தடை செய்யப்பட்ட சில ஆபத்தான வெளி நாட்டு நாய்களை பிட்புல் ஷெப்பர்ட் , ராட்வெய்லர் போன்றவற்றை இன்னும் பலர் இங்கு சர்வ சாதாரணமாக வளர்த்து வருகின்றனர். அவை அவ்வப்போது பார்ப்பவர்கள் மீதெல்லாம் ஆக்ரோஷமாக பாய்ந்து கடித்துக் குதறி மரணத்தை விளைவிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன;
‘இந்தியாவில் நாய்களால் கடிபட்டு ஆண்டு தோறும் இருபதாயிரம் நபர்கள் இறக்கிறார்கள்’ என்ற போதிலும், ‘இவை தொடர்பான உறிதியான,தெளிவான நடவடிக்கைகள் இல்லை’ என்பது தான் துயரமாகும்.
ஆகஸ்ட் 19, 2025 அன்று சென்னை ஜாபர்கான் பேட்டை குமரன் நகரின் கருணாகரன் என்பவரை அப்பகுதியில் பூங்கொடி என்பவர் வளர்க்கும் பிட் புல் நாயோடு வாக்கிங் போகும் போது தனது வீட்டின் வராந்தாவில் அமர்ந்திருந்த கருணாகரனை பிட் புல் நாய் கடித்து குதறியதில் அவரது அந்தரங்க உறுப்பு, தொடை, இடுப்பு என பல இடங்களில் படுகாயமுற்று இறந்துவிட்டார்.
அதே போல நேற்று ( நவம்பர் 22, 2025) சென்னை வேளச்சேரியில் வசிக்கும் பழனி என்ற நபர் வீட்டில் இரண்டு பிட்புல் மற்றும் ஒரு ராட்வில்லர் நாய்களை வளர்த்து வந்துள்ளார். அவர் வளர்க்கும் பிட்புல் நாய்களில் ஒன்று திடீரென வெளியில் வந்து அப்பகுதியில் இருந்த மற்றொரு நாயை கடுமையாக கடித்து குதறியதில் அந்த நாய் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர வைத்துள்ளது.
இவை ஒரு சில சாம்பிள்களே. இவை போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நடந்தவண்ணம் உள்ளன. சிறுவர்கள், குழந்தைகள், மூதாட்டிகள் உயிர் இழக்கும் சம்பவங்கள் மனதை பதற வைக்கின்றன.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு இந்திந்த இன நாய்கள் மிகவும் ஆபத்தானவை, ஆக்ரோஷமானவை, மனிதர்களுக்கும. மற்ற உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடியவை..என குறிப்பிட்டு 23 வகையான வெளி நாட்டு நாய்களை தடை செய்துள்ளது. இதற்கான காரணம், சமீபத்திய ஆண்டுகளில் இந்த வகை நாய்களின் தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றதைக் கருத்தில் கொண்டு, விலங்கு நலக் குழுக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.
அவற்றில் பிட்புல் டெரியர் (Pitbull Terrier), ஷெப்பர்ட் நாய், ராட்வெய்லர், டோசா இனு , அமெரிக்கன் ஸ்டாஃப்ஃபோர்ட்ஷயர் டெரியர் , ஃபிலா பிரசிலிரோ , டோகோ அர்ஜெண்டினோ, அமெரிக்கன் புல்டாக் , போயஸ்போல், காங்கல் ..போன்றவை அடங்கும்.
இந்த வகை நாய்களை விற்பனை செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் உரிமம் அல்லது அனுமதி வழங்க வேண்டாம் என்று உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அளவிலான கால்நடை பராமரிப்புத் துறைகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
ஆனால், துர் அதிர்ஷ்டவசமாக பில்புட் வகை நாய்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. அவை அவ்வப்போது அதிர்ச்சி சம்பவங்களை அரங்கேற்றுகின்றன. இவை பாய்ந்து கடித்துக் குதறும் போது ஆறேழு பேர் சேர்ந்து தடுத்தாலும், தடுக்க முடிவதில்லை. அந்த அளவுக்கு வலுவானவையாக இவை உள்ளன.

அதுவும், சங்கிலி மற்றும் முக கவசம் அணியாமல் வளர்ப்பு நாய்கள் உரிமையாளர் இன்றி பொதுவெளிக்கு அழைத்து வரக்கூடாது என்ற உத்தரவு இருக்கும் நிலையில் தடை செய்யப்பட்ட பிட்புல் ரக நாய் சாலையில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிவது பொது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
பில்புட் நாய்கள் வரலாற்றுப் பின்புலம்;
பிட்புல் வகை நாயின் வரலாறு 1800 களில் தொடங்குகிறது. இங்கிலாந்து தான் இதன் பிறப்பிடம். பிட்புல் நாய்கள் ஆங்கில புல்டாக்ஸ் மற்றும் டெரியர் நாய்களுக்கு இடையேயான கலப்பினமாக உருவாக்கப்பட்டது.
பிட்புல்ஸ் போர்களில் எதிரிகளை தாக்கி அழிப்பதற்காக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. பிட்புல்ஸ், சார்ஜென்ட் ஸ்டப்பி போன்ற நாய்கள் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க வெள்ளையினத்தவர்களின் கலாச்சாரத்தில் பிட்புல்ஸ் வளர்ப்பதை ஒரு கெளரவமாக கருதினர்.
நான்கு வகையான பிட்புல் நாய்கள் உள்ளன. ஒவ்வொன்றும் சில தனித்துவமான பண்புகள் கொண்டவை. இந்த வகைகளில் அமெரிக்க பிட்புல் டெரியர், அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷயர் டெரியர், அமெரிக்கன் புல்லி மற்றும் ஸ்டாஃபோர்ட்ஷயர் புல் டெரியர் ஆகியவை அடங்கும்.
பிட்புல் நாயைப் பராமரிப்பதும், வளர்ப்பதும் சவாலானது, அதை முறையாக பயிற்சி எடுத்து சரியான வழியில் செய்யாவிட்டால், இவை தன் எஜமானர்களையே எமலோகத்திற்கு அனுப்பக் கூடியவை. இந்த பிட்புல் நாய்கள் வரம்பற்ற ஆற்றலைக் கொண்டுள்ளதால், இவற்றுடன் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக விளையாட வேண்டும். அதை சமூகமயப்படுத்த ரொம்பவே மெனக்கிட வேண்டும், வளப்பவர் வீட்டில் பெரிய கொல்லைப்புறமோ, மிகப் பெரும் வராந்தாவோ இருக்க வேண்டும்.
Also read
இவை குரைத்தால் சத்தம் அதிகமாக இருக்கும். அந்த சத்தமே அச்சத்தை உருவாக்கும். அண்டை வீட்டார் நிம்மதி இழப்பர். மேலும், வீட்டிற்கு வரும் நண்பர்கள், உறவினர்களை நிச்சயம் அச்சுறுத்தும். மற்றவர்கள் அச்சப்படுவதை பார்த்து மனதிற்குள் சந்தோஷப்படுகின்ற சில பேர் இதை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
உள்ளாட்சி அமைப்புகள் தடை செய்யப்பட்ட நாய்களை வளர்ப்பவர்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும். தாங்கள் வளர்க்கும் ஆபத்தான நாய்கள் மற்றவர்களை கடிக்கும் என்று தெரிந்தே வளர்ப்பவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு போட்டு கைது செய்தால் தான் ஓரளவேனும் கட்டுப்படுத்தப்படும்.
அஜிதகேச கம்பளன்

















Leave a Reply