சுதந்திர இந்தியாவில் இது வரையிலான போராட்டங்களிலேயே பெருந்திரள் மக்களின் கூடங்குளம் அணுமின் உலைக்கு எதிரான அமைதிவழி அகிம்சை போராட்டம் அதி முக்கியமானது. இதை வன்முறை பாதைக்கு மாற்றும் சூழ்ச்சிகளை அதிகார மையங்கள் முன்னெடுத்ததும், அது முறியடிக்கப்பட்டதும் ஒரு வரலாற்றுப் பதிவாகும்;
கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் 1988 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் சோவியத் அதிபர் கொர்பசேவ்விற்கும் இடையில் கையெழுத்தாகியது. அப்போதில் இருந்து இந்த அணு உலைக்கு கடும் எதிர்ப்பை மக்கள் காட்டி வந்தனர்.
அணு உலைகளை பொறுத்தவரை, சுனாமி, கடல் சீற்றம், வெள்ளம், கனமழை, சூறாவளி, நில நடுக்கம், பயங்கரவாத தாக்குதல், தொழில்நுட்ப செயலிழப்பு, தீ விபத்து போன்றவற்றால் பாதிக்கப்படும் அபாயம் உண்டு என்பதோடு அதன் ஆபத்தான கழிவுகள் தொடர்பாக என்ன செய்வது என்பதில் அரசால் இன்று வரை திட்டவட்டமான முடிவுக்கு வரமுடியவில்லை.
அணுக்கதிர் பாதிப்பால் மக்கள் உலகெங்கும் அவதிப்படுகிறார்கள். இந்த உண்மைகளை எல்லாம் மறைக்க முயற்சித்து அணு உலைப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன..!
2001ல், அணு நிலைய கட்டுமான பணிகள் துவங்கி, 2007-ல் முடிந்தன. 2007-ல் கொதிகலன் நிறுவப்பட்டது. அணு மின் உற்பத்திக்கான கருவிகள், 2008-ல் நிறுவப்பட்டு, எலக்ட்ரானிக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு மேலும் நான்கு அணு மின் நிலையங்கள் நிறுவப்பட்டன. இதன் மூலம் 9, 200 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்…எனச் சொல்லப்பட்டது.
தற்போது வரை முதல் இரண்டு அணு உலைகள் மட்டுமே மின் உற்பத்தி செய்துள்ளன. முதல் அலகானது ஒட்டுமொத்த உற்பத்தித் திறனில் 54 சதவிகிதம் மட்டுமே மின் உற்பத்தி செய்கிறது. இரண்டாவது அலகு ஒட்டுமொத்த மின்னுற்பத்தி திறனில் 35.2 சதவிகிதம் மட்டுமே மின் உற்பத்தி செய்கிறது என்பதை உலக அணுசக்தி தொழில் அமைப்பு 2019 ஆம் ஆண்டு தன் அறிக்கையில் வெளிப்படுத்துயது
இதற்கு பிறகான முயற்சிகளுக்கு பிறகு இதில் முதல் அணு உலை மூலமாக 570 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது அணுவலை மூலமாக 430 மெகாவாட் மின்சாரமும் தான் அதிகபட்சமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது அணு உலையும் பழுது பார்ப்பு பணியால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு உலைகளில் ஏதேனும் ஒன்று பழுதாகி ஒன்று மட்டுமே வேலை செய்வது அடிக்கடி நிகழ்கிறது.

மற்ற நான்கு உலைகளையும் இது வரை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. ஆக, தமிழ் நாட்டின் மின் தேவைக்கு இந்த அணு உலைகள் தவிர்க்க முடியாதவை என்று சொல்லப்பட்டது இந்த 15 ஆண்டு அனுபவத்தில் பொய்த்துள்ளது.
இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 45 சதவிகிதம் மட்டுமே தமிழ்நாட்டிற்கு தரப்படும் என்று சொல்லப்பட்டது. இன்று வரை 1,200 மெகாவாட் மின் உற்பத்தி கூட சாத்தியமானதாகத் தெரியவில்லை. ஏதோ ராணுவ நோக்கத்திற்கு இந்த அணு உலைகளை பயன்படுத்துகிறார்களோ, என்னவோ? அதே சமயம் இந்த அணு உலை விரிவாக்கத்திற்கு கேரள அரசு இது வரை இடம் கொடுக்க முன்வரவில்லை.
கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்லாயிரக்கணக்கான மீனவ பெண்கள், ஆண்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் ஈராண்டுகளுக்கும் மேலாக இடையறாது வீரஞ்செறிந்த போரட்டம் நடத்தினர். 50 இயந்திரமயமாக்கப்பட்ட கப்பல்கள் உட்பட சுமார் 700 படகுகள், 3,000 க்கும் மேற்பட்ட மீனவர்களை ஏற்றி கறுப்பு கொடிகளுடன் இந்துமாக்கடலை அமைதியாக விடிய, விடிய வலம் வந்த காட்சிகள் பிரமிப்பை தந்தன. கடலில் நின்று போராடிய போது இராணுவ விமானம் பெரும் அதிர்வுடன் தாழ்வாக பறந்து மீனவர்களை அச்சுறுத்தியதில் மீனவர் சகாயம் பாறையில் விழுந்து பலத்த காயத்துடன் இறந்தார்.

தமிழகத்தின் பல தலைவர்கள் போராட்டக் களத்திற்கு சென்றனர். இந்திய அளவில் மேதாபட்கர் போன்ற சமூக போராளிகள் நேரடியாக களத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். இந்திய பிரதமர் போராட்டத் தலைமை குழுவை அழைத்து பேசினார். அன்றைய முதல்வர் ஜெயலலிதா போராட்டத் தலைமை குழுவை அழைத்து பேசி ஆதரவு தெரிவித்து பிறகு பின் வாங்கிவிட்டார். அகிம்சை வழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது அப்போதைய ஜெயலலிதா அரசால் குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர்.
போராட்ட காலத்தில், களத்தில் இருக்கும் தலைவர்களை பிரித்தாளும் சூழ்ச்சிகள் உளவுத் துறையால் நடந்தன. ஆனால், பலிக்கவில்லை. காவல்துறை வெவ்வேறு விதமான அடக்குமுறைகளையும், ஆத்திரத்தை உருவாக்கும் அவமரியாதைகளையும் செய்த போதும் மக்கள் வன்முறை பாதைக்கு போகவில்லை. இந்து முன்னணி போன்ற மத அமைப்புகளை வைத்து எதிர் போராட்டமும், தாக்குதல்களும் நடந்தன. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டினாலும், சிறைவயப்பட்டதிலுமாக ஐந்து பேர் இறந்தனர். இதன் மூலம் போராடும் மக்களை வன்முறையில் இறங்கத் தூண்டி, அதையே சாக்காக்கி பின்னர் போராட்டத்தை ஒடுக்க திட்டமிட்டனர். போராட்டத் தலைமைக் குழுவும், போராடிய உழைக்கும் மக்களும் மிகுந்த கட்டுப்பாட்டுடன், சகிப்புத் தன்மையுடன் அடி, உதைகளை பெற்ற போதும் கடைசி வரை அமைதி காத்து இருந்தது தான் இந்தப் போராட்டத்தின் வரலாற்றுச் சிறப்பாகும்.

”தலைமை தாங்கி வழி நடத்திய சுப.உதயகுமார் வெளிநாட்டு நிதி பெறுகிறார், அன்னிய நாட்டு சதிகளுக்கு துணை போகிறார்” போன்ற பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ”இது உண்மையானால் உதவியர்களையும், எங்களையும் கைது செய்து தண்டிக்கலாமே’’ என்றார், சுப.உதயகுமார்.
உண்மையில் அந்த மக்கள் தங்கள் வருமானத்தை துறந்து போராடிய போதும், போராட்டச் செலவுகளுக்கு யாரையும் எதிர்பார்க்காமல் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டே செயல்பட்டனர். கிறிஸ்த்துவ பாதிரியார்கள் போராடும் மக்களுக்கு துணை நின்றது கொச்சைப்படுத்தப்பட்டது. அதிகார மையங்களின் மதச் சர்ச்சை அல்லது ஜாதி சர்ச்சையை உருவாக்கி போராட்டக் களத்தை கலவரமாக்கும் சூழ்ச்சிகள் மக்களின் பக்குவப்பட்ட மன உறுதி முன்பு தகர்ந்தன.
தேச வளர்ச்சிக்கு எதிரானவர்கள், தேசத்துரோகிகள் என்று பலவிதமான வழிகளில் தினமலர் போன்ற ஊடகங்கள் மூலமாக துர்பிரச்சாரம் தூக்கலாக முன்னெடுக்கப்பட்டது. அந்த எளிய மக்களின் உண்மையான போராட்ட உணர்வு, நேர்மையான அணுகுமுறைகளால் எதுவும் அவர்களை பாதிக்கவில்லை.

சுமார் 65 ஆயிரம் மக்கள் மீது பல்வேறு பிரிவுகளில் 349 வழக்குகள் போடப்பட்டு ஆண்டுக்கணக்கில் கோர்ட் , வழக்கு என்று பல வருடங்கள் அலைக் கழித்தனர். கீழ் கோர்டுகள் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடித் தான் 270 வழக்குகளை வாபஸ் பெற வைத்தனர். போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போது வரை 52 வழக்குகள் அம் மக்கள் மீது உள்ளன. தற்போதும் கோர்ட், வழக்கு என அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் மீனவர்கள் சந்தித்த இழப்புகள் சொல்லி மாளாது. பல்லாயிரம் மக்களின் தியாகத்திற்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
இதில் என்ன வேதனை என்றால், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூடங் குளம் மக்கள் மீது போடப்பட்ட அத்தனை வழக்குகளும் வாபஸ் வாங்குவோம் என்று சொல்லி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு வெறும் உப்புச்சப்பில்லாத 26 வழக்குகளை மட்டும் வாபஸ் வாங்கிவிட்டு கப்சிப் ஆகிவிட்டார்.
கூடங்குளத்தில் நேர்மையாக போராட்டம் நடத்திய மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அநீதியே இழைக்கப்பட்டது. அதே சமயம் கட்டுக் கோப்பாக அகிம்சை போராட்டம் நடத்திய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை முழுமையாக வாபஸ் வாங்காமல் இருப்பது திமுக அரசின் கோழைத் தனத்தையே காட்டுகிறது.

”ஆனால், எந்த ஆபாயத்தை எதிர்த்து 1,000 நாட்களுக்கும் மேலாக பெருந்திரளான மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து போராடினார்களோ.., அந்த அபாயத்தை இன்று இடிந்தக்கரை மக்கள் அனுபவிக்கிறார்கள்!
இடிந்தக்கரை வாழ் மக்கள் மத்தியில் கேன்சர் பரவலாக காணமுடிகிறது. பெண்கள் மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளையும், கர்ப்பபை சம்பந்தமான பிரச்சினைகளையும் அனுபவிக்கிறார்கள்…. ஏதேனும் அணு உலையில் தவறுகள் ஏற்பட்டால், தென் தமிழ்நாடு முற்றிலுமாக அழியும் சூழலை மறுக்க முடியாது…மேலும், இந்த வழக்குகளால் எங்கள் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பாஸ்போர்ட் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமலும் என்ஓசி கிடைக்காமல் அரசு வேலைகளுக்கு செல்ல முடியாமலும் பல இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்கிறார், சுப.உதயகுமார்.

கடந்த அக்டோபர் 22, 2025 அன்று கூடங்குளம் போராட்டம் தொடர்பான வழக்கு ஒன்றுக்காக இராதாபுரம் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தேன். அதே வழக்குக்காக அங்கே வந்த தோழர் ஒருவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
“உங்களால்தான் போராட்டம் தோல்வி அடைந்தது!”
“எப்படி?”
“ஒரு நூறு பேரைக் கொன்றிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்! நீங்கள் தான் அதைத் தடுத்து விட்டீர்கள். ஸ்டெர்லைட் போராட்டத்தில் 15 பேர் இறந்ததால்தான், அந்த உலை இப்போது மூடப்பட்டிருக்கிறது.”
நான் சிரித்துக் கொண்டே, “யாரையும் சாகடிக்கவில்லை என்பதால் தான் நான் நிம்மதியாகப் படுத்துத் தூங்குகிறேன். சுதந்திரமாக சுற்றித் திரிகிறேன்” என்றேன்.
“போராட்டம் நடந்துகொண்டிருக்கும்போது சாவதற்கு அணியமாயிருக்கிற தன்னார்வலர்கள் நூறு பேர் அடங்கிய பட்டியலைத் தந்து இப்படி யாரும் சொல்லவில்லையே?” என்று சற்று கிண்டலாகக் கேட்டேன் நான்.
“அதெல்லாம் தானாக நடந்திருக்கும்” என்று இன்னொரு நண்பர் சொன்னார்.
”ஆம், உண்மை தான். மக்கள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான உலகை விட்டுச் செல்லக் காத்திருந்தார்கள். ஆனால், நான் அவர்களை அந்த வழியில் ஊக்கப்படுத்தவில்லை.
ஆகஸ்ட் 2011 ல் கூடங்குளம் போராட்டம் தொடங்கியதிலிருந்து, பிப்ருவரி 28, 2014 அன்று நாங்கள் இடிந்தக் கரையிலிருந்து வெளியேறும் வரை, போராட்டம் வன்முறை வயப்படக் கூடாது என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்தேன் நான். அதே நிலைப்பாட்டில் போராட்டக் குழு உறுப்பினர்களும், போராடிய மக்களும், ஊர்க் கமிட்டியும், சமுதாயத் தலைவர்களும் மிக தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார்கள். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து களத்துக்கு வருகை தந்த சில புரட்சிகரக் குழுக்கள் மென்முறையை விரும்பவில்லை என்றாலும், அவர்களால் போராட்டத்தில் பெரும் தாக்கம் ஏதும் செலுத்த இயலவில்லை.
வன்முறை தவிர்த்து, மென்முறை தழுவுதல் என்பது உயிருக்குப் பயந்தோ, வழக்குக்குப் பயந்தோ, கைதுக்குப் பயந்தோ எடுத்த முடிவல்ல, என்னைப் பொறுத்தவரை ஒரு சமரசமற்ற, மாற்ற முடியாத கொள்கை முடிவு.
![]()
என்னுடைய குழந்தைப் பருவம் முதல் காந்திய ஆசிரமத்தில் கல்வி பயின்ற எனது அம்மாவின் தாக்கம் என்மீது காத்திரமாகப் பதிந்தது. சமூக-பொருளாதார-அரசியல் பிரக்ஞை உருவான பின்னர் மென்முறையில் நம்பிக்கையும், பிடிப்பும் அதிகரித்தன.
எத்தியோப்பில் பள்ளி ஆசிரியராக நான் இருந்த போது அங்கு மக்களின் விடுதலைக்காகப் போராடும் கொரில்லாப் படையும், இராணுவமும் வன்முறையில் போரிடும் போது, சாதாரண மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதை அன்றாடம் பார்த்து, அனுபவித்து அதை வெறுத்து ஒதுக்கினேன்.
நார்வேயின் ஆஸ்லோ (Oslo) பல்கலைக்கழகத்தில் நான் உயர்கல்வி பயின்ற போது, சர்வதேச புகழ் பெற்ற சில பேராசிரியர்கள் முன்னிலையில் “மென்முறை புரட்சி” (Nonviolent Revolution) பற்றி பெரும் கலந்துரையாடல்கள் நடத்தி, பெரும்பாலானோரை இசைய வைத்தேன். ஹவாய் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக படித்த போது, படிப்பை கடந்து மூன்றாண்டுகள் சமாதானம், வன்முறையற்ற மென்முறை போராட்டங்கள் போன்ற ஆய்வுப் புலங்களில் நான் ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் எழுதினேன்.
இப்படிப்பட்ட ஓர் பின்புலம் கொண்ட நான் எப்படி வன்முறையைக் கையிலெடுக்க முடியும்? ஓர் உயிரைக் காப்பாற்ற ஒரு நூறு தோல்விகளைச் சந்திக்க ஆயத்தமாக இருப்பவன் நான். என்னிடம் நூறு பேரைக் கொல்ல வழி கேட்டால் என்ன சொல்ல முடியும்?
ஒருவரின் சாவு தான் மற்றவரின் வாழ்வு எனக் கொள்வது அறமாகுமா? அல்லது “அனைவருக்குமான வாழ்வு” என்று செயல்படுவதுதான் சரியா? பின்னதைத் தான் மகாத்மா காந்தி ‘சர்வோதயா’ எனும் கொள்கையாகக் குறிப்பிட்டார். நான் காந்தியை பின்பற்றுகிறவன்’’ என்றார், சுப.உதயகுமார்.
Also read
இவை ஒருபுறமிருக்க, இப்போது கேள்வி என்னவென்றால், ”அணுக் கழிவுகளை பாதுகாப்பாக எங்கே, எப்போது அப்புறப்படுத்தப் போகிறார்கள்?” ”ஆலையிலேயே வைக்கப்பட்டிருக்கும் அணுக் கழிவுகளை கடலில் கொட்டப் போகிறார்களோ…? என்ற அச்சம் மக்களுக்கு உள்ளது. இதனால் கடல் வளம் குன்றி, வாழ்வாதாரமே நிலைகுலைந்து விடுமே” என அச்சப்படுகிறார்கள். வெடிக்க காத்திருக்கும் ஆறு அணு உலை எரிமலைகளோடு வாழ்வதாகவே அம் மக்கள் உணர்கிறார்கள்.
உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘அணுமின் நிலையம் 2018 ஆம் ஆண்டுக்குள் நிலத்தடி அணுக் கழிவுகளை கொட்ட பாதுகாப்பான ஆழ்நிலைக் கிடங்கு (DGR) அமைக்க வேண்டும்’ என்று கூறியது. அது அமைக்கப்படாததால், மீண்டும் உச்ச நீதிமன்றம் DGR கட்டுவதற்கு ஏப்ரல் 2022 வரை காலகெடு வழங்கிய போதிலும் இன்று வரை அது சாத்தியப்படவில்லை.
ஆக, நாட்டின் அடிப்படை அவசியத் தேவையாக பார்க்கப்பட்ட மின் உற்பத்தி என்பது சொல்லப்பட்ட அளவில் எட்டில் ஒரு பங்கைக் கூட எட்டவில்லை என்பதோடு பாதுகாப்பு விஷயத்தில் முறையான நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 500 கோடிகளில் சொல்லப்பட்ட திட்டங்களும் நடக்கவில்லை. மக்களின் போராட்டம் நேர்மையாக இருந்த அளவுக்கு, சகல அதிகாரங்களும் கொண்ட ஆட்சியாளர்களின் சொல்லிலும், செயலிலும் நேர்மை இல்லை.
சாவித்திரி கண்ணன்


















Leave a Reply