அறிவுத் திருவிழா- நோக்கமும், தாக்கமும்!

-சாவித்திரி கண்ணன்

அருமையான சொற்பொழிவுகள்! சிறப்பான கலை நிகழ்ச்சிகள்!

இளைஞர்களை அரசியல் படுத்துவது!

முற்போக்கு கொள்கைகளைக் கூறி வளர்த்தெடுப்பது!

ஒரு அரசியல் இயக்கத்தின் அவசியமான முன்னெடுப்பு. பாராட்டுக்குரியது.

அரசியல் நிர்பந்தத்தின் காரணமாகவாவது  சில முற்போக்கான உரையாடல்களையும், பெரியார், அண்ணா, திராவிட சித்தாந்தம்  குறித்த அறிமுகமும் இளம் தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுவதால் அறிவுத் திருவிழாவை பாசிடிவ்வாகவே பார்க்கிறேன்.

ஆனால், ஆட்சியைத் தன் வசம் வைத்திருக்கும் திமுக, அந்த இளைஞர்களுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்காமல் எந்தத் தளத்திலும் அரசு வேலை வாய்ப்புகள் இல்லை.. என்று சொல்லும் போது, இந்த இயக்கத்தின் மீது நீங்கள் உங்கள் பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் மூலம் எழுப்பிய விழிப்புணர்ச்சி வீழலுக்கு இறைத்த நீராகிவிடுகிறதே!

இயற்கை வளச் சூறையாடல், வரைமுறையற்ற ஊழல் முறைகேடுகள், படு மோசமான நிர்வாக சீர்கேட்டால்  சமூக பாதுகாப்பே கேள்விக்குறியாகி உள்ளது. கட்சிக்குள்ளேயே சாதி ஆதிக்கமும், சமூக நீதி மறுப்பும் உள்ள ஒரு கட்சி வெறும் பேச்சில் மட்டுமே முற்போக்கு தோற்றம் காட்டினால் போதுமா?

அதிமுக பாஜகவிடம் அடிமையாக உள்ளது!

பாஜக மதவாத – பார்ப்பனீய- கோட்பாடு கொண்ட ஆபத்தான கட்சியாகவுள்ளது..என்று தூக்கலாக பிரச்சாரம் செய்கிறீர்கள்! – மறுக்கவில்லை, நீங்கள் சொல்வது உண்மை தான்!

ஆனால், நீங்களும் பாஜகவிடம் அடிமையாகத் தானே உள்ளீர்கள்- ஓரே வித்தியாசம் அதிமுக பாஜகவுடன் நேரடியாக கூட்டணி வைத்துள்ளது. நீங்கள் எதிர் அணியில் இருந்து உங்கள் அடிமை விசுவாசத்தை நிரூபித்து வருகிறீர்கள், மத்திய அரசின் மக்கள் விரோத சட்ட திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம்.

திமுக ஆட்சியில் தான் பாஜக இங்கு வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது. அண்ணாமலை போன்ற ஆபத்தான சக்திகளும், சீமான் போன்ற சீரழிவு சக்திகளும் இந்த ஆட்சியில் தான் வேகமான வளர்ச்சி பெற்றனர். உங்கள் தவறுகள் தான் அவர்கள் வளர்ச்சிக்கு உரமிட்டன. ஆனால், நீங்களோ.. நாம் பலமாக எதிர்க்கப்பட்டால் தான் – நம்மை ஆதரிப்பவர்கள் பெருகி நமக்கு அரணாகி முட்டுக் கொடுப்பார்கள் – என அவர்களை மறைமுகமாக வளர்த்தீர்கள்.

உங்களுக்கு உண்மையான எதிரி யார்? உண்மையான நண்பன் யார்? என்பதை யாருமே கண்டுபிடிக்க முடியாதவாறு நீங்கள் ஆடும் அரசியல் ஆட்டம் தான் இந்த தமிழ்ச் சமூகத்திற்கு இருப்பதிலேயே ஆபத்தானது என்பேன்.

பாதபூஜைகளும், சமூக பாசாங்குகளும்!

சனாதனம் குறித்த விமர்சனத்திற்காக தமிழகத்தின் மூன்று பிரபல பார்பன ஜீயர்களை (ஸ்ரீவில்லி புத்தூர் எம்பார் ஜீயர், ஆழ்வார் திருநகர் ஜீயர், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர்) வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு பாத பூஜை செய்து வழிபட்ட உதயநிதி ஸ்டாலின் அந்த பாவத்திற்கு பரிகாரம் செய்யவா இந்த அறிவுத் திருவிழாவை நடத்தினார்? விளக்கம் சொல்வாரா? – இதை உதய நிதியிடம் கேட்கும்  தைரியம் அறிவுத் திருவிழா மேடையில் பேசிய முற்போக்காளர்களுக்கு உண்டா?

தமிழக அற நிலையத் துறையின் உண்மையான அமைச்சர் சேகர்பாபுவா? அல்லது துர்கா ஸ்டாலினா? இங்கே ஒருபுறம் அற நிலையத் துறையை அந்தணர் நலத் துறையாக்கி, அளப்பரிய அதிகார அத்துமீறல்களை அவர்களுக்கு செய்து கொடுத்துக் கொண்டு மறுபுறம்  அறிவுத் திருவிழா என்ற பெயரில் திராவிடர்கள் காதில் பூ சுற்றுவதா?

தன் மகன் உதயநிதியை அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரோடு ஒப்பிட்டு புளகாங்கிதம் அடைகிறார், ஸ்டாலின்.

‘’உதயநிதி, ராஜேந்திர சோழனாக மாறி, ஸ்டாலினையும் கலைஞரையும் மிஞ்சிய சாதனைகளை செய்வார்’’ என்கிறார், பொது செயலாளர் துரைமுருகன்.

கலையுலக பெரியாராக உதயநிதி திகழ்கிறார் என்கிறார், அமைச்சர் எ.வ.வேலு.

இப்படி ஒவ்வொரு அமைச்சரும் போட்டிபோட்டுக் கொண்டு உதயநிதியை புகழ்ந்து தள்ளுகிறார்கள் என்றால் எழுத்தாளர்கள் , சிந்தனையாளர்கள், சினிமா பிரபலங்கள்..என பல தரப்பிலும் உதய நிதியை அடுத்த தலைவராக்கும் அரும் முயற்சிக்கு முட்டுக் கொடுக்க பேசித் தள்ளியுள்ளனர்.

பேசும் சித்தாந்தத்திற்கும் கொள்கைக்கும் முற்ற முழுக்க எதிரான வழியில் செயல்பட்டுக் கொண்டே இவர்களால் எப்படி பாசாங்குத்தனம் செய்ய முடிகிறது..என வியந்து போகிறேன். சென்னையில் நடத்தியது போதாது என்று மாவட்டம் தோறும் நடத்தப் போகிறார்களாம்! அறிவுத் திருவிழாவை! தாரளாமாகச் செய்யுங்கள். நீங்கள் இளைஞர்களிடம் ஏற்படுத்தும் விழிப்புணர்வே கூட உங்களை வீழ்த்தும் ஆயுதத்தை அவர்கள் கைகளுக்கு தரும்!

அறிவுத் திருவிழாவை நடத்துகின்ற திமுக தலைமையின் நோக்கம் – விஜய் பக்கம் செல்லும் இளைஞர்களை உதயநிதி பக்கம் வரவழைப்பதாக இருக்கலாம். விஜய்யிடம் அறிவார்ந்த  கொள்கை சார்ந்த பின்புலம் இல்லை. எங்களிடம் தான் உள்ளது..என்பதை சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்காக  இந்த அறிவுத் திருவிழாவை அரங்கேற்றி இருக்கலாம். ஆனால், அதன் உண்மையான தாக்கம் உதய நிதிக்கு உதவுவதாக நிச்சயம் இருக்காது. சுய மரியாதை கருத்துக்கள் இளம் நெஞ்சங்களில் விதைக்கப்படும் போது, வீழ்த்தப்பட வேண்டியவர்கள் நீங்களே என்பதையும் அவர்கள் உணர்ந்துவிடுவார்கள்!

நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை விடவும் உங்கள் செயல்பாடுகளால் மட்டுமே இளைஞர்களை ஈர்க்க முடியும் என்பதை விரைவில் காலம் உங்களுக்கு கற்றுத் தரும்.

ஆயிரம் புத்தகங்களை படிப்பதை விடவும், பல்லாயிரக்கணலான மேடைகளில் முழங்குவதை விடவும்  ஒரு நல்ல செயல் உன்னதமானது.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time