உட்கட்சி மோதல்களால் கர்நாடகத்தில் கலகலக்கும் காங்கிரஸ் ஆட்சி!

-சாவித்திரி கண்ணன்

என்ன தான் நடக்கின்றது, கர்நாடகத்தில்? 2023-ல் காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து கர்நாடகத்தில் சித்தராமையாவா? டி.கே.சிவகுமாரா? என்ற ஓயாத அதிகார யுத்தம் நடந்து கொண்டே உள்ளது. யார் முதல்வர் பொறுப்புக்கு உண்மையான தகுதியானவர்? இருதரப்பின் இடையறாத மோதலுக்கு காரணம் என்ன?

ஒருவழியாக டி.கே.சிவகுமாரை சரிகட்டி, சித்தராமையாவை முதலமைச்சர் ஆக்கியது, காங்கிரஸ் மேலிடம்.

இதில் தலா இரண்டரை வருஷத்திற்கு இருவரும் பதவியை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் சித்தராமையா முதலில் முதல்வராகும் முடிவு எட்டப்பட்டது என்ற பேச்சு பொதுவெளியில் சொல்லப்படுகிறது.

இதை காங்கிரஸ் மேலிடம் மறுக்கவும் இல்லை. ஆம், என ஒத்துக் கொள்ளவும் இல்லை. இருதலைக் கொள்ளியாய் இருப்பதே அதன் இயல்பாக உள்ளது.

இதனால், கர்நாடக காங்கிரசே இரு கூறுகளாய் பிளந்தும், மோதல் போக்குகளோடும் இயங்கிக் கொண்டுள்ளது! காங்கிரசின் அகில இந்தியத் தலைவராக அந்த மா நிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே இருந்தும், இந்த விவகாரத்தில் அவரும் திணறி தடுமாறுகிறார்.

அதிகார யுத்தத்தில் முடிவெடுக்கத் திணறும் மல்லிகார்ஜுன கார்கே!

அவரவர் அதரவு அமைச்சர்களோடும், எம்.எல்.ஏக்களோடு அவரவர் விருந்து உபசாரக் கூட்டங்கள் நடத்தி பேசி தங்கள் அணியை வலுப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள், சித்தராமையா எப்போது சீட்டை காலி செய்து கொடுக்கப் போகிறார்? என சாடை, மாடையாக பேசி வருகிறார்கள்.

சித்தராமையா ஆட்களோ, சீட்டை தந்து உட்கார வைத்தால், நாட்டையே சீரழித்துவிடுவார் சிவகுமார் என எதிர்பாட்டு பாடி வருகின்றனர்.

இந்தச் சூழல் காங்கிரஸ் கட்சியையும் ஆட்சியையும் ஒரு காமெடி பீசாக மக்கள் பார்க்கும் நிலைக்கு கொண்டு போய்க் கொண்டிருப்பதை காங்கிரசின் அகில இந்தியத் தலைமை உணர்ந்ததா? எனத் தெரியவில்லை.

இந்தச் சூழலில் பரமேஸ்வரன் என்ற தலித் அமைச்சர் தன் சாதி எம்.எல்.ஏக்களை அணி திரட்டி இப்படி பேசியுள்ளார்;

“கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் வர வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள், சித்தராமையா தொடர வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். சிலர் நான் முதல்வராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இன்னும் சில பேர் வேறு சிலர் முதல்வராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்களின் விருப்பத்தை நீங்கள் தடுக்க முடியாது!”

ஆக, முதல்வர் போட்டியில் எக்கச்சக்கமானாவ்ர்கள் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிகாரமிக்க அந்தப் பதவியின் மீது அரசியல்வாதிகளுக்கு தான் எத்தனை மோகம்?

இரு தலைவர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளைக் களையும் பொருட்டு, காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, இருவரும் சந்தித்துப் பேச வேண்டும் என அறிவுறுத்தியதன் பின்னர், இன்றைய தினம் காலை சிற்றூண்டியை உண்டபடி இருவரும்  சம்பிரதாய சந்திப்பை நிகழ்த்தி உள்ளனர்.

ஆனால், பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. சிவகுமார் தாம் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்ந்து விசுவாசமாக இருப்பதாக உறுதிப்படுத்தியதுடன், வாக்கு தவறக் கூடாது என்பதை கட்சியின் தலைமை மறுக்காது. முதல்வர் பதவி குறித்த இறுதி முடிவை மேலிடமே எடுக்கும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறார் என்றால், சித்தராமையாவோ,  முழு ஆட்சிக் காலத்திற்கும் முதல்வராகப் பதவி வகிப்பேன் என்ற தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தி வருகிறார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தினால் நிச்சயம் சிவகுமார் தான் சித்தராமையாவை விட சற்று கூடுதலாக ஓட்டுகள் பெறுவார். பல எம்.எல்.ஏக்கள் அவரது பணபலத்திலும், ஆதரவிலும் பதவிக்கு வந்தவர்கள். சிவகுமார் சாதியை பொறுத்த அளவில் செல்வாக்கான ‘ஒக்கலிகா’ சமூகத்தை பிரதிபலிப்பவர் என்பதால், அந்த சமூகத்து முக்கியஸ்தர்கள் தொடங்கி மடாதிபதிகள் எனப் பலரும் அவரை தீவிரமாக ஆதரிக்கின்றனர். இத்துடன் இவர் சோனியாவின் குபுக்கில் இடம்பெற்றவர் எனச் சொல்லப்படுகிறது.

அதே சமயம் சாதி பலம், பண பலத்தைக் கடந்து, சித்தாந்த ரீதியில் தெளிவான பார்வை கொண்டவர் சித்தராமையா. அதே சமயம் ஒ.பிசி, எஸ்.சி பிரிவினரில் கணிசமானோர் ஆதரவு சித்தராமையாவிற்கு உள்ளது.  சித்தராமையா அவர்கள் காந்தியவாதியான சோசலிஸ்ட் தலைவர் ராம் மனோகர் லோகியாவின் சீடர். மூவாயிரம் மத ரீதியான மடங்கள் நிரம்பி வழியும் மூட நம்பிக்கை கோலோச்சும் கர்நாடக மண்ணில் கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதி என்றாலும், நிர்வாக ஆற்றலாலும், நேர்மையாலும் சகல தரப்பிலும் நன்மதிப்பு பெற்றவர்! 13 முறை எம்.எல்.ஏவாகவும், ஒருமுறை முதல்வாராகவும் இருந்துள்ள பழுத்த அரசியல்வாதி.

டி.கே.சிவகுமாரின் செயல் திறனும், ஆற்றலும், காங்கிரஸ் வெற்றியில் அவரது பங்களிப்பும்  புறக்கணிக்க முடியாதவை என்றாலும். குவாரி பிசினஸில் சட்டத்தை மீறி செயல்பட்டு கைது செய்யப்பட்டவர் என்பதும், ஊழல் கறைபடிந்தவர் என்பதும், தனிமனித ஒழுக்கமில்லாதவர் என்பதும், மத ரீதியிலான பிற்போக்கு சிந்தனையுள்ளவர் என்பதும், நிதானமற்ற  அவரை முதல்வராக்கினால் ஆட்சிக்கு அளவற்ற கெட்ட பெயர் விரைவில் உருவாகிவிடும் என்பதும் பொதுத் தளத்தில் காங்கிரஸ் மீது அக்கறையுள்ளவர்கள் கூறும் கருத்தாக உள்ளது. இதை ராகுல்காந்தியும் உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது.

அதே சமயம் இதில் டி.கே.சிவகுமாருக்கு ஏற்கனவே தவறான நம்பிக்கையை காங்கிரஸ் தலைமை தந்துள்ளதால் சித்தராமையா பதவி இழப்பதை சற்று தள்ளிப் போடலாமே ஒழிய, தவிர்க்க முடியாது என்பதே இன்றைய யதார்த்தமாக உள்ளது.

கர்நாடகாவில் ஆட்சித் தலைமை விவகாரத்தில்,  காங்கிரஸ் டெல்லித் தலைமை திட்டவட்டமான முடிவுக்கு வராமல் தடுமாறுகிறது. இது போன்ற உட்கட்சி உரசல்களில் தகுதி, தராதரம் ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்த்து, தெளிவாக முடிவு எடுக்கும் ஆளுமைத் திறன் காங்கிரஸ் தலைமைக்கு இல்லாமல் போனதால் தான் பல மாநிலங்களில் இடையறாது உட்கட்சி பூசல் நடந்து காங்கிரஸ் ஆட்சிகள் கைவிட்டு போய்க் கொண்டுள்ளன.

காங்கிரஸ் கோட்டையாகத் திகழ்ந்த புதுச்சேரியில்  டெல்லி தலைமையின்  தீவிர விசுவாசி என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் முதல்வராக திணிக்கப்பட்டார் நாராயணசாமி. இதனால் கட்சி சிதறுண்டது. சிறுமைப்பட்டது. இன்று பாஜக கூட்டணி ஆட்சி நடக்க அதுவே வலிகோலியது.

பஞ்சாப்பில் கண்ணியமான காங்கிரஸ் முதல்வர் அமிந்தர் சிங்கை அவமதித்த காங்கிரஸ் மேலிட விசுவாசி சித்துவை ஆதரித்த காரணத்தால், அங்கும் காங்கிரஸ் தன் தளத்தை இழந்து ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்தது.

இதே போல ராஜஸ்தானில்  மக்கள் நன் மதிப்பை பெற்ற முதல்வர் அசோக்கெலாட்டை காலி செய்து முதல்வராகத் துடிக்கும் காங்கிரஸ் மேலிட விசுவாசி சச்சின் பைலட்டை  ஊக்குவித்ததன் மூலம் ராஜஸ்தானிலும் ஆட்சியை பறி கொடுத்தது காங்கிரஸ்.

இழப்புகளில் இருந்து பாடம் கற்காமல் – யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது தெரியாத – தெளிவற்ற பாதையில் தொடர்ந்து பயணிப்பதை காங்கிரஸ் தலைமை தவிர்த்தால் மட்டுமே காங்கிரஸ் வலுப்பெறும்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time