வங்க தேச நல்லுறவுக்கு பங்கம் ஏற்படுத்தும் பாஜக அரசு!

-ச.அருணாசலம்

1,400 மாணவர்களை கொன்ற வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற இந்திய அரசு தவிக்கிறது! அண்டை நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைப்பது, சர்வதேச விதிகளை மதிக்காமல் கொடூர குற்றவாளிக்கு அடைக்கலம் தருவது என்ற அளவுக்கு பிரதமர் மோடி, கரிசனம் காட்டுகிறார் ஹசீனா மீது! ஏன்?;

கிழக்கு வங்கத்தின் (பங்களாதேஷ்) பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்டு 5,2024 அன்று மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கோபக் கனலினின்று தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் . ஆனால், இந்தியாவில் அவரது ‘இருப்பு’ சட்டபூர்வமானது அல்ல.

மாணவர் கிளர்ச்சியை அடக்க ஷேக் ஹசீனா அரசு தொடுத்த வன்முறையில் ஏறத்தாழ 1,400 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 2024ம் ஆண்டு ஜூலை 1 முதல் வங்கதேச மாணவர்களும், இளைஞர்களும் வீதிகளில் இறங்கி வேலை வாய்ப்புகளில் வங்கதேச விடுதலை போராளிகளுக்கு இட ஒதுக்கீடு என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர். போராட்டங்கள் வலுப்பெற்று பெருகிய சூழலில் ஜூலை 19 வாக்கில் ராணுவம் வரவழைக்கப்பட்டது, தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டு , இண்டர்நெட் தடை போடப்பட்டது. மாணவர்களின் மீது ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் கட்சியினர் ‘அவாமி லீக் மாணவர் அணி’ என்ற போர்வையில் கொலைவெறி தாக்குதல்களை தொடுத்தனர்.

இராணுவமும் ஆயுதமேந்திய காவல்படையும் ஆயுதமேந்தாத அப்பாவி இளைஞர்களை, மாணவர்களை தாக்கியதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

கிளர்ச்சி கட்டுக் கடங்காமல் போகவே செயவதறியாது தப்பித்தேன் பிழைத்தேன் என்று இருபதாண்டு காலம் ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனா ஹெலிகாப்டர் ஒன்றில் ஏறி, டாக்காவை விட்டு தப்பியோடி ரகசியமாக இந்தியா வந்து சேர்ந்தார்.

ஹசீனா அரசு மாணவர்களை, இளைஞர்களை கொன்று குவித்ததை கண்டித்து அதற்கான நீதியைத் தேடி வங்கதேச மக்கள் போராட்டத்தை தீவிரபடுத்தியதால் தற்பொழுது ஆட்சி பொறுப்பில் உள்ள முகமது யூனுஸ் தலைமையிலான தற்காலிக அரசு.

முன்னாள் பிரதமர் ஹசீனா மீதும், அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த அசாத் உஸ்மான்கான் கமல் உட்பட 45 பேர் மீது மனிதகுலத்திற்கெதிரான போர் குற்றங்களுக்காக வழக்கு தொடர்ந்தது.

 

ஆசியாவிலும் ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்க கண்டங்களிலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், ஆட்சியிலிருக்கும்பொழுது தாங்கள் இழைத்த கொடுஞ்செயல்களுக்கு, படுகொலைகளுக்கு பொறுப்பேற்காமல் இம்மூனிட்டி – immunity- என்ற போர்வையில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து கொள்ளுவதே வளமையாயிருக்கிறது.

ஆனால் ஷேக் ஹசீனா இன்று, தான் உருவாக்கிய சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) மூலமே ‘குற்றவாளி ‘ என அறிவிக்கப்பட்டு, அவருக்கு அதற்காக மரண தண்டனையும் வழங்கபட்டிருப்பது ஒரு நகைமுரணாகும். இவர் ஏற்படுத்திய இந்த நீதிமன்றத்தை அன்றைய எதிர்கட்சிகள் “கட்ட பஞ்சாயத்து செய்யும் கூடாரங்களாக” வருணித்தனர். அவற்றையெல்லாம பொருட்படுத்தாமல் எதிர்கட்சியாளர்களை தண்டித்த, ஷேக் ஹசீனா இன்று அதே ஆயுதத்திற்கு பலியாகி உள்ளார்.

இந்த தீர்ப்பை ஒருதலைபட்சமானது, அரசியல் நோக்கங்கொண்டது என்று ஹசீனா கூறியுள்ளார். “எனக்கு எதிராக வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு சோரம் போன ஒரு மன்றத்தால், தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சியாளர்களின் கண்காணிப்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு. அவர்களுக்கு அரசியல் உள்நோக்கமும் என்மீது காழ்ப்புணர்வும் உள்ளது” என்று ஹசீனா கூறியுள்ளார்..

இந்தச் சூழலில் இந்தியா இப்பிரச்சினையை எவ்வாறு கையாளப் போகிறது என்பது பலரது வினாவாக உள்ளது.

இந்தியா மற்றும் பங்களா தேசத்திடையே குற்றவாளிகளை நாடுகடத்தும் ஒப்பந்தம் ஏற்கனவே பல ஆண்டுகளாக – 2013 முதல்- அமலில் இருப்பதால், முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு,ஷேக் ஹசீனாவை வங்கதேச அரசிடம் ஒப்படைக்க இந்திய அரசை வற்புறுத்தி வருகின்றது.

இந்திய அரசு இவ் விவகாரத்தில் இரண்டாவது முறையாக நாடுகடத்தும் கோரிக்கையை எதிர் கொள்கிறது. ஏற்கனவே வங்கதேச நீதிமன்றம் ஹசீனா மீது கைதாணையை பிறப்பித்த பொழுது இந்தியா அதற்கு முறையாக பதில் ஏதும் கூறாத நிலையில் இவ்வழக்கில் இப்பொழுது நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, நாடு கடத்தும் கோரிக்கையை இந்தியா இரண்டாவது முறையாக எதிர் கொள்கிறது.

இந்திய அரசின் செய்தி தொடர்பாளர் இது குறித்து பட்டும்படாமல் பதில் கூறுவதிலிருந்தே இந்திய அரசின் தர்ம சங்கடத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய அரசிற்கு வங்க தேசத்தின் கோரிக்கையை நேர்மையாகவோ, சர்வதேச விதிகளின்படியோ எதிர்க்க வழியில்லை என்ற போதும், இப்பிரச்சினையை இரு நாடுகளுக்கிடையிலான உறவை உருக்குலைக்கும் அளவிற்கு வளர விடக்கூடாது என்ற எண்ணம் இந்திய அரசிற்கு உள்ளது.

அதே வேளையில் அயல்நாட்டு உறவுகளை இருநாடுகளின் தேவை என்ற தளத்திலிருந்து தடம் மாற்றி தனிப்பட்ட தலைவர்களின் உறவாக (மோடி-ஹசீனா), மோடியின் மகிமையாக சித்தரிக்கும் வியாதி இந்திய அரசியல் களத்தில் மட்டுமின்றி இந்தியாவின் அயல்துறை விவகார அமைச்சகத்திலும் பரவி உள்ளதால், பதட்டங்களும் பொய்யுரைகளும் நடமாடத் தொடங்கியுள்ளன.

இது வரை இந்தியா ஷேக் ஹசீனாவை இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்லவில்லை என்றாலும், இத்தீர்ப்புக்கு பின்னர் நாடு கடத்தும் கோரிக்கையை புறந்தள்ளவும் முடியாத இக்கட்டில் இருக்கிறது. இந்தியா. இந்த சிக்கல் ,வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு (2026 பிப்ரவரி) நடக்கவிருக்கும் தேர்தலுக்குப் பின் அமையும் அரசின் அழுத்தத்தால் மேலும் மோசமடையலாம்.

ஹசீனா தலைமையிலான அரசு நிகழ்த்திய அடக்குறை மற்றும் வன்கொலைகளுக்கு பொறுப்பை நிலை நாட்டும் பணியில் இடைக்கால அரசு மும்முரம் காட்டுவது வங்கதேச சமூகத்தில் நீதியை நிலைநாட்டுவதன் மூலம் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி தான்.

இம்முயற்சி நாளை தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசால் மேலும் வற்புறுத்தப்படும் . இந்த சூழ்நிலையில் இந்திய அரசு வங்கதேச நீதிமன்றத்தை குறைகூறியோ, இன்றுள்ள வங்கதேச இடைக்கால அரசை குறைகூறியோ தப்பிக்க முடியாது. மேலும் நீதிமன்ற முடிவுகளுக்கு உள்நோக்கம் கற்பிப்பது எதிர்மறையான சூழல்களை உருவாக்கும்.

மரண தண்டனை மீது இந்திய அரசிற்கு மட்டுமின்றி உலகெங்கிலுமுள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கும் எதிர்மறை கருத்து நிலவினாலும், இழைத்த குற்றங்களுக்கு பொறுப்பு கூறல் மூலமே சமுதாயத்தில் ஏற்பட்ட ரணத்திற்கு நிலையான முடிவும் , புதிய இணக்கமும் (closure and reconciliation) ஏற்படும் என்பதையும் நாம் மறுக்க முடியாது.

அண்டைநாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது, சர்வதேச விதிகளை மதிப்பது , பரஸ்பர மக்களிடையே ஒற்றுமையை பேணுவது என்ற நியதிகளை இந்தியா பின்பற்றுகிறது என நிரூபிக்க வேண்டிய அவசியத்தில் நாடு இருக்கிறது.

அரசியல் கட்சியினரும் இவ்விவகாரத்தை குறுகிய மதக் கண்ணோட்டத்தில் அணுகாமல் மனிதகுல மாண்பு என்ற வகையில் அணுகுவதே முறை. ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளை, அடையாளங்களை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை அடைவதும், அவற்றின் மூலமே ஆட்சியில் நீடிப்பதும் , அவ்வெறியுணர்வு மூலம் அடக்குமுறைகளை ஏவி, அதில் குளிர் காய்வதும் கேள்வி கேட்கப்பட வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி நியாயமான சர்வதேச விதிகளை ஒப்பந்தங்களை பின்பற்றுவது தான் மக்களின் முன் உள்ள வழிமுறை.

இவற்றை விடுத்து உணர்வு மற்றும் அடையாள அரசியலை இருநாட்டு உறவுகளுக்குள் புகுத்தினால் சீரழிவும், மோதலும் கேட்காமலே வந்து சேரும்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) போன்ற நடுநிலையான சர்வதேச அமைப்பு வங்கதேச அரசிடம், சர்வதேச விதிகளை மனதில் கொண்டு மரண தண்டனையை ரத்து செய்ய கோரிக்கையை முன்னரே வைத்தது என்றாலும், வழக்கு விசாரணையின் போது இரண்டு “குற்றஞ்சாட்டப்பட்டோர்” (defendants) நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கு பெறவில்லை என்ற காரணத்தினால் இவ் வழக்கு இருதரப்பையும் முழுதாக விசாரணை செய்த வழக்காக கருத முடியாது என்ற குறை இருப்பினும், அந்த குறைகள் ஷேக் ஹசீனா இழைத்த குற்றங்களின் தீவிரத்தை குறைக்கவோ, மடைமாற்றம் செய்வதற்கோ பயன்படுத்தக் கூடாது.

மறுபக்கத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் இப்பொழுது தடை செய்யப்பட்டுள்ள போதிலும், அக்கட்சியின் உறுப்பினர்கள் இத்தீர்ப்பை எதிர்த்து வன்முறைகளில் இறங்கும் சாத்தியக்கூறுகளும் உள்ளன.

அடுத்து உலகெங்கிலும் உள்ள 15 மில்லியன் (சுமார் 1.5 கோடி) வங்க தேச மக்கள் மாணவர் போராட்டங்களை ஆதரித்து நின்றனர், ஹசீனாவின் அத்து மீறல்களை கண்டிக்கின்றனர். இன்று அவர்களுக்கு எந்த நாட்டில் இருந்தாலும் வங்கதேச தேர்தலில் பங்கு பெறும் வாக்குரிமையை முகமது யூனூஸ் தலைமையிலான அரசு வழங்கி உள்ளது.

இந்த நிலையில் இரு தரப்பையும் சமாளிக்கும் விதத்தில் வங்கதேச அரசு நடந்து கொள்ள வேண்டும். அதே நேரம் குற்றமிழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்கவேண்டும் என்ற நியதி நிலை நாட்டப்பட்டால் தான் எதிர்காலம் சிறக்கும். இடையில் எதிரும் புதிருமான சக்திகளின் மோதலுக்கு அஞ்சி நியாயங்களை கைவிட்டால், வங்கதேச சமூக இணக்கத்திற்கு அவை ஊறு விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.

ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time