இது இலவச உணவில்லை! அவமானப்படுத்தாதீர்கள்!

-சாவித்திரி கண்ணன்

அன்னதானப் பிரபு! வாரி வழங்கும் வள்ளல்! அடேங்கப்பா! தூய்மை பணியாளர்கள் மீது தான் என்னே ஒரு கரிசனம்! பல்லாயிரம் தூய்மை தொழிலாளர்களுக்கு தினம் மூன்று வேளை இலவச உணவாம்! சர்வ சத்தியமாக இது இலவச உணவில்லை. இதன் பின்னணியை முழுமையாக பார்த்தால் தான் உண்மை நிலையை உணர முடியும்;

எவ்வளவு உருக்கமாக பேசி இருக்கிறார்பாருங்கள், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

ஊரே உறங்கிய பின்பும், ஓய்வு அறியாமல் உழைப்பவர்கள் நீங்கள் தான். உங்களால் தான் சுகாதாரமான சுற்றுச் சூழல் உள்ளது.உங்களது இந்த அர்ப்பணிப்பும் சேவை உணர்வும் இந்த மாநகரத்துக்கு பெருமை சேர்க்கிறது. அதனால் தான் சென்னை நகரமே உங்களை நன்றியுடன் வணங்குகிறது. அதனால் தான் உங்களது நலனை காக்கும் வகையில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகிறேன்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம், இலவச உணவாம்!

உண்மையில் இது இலவச உணவில்லை. அவர்களுக்கு தரப்படும் உணவு அவர்களின் உழைப்பால் அவர்களுக்கு தரப்படுகிறது.

இது எப்படி என்பதை உணர ஒரு எளிமையான கணக்கு போதுமானது;

தூய்மை பணியாளர்களுக்கு அரசே சம்பளம் வழங்க வேண்டும். ஒப்பந்த முறை கூடாது. என தேசிய தூய்மை பணியாளர் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதை புறக்கணித்து, அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தில் சொல்லப்பட்டுள்ளபடி மாதம் 22, 950 சம்பளத்தை மறுத்து மு.க. ஸ்டாலின் காண்டிராக்டர்களுக்கு அவர்களை தூக்கி கொடுத்து மாதம் 16,800 மட்டுமே தரச் செய்கிறார்.

அதாவது சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தை விடவும் 5, 400 ரூபாய் குறைவாக  வாங்கச் செய்து நிர்பந்துள்ளார். இதன் மூலம் இந்த 29, 455 தூய்மை தொழிலாளர்கள் மாதம் தோறும் இழக்கும் மொத்த வருமானம் ரூ15, 90, 57,000. இதையே வருடத்திற்கு எவ்வளவு என்று பார்த்தால் 190 கோடியே 86 லட்சத்து, 84 ஆயிரமாகும்.

இந்த உணவு திட்டத்திற்கு தமிழக அரசு செய்யப் போவதாக அறிவித்துள்ள தொகையோ ரூ.186.94 கோடியாகும்.

அப்படியானால் அந்த தொகையின் ஒரு பகுதி தான் இந்த உணவு திட்டத்திற்கு தரப்படுகிறதோ என எண்ணிவிடக் கூடாது.

அந்த 190 கோடியைத் தான் ஆட்சியாளர்களும், ஒப்பந்தக்காரர்களும் பங்கு பிரித்து சாப்பிட்டு விடுகிறார்களே. ..!

”இல்லையில்லை, இப்படி எடுத்துக் கொண்ட பணத்தை ஓய்வூதியத்திற்காகவும், இ.எஸ்.ஐக்காகவும், விபத்து காப்பீட்டுக்கும் அந்த ஒப்பந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கே திருப்பி தருகிறது” எனச் சொல்லி சமாளிக்கிறார், ஸ்டாலின்! உண்மையில் அப்படித் திருப்பி தருவதேயில்லை. அதை கேட்டு பல மாநகராட்சிகளில் தொழிலாளர்கள் போராட்டங்கள் பல நடத்தியும் பலனற்று ஏமாற்றப்பட்ட போதிலும் மீண்டும், மிண்டும் ஏமாற்றுகிறார் ஸ்டாலின்.

தற்போதைய உணவுத் திட்டம் புதியது. 185 கோடிக்கான உணவு ஒப்பந்தம் யாருக்கு தரப்பட்டு அதில் எவ்வளவு கமிஷன் ஆதாயம் பார்த்தார்களோ…தெரியாது. அது தனிக் கொள்ளை…!

தங்களுக்கு உரிமையுள்ள சம்பளத்தை விட்டுத் தர முடியாது எனப் போராடிய தூய்மை பணியாளர்கள் மீது காவல்துறை மூலம் தடியடி உள்ளிட்ட வன்முறையை பிரயோகித்து கைது செய்த ஸ்டாலின், தற்போது அன்னதானத்தின் மூலம் புதுப் பண்ணையாராக அவதாரமெடுத்துள்ளார். பண்ணை அடிமைகளுக்கு  அவர்கள் உழைத்து அறுவடை செய்து தந்த நெல்மணியை அளந்து கொடுத்து  கூடுதலாகவும், விசுவாசமாகவும் வேலை செய்ய வைக்கும் பண்ணையாரின் அணுகுமுறை தான் இதுவும்.

டிசம்பர் 6 முதல் தமிழகத்தில் சென்னை மட்டுமின்றி மீதம் உள்ள 24 மாநகராட்சிகள் மற்றும் 145 நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு முதல்-அமைச்சரின் உணவுத்திட்டம் 72,000 தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளதாம். எல்லா உள்ளாட்சிகளிலும் இப்படித் தான் தூய்மை தொழிலாளர்கள் வயிற்றில் அடித்து பணம் கொள்ளை அடித்து வருகின்றனர். இந்த துரோகத்திற்கு பரிகாரமாக சாப்பாடு போட்டு, அதிலும் கமிஷன் அடிக்கிறார்கள்.

தங்களுக்கு ஓசி சாப்பாடு வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைக்கவே இல்லை. அவர்களின் கோரிக்கை உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கு என்ற ஒன்று மட்டுமே. அதில் தங்களுக்கான உணவை- தங்களின் தேவைக்கும், ருசிக்கும் ஏற்ப அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்.

தற்போது என்ன நடக்கின்றது…? எங்கேயோ மையப்படுத்தப்பட்ட ஓரிடத்தில் மொத்தமாக சமைத்து சென்னை முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு அதை கொண்டு சேர்பதில் அதீத காலதாமதம் ஏற்பட்டு, மதியம் இரண்டு மணிக்குள் கிடைக்க வேண்டிய உணவு மாலை நான்கு மணிக்கு தான் கிடைக்கிறது. இதனால் பசியால் பலர் துவண்டு போகின்றனர். ஒரு சிலர் பசி தாங்காமல் மயக்கம் அடைகின்றனர். மற்றும் சிலர் பசி பொறுக்காமல் கடையில் வாங்கி சாப்பிட்டு விடுகின்றனர். முறையான திட்டமிடல் இன்றி விளம்பரம் மற்றும் சுய லாபத்திற்காக ஒரு திட்டம் அமலானால் இப்படித் தான் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியதாகிறது.

வஞ்சிக்கப்பட்ட உழைப்பாளி மக்களின் கண்ணீரை பொருட்படுத்தாத இரும்பு  நெஞ்சம் படைத்த ஆட்சியாளர்களின் தேர்தல் நேரத்து சித்து வேலைகளில் இதுவும் ஒன்று.

சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time