சனாதனத்தின் ஆட்சி தான் இந்து அறநிலையத் துறையில்!

திராவிட மாடல் ஆட்சியில் திருக்கோயில்கள் செழிக்கின்றன…! தமிழ்நாட்டிலே வேறெந்த துறைகளையும் விட இந்து சமய அறநிலையத் துறை தான் ஜெகத்ஜோதியாக பிரகாசிக்கிறது…!பிராமண அர்ச்சகர்கள் காட்டில் அடை மழை பொழிகிறது!  இங்கு 100 சதவிகித சனாதனம் சமரசமின்றி அமலாகும் விதத்தை பார்ப்போமா;

சுகாதாரத் துறை தொடங்கி பள்ளிக் கல்வி வரை எல்லா துறைகளிலும் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள், போராட்டங்கள்.. நடந்து கொண்டே இருப்பதை நாம் பார்க்கலாம்.

ஆனால், அறநிலையத் துறை இந்த ஆட்சியில் அதிர்ஷ்டக்கார துறையாக உள்ளது என்பதை யார் ஏற்கிறார்களோ இல்லையோ.., பார்ப்பன அர்ச்சகர்கள் பரவசமாக ஒத்துக் கொள்கிறார்கள்…!

அர்சகர்கள், ஓதுவார்கள் போன்றோர் எந்த கோரிக்கை வைத்தாலும் உடனடியாக நிறைவேற்றி தந்து விடுகிறார்கள்.

சமீபத்திய அறிவிப்பில், திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் திவ்ய பிரபந்த பாடசாலை மற்றும் வேத ஆகம பாடசாலை  அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், ஆகிய 18 பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாக பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகையை  ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகரித்து தந்துள்ளார்கள்!

இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் முழுநேர வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக 2022-ஆம் ஆண்டு வரை ரூ.1,000/- வழங்கப்பட்டு வந்தது.

2023-ஆம் ஆண்டு முதல் ரூ.3,000/-ஆகவும்,

2024 ஆண்டு முதல் ரூ.4,000/-ஆகவும்,

இந்த ஆண்டு முதல் ரூ.10,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

இப்படி ஆண்டுக்காண்டு அதிகரிக்கப்பட்டு மூன்றே ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டதாக வேறெதையும் சொல்ல முடியாது.

பகுதி நேர வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத்தொகையாக 2023-ஆம் ஆண்டு முதல் ரூ.1,500/- ஆக வழங்கப்பட்டு வந்ததை, 2024-ஆம் ஆண்டு முதல் ரூ.2,000/-ஆக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் ரூ.5,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள விகிதங்களை மாற்றி அமைத்து தமிழக அறநிலையத்துறை 2019ல் தான் அரசாணை வெளியிட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு  கோவில் அர்ச்சகர்களின் சம்பளம் நன்கு அதிகரிக்கப்பட்டு, தற்போது  மாத சம்பளம்  ரூபாய் 41,800 வரை தரப்படுகிறது. இது தவிர அவர்களுக்கு தட்டில் விழும் பண வருவாய் தனி. மடப்பள்ளி, பரிசாரகருக்கு  மாத வருமானம் 41,800 தரப்படுகிறது. இது கோவிலுக்கு கோவில் வருமானத்தை பொறுத்து வழங்கப்படுகிறதாம். (வருமானம் சுமாராக உள்ள கோவில்களில் பணிபுரிவோருக்கு குறைவாக இருக்கிறது.)

இது தவிர கோவில் டெபாசிட்டுகளை எடுத்து கல்யாண மண்டபங்கள், ரெஸ்ட்  ஹவுஸ்கள், கல்லூரிகள் என்று ஏகப்பட்ட கட்டுமானங்களை உருவாக்கி காண்டிராக்டர்கள் காட்டில்  பண மழை விழும்படி செய்து கொண்டுள்ளார் சேகர் பாபு.

திமுக ஆட்சி பதவி ஏற்றவுடனேயே 2021 மே மாதமே முதல் அதிரடி அறிவிப்பாக கொரோனா கால உதவியாக, 14 ஆயிரம் கோவில்களின் பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைபாதுகாக்கும் உதவித் தொகையாக  ரூ. 4,000, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.

கோவில் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ.2,000  கருணைத் தொகை மற்றும் இரண்டு செட் புத்தாடைகள் வழங்கப்படும் வழக்கமும் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதே போல இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரூ. 1 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் வரப்பெறும் கோவில்களில் பணிபுரிந்துவரும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்வு செய்து 17 விழுக்காட்டிலிருந்து, 31 விழுக்காடாக  வழங்க உத்தரவிட்டுள்ளார், முதல்வர்.

திருக்கோவில்களில் படிக்கும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் முதல் தலைமுறையாக கல்லூரிக்கு வருகையில் அவர்களின் முழு கல்விச் செலவையும்  தமிழக அரசே பொறுப்பேற்கும் என்றும் முதல்வர் அறிவித்தார். இதில் நமக்கு எந்த வருத்தமும் இல்லை. கல்வி யாருக்கு கிடைத்தாலும் மகிழ்ச்சியே. ஆனால், இதே போன்ற நடைமுறை மற்ற துறை பணியாளர்களுக்கோ அல்லது தூய்மை பணியாளர்கள் குழந்தைகளுக்கும் ஏன் தரப்படுவதில்லை.

இந்து அற நிலையத் துறைக்கு  பொறுப்பேற்றது முதல் பம்பரமாய் சுழன்று பணியாற்றும் சேகர்பாபு  அனேகமாக தினசரி  முதல்வர் வீட்டுக்கு செல்லக் கூடியவராக உள்ளார். இந்து சமய அற நிலையத் துறையில் உள்ள  சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஓதும் அர்ச்சகர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அதில் எந்த சிறு குறையும் இருக்கக் கூடாது என்பது முதல்வர் வீட்டம்மையார் கட்டளை போலும்.

தான் முன்னெடுத்து நடத்திய யாகங்கள், வேள்விகள் நடத்தியதால் தான் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார் என்று அம்மையார் உறுதியாக நம்புகிறார் போலும். இடையில் ஒரு முறை எதிரிகளால் ஆட்சிக்கு பாதகம் வந்துவிடக் கூடாது என திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார யாகமும் நடத்தினார். தனிப்பட்ட முறையில் பல கோவில்களுக்கும், அதன் அர்ச்சகர்களுக்கும் அவர் செய்யும் செலவுகளும், உதவிகளும் அதிகம்.

குருவாயூர் கோவிலுக்கு தங்க கிரீடம்

சமீபத்தில் சனாதனம் குறித்து மகன் தாறுமாறாக பேசிவிட்டதற்கு பரிகாரம் காண வைணவ ஜீயர்களை வீட்டுக்கு வரவழைத்து பாத பூஜையும் செய்துள்ளார். தொடர்ந்து பல கோவில்களில் ஸ்டாலின் அடுத்து ஆட்சிக்கு வர வேண்டும், மகனையும் அரியணையில் அமர்த்த வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட பூஜைகள் செய்து வருகிறார்களாம்!

தமிழில் அரச்சனை என்பதும், அனைத்து சாதியினரும் அர்சகர் என்ற விவகாரமும் ஏதோ பெயரளவில் தோற்றம் காட்டுவதை கடந்து உண்மையான அமலாக்கம் இங்கே நடக்கவில்லை!

2021 ஆம் ஆண்டே ”கோவில் குடமுழுக்குகளை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் இணைத்து நடத்துங்கள்” என அதிகாரபூர்வமாக தீர்ப்பு தந்த பிறகும் அதை அமல்படுத்தாமல் நூறு சதவிகிதம் சமஸ்கிருதத்தில் மட்டுமே – அதுவும் பிராமண அர்ச்சகர்களை மட்டுமே -வைத்துக் கொண்டு யாக சாலையிலும், கோவில் கோபுரத்திலும் தமிழ் ஓதுவார்களை புறக்கணித்து நடத்துகிறது திராவிடமாடல் அரசு.

திராவிட இயக்கத்தின் தலைமை குடும்பம் இப்படி திசைமாறிப் பயணிக்கும் என கலைஞர் இருக்கும் வரை யாரும் நினைத்திருப்பார்களா? தெரியாது.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time