கமலஹாசனின் சூட்சும அரசியல் சொல்லும் செய்தி என்ன?

சாவித்திரி கண்ணன்

கமலஹாசனின் சூட்சும அரசியல், நுட்பமான காய் நகர்த்தல்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாதது!

மதுரையில் இன்று தேர்தல்பிரச்சாரத்தை துவங்கிய கமலஹாசனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்!

கேள்வி; ஆன்மீக அரசியலும் மக்கள் நீதி மையமும் ஒன்றிணையுமா?

கமல்; கட்சிகள் பிளவுபடவும் வாய்ப்புள்ளது, அணி கூடவும் வாய்ப்புள்ளது! இப்போதைக்கு இது தான் சொல்ல முடியும்.

இந்த பதிலில் என்ன புரிந்து கொள்வது?

இன்னொருபக்கம் கட்சி ஆரம்பிக்கவுள்ளேன் என காலந்தாழ்ந்து அறிவித்த நிலையிலும் கூட, அதற்கான முன்னேற்பாடுகளை முன்னின்று செய்யாமல் அண்ணாத்தே படப்பிடிப்புக்கு கிளம்பி சென்றுள்ளார் ரஜினி!

அதனால், ரஜினி கட்சியில் வாய்ப்பில்லாதவர்கள் அதிலிருந்து பிளவுபட்டு தன்னிடம் வருவார்கள் என்கிறாரா? அல்லது ரஜினியுடன் கூடவும் வாய்ப்புள்ளது என்கிறாரா?

அம்பியிடம் ஏதோ ஒரு தொலை நோக்கு திட்டம் இருக்கும் போலத் தான் தெரியுது!

ஆனால் பாருங்கள், எந்த தைரியத்துல எல்லா அரசியல் கட்சிகளையும் முந்திக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் என கிளம்புகிறாரோ தெரியவில்லை?

# கொரானா காலகட்டத்தில் மக்கள் வாழ்வாதாரம் இழந்து நின்ற போது வரவில்லை…

# தொழிலாளர்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்திய போது களம் காணவில்லை

# விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இங்கே ஒரு போராட்டக் களம் காண விருப்பமில்லை

# நிவர் புயலில் மக்கள் நிராதரவாக நின்றபோது கைகொடுக்க களம் காணவில்லை

# புரெவிப் புயல் புரட்டி எடுத்தபோது புகுந்த வீட்டிலிருந்து எட்டிப் பார்க்கவும் துணியவில்லை

# படங்கள் தோறும் காதலித்து காதல் பாடத்தை இளசுகளுக்கு போதித்த நாயகன் உ.பி அரசு இரு மதத்தை சேர்ந்தவர்கள் காதலித்தால் தண்டனை என்ற போதாவது களம் கண்டிருக்க வேண்டாமா?

இப்படி எதற்கும் களம் காணாமல், மனம் இளகாமல் தன் உயிரே பெரிதென்றென்று எண்ணி, பூட்டிய வீட்டுக்குள் இருந்து கொண்டு சவுகரியப்பட்ட விஷயங்களில் மட்டும் டிவிட்டர் அரசியல் செய்து வந்தார்! மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்தியாலாயவில் இனி தமிழுக்கு வாய்ப்பில்லை என்றபோது அமைதி காத்த கமல், மனோன்மணியம் பல்கலையில் அருந்ததிராயின் ’walking with a comrades’  என்ற நூல் அப்புறப்படுத்தபட்ட போது அமைதி காத்த கமல் – அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பாவிற்கு ஆதரவாக தானாக ஓடிவந்து கம்பு சுற்றினார்! இப்படி பாஜகவிற்கு ஆதரவான ஒரு அரசியலை கமுக்கமாக முன்னெடுத்து வரும் கமலஹாசன் இது நாள் வரை அத்தியாவசியமான காலகட்டங்களில் தான் வெளிவரமால் முடங்கி கிடந்தோமே என்று கொஞ்சம் கூட குற்றவுணர்வில்லாமல் – அனைவருக்கும் முன்பாக – தேர்தல் களத்தில் குதிக்கிறார்!

ரஜினி சரிபட்டுவராவிட்டால்,தன்னை பயன்படுத்திக் கொள்ளலாம் என பாஜகவிற்கு அவர் சிக்னல் தருகிறாரா என்றும் யோசிக்க தோன்றுகிறது!

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் ஒவ்வொரு நாடாக போரில் வெற்றி கண்டு வந்த போது, அடுத்ததாக இந்தியாவை கைப்பற்ற வாய்ப்புள்ளது என யூகித்துக் கொண்ட அன்றைய மயிலாப்பூர் மேட்டுக்குடி மேதாவிகள் ஜெர்மன் மொழியை முன்கூட்டியே கற்கத் தொடங்கினர் என கேள்விப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்கிறேன்!

சூத்திரதாரிகள் எப்பவும் இப்படித்தான்! நோகாமல்,கடமையாற்றாமல் தந்திரமாக திட்டமிட்டு, சமயம் பார்த்து காய் நகர்த்தி, கச்சிதமாக அதிகாரமையத்தை ஆக்கிரமிக்க முயல்வார்கள்

ஏதோ ஒரு திட்டமில்லாமல், எதிர்பார்ப்பில்லாமல் – அனைவருக்கும் முன்பாக – கமல் களம் கண்டிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time