மூன்றாண்டுகளாக நடைபெறும் ருஷ்ய-உக்ரைன் போர் ஐரோப்பாவை மட்டுமன்றி, உலகப் பொருளாதாரத்தையே உலுக்கி வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சிக்கு கடும் நிர்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளார். ஜெலன்ஸ்கி வழிக்கு வருவாரா? ஜெலன்ஸ்கியை பின்னணியில் இருந்து இயக்குவது யார்?
டிரம்ப் அமெரிக்க அதிபரானவுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து போர் நிறுத்தம் குறித்து பேசுகிறேன் என்று கூறி ஜெலன்ஸ்கியை சிறுமைபடுத்தியதை உலகம் மறக்கவில்லை.
அதையடுத்து ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களிடம்மும்- பிரிட்டனின் கீத் ஸ்டார்மர, பிரான்சின் மக்ரோன், ஜெர்மனியின் மெர்ஸ், ஐரோப்பிய யூனியன் தலவர் வான்டர் லியென், நேட்டோ செயலாளர் மார்க் ருட் ஆகியோரிடம்- பேச்சுவார்த்தைகள் நடத்தினார் டிரம்ப்.
ஆனால், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவை பணிய வைப்பதில் காட்டிய மும்முரத்தை ஐரோப்பாவில் அமைதியை நிலை நாட்டுவதில் காட்டவில்லை என்பதை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஐ நா சபையில் உக்ரைன் போரை நிறுத்த இரண்டு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டதன் மூலம் அறிய முடிகிறது.
உலகில் நடக்கும் போர்களை முடிவுக்கு கொண்டு வருவது, அமெரிக்காவை மீண்டும் உலகப் பொருளுற்பத்தி மையமாக மாற்றி அதன் மூலம் அமெரிக்காவை மகோன்னத நிலைக்கு எடுத்து செல்வதில் தீவிரமாக உள்ளார் டிரம்ப். இதற்காக ரஷ்யாவுடனும், சீனாவுடனும் சமரசம் கொள்ளவும் அவர் தயங்க மாட்டார்.
அதன் முதல்படியாக உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவின் நிபந்தனைகள் என்ன என்பது பற்றி டிரம்ப ஒரு முடிவுக்கு வந்துள்ளதையே இப்போதைய டிரம்ப் திட்டம் நமக்கு காட்டுகிறது.
ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்த கவலைகளை களைவதன் மூலமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்த டிரம்ப் ரஷ்யா மற்றும் உக்ரைனின் பாதுகாப்பு குறித்தும் இத் திட்டங்களில் விளக்கியுள்ளார். அதே சமயம் இன்றைய சூழலில் உக்ரைனின் 20% நிலப்பகுதி ரஷ்ய வசம் இருப்பதையும் , இத்தனை உதவிகளுக்கு- அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பண மற்றும் படை உதவிக்கு – பிறகும் களத்தில் பலவீனமான நிலையில் உள்ள உக்ரைனின் நிலைமை பற்றியும் அறிந்துள்ளார்.

போரை தொடர்ந்து நடத்துவதிலோ, ரஷ்யாவை எதிர்ப்பதிலோ ஆர்வமில்லாத உக்ரைன் மக்கள் பிற நாடுகளுக்கு தப்பியோடி தஞ்சம் புகுந்து வருகின்றனர். உக்ரைன் இளைஞர்களும், நடுத்தர வயதினரும் பலவந்தமாக சண்டையிட ஆள் பிடிக்கும் உக்ரைன் அரசின் கொடுஞ்செயலை எதிர்த்து சிதறி ஓடுகின்றனர். போரில் ஈடுபட்ட உக்ரைன் ராணுவத்தினர், தினசரி தங்கள் படை சந்திக்கும் உயிரிழப்புகளையும், சேதங்களையும் கருத்தில் கொண்டு நிலை குலைந்துள்ளனர்.
ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியோ தனது குணநலனுக்கேற்ப வீர வசனம் பேசுவதிலும், ரஷ்யாவுடன் போரை தொடருவதிலும் குறியாக உள்ளார். மக்கள் செல்வாக்கை முற்றிலும் இழந்து , ஊழல் மலிந்த அரசின் அதிபராக இவர் இன்றும் வலம் வருவதற்கான மூல காரணம் ஐரோப்பிய நாட்டு – நேட்டோ நாடுகளின்- தலைவர்களே என்றால், மிகையில்லை.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் தனிநாடாக உருவெடுத்த உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் 30 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளனர் . ஏனைய உக்ரைன் மொழி பேசும் மக்களிடையே பெரும்பாலோர் சுதந்திரத்தை மதித்தாலும், ரஷ்யர்களை வெறுக்கவில்லை. ஆனால், ஒரு சிறு கும்பல் மட்டும் சுத்த ரத்தம் , ஆண்ட பரம்பரை என வெள்ளை இன மேலாதிக்கத்தை முன்னிறுத்துகின்றனர். இதற்காக ஆட்களை சேர்த்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் கொடுக்கின்றனர். இத்தகைய மேலாதிக்க பார்வை கொண்ட இக் கும்பல் இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் எழுச்சியால் மேலும் தெம்படைந்து யூதர்களையும் மற்ற சிறுபான்மையினரையும் கொன்றொழிப்பதில் நாஜி படைகளுக்கு துணை நின்றனர்.

ஸ்வஸ்திக் சின்னங்களை தங்களது அடையாளமாக வரித்து கொண்ட இக் கும்பல் தன்னை அசோவ் படை (Azov Battalion) என அறிவித்து கொண்டது. சோவியத் ஆட்சி நீடிக்கும் வரை
அடங்கி ஒடுங்கி இருந்தாலும், ரகசியமாக ஆள் சேர்த்து வந்தனர் . உக்ரைன் தனி நாடான பிறகு நேட்டோ நாடுகளும், அமெரிக்காவும் ரஷ்யாவை சுற்றி வளைத்து வீழ்த்த முனைந்தனர்.
போலந்து, செக்கஸ்லோவாக்கியா, ருமேனியா, ஜியார்ஜியா , யுகோஸ்லாவியா என சி ஐ ஏ அமைப்பின் தலையீட்டால் நடந்த ஆட்சி மாற்றங்கள், நேட்டோ இணைப்புகள் வண்ணப் புரட்சிகளால் அரங்கேற்ற பட்டன. இந்த நாடகம் உக்ரைனிலும் 2014-ல் அரங்கேறியது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் யானுகோவிச்சை சி ஐ ஏ தூக்கியெறிந்தது. ஈரோமை தான் கிளர்ச்சிகளை தூண்டிவிட்டு இந் நாடகத்தை நடத்திய சி ஐ ஏ அவரிடத்தில் பெட்ரோ பொரோஷங்கோவை அமர்த்தியது. அமெரிக்க கைப் பாவையான அவரின் ஊழலாட்சியை எதிர்த்து காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி, பிரபலமடைந்த நடிகர் விக்டர் ஜெலன்ஸ்கி களத்தில் குதித்தார்.
மாற்றம் என்ற மந்திரச் சொல் ஜெலன்ஸ்கியை அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற வைத்தது எனலாம்.
ஊழலற்ற ஆட்சி, தன்மானம் என முழங்கிய ஜெலன்ஸ்கி , ரஷ்ய மக்கள் அதிகம் வாழுமிடங்களான டொனெட்ஸ்க் , லுகான்ஸ்க் போன்ற பகுதிகளின் சுயாட்சியை, மொழி உரிமைகளை பாதுகாக்க தவறினார். ஏற்கனவே 2014-2015 காலங்களில் எட்டப்பட்ட மின்ஸ்க் ஒப்பந்தங்களை – ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் உத்தரவாதமளித்த உடன்படிக்கைகளை- நிறைவேற்ற மறுத்தார், உத்தரவாதமளித்த ஐரோப்பிய நாடுகளும் அம் மக்களுக்கு துரோகமிழைத்தன. சுயாட்சி கேட்ட மக்கள் இப்பொழுது பிரிவினை நோக்கி நகரத் தொடங்கினர்.
உக்ரைன் படைகள் டான்பாஸ் பகுதியில் அடக்குமுறைகளை கட்டு அவிழ்த்துவிட்டனர். பிரச்சினைகள் கைமீறி போகவே ரஷ்யாவானது, ருஷ்ய மொழி பேசும் மக்களை காப்பாற்ற களமிறங்கியது.

ஜெலன்ஸ்கி , ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது, ரஷ்ய வர்த்தக உறவுகளை துண்டிப்பது என்ற முனைப்பில் தீவிரமாக இருந்தார் . இதற்காக அவருக்கு ஆதரவளித்தது அசோவ் படை. நேட்டோவில் உக்ரைனை இணைப்பது, நேட்டோ படைத்ளங்களை உக்ரைனில் நிறுவுவது என்ற ஜெலன்ஸ்கியின் திட்டங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தூபம் போட்டன.
ரஷ்யாவின் “அச்சுறுத்தலை” காரணங்காட்டி நேட்டோ ஒப்பந்தத்தில் இணைவது சிறந்தது என ஜெலன்ஸ்கி முழங்கினார், ரஷ்யாவை எதிர்ப்பதும், ரஷய மொழி பேசும் உக்ரைன் நாட்டு மக்களை அடக்கி ஒடுக்குவதும் தேசீய கடமை என வருணித்தார்.
யூத மதத்தை சேர்ந்தவராக ஜெலன்ஸ்கி இருந்தாலும் , அந்த அடையாளம் அவருக்கு வெற்றியை வழங்காவிட்டாலும், யூதர்களுக்கு பரம வைரியான அசோவ் படையினர் ஜெலன்ஸ்கிக்கு ஆதரவளிக்க தயங்கவில்லை. காரணம், ஜெலன்ஸ்கியின் ரஷ்ய வெறுப்பும், ஐரோப்பிய மோகமும் தான். வெள்ளையின மேலாதிக்கம் பேசும் அசோவ் அமைப்பினரை அமெரிக்க அரசும் பிற ஐரோப்பிய நாட்டு அரசுகளும் பயங்கரவாத அமைப்புகள் என்று 2014-2015 வாக்கில் தடைவிதித்து இருந்தனர்..
ஆனால் இவர்கள் – அமெரிக்கா, ஐரோப்பா, அசோவ் அமைப்பு, ஜெலன்ஸ்கி– அனைவரும் ரஷ்யாவை அழித்தொழிப்பதில் ஒரே அணியாக செயல்பட்டனர் என்பது காலத்தின் கோலம் தான்.
இவ்வாறு தொடங்கிய யுத்தம் இன்று ரஷ்யாவிற்கு சாதகமான சூழலில் உள்ளதால் அமைதியை டிரம்ப் விரும்பினாலும், ஜெலன்ஸ்கியோ, ஐரோப்பிய நாடுகளோ குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற நிலையில் உள்ளனர். ”அமைதி வேண்டும் ஆனால் இப்போது வேண்டாம்” எனக் கூறுகின்றனர்.

உக்ரைனின் எதிர்காலம், உக்ரைனின் பாதுகாப்பு என பலவாறாக முழக்கமிடும் இவர்கள் களத்தில் ரஷ்யாவை முறியடிக்க உக்ரைனால் முடியாது, உக்ரைனின் 20 விழுக்காடு பகுதியான டொனெட்ஸ்க், லுகான்ஸ்க், ஜாப்போரிஷியா, கெர்சன் போன்ற பகுதிகளை ரஷ்யா வசம் இன்று உள்ளன என்பதை மறந்து பேசுகின்றனர். உக்ரைன் மக்களும் போரை தொடர்வதில் ஆர்வமற்று விளங்குகையில், அமெரிக்கா இதுவரை நடத்திய மறைமுக யுத்தத்தில் (proxy war) இருந்து பின் வாங்குவது பலருக்கு வியப்பை அளிக்கிறது.
மாறியுள்ள உலகச் சூழலில், பொருளாதார தடைகளால் நொறுக்க முடியாத ரஷ்யாவின் வலிமையை – அமெரிக்கா உணரத் தொடங்கி உள்ளதையே இம்முயற்சி காட்டுகிறது. அதனால் அமைதியை நிலை நாட்டுவதே புத்திசாலித்தனம் என்ற முடிவுக்கு வந்தார் டிரம்ப்.

# இந்த திட்டம் போரை முடிவுக்கு கொண்டு வந்து ரஷ்யாவை உலகப் பொருளாதாரத்துடன் இணைப்பதை உறுதி செய்கிறது.
# ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை நீக்கி, ஜி8 கூட்டமைப்பில் ரஷ்யாவை அனுமதிக்க வழி செய்கிறது.
# ரஷ்யா, ஐரோப்பா மீதோ, உக்ரைன் மீதோ ஆக்கிரமிப்புகளை தொடுக்காது என தனது சட்டங்களில் மாற்றங்களை (விதிகளை) ஏற்படுத்தி உறுதி செய்ய வேண்டுகிறது,
# உக்ரைனுக்கு நம்பத் தகுந்த பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்படுவதாக இத் திட்டம் கூறுகிறது. ஆனால், அதில் தெளிவில்லை.
# வெளி வந்துள்ள மற்றோரு வரைவு ஒப்பந்த அறிக்கையில் ,
ரஷ்யா, அமெரிக்கா, உக்ரைன், ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ அமைப்பு ஆகியவை ஒத்துக் கொள்ளும் பட்சத்தில், உக்ரைனுக்கு நேட்டோ பாணியில் பாதுகாப்பு உத்தரவாதம் பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும் தேவைபட்டால் இதை மீண்டும் புதுப்பித்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் இத்திட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் என்றும் அதற்கான பதிலை நவம்பர் 26க்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் டிரம்ப் கெடு விதித்துள்ளார் .
ரஷ்யா ஏற்கனவே இத் திட்டத்தை வரவேற்றுள்ளது.

ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த நாடுகளோ இன்னும் தங்களது நிலையை இறுதி செய்யவில்லை. யதார்த்த சூழல்கள் அவர்கள் கண்முன் விரிந்தாலும் ரஷ்யாவை வீழ்த்துவது என்ற பகற் கனவை அவர்கள் இன்னும் கலைத்த பாடில்லை!
உக்ரைன் நாட்டு மக்கள் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பினாலும், ஆளும் கும்பலான
ஜெலன்ஸ்கி கும்பல் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறது. ஒன்று தன்மானத்தை இழப்பது அல்லது வலிமை மிகுந்த உற்ற நண்பனை இழப்பது என்ற கடினமான தேர்வே எங்கள் முன் உள்ளது என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். சமயோசிதத்தை இழந்த ஜெலன்ஸ்கி இன்று உக்ரைன் பகுதிகளை மட்டுமின்றி, உக்ரைன் மக்களின் நம்பிக்கையையும் தொலைத்தவராக இருக்கிறார்.
ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதன் மூலம் சமாதான நாயகன் என்ற இமேஜ் மூலம் அமெரிக்காவில் சரிந்து வரும் தன் செல்வாக்கை தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார், டிரம்ப்.
ஆனால், அவரது விருப்பத்திற்கு குறுக்கே தடைகளாக தெரிவது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஐரோப்பிய தலைவர்களுமே!
அவர்களை சமாளித்து தனது செல்வாக்கை உயர்த்த டிரம்ப் தயங்க மாட்டார்.
ச.அருணாசலம்





















அமெரிக்க குடியரசுத் தலைவர் டிரம்ப் உருசிய புடினால் அந்த பதவிக்கு அமர்த்தப்பட்டவர்… எனவே புடினுக்கு என்ன புடிக்குமோ அதைச் செய்வார்… புடினின் விளையாட்டை சரியாக அறிந்து உணர்ந்தாலும் பொது வெளியில் இப்படித்தான் எழுத வேண்டிய நிலை….
ஏனெனில் செலென்சுகி மிகுந்த தன்னலம் கொண்ட கயவன்.