தடைகளைத் தகர்த்த ‘யாக்கர் ராஜா’ நடராஜன்…!

-மாயோன்

மேட்டுக்குடியினர் மட்டுமே பங்கு பெற்று வந்த இந்திய கிரிக்கெட்டில் கிராமத்து எளிய மனிதனுக்கும் இடம் கிடைக்கும் காலம் கனிந்துவிட்டதன் எடுத்துகாட்டு தான் ’யாக்கர் ராஜா’ நடராஜன்! காலபரிணாம வளர்ச்சி அதன் போக்கில் பல தடைகளை தகர்த்து அடித்தளத்தில் உள்ள திறமையாளர்களையும் அடையாளம் கண்டு வருகிறது..! வேகப் பந்து வீச்சில் விரும்பத் தகுந்த ஆட்டக்காரராக வளர்ந்து வரும் நடராஜன் வருங்கால நம்பிக்கை நட்சத்திரம் என்பதில் சந்தேகமில்லை!

சேலம் மாவட்டத்தில் சின்னப்பம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து, கல்லூரிக்கு பேருந்தில் சென்று வரக் கூட போதுமான காசு இல்லாத சூழலில் வளர்ந்தவர்தான் நடராஜன் .

தன் 20 வயது வரை ரப்பர் பந்து மற்றும் டென்னிஸ் பந்துகொண்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். கிரிக்கெட் பந்தை கையில் எடுத்து விளையாடத் தொடங்கியபோது அவருக்கு வயது இருபது ஆகியிருந்தது. தன் முயற்சியால்- கடுமையான பயிற்சியால் மிகக் குறுகிய காலத்தில் வளர்ந்து தனக்கே உரித்தான யார்க்கர் பந்துவீச்சால் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை சிகரத்தை எட்டியுள்ளார், “யார்க்கர் ராஜா” எனப்படும் நம்ம ஊர் நடராஜன் .

இவருடைய வெற்றியின் ரகசியத்தை உள்வாங்கி தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தும் எவரும் சாதனையாளராக வலம் வர முடியும்!

1983 -ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் உலகக்கோப்பை  போட்டியில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்தது. நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தைப் பிடிக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்களால்  கணிக்கப்பட்ட அந்த அணி கோப்பையை வென்றதன் தாக்கம் நாடு முழுவதும் எதிரொலித்தது.

பட்டி,தொட்டியெல்லாம் இளைஞர்களும் சிறுவர்களும் மட்டையை பிடித்துக் கொண்டு  விளையாடிக்கொண்டிருந்தனர்.

2011ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக இந்திய அணி வெற்றி பெற்றது. டோனி தலைமையில்  அந்த சாதனை நிகழ்த்தப் பட்டது. முன்னதாக 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையையும் டோனி தலைமையிலான அணி வென்றிருந்தது . டோனியின் “ஹெலிகாப்டர் ஷாட் ”

கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்து கொண்டாட வைத்தது‌.

டி20 ஆட்டங்களுக்கு வரவேற்பு அதிகமாகி, ஐபிஎல் போட்டிகள் நடைபெறவே ,புதிய இளம் வீரர்கள் பலர் அறிமுகமாகினர். அவர்களுக்கு

அது களம் அமைத்துக் கொடுத்து சாதனை பயணத்திற்கு வித்திட்டுள்ளது.

அண்மைக் காலம் வரை இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சம் இருந்தது. அந்த நிலை மாறி, தற்போது வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் உருவாகியுள்ளனர்.பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ,உமேஷ் யாதவ் ,இஷாந்த் சர்மா போன்ற வீரர்கள் சிறப்பாக  பந்து வீசுகின்றனர்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் கொண்ட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, போன்ற நாடுகளுக்கு சென்று விளையாடும்போது வெற்றிக்கனியை பறிப்பதில் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கிய அங்கம் வகிக்கிறது.

அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியில் இடம் பெற்று முத்திரை பதித்த நடராஜன் அரையிறுதி வரை அந்த அணி முன்னேறுவதற்கு முக்கியக காரணமாகத் திகழ்ந்தார் .

ஐபிஎல் போட்டியில் அவர்  ஜொலித்ததைத்  தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் பங்கேற்கும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார் .

அங்கு நடைபெற்ற மூன்று ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட போட்டித் தொடரின்  முதல் இரண்டு  ஆட்டங்களில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் மூன்றாவதில் சேர்க்கப்பட்ட நடராஜன் அருமையாக பந்துவீசி இரண்டு  வீரர்களை அவுட் ஆக்கியதோடு குறைந்த ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து  இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற  காரணமானார்.

இதைய்டுத்து டி20 போட்டித் தொடரில் இடம் பெற்று முதல் போட்டியில்  3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்த போட்டியில் 20 ரன்கள்  கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் .ஹர்திக் பாண்டியா கூறுகையில், நடராஜனின் பந்துவீச்சால்தான் ஆஸ்திரேலிய  ஸ்கோரை ஒரு கட்டுக்குள் வைத்து, அதை நம்மால்  விஞ்ச முடிந்தது “என்றார்.

டி20 தொடரை 2-1 என்ற எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா வென்றது.

’’இரு அணிகளுக்கு இடையேயான  டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் நடராஜனை டெஸ்ட் போட்டிக்கான அணியிலும்  சேர்த்து அவருடைய திறமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கவாஸ்கர் போன்ற மூத்த வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் ‌.

ஆஸ்திரேலிய மண்ணில் முத்திரை பதித்த தமிழகத்தைச் சேர்ந்த முதல் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தான். அவருடைய  “யார்க்கர்” பந்து வீச்சு உலக கிரிக்கெட் அரங்கில்  பெரிதும் பேசப்பட்டது.

ஆஸ்திரேலியா நாட்டின் தட்பவெப்ப சூழல் இந்திய காலநிலைக்கு முற்றிலும் மாறானது.  மேலும் அந்த அணி உலகத்தர  வீரர்களைக் கொண்டது. அங்கே போய் அந்த மண்ணில் அவர்களை வெல்வது சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்தை வீழ்த்துவதற்கு சமம். இந்திய அணி தற்போது பெற்றுள்ள வெற்றி ஒரு சாதனை நிகழ்வாகும்.

இந்த வெற்றிக்குக்  காரணமான வீரர்களை

பாராட்டிய இந்திய

பத்திரிகைகள் நடராஜனை யார்க்கர் ராஜா(Yorker King) என்று குறிப்பிட்டு

புகழாரம் சூட்டின.

நடராஜனின் தந்தை பெயர்  தங்கராசு , தாயார் சாந்தா. இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். மூத்தவர்தான் நடராஜன் .

நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்த தங்கராசு வருவாய் போதவில்லை.குடும்ப செலவை சமாளிக்க  வீட்டு வாசலில் ரோட்டோரம் சிற்றுண்டி கடை வைத்தார் திருமதி‌சாந்தா தங்கராசு.

பள்ளிக்கூடம் விட்டதும் கிரிக்கெட் விளையாட்டே  கதி என்று கிடந்துள்ளார்  நடராஜன் .கிராமத்து சொந்த பந்தங்கள் பற்றி சொல்லவா வேண்டும்! கிரிக்கெட் விளையாட்டு சோறு போடாது  உன் பையனை வேலை வெட்டிக்கு போகச்சொல்லு என்று வார்த்தைகளைக் கொட்டியுள்ளனர். சகித்துக்கொண்டு பிள்ளையை அவன் போன போக்கில் அனுமதித்துள்ளார் தாயார்.

நம் சமூகத்திற்கே உரித்தான ஒரு போக்கு இன்னமும் உள்ளது.  ஓவியம் உள்ளிட்ட கலை வடிவங்களிலோ  வரலாறு , தொல் துறை  போன்ற பாடங்களிலோ  நாட்டமும் தனித் திறமையும் உள்ள மாணவர்  பன்னிரண்டாம் வகுப்பில்  சிறந்த மதிப்பெண் பெற்றால் அவரை  மருத்துவப் படிப்பு அல்லது தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவில் சேர்க்கும் கொடுமை உள்ளது. அதாவது  உலக அளவிலான ஒரு சாதனையாளராக வரவேண்டியவரை சராசரி வாழ்க்கைக்கு தள்ளி வாழ வைக்கும் தப்பை  பெற்றோரே செய்துவிடுகின்றனர்.  சாந்தாதங்கராசு  அது போன்ற தவறை தன் மகனுக்கு செய்யவில்லை .அவன் போன போக்கில் விட்டதன் விளைவு இன்று அவன் உலக  நட்சத்திரமாகி விட்டான். உள்ளூர்  கிராமத்தைச் சேர்ந்த ஜெய்பிரகாஷ் என்ற  கிரிக்கெட் ஆர்வலர் அவனுக்கு வழிகாட்டியாக  கிடைத்தார். முதன்முதலாக  உள்ளூர் கிளப் அணிக்கு நடராஜனை சேர்த்துவிட்டது முதல்  படிப்படியாக அவன் வளர்ச்சியில்  முக்கியப் பங்கு வகித்தார்.

தன் 25 ஆம் வயதில் ரஞ்சி கோப்பைக்கான  தமிழக அணியில் இடம்பெற்ற நடராஜன். டிஎன்பிஎல்  போட்டியில் திண்டுக்கல் அணிக்காக,,விஜய் அசாரை போட்டி, ஐபிஎல்- இல் பஞ்சாப் அணிக்காக பின்னர் ஐதராபாத் அணிக்காக என்று விளையாடினார்.

ஹைதராபாத் அணிக்காக அண்மையில்  ஆடிய ஆட்டம் இவரை நோக்கி நாட்டையே  திரும்பிப் பார்க்க வைத்தது .இவர் வீசும் யார்க்கர் பந்து இவருக்கே உரித்தான  தனி பாணி ஆகும்.

டி-20 ஆட்டத்தில் ஒவ்வொரு  ரன்னும் முக்கியமானது. குவிப்பை தடுக்கவும் விக்கெட்டை சாய்க்கவும்  இன்ஸ்விங், அவுட் ஸ்விங் ,ரிவர்ஸ்விங், ஹூக்லி,டாப்ஸ்பின்  என்று பலதரப்பட்ட நுட்பங்களை  பந்துவீச்சாளர்கள் பயன்படுத்துவார்கள்.

பேட்ஸ்மேனை திணறவைக்கும் யார்க்கர் வீச்சு  வேகமாக அதே சமயத்தில் துல்லியமாக கால்மாட்டில் வீசப்பட வேண்டும் .குறி தவறி வீசப்படும் பந்து எல்லைக் கோட்டுக்கு விரட்டியடிக்கப்பட்ட   வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலியாக்கு  எதிரான டி20 போட்டிகளில் மிகத்துல்லியமான யார்க்கர்களை நடராஜன் வீசினார். குறிப்பாக 2வது டி20 ஆட்டத்தில் அவர் வீசிய 24 பந்துகளில் 20 ரன்களை மட்டுமே கொடுத்து இருந்தார். அதோடு 2 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தார்.

” பாரத ரத்னா “விருது பெற்ற சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றபோது அவருக்கு வயது வெறும் 15 தான். தற்போதைய  இந்தியக்கேப்டன் விராட்கோலி 18 வயதுக்கு உட்பட்ட இந்திய ஜூனியர் அணிக்கு  தலைமை தாங்கியவர் .

நடராஜன்  தன் இருபது வயதுவரை ரப்பர் பந்துகளில் விளையாடி வந்தவர். அதன் பிறகு கிரிக்கெட் பந்தில் பயிற்சி எடுத்து இந்த உச்சத்தை எட்டிய உலகின் முதல் வீரர் இவராகத்தான் இருக்க வேண்டும்.

“தெய்வத்தான் ஆகாது   எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும் .(குறள் 619)

என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாக திகழும் நடராஜனுக்கு

தற்போது 29 வயதாகிறது.  மூத்த வீரர்களின் ஆலோசனையின்படி உடல் தகுதியுடன் இருந்தால் இன்னும் பத்து ஆண்டுகள்வரை  இந்திய அணியில் இடம் பெற்று அவர்  சாதனைகள் பல நிகழ்த்த முடியும்.

மிகக்கடுமையான முயற்சியும் பயிற்சியும் ஜெயபிரகாஷ் என்ற ஆசானின் வழிகாட்டுதலும்  நடராஜனுக்கு “யார்க்கர் ராஜா “என்ற மகுடம் கிடைக்க காரணமாகின.

கிரிக்கெட் விளையாட்டில் அடுத்து  இவர்புரியும் சாதனைகள் அந்த மகுடத்தில் பதிவாகி மாணிக்கக் கற்களாய் ஜொலிக்கட்டும்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time