நியாயங்களை நிலை நாட்ட நீதிமன்றங்கள் செயல்பட்ட காலங்கள் கனவாய், பழங்கதையாய், கானல் நீராய் மாறியதோ..? கடந்த பத்தாண்டுகளில் அதுவும் சமீப காலங்களில் ஆட்சியாளர்களின் அக்கிரமங்களுக்கு, அநீதிகளுக்கு எதிராக நீதிமன்றம் சென்று வழக்கு போடுவதும், நீதி தேடுவதும் காலவிரயமோ.. என்ற கலக்கம் உருவாகிறது;
ஆட்சியாளர்களும், நீதிபதிகளும் ஒரே கோணத்தில் சிந்திக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ..?
அதிகாரத்தில் உள்ளவர்கள் ஜனநாயக வழிமுறைகளில் தங்களால் சாதித்துக் கொள்ள முடியாததை நீதிமன்றங்களின் வழியாக அதிரடியாக நிறைவேற்றி செல்வது தான் நிகழ்கால தந்திரோபாயமாக உள்ளது.
இப்போதெல்லாம் தாங்கள் நேர்மையாக வழங்கிய தீர்ப்பில் இருந்து தாங்களே பின் வாங்கும் சூழல் நீதிபதிகளுக்கு அடிக்கடி ஏற்படுகிறது.
இனி மக்களுக்கு, ‘நீதிமன்றங்களை நாடி விவாரணம் பெறலாம்’ என்ற நம்பிக்கையே தகர்ந்திடுமோ என்னவோ!
இனி, எவ்வளவு காலங்கள் வேண்டுமானாலும் மசோதாக்களை கவர்னர்கள், குடியரசுத் தலைவர் ஆகியோர் காலதாமதப்படுத்தலாம். சட்டமன்றங்கள்.. மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வந்த தீர்மானங்கள் எல்லாம் அவங்க பதவி முன்னாடி தூசுக்கு சமானம். மக்கள் நலனாவது, மண்ணாங்கட்டியாவது! அவங்க எம்மாம் பெரிய மனுஷங்க..!
ஆக, ‘கவர்னர், குடியரசுத் தலைவர் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது’ என்று நீதிபதிகளே அபிப்ராயம் சொல்லி உள்ளனர். ‘மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த 2 நீதிபதிகளின் தீர்ப்பு அரசியலமைப்புக்கு எதிரானது’ என தங்கள் தலைக்கே தாங்களே நீதிபதிகள் குட்டு வைத்துக் கொண்டனர்.

மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது. அதேபோல, ஆளுநர்கள் உரிய காலக்கெடுவுக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க உத்தரவிட முடியாது. நல்லது, ‘தங்களுக்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்படுகிறது’ என்பதை அவர்களே நிர்ணயித்து, அதன்படி செயல்படக் கோரி இருக்கலாமே.
இதை நேர்படவே, ”இந்திய அரசியல் சட்டங்கள் என்பவை கவர்னரையும், குடியரசுத் தலைவரையும் கட்டுப்படுத்தாது” என சொல்லிவிட்டு போயிருக்கலாம்.
இனி இந்தியாவை கூட்டாட்சி தத்துவ கோட்பாடு கொண்ட நாடில்லை. ஒரே கட்சி, ஒரே அரசு அல்லது ‘மன்னராட்சியின் மறு வடிவம் கொண்ட நாடு’ என சொல்லிவிட்டு போகலாமே.
‘உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர்களை நீதிமன்றம் கூட கேள்வி கேட்கக் கூடாது’ என நிர்பந்திக்கும் போது, அந்த உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது ஒழுங்கிற்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். தாங்களே ஒரு சுயகட்டுப்பாட்டுடனும், பொறுப்புள்ளவர்களாகவும் நடந்து காட்ட வேண்டும்.
அப்படி இல்லாமல் போகும் போது தான் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படுகிறது.
”மாநில சட்டமன்றங்களின் மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க நீதிமன்றம் எங்களுக்கு காலக்கெடு நிர்ணயிப்பதா?” எனக் கேட்கும் குடியரசுத் தலைவர், மத்திய அரசின் மசோதாவை காலதாமதப்படுத்தியதாக சரித்திரம் உள்ளதா? ஏன் அவரால் அது மட்டும் முடியவில்லை.? இதற்கான பதிலை நீதிமன்றம் குடியரசுத் தலைவரிடம் கேட்டு இருக்க வேண்டும்.
இதற்கு முன்பு என்ன நடந்தது? இந்திய தேர்தல் ஆணையரை பிரதமர், எதிர்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட மூவர் குழு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி அந்த மூவர் குழுவில் தேவையில்லை என ஆட்சியாளர்கள் முடிவெடுத்தனர். அதையும் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு சம்மதம் தெரிவித்தனர்.

அதன் விளைவைத் தான் தற்போது நாடு அனுபவித்துக் கொண்டுள்ளது. தற்போது தேர்தல் ஆணையர்கள் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பறிக்கிறார்கள். மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்க பார்க்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளர்களாக செயல்படுகிறார்கள். இதனால் தேர்தல் முடிவுகளே மாறுகின்றன. உச்ச நீதிமன்றத்தால் இந்த அநீதிகள் எதையுமே தடுக்க முடியவில்லை.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வலதுசாரி மதவெறியர் ஒருவர் நேருக்கு நேராக நீதிமன்றத்தில் செருப்பை வீசினார். அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கி தண்டிக்கும் அறச் சீற்றம் கூட நீதித் துறையிடம் இல்லை. இதுவே பிரதமர் மீது ஒருவர் செருப்பை வீசி இருந்தால் அவரது கதி என்னவாகி இருக்கும்?
தற்போதுள்ள குறைந்தபட்ச பாதுகாப்பை தரும் சுற்றுச் சூழல் சட்டங்களால் கார்ப்பரேட்கள் காயப்படக் கூடாதாம்! அதனால், அந்த சூழல் பாதுகாப்பு அம்சங்களை தூக்கி குப்பையில் போட்டு, புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
இனி, ஒரு நிறுவனம் ஆரம்பிக்கும் போதே சுற்றுச் சூழல் அனுமதிக்கு விண்ணப்பித்து காத்திருக்க வேண்டியதில்லை. சுற்றுச் சூழல் என்பதெல்லாம் சுண்டைக்காய் சமாச்சாரம். கம்பெனியை துவங்கிவிட்டு அதற்கு அனுமதி கேட்கட்டும். அப்படி அனுமதி கேட்கும் போது, கம்பெனி துவங்குவதற்கு முன்பான ஒரு தேதியிட்டு சுற்றுச் சூழல் அனுமதி கொடுத்து விடுங்க என்கிறது, புதிய சட்டம்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இனி சுற்றுச் சூழல் சூறையாடப்படுவதை எந்த சட்டத்தாலும் தடுக்க முடியாது. நீதிமன்றம் சென்றும் நியாயம் கேட்க முடியாது. ஏனென்றால், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு சுற்றுச் சூழல் அனுமதியை நிறுவனங்கள் முன் கூட்டியே விண்ணப்பித்து பெற வேண்டும் என்ற மே மாதம் வழங்கப்பட்ட இரு நீதிபதிகளின் நியாயமான தீர்ப்பை, நவம்பர் மாதம் மூன்று நீதிபதிகள் அமர்வு மாற்றி, ‘அதெல்லாம் தேவையில்லை’ என நிறுவனங்களுக்கு சலுகை காட்டும் மத்திய அரசின் சட்ட முடிவிற்கு உடன்பட்டு தீர்ப்பு தருகிறது.

ஆக, இனி மீத்தேன் திட்டம், பரந்தூர் விமான நிலையம், பசுமை வழிச்சாலை, கனிமங்களை கொள்ளையடிக்கும் குவாரிகள்..என இயற்கை வளங்கள் சூறையாடப்படவுள்ளன.
Also read
பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, மக்களின் வங்கிப் பணத்தை எடுத்து கார்ப்பரேட்களுக்கு தாரை வார்த்து வாரா கடன்கள் என எழுதி வைப்பது, தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை துவம்சம் செய்வது, அரசியல் கட்சிகளை பிளவுபடுத்தி மக்கள் பிரதி நிதிகளை தூக்குவது… என மத்திய ஆட்சியாளர்களின் அதிகார ஆட்டங்கள் எதையுமே கண்டிக்கவோ, தடுக்கவோ முடியவில்லை. நிராயுதபாணியாக நிற்கிறார்கள் மக்கள்! நீதிமன்றத்தை நாடியாவது நிவாரணம் பெறலாம் என்ற கடைசி நம்பிக்கையும் தற்போது பொய்த்துக் கொண்டே வருகிறது.
‘சர்வ வல்லமை கொண்ட ஆட்சியாளர்கள் மக்களைத் தான் நிராயுதபாணியாக்கிவிட்டனர்’ என்று இது நாள் வரை நினைத்திருந்தோம். ஆனால், அவர்கள், ‘நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் கூட விட்டு வைக்கவில்லை’ என்பது போலத் தான் தெரிகிறது.
சாவித்திரி கண்ணன்


















Leave a Reply