time