செங்கோட்டையனின் அதிர வைக்கும் மற்றொரு முகம்!

-சாவித்திரி கண்ணன்

செங்கோட்டையனின் அகராதியில் ‘புனிதம்’ என்பதற்கான பொருளே வேற தான்!  நீண்ட நெடிய அரசியல் அனுபவஸ்தர், சாதுவானவர் என தோற்றம் காட்டும் செங்கோட்டையனின் இன்னொரு முகம்… ”அம்மாடியோவ்! இவ்வளவு மோசமான தீய சக்தியா இவர்..?” என மிரளக் கூடியதாகும்; அதிர்ச்சி தரும் உண்மைகள் சிலவற்றை பார்ப்போம்;

1991 -96 ல் செங்கோட்டையன் முதன் முதலாக போக்குவரத்துதுறைக்கும், வனத்துறைக்கும் அமைச்சரானார்; ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவை பதவி ஏற்பில் யாரும் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா காலில் தடாரென விழுந்து, காலில் விழும் கலாச்சாரத்தை அதிமுகவில் ஆரம்பித்து வைத்தவரே செங்கோட்டையன் தான்.

அந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் . போக்குவரத்துக் கழகத்துக்கு உதிரிப் பாகங்கள் வாங்கியது, சொகுசுபஸ் வாங்கியது, போலி பஸ் டிக்கட் அச்சடித்து விநியோகித்து மோசடி செய்தது ஆகியவற்றில் 1 கோடியே 57 லட்சத்து 93 ஆயிரத்து 527 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி தனிநீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இதுமட்டுமின்றி, இந்த ஐந்தாண்டு காலத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர்  மற்றும் நடத்துனர் பணிகளுக்கு விண்ணப்பித்த சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லஞ்சம் வாங்கி பணி நியமனம் செய்த வகையில் இவர் செந்தில் பாலாஜியின் வழிகாட்டி எனலாம்.

அதிலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு போக்குவரத்து கழகங்களில் தினக்கூலிகளாக வேலை தொழிலாளர்களான  நடத்துனர்கள், ஓட்டுநர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலையை மடைமாற்றி, அந்தப் பணியை விற்பனை பொருளாக்கி, வசூல் வேட்டை நடத்தினார்.  இந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு முன்பே அரசு போக்குவரத்து கழக பணிகளுக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை அபகரித்து கல்லா கட்டினார்.  5 ஆண்டுகளில் இவ்வாறு செய்த முறைகேடுகளால் பல வழக்குகளை எதிர்கொண்டார்.

இதே போல வனத்துறைக்கும் செங்கோட்டையன் தான் அமைச்சர். அந்த காலகட்டத்தில் வனத்துறையில் சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கூட்டத்திற்கு உறுதுணையாக இருந்த செங்கோட்டையன் கடத்தப்பட்ட சந்தன மரங்களுக்கான பழியை அன்றைக்கு பிரபலமாக இருந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் மீது போட்டுவிட்டார்.

இது தொடர்பாக அப்போது பேட்டி அளித்த வீரப்பன் தான் சந்தன மரங்களை கடத்தியது உண்மை தான் என்றும், ஆனால், அதை ஒரே ஒரு முறை மட்டுமே தான் செய்ததாகவும், மற்ற நேரங்களில் கடத்தப்பட்ட சந்தன மரக் கடத்தலை என் மீது சுமத்தி அதிகாரத்தில் இருப்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் என்றார்.

91-96 கால கட்டங்களில் தான் செய்த ஊழல் முறைகேடுகளுக்காக  வழக்குகளை எதிர் கொண்டார், செங்கோட்டையன். இவர் மீது 1996- 97 காலகட்டத்தில் ஏழு வழக்குகள்போடப்பட்டது. இவற்றில் ஒரு வழக்கில் நான்கு வருடங்கள். அடுத்ததில் மூன்று வருடங்கள். இன்னொன்றில் இரண்டு வருடங்கள் என மொத்தம் 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பு 1999 இல் வந்தது. இந்த ஏழு வழக்குகளையும் ஒருங்கிணைத்து சிறப்பு தனி நீதிமன்றம் விசாரித்த வகையில் செங்கோட்டையனுக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

2000 இல் சிறை சென்றவர் தான் செங்கோட்டையன். அதனால் அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. இப்படி ஊழலில் வரலாறு படைத்தவர் தான் செங்கோட்டையன்.

பொதுப் பணத்தை சூறையாடியவர் என்று மட்டும் கடந்து போக முடியாதவர் செங்கோட்டையன். தனிமனித ஒழுக்கம் சிறிதும் இல்லாதவர்.

செங்கோட்டையன் வனத்துறை அமைச்சராக இருந்த போது அதிகாரிகளே சந்தனக்கட்டைகள் கடத்தி விட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழைகளான கிராம மக்கள் மீது பழியைப் போட்டனர். அத்துடன் 18 பெண்களை பொதுவெளியில் நிர்வாணப்படுத்தி  மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரமும் செய்தனர். இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியதன் விளைவாக சிபிஐ விசாரணைக்குப் பின் குற்றம் உறுதி செய்யப்பட்டு குற்றவாளிகள்  வனத்துறையினர் , காவலர்கள் உள்ளிட்ட 215 பேருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.

ஆனால், அப்போது வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் குற்றம் இழைத்த அதிகாரிகளுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவும் பேசியது சட்ட சபை குறிப்புகளில் பதிவாகி உள்ளதை இன்றும் பார்க்க முடியும்.

1990களில் தமிழ்திரையுலகில் பிரபலமாயிருந்த இரண்டு நடிகைகளோடு மிக நெருக்கமான உறவு கொண்டு அவர்களுக்கு அவர் நகை, பணம், சொத்துக்களை வாங்கி கொடுத்து வாழ்ந்த செய்திகள் அன்றைய புலனாய்வுப் பத்திரிகைகளில் பெரும் பரபரப்பாக எழுதப்பட்டன.

இந்தக் காரணங்களால் தன் சொந்த ஊரான கோபி செட்டி பாளையத்தில் 1996 தேர்தலில் செங்கோட்டையன் தோல்வி அடைந்தார். இத்தனைக்கும் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சாதாரண பெட்டிக் கடை நடத்தி வந்த வெங்கிடு என்ற ஏழை மனிதர். இந்த தேர்தலில் செங்கோட்டையன் பணத்தை வாரி இறைத்தும் வெற்றி பெற முடியவில்லை.

ஜெயலலிதா மீண்டும் 2001- 2006 காலகட்டத்தில் பதவிக்கு வந்த போது கடைசி வரை தன் அமைச்சரவையில்  செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி தரவில்லை.

இதன் பிறகு 2011-ல் மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா செங்கோட்டையனை ஓராண்டுகள் மட்டுமே அமைச்சராக செயல்பட அனுமதித்தார். இந்த ஓராண்டு காலத்தில் விவசாயத் துறை, தகவல் தொழில் நுட்பத் துறை, வருவாய்த் துறை என அடுத்தடுத்து பொறுப்புகளை கொடுத்தும் பிறகு திருப்தியின்றி பறித்தும் மாற்றினார்.

மீண்டும் அமைச்சரான நிலையில் பழையபடி பொம்பளை ஷோக்கில் தன் உதவியாளர் குடும்பத்தை ஆட்டிப் படைத்தார் செங்கோட்டையன். இவரது காம திருவிளையாடல்களால் அதிர்ந்து போன செங்கோட்டையன் மனைவி ஈஸ்வரி அமையாரும், அவரது மகன் கதிஸ்வரனும் ஜெயலலிதாவையே நேரடியாக சந்தித்து உதவியாளர் வீடே கதியாய் கிடக்கும் செங்கோட்டையனை பற்றி சொல்லியதும் செங்கோட்டையனை அழைத்து கடுமையான எச்சரிக்கை தந்து அமைச்சர் பதவியை பறித்ததோடு, கட்சி பொறுப்புகளையும் பறித்து தனிமைப்படுத்தினார். அத்துடன் செங்கோட்டையனின் உதவியாளரான ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தார். இத்துடன் ஜெயலலிதா மறையும் வரை செங்கோட்டையனால் அதிமுகவில் தலை எடுக்கவே முடியவில்லை.

கொங்கு மண்ணில் சாதி அரசியலுக்கும், ரவுடியிச அரசியலுக்கும் பிள்ளையார் சுழி போட்டத்தில் பிரதானமானவர் செங்கோட்டையன். இவர் தன்னுடைய சீனியர்களான ராமசாமி, முத்துசாமி,  செல்வ கணபதி போன்றோர் அதிமுகவில் இருந்து வெளியேறக் காரணமானவர். தனக்கு போட்டியாளராக கருதுபவர்களை பற்றி தலைமைக்கு தவறான தகவல்கள் தந்து கோள்மூட்டி அரசியல் செய்வதில் கைதேர்ந்தவர் செங்கோட்டையன்.

இதுமட்டுமின்றி, தன்னையே நம்பி வந்த அதிமுக தொண்டர்களான தமிழ்மணி ராமசாமி, வி.எம்.பழனிசாமி, தவுசியப்பன், பூக்கடை ஜான், திருநாவுக்கரசு..போன்ற எண்ணற்றோரை கருவேப்பிலை போல பயன்படுத்திக் கொண்டு, பிறகு தூக்கி எறிந்தவர் தான் செங்கோட்டையன். அவ்வளவு ஏன்? அரசியலில் தொடக்க காலத்திலேயே குள்ளம்பாளையத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குடன் விளங்கிய சொந்த சித்தப்பா கே.எம்.சுப்பிரமணியத்தை வீழ்த்தி, பதவியை பிடித்தவர் தான் செங்கோட்டையன். அன்று செங்கோட்டையன் திமுகவில் இருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சீனியர் என்றாலும் செங்கோட்டையன் நம்பகத்தன்மை அற்றவர் என்பதை நன்கு உணர்ந்தே சசிகலாவும் அவரை முதல்வராக்க முயற்சிக்கவில்லை.

மிகச் சமீபத்தில் தன்னை உருவாக்கிய கட்சியை அழிப்பதற்காக டெல்லி சென்று அதிமுகவை சிறுகச் சிறுக சிறை பிடித்துக் கொண்டிருக்கும் பாஜக தலைவர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து துரோக அரசியலை கையில் எடுத்து தோற்றுப் போனார்.

ஆக, இத்தகைய படுமோசமான கிரிமினல் பின்னணியைக் கொண்ட செங்கோட்டையனின் அகராதியில் புனிதம் என்பதன் அர்த்தமே வேறு. இவரை பக்கபலமாக வைத்துக் கொண்டு த.வெ.க தலைவர் விஜய் எப்படி புனித ஆட்சியை தரமுடியும்? புதிதாக அரசியலுக்கு வந்துள்ள விஜய் மீதான கிளின் இமேஜை தகர்த்து, தரைமட்டமாக்க செங்கோட்டையன் போதாதா?

சாவித்திரி கண்ணன்

ஆசிரியர்; அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time