லட்சக்கணக்கில் வைப்புத் தொகையாம்! 10 முதல் 20 நாட்களுக்கு முன்பே அனுமதி கடிதம் தர வேண்டுமாம்! நடமாடும் கழிப்பறைகளை கொண்டு வைக்க வேண்டுமாம்….! போராடங்கள், பரப்புரைகளுக்கான உரிமை கூட இனி வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தானா? போலீசாருக்கு என்ன பொறுப்பு? அவர்கள் களத்தில் இருப்பார்களா? இருந்தது போல கணக்கு காட்டுவார்களா..?
தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கு தமிழ்நாட்டரசு கட்சிகளை அழைத்து பேசியுள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், அதாவது நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் ( நேற்று) நவம்பர் 6, 2025 -ல் நடைபெற்றுள்ளது.
இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் என சுமார் 20 கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. அதாவது இதில் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பிரதிநிதித்துவம் உள்ளவை மட்டும் பங்கு பெற்றுள்ளன. ஆனால், இதற்கு மக்கள் இயக்கங்கள், தொழிற்சங்கள், விவசாய இயக்கங்கள் கண்டிப்பாக அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
# நிகழ்ச்சியின்போது 100 நபர்களுக்கு 1 நபர் என்ற விகிதத்தில் கட்சியின் தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும்.
# நிகழ்ச்சிக்கு முன்பாக 2 மணி நேரத்திற்கு மேலாக மக்கள் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
# பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ ஆகியவை பொதுவாக 3 மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்…
என்பதெல்லாம் மறுப்பின்றி ஏற்புடையதே!
ஆனால், மற்ற பல கண்டிஷன்கள் எல்லாம் நடைமுறை சாத்தியமற்றவை. அதிமுக,திமுக,பாஜக போன்ற கோடீஸ்வரக் கட்சிகளால் மட்டுமே பின்பற்ற முடிந்ததவை. சாதாரண மக்கள் இயக்கங்களுக்கு அசாதரணமானவை.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து செய்து கொண்டிருக்கும் திருப்பணிகளில் முக்கியமானது மக்கள் இயக்கங்களுக்கு போராட அனுமதி மறுப்பதாகும். ஒவ்வொரு போராட்டத்திற்கும் அல்லது நிகழ்வுக்கும் அனுமதி வாங்குவதற்குள் சம்பந்தப்பட்ட சிறிய அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இன்று படாதபாடுபட வேண்டியதாகியுள்ளது.

கடந்த நாற்பதாண்டுகளாக பத்திரிகைத் துறையில் தினசரி நாம் பார்த்து வந்த போராட்டங்கள் இன்று இல்லை. சென்னை மெரீனா பிளாட்பாரத்தில், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிர்புறத்தில், வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள மைதானத்திற்கு அருகில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, செண்ட்ரல் ஸ்டேசனை ஒட்டிய வால்டாக்ஸ் சாலையில்.. பெரும்பாலான நாட்களில் ஏதேனும் ஒரு அமைப்பு உண்ணாவிரதமோ, தர்ணாவோ, காத்திருப்பு போராட்டமோ நடத்திக் கொண்டு இருப்பார்கள். தினசரி பத்திரிகையாளர்கள் நாளும் செல்லக் கூடிய இடங்களாக இவை இருந்தன. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியிலும் தற்போதைய திமுக ஆட்சியிலும் இது போன்ற போராட்டங்கள் அனுமதிக்கபடுவதில்லை. அத்திபூத்தாற் போல வெகு சிலவே நடத்தப்படுகின்றன.
இந்தப் போராட்டங்கள் எல்லாம் ஜனநாயத்தில் மக்கள் தங்கள் பிரச்சினைகளை பொதுவெளியில் வைத்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக செய்யும் ஒரு மெனக்கிடலாகும். இவையெல்லாம் அவர்கள் வேதனைக்கு ஒரு வடிகாலாகிறது. இதை அனுமதிப்பது அரசின் தார்மீக பொறுப்பாகும்.

ஊடகங்கள் இவர்களின் குரலை வெளிப்படுத்துவார்கள். அல்லது குறைந்தபட்சம் ஒரு போட்டோவேனும் போட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். மேலும், உளவுத் துறை காவலர்கள் இங்கு பேசப்பட்டவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வர். கருணையோடு பாதிக்கப்பட்டவர்களின் குரலை செவிமடுத்து கேட்க அரசுக்கும் இது ஒரு ஏற்பாடாகும்.
ஒரு நிகழ்வுக்கோ,போராட்டத்திற்கோ அனுமதி கோரி காவல்துறையிடம் கடிதம் கொடுத்தால் அதை கிடப்பில் போட்டுவிட்டு கடைசி நேரம் வரை அனுமதி கிடைக்குமா? கிடைகாதா? என கேட்டவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இறுதி நாளுக்கு ஒரு நாள் முன்பு சரி நடத்திக் கொள்ளுங்கள் எனச் சொல்வதும், அப்படியே நடத்த அனுமதித்தாலும் ஆயிரம் கெடுபிடிகள் காட்டி ஒடுக்குவதும் இன்றைக்கு மக்கள் இயக்கங்கள், தொழிலாளர், விவசாய இயக்கங்கள் சந்திக்கும் சோதனையாக உள்ளது.
பல நேரங்களில் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதிக்கு உத்திரவிடக் கோரி நீதிமன்றத்தை நாட வேண்டிய அளவுக்கு சர்வாதிகார போக்கை கையாளும் ஸ்டாலின் அரசுக்கு வழி காட்டு நெறிமுறைகளை வகுக்கும் தகுதி அறவே இல்லை..என்பது கூட்டம் நடத்துவதற்கு வைப்புத் தொகை கேட்பதிலேயே உறுதியாகிறது.
5000 -10,000 பேர் இருந்தால் 1 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும்.
10,000 முதல் 20,000 பேர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ. 3 லட்சம்
20,000 – 50,000 பேர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ. 5 லட்சம்
50,000 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ. 20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது…என்பதெல்லாம் என்ன..?
போராடும் இயக்கங்கள் எல்லாம் என்ன திமுக, அதிமுக, பாஜகவைப் போல ஊரை அடித்து உலையில் போட்டு சொத்து சேகரித்து வைத்துள்ள இயக்கங்களா..?

பகுதி நேர ஆசிரியர்கள், சத்துணவு ஆயாக்கள், அங்கன்வாடியில் வாழவே இயலாத அடிமாட்டுக் கூலிக்கு பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு கோரியும், பணி நிரந்தரம் கோரியும் ஆயிரக்கணக்கில் அணிவகுக்க வருகிறார்கள் என்றால், பேருந்து கட்டணத்திற்கு காசு இருக்காது. பசித்தாலும் தேனீர் வாங்கி அருந்த காசிருக்காது.
பீடி சுற்றும் தொழிலாளர்கள், பட்டாசு தொழிற்சாலையி உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் தொழிலாளர்கள் அவ்வளவு ஏன் அரை வயிற்றுக் கஞ்சி குடித்துக் கொண்டு சாக்கடைக்குள் இறங்கி வேலை செய்யும், தெருக்கூட்டும் தூய்மை பணியில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான அடி நிலை தொழிலாளிகள் வைப்பு தொகை கட்டித் தான் அனுமதி வாங்க வேண்டும் என்றால்.., போராட்டங்களே நடத்த முடியாது.
அப்ப இது தான் ஆட்சியாளர்கள் நோக்கமா?
வசதி உள்ளவர்களுக்கு தான் போராட்டம் நடத்துவதற்கே உங்க சட்டம் வாய்ப்பளிக்குமா?
இது தான் அப்பட்டமான மக்கள் விரோத போக்காகும்.
பொதுக் கூட்டம் நடத்துபவர்கள் தண்ணீர் வசதி செய்து கொள்ளுங்கள் என்றால், புரிந்து கொள்ளலாம். நியாயமானது. நடமாடும் கழிவறைக்கு எப்படி ஏற்பாடு செய்ய முடியும்..? மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் பொதுக் கழிவுக் கூடங்களை கட்டி, அதை முறையாக பராமரிக்க வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் அடிப்படை கடமையாகும்.
இந்த விவகாரத்தை சென்னை மாநகர மேயராக இருக்கும் போதும் ஸ்டாலின் உணரவில்லை. தற்போதும் உணரவில்லை.
ஆக, வழி நாட்டு நெறிமுறைகள் என்பதை முதலில் அரசுக்கும், காவல் துறைக்கும் தான் தர வேண்டும்.
மனு அளிக்கும் காலக்கெடுவை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு 10 நாட்கள் முன்பாகவும், 15 நாட்களுக்கு மிகாமலும் மனு கொடுக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத மாற்று இடத்திற்கு 21 நாட்கள் முன்பாகவும், 30 நாட்களுக்கு மிகாமலும் மனு கொடுக்க வேண்டும்…என்பதெல்லாம் திட்டமிட்டு நடத்தப்படும் மாநாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால், போராட்டங்களுக்கு பொருந்தாது.
அரசாங்கம் ஒரு மக்கள் விரோத சட்டத்தை கொண்டு வந்தால், அதை எதிர்த்து இரண்டு, மூன்று நாட்களில் ஒரு போராட்டம் அறிவித்து சூட்டோடு சூடாக போராடுவது தான் மக்கள் இயக்கங்களின் இயல்பாகும். மதுரையில் டங்ஸ்டன் எதிர்ப்பு மக்கள் போராட்டம் அப்படி அதிரடியாக நடத்தப்பட்டதேயாகும்.

அதனால், ஒரு நிகச்சிக்கோ, போராட்டத்திற்கோ அனுமதி கேட்டால், அது குறித்து அதிகபட்சம் 12 மணி நேரத்தில் காவல்துறை பதில் தர வேண்டும். ஒன்றை மறுத்தால், அதற்கான நியாயமான விளக்கமும் எழுத்துபூர்வமாக அவசியம் தர வேண்டும்.
இதெல்லாம் பார்க்கும் போது வழி காட்டு நெறிமுறைக்கு திட்டமிட்டுள்ளார்களா? அல்லது வாய்ப்பூட்டு போடுவதற்காக திட்டமிட்டார்களா.? என்ற சந்தேகம் தான் எழுகிறது.
தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கு தற்போதைய தமிழ்நாட்டரசுக்கு தார்மீக ரீதியில் தகுதியே இல்லை…என்பது இவர்கள் வெளியிட்ட வழிகாட்டு நெறி முறைகள் சொல்கின்றன. மக்கள் இயக்கங்களிடமும், மக்களிடம் வழி காட்டு நெறி முறைகளை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் ஆட்சியாளர்கள். மக்களுக்காகத் தான் ஆட்சி. ஆட்சிக்காக மக்கள் இல்லை.
ஸ்டாலின் திராவிடமாடல் ஆட்சி என்பது ஜெயலலிதாவையும், மோடியையும் இன்ஸ்பிரேஷனாக கொண்டு, அவர்களையும் விட அடக்குமுறைகளில் ஒருபடி அதிகமாக போய்க் கொண்டிருக்கும் ஆட்சியாகும். வழி காட்டு நெறி முறைகள் என்ற பெயரில் வழியை அடைக்கும் வேலையை தமிழக அரசு செய்கிறதோ..? என்ற சந்தேகம் தான் வலுப்படுகிறது.
சாவித்திரி கண்ணன்


















பேச்சுரிமை என்பது அரசியல் சட்டத்தில் உள்ள உரிமை. இத்தகைய நெறிமுறைகள் யதார்த்ததில் அத்தகைய உரிமையை பறிக்கிறது. நீதிமன்ற உத்தரவை வைத்து, அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் முயற்சி இது. இது திமுகவுக்கு அழகல்ல.