எப்படிச் செயல்பட்டார்?, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!

-ஹரி பரந்தாமன்

மிகக் குறுகிய காலம். அதே நேரத்தில் மிக முக்கியத்துவமான வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கினார், பி.ஆர்.கவாய். இதில் போற்றத்தக்கவை எவை? ஏற்க முடியாதவை எவை? அவர் சந்தித்த சவால்கள் என்னென்ன? அவற்றை அவர் எவ்விதம் எதிர் கொண்டார்..? என அலசுகிறார் நீதிபதி ஹரிபரந்தாமன்;

ஓய்வு பெற்றார், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய்! நவம்பர்- 23,.2025 அன்று பணியிலிருந்து விடுபட்ட கவாய் மே-14, 2025 -ல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு சுமார் ஆறு மாதங்கள்  மட்டுமே பணியாற்றினார். இந்த ஆறு மாதங்களில், சுமார் 2 மாதங்கள் கோடை விடுமுறை,  தசரா மற்றும் தீபாவளி விடுமுறைகள் எனக் கடந்தன. ஆக, அவர் மிகக் குறுகிய காலமே தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

ஜனவரி – 26, 1950 இல் அரசமைப்புச் சட்டத்தின்படி உச்ச நீதிமன்றம் செயல்பட தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை மொத்தமே ஏழு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களே உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரே நீதிபதி பி.ஆர். கவாய். இந்த பின்னணியில் தான் அவரது பணியை மதிப்பீடு செய்ய வேண்டும்.

பழங்குடியினரின் நிலைமை இதைவிட மோசம். பழங்குடியினரிலிருந்து இதுவரை ஒருவர் மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பின்தங்கிய வகுப்பில் இருந்து நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை ஒத்தே இருக்கும்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நீதிபதி கவாய் புத்த மதத்தை சேர்ந்த ஒரு தீவிர அம்பேத்கரியவாதியாவார். அவர் பதவி ஏற்றதும் அம்பேத்கருக்கு மரியாதை செய்யும் முறையில் “ஜெய் பீம்” என்று கூறியது கவனிக்கத்தக்கது.

தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றவுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கிய பி.ஆர்.கவாய்

இந்த பின்னணியில் அவருடைய தீர்ப்புகள் சிலவற்றை பரிசிலிப்பதற்கு முன்னர், அவர் மேல் 6 10 2025 அன்று காலனி வீசப்பட்டதை சற்று ஆராய வேண்டும். எந்த தலைமை நீதிபதியின் பேரிலும் காலனி இதற்கு முன் வீசப்பட்டது இல்லை. காலனி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் குமார் வீசியதற்கான காரணத்தை உரக்க கோஷமிட்டே வீசினார். சனாதானத்தை அவமானப்படுத்திய தலைமை நீதிபதியின் செயலை பொறுத்துக் கொள்ள முடியாது என்பதே அவர் போட்ட கோஷம்.

செப்டம்பர்- 16 , 2025 அன்று ஒரு பொதுநல வழக்கை கவாய் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. இதுதான் காலனி வீசப்பட்டதற்கு காரணம்.

16-9- 2025 இல் அவர் வாய்மொழியாக கூறியதை ஒட்டி இந்தியா முழுவதும் உள்ள சங்கிகள் மிகப்பெரிய அளவில் இணைய வழி தாக்குதலை தொடுத்தனர். இதனால் 18/9/2025 அன்று நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் அவர்கள் விளக்கம் அளித்தார். தான் எந்த மதத்தையும் புண்படுத்தப்படவில்லை என்பதை அவர் தெளிவு படுத்தினார். இருப்பினும், சனாதானிகளுக்கு அது போதவில்லை போலும்.

காலனி வீசப்பட்டவுடன் சற்றும் கலங்காமல் நீதிமன்ற நடவடிக்கைகளை தொடரும்படி கேட்டுக் கொண்டார்,கவாய்.

இந்தப் பகுதி தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள சுற்றுலாதளமாகும். தொல்லியல் துறையானது சிற்பங்களை அப்படியே பொக்கிஷமாக பாதுகாக்குமே அல்லாது, அதில் கைவைக்காது. இந்த இடத்தில் வழிபாட்டுக்கோ, பூஜை, புணஸ்காரங்களுக்கோ இடமில்லை. இதுவே இந்தியா சுதந்திரம் பெற்றது தொடங்கி நமது அரசின் நிலைபாடு.

இந்தச் சூழலில் இந்து மதத்தில் பற்றுள்ள அந்த நபர் “கஜுராஹோவின் ஜவாரி கோயிலில் 7 அடி உயர விஷ்ணு சிலை உடைந்த நிலையில் இருக்கிறது.  விஷ்ணு சிலையை சீரமைத்து, பிரதிஷ்டை செய்து வழிபாட்டுக்குரியதாக்க ஏஎஸ்ஐ-க்கு உத்தரவிட வேண்டும்” என்கிறார்.

இந்த மனுவே விஷமத்தனமானது. அந்த ஒரு சுற்றுலா தளம். அது சைவம்,வைணவம், சமணம், பெளத்தம் ஆகியவற்றுக்கு பொதுவானது. அந்த இடத்தை ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கான வழிபாட்டுத்தளமாக்க மாற்ற முடியுமென்றால், அதை மத்திய பிரதேசத்தை ஆளும் பாஜக அரசோ மத்திய பாஜக அரசோ எப்போதோ செய்திருப்பார்கள்.

அதனால் தான் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “சுய விளம்பர நோக்கத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீங்கள் (மனுதாரர்) விஷ்ணுவின் தீவிர பக்தர் என்கிறீர்கள். ஆக, விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த இடம் ஏஎஸ்ஐ கட்டுப்பாட்டில் உள்ளது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்” எனச் சொன்னார்.

தலைமை நீதிபதி கவாய்க்கு எதிராக சங்கிகள் அமெரிக்காவின் நியூயார்க்கில் வைத்த பேனர்!

இந்த இயல்பான பேச்சிற்கு உள் நோக்கம் கற்பித்து இந்துத்துவர்கள் தலைமை நீதிபதி கவாய் மீது சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் கடும் விமர்சனங்கள் வைத்தனர். இதைத் தொடர்ந்தே வழக்குரைஞர் ராகேஷ் குமார்  நீதிபதி மீது செருப்பை வீசியதோடு தனது செயலுக்காக வருந்தவில்லை எனவும் கூறி, காலணி வீசிய செயலை நியாயப்படுத்தி ஊடகங்களில் நேர்காணல் கொடுத்தார். இறைவன் கனவில் தோன்றி இந்த காரியத்தை செய்யச் சொன்னதாகவும் கூறினார்!.

எனவே, என்னை பொருத்தவரை ராகேஷ் குமாரும் ஒரு கோட்சே தான். மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சேவும் தனது செயலுக்காக வருந்தவில்லை. அதற்கு மாறாக அந்தப் படுகொலையை நியாயப்படுத்தினான்.

காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பின் சிறிது நேரத்தில் விசாரணை முடிந்ததாக கூறி ராகேஷ் குமார் விடுவிக்கப்பட்டார்.

தலைமை நீதிபதியின் மீது நீதிமன்றத்தில் காலனி வீசிய குற்ற செயல் கடுமையானது. சம்பந்தப்பட்டவர் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறினாலுமே கூட காவல்துறை குற்றவழக்கை பதிவு செய்திருக்க வேண்டும். காலனியை எறிந்தவர் குற்ற வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். விசாரணைக்குப்பின் தண்டனையோ, மன்னிப்போ முடிவெடுத்திருக்கலாம்.

இந்த நிகழ்ச்சி சம்பந்தமாக ஒயர் ஆங்கில இணைய இதழ் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் சிறிய காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில். ”பாபர் மசூதி தீர்ப்பிற்காக முந்தைய தலைமை நீதிபதி சந்திர சூட்டின் மீது ஒரு முஸ்லிம் இளைஞன் செருப்பை வீசி இருந்தால், இந்தியாவே பற்றி எரிந்து இருக்காதா?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

இது சம்பந்தமாக குறிப்பிட்டுச் சொல்லும்படி வழக்கறிஞர் சங்கங்கள் கூட போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. இது சாதிய சமூகத்தின் விளைவோ!.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களின் சங்கம் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் , ‘காலணி வீசியவரின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான’ அனுமதி கேட்டு அந்த சட்டத்தின் கீழ் மனு அளித்தனர். அவரும் அனுமதி அளித்தார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், இந்த வழக்கை விசாரிக்குமாறு இப்போது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி சூரியகாந்த் அவர்களை  கோரியது. அந்த வேண்டுகோளுக்கு நீதிபதி சூரியகாந்த் கூறிய பதில் ஆச்சரியம் அளிக்கக் கூடியது. ”இந்த வழக்கை விசாரித்தால், சமூக ஊடகங்கள் இது பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கும் எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட்டு விடலாம்’ என்று கூறினார்.

நாம் கேட்கும் கேள்வி இதுதான். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டு உட்பட பல குற்றச்சாட்டுகளை கூறிய பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு தண்டனையும் அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதியின் மீது காலணி வீசினால் விசாரிக்க மறுப்பவர்கள் இதற்கான விடையை சொல்ல வேண்டும்.

தலைமை நீதிபதி கவாயின் மீது காலனி வீசியதற்கு,  அவர் பட்டியல் இனத்தவர் மட்டுமின்றி, புத்த மதத்தை பின்பற்றுபவராகவும் அம்பேத்கரை பின்பற்றுபவராகவும் இருந்ததே காரணம்.


அது மட்டுமன்றி, கவாய் தலைமை நீதிபதியான உடன் அவரது சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்தின் மும்பைக்கு வந்தார். அரசு வழக்கப்படி மும்பை நகர காவல் ஆணையர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் காவல்துறை இயக்குனர் அவரை வரவேற்க மும்பை விமான நிலையம் சென்றிருக்க வேண்டும். ஆனால், எவரும் செல்லவில்லை. இதைப் பற்றி நிருபர்கள் கேட்ட போதும், இதை கடந்து செல்லலாம் என்று கூறி கடந்து சென்றார், கவாய்.

மேலும், கவாய் தலைமை நீதிபதியான உடன், உச்ச நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவை நிர்வாக ரீதியில் பிறப்பித்தார். அதாவது சுதந்திரம் அடைந்து சுமார் 80 ஆண்டுகள் ஆன பின்பும் உச்ச நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்தில் கூட இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை. ஊழியர்களுக்கே இட ஒதுக்கீடு அளிக்காதவர்கள் நீதிபதி நியமனத்தில் எப்படி இட ஒதுக்கீடு அளிக்கப் போகிறார்கள்? இட ஒதுக்கீடுஅளிக்க மாட்டார்கள். காரணம், பல தீர்ப்புகளில் உயர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளில் மிகப் பெரும்பாலானோர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கவாய் வழங்கிய தீர்ப்புகளில் குறிப்பாக இரண்டு தீர்ப்புகள் மிக முக்கியமானதும் பாராட்டுக்குரியது ஆகும். ஒன்று, பட்டியல் இனத்தவரில் உள் ஒதுக்கீடு சட்டப்படி சரியானதே என்று ஏழு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் அவரும் ஒருவர். அதனால் தான் அருந்ததியருக்கு அளிக்கப்பட்ட உள் ஒதுக்கீடு காப்பாற்றப்பட்டது. அடுத்து , “புல்டோசர்” நீதி என்பது அநீதியானது என்று தீர்ப்பளித்தார் தலைமை நீதிபதி கவாய். குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் எந்த இஸ்லாமியர் பேரில் ஒரு குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் அவருடைய வீட்டையே புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளுவது மிகப்பெரிய அளவில் பேசுபொருள் ஆனது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்களை கண்டித்து வழங்கிய அவரது தீர்ப்பு வரவேற்புக்கு உரியது.


அதே நேரத்தில் மிகச் சமீபத்தில் வழங்கிய இரு தீர்ப்புகள் அவர் மீது விமர்சனக் கணைகளை தொடுப்பதற்கு வழிவகுத்தது. ஒன்று சுற்றுச்சூழல் சம்பந்தமான தீர்ப்பு. சுற்றுச்சூழல் சட்டங்களை மீறி ஏற்கனவே செய்யப்பட்ட செயல்களுக்கு பின் தேதியிட்டு அந்த செயல்களை நியாயப்படுத்த முடியாது என்பதே முந்தைய தீர்ப்பு. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மனுவை போட்டிருந்தது ஒன்றிய ‌அரசு. சம்பந்தப்பட்ட நீதிபதி ஓய்வு பெற்ற பின் இந்த மறுபரிசீலனை மனு போடப்பட்டது. இதில், இந்தியாவில் பல்வேறு இடங்களில் கட்டமைக்கப்பட்டுள்ள  பலவும் மேற்சொன்ன தீர்ப்பால் பாதிப்புக்கு உள்ளாகும் என்று காரணம் கூறி, மறுபரிசீலனை மனுவை ஏற்றுக் கொண்ட கவாயின் உத்தரவு நமக்கு உடன்பாடாக இல்லை. காரணம், இது சுற்றுச் சூழல்களுக்கு கடுமையான பாதிப்புகளை உருவாக்குவோரை ஊக்கப்படுத்துவதாகிவிடும்.


அவரின் மற்றொரு தீர்ப்பு அவர் ஓய்வு பெறுவதற்கு சற்று முன் அளித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பு. தமிழ்நாட்டில் சட்டசபை நிறைவேற்றிய பல சட்டங்களுக்கு  பல ஆண்டுகள் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தொங்கலில் விட்டபோது, உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் மாநில சட்டசபையின் சட்டங்களுக்கு ஒப்புதல் தருவதற்கான கால வரையறையை நிர்ணயித்திருந்தது. அது மட்டுமன்றி, அதீத காலதாமதமான நிலையில், மீண்டும் அந்த கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பி அவர் முடிவெடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக உச்சநீதிமன்றமே ஆளுநருக்கான ஒப்புதலை அளித்ததாக கருத வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறியது.

இந்தத் தீர்ப்பை  நீர்த்துப் போகச் செய்ய ஒன்றிய அரசு குடியரசு தலைவரே 14 ஐயங்களை தெளிவுபடுத்த உச்ச நீதிமன்றத்தை கேட்பதாக ஒரு வழக்கு. அந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அமர்வில் தலைமை நீதிபதி கவாயை உள்ளட்டக்கிய அந்த அமர்வு, உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கோ காலவரையறையை நிர்ணயிக்க முடியாது என ஒரு மோசமான கருத்தை தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பினால் ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு சார்பாக வழங்கப்பட்ட அந்த குறிப்பிட்ட தீர்ப்பிற்கு பாதகம் இல்லை என்றாலும், எதிர்காலங்களில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் வேண்டுமென்றே மாதக்கணக்கில் வருடக் கணக்கில் சட்டசபைகள் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் நியாயமற்ற செயலை செய்வர். எனவே இந்த தீர்ப்பு மிக மோசமான தீர்ப்பு என்று குறிப்பிட வேண்டும்.

மேலும், இப்போது உச்ச நீதிமன்றம் ஒரு புதிய நடைமுறையை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் எந்த நீதிபதி தீர்ப்பு வழங்கினார் என்பதை தெரிவிக்காமலே தீர்ப்பு வழங்குவதே அந்த நடைமுறை. அப்படி ஒரு நடைமுறையைத் தான் பாபர் மசூதி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கடைப்பிடித்தது. அதே நடைமுறையை , குடியரசுத் தலைவர் கேட்ட கேள்விகளுக்கு தங்கள் கருத்தை கூறும் தீர்ப்பிலும் கடைப்பிடித்து உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த நடைமுறை ஏற்புடையது அல்ல. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஏதோ ஒரு நீதிபதி தான் தீர்ப்பை எழுத முடியும். அதை மற்றவர்கள் ஒப்புக் கொள்வது வேறு விஷயம். ஆனால், எந்த நீதிபதி தீர்ப்பு எழுதினார்? என்பதையே சொல்லாமல் விடுவது சரியான செயலாகாது.

எனவே, இறுதியில் அவர் ஓய்வு பெற்றுச் செல்லும் போது வழங்கிய தீர்ப்பு அவருக்கு அவப்பெயரையே பெற்றுத் தரும்.

இருப்பினும், இந்த கட்டுரையின் வாயிலாக, உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் பட்டியல் இனத்தவரையும் பழங்குடியினரையும் பின்தங்கிய வகுப்பினரையும் மதச் சிறுபான்மையினரையும் பெண்களையும் உரிய எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும் என்பதை பதிவு செய்து கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன்

 

மேனாள் நீதிபதி,

சென்னை உயர் நீதிமன்றம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time