மிகப் பெரிய கொண்டாட்டமாக தமிழகம் தழுவிய அளவில் உதயநிதியின் பிறந்த நாள் விழாக்கள் பல்வேறு தளங்களில் பரவலாக நடந்தேறி உள்ளன. இந்தப் பிறந்த நாள் விழாக்கள் கேள்விக்கு அப்பாற்பட்டு உதயநிதி தான் கட்சிலும், ஆட்சியிலும் இனி, ‘பவர் சென்டர்’ என்பதை உறுதிபடுத்தின. இதன் விளைவு என்னவாகும்? ஒரு அலசல்;
வெளிநாடுகளிலும் கூட அங்குள்ள தமிழர்கள் மத்தியில் விழா நடத்தப்பட்டுள்ளன. இது வரை நடந்துள்ள கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிறந்த நாள் விழாவைக் காட்டிலும் ஒருபடி அதிகமாகவே உதய நிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் நடந்துள்ளன..என அறிவாலய வட்டாரங்களிலேயே பேசப்படுகிறது.
காணொளியுடன் கூடிய அசத்தல் பாடல்கள், அதில் இடம் பெற்ற டிஜிட்டல் பிரம்மாண்டங்களோடு கூடிய காட்சிப்படுத்தல்கள் ஆகியவை அவரே திமுகவின் இன்றைய ‘முடிசூடா இளவரசர்’ என்பதை தெளிவாக உணர்த்தின. அத்துடன் முரசொலி நாளேடு வரலாறு காணாத வகையில் உதயநிதியின் பிறந்த நாள் சிறப்பிதழாக 150 பக்கங்களுக்கு உதயநிதி பிறந்தநாள் வாழ்த்து விளம்பரங்கள் மற்றும் கட்டுரைகளை தாங்கி வந்தது.
அத்துடன் ஏராளமான தினசரிகளிலும், டிஜிட்டல் மீடியாக்களிலும், காட்சி ஊடகங்களிலும் வெவ்வேறு கணக்கற்ற விளம்பரங்கள் பல கோடிகளுக்கு அள்ளி இறைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இடம் பெற்ற வாசகங்களில் ”தமிழர்களின் இதயத் துடிப்பு”, “திமுகவின் எதிர்காலம்”, “அடுத்த தலைமுறை தலைவர்”, “முதல்வர் வேட்பாளர் உதயநிதி” ‘’இது இளைஞர்களின் எழுச்சி நாள்’’, போன்ற தலைப்புகள் உதயநிதியின் வசம் கட்சியும், ஆட்சியும் ஏறத்தாழ சென்றுவிட்டன என்பதையே உணர்த்தின.

அன்றைய தினம் நடந்த பிறந்த நாள் விழாக்களை சீரும்,சிறப்புமாக நடத்துவதிலேயே மாநில அமைச்சர்கள், டெல்லி எம்.பிக்கள் அனைவரும் கண்ணும், கருத்துமாக செயல்பட்டனர். தமிழக அரசே உதய நிதி விழாவை கொண்டாடுவது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது. இதில் மாநில அரசு நிதி சிலவும், பல்கலைக் கழக நிதியும் பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மாலை சைதாப்பஏட்டையில் நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில் தமிழகத்தின் அத்தனை மூத்த அமைச்சர்களும், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் உதயநிதியை அடுத்த தலைவர் இவரே என்பதை பல்வேறு விதங்களில் வாழ்த்தி பேசினர். துரைமுருகன் பேசும் போது இத்தனை அமைச்சர்களும் ஒருசேர மேடையில் இங்கு சேர்ந்திருப்பது கேபினெட் கூட்டமே இங்கு நடப்பது போல உணர வைக்கிறது என்றார்.

இப்படியாக நம்மை வழி நடத்தவுள்ள கழகத்தின் அடுத்த தலைவர், வருங்கால முதல்வர், தன்னிகரற்ற திறமைசாலி..என தற்போது அடையாளம் காட்டப்பட்டுள்ள 49 வது பிறந்த நாள் கொண்டாடிய உதயநிதி அவர்கள் கருணாநிதியின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற வாய்ப்பிருந்தும் 40 வயது வரைக்கும் அரசியல் பக்கமே தலைகாட்டாமல் சினிமா நடிப்பு, படத் தயாரிப்பு, இன்னும் சில வியாபாரங்கள்..என்றே வாழ்ந்தவர்…என்பது கவனத்திற்குரியது.
ஒரு புகழ்மிக்க அரசியல் குடும்பத்தில் இருந்தும் தமிழக மக்களை பாதிக்கும் எந்த பிரச்சினை பற்றியும் 40 ஆண்டுகள் சிறிதளவேனும் அக்கறையோ, ஆர்வமோ காட்டியதில்லை, உதயநிதி. தாத்தா கருணாநிதியின் மரணத்தின் போது கூட, அவர் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறி இல்லை.
கருணாநிதியின் மரணத்திற்கு பிறகு கட்சியை தன் கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டு வந்த பிறகு, தன்னுடைய 65 ஆம் வயதில் – முதுமை காலத்தில் – தன் மகன் உதயநிதியை – மனைவி துர்காவின் நிர்பந்தமும் சேர – அவசர, அவசரமாக களம் இறக்குகிறார் ஸ்டாலின்.

அவர் அரசியலுக்கு வந்தவுடனேயே இளைஞரணித் தலைவர், முதன்முதலாக எதிர்கொள்ளும் சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏவாக போட்டியிடும் வாய்ப்பு, ஒரே ஆண்டில் அமைச்சர், அடுத்த ஒன்றரை ஆண்டில் துணை முதல்வர் மற்றும் அனைத்து துறைகளையும் மேற்பார்வையிடும் அதிகாரம் ஆகியவை உதயநிதிக்கு தரப்பட்டன.
உதயநிதியைச் சுற்றியே தி.மு.கழகத்தின் இயங்கு தளமும், தமிழக அரசின் செயல்பாடுகளும் நடந்தேறி வருகின்றன. எந்தக் கூச்ச நாச்சமும் இல்லாமல் போதிய அறிவும் பயிற்சியும், புரிதலுமற்ற ஒரு நபர், அரச குடும்பத்தின் வாரிசு என்பதாலேயே கட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டதன் வாயிலாக அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் ஏற்று செயல்படும் நிலையை உருவாக்கி விட்டனர். இதை தமிழக பிழைப்புவாத கூட்டணிக் கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும், எழுத்தாளர் கூட்டமும் தங்களுக்கான வாய்ப்புகள் கிடைப்பதால் ஏற்றுக் கொண்டு, விதந்தோதும் போக்கையும் பார்க்க முடிகிறது. இந்த கூட்டணி கட்சிகளில் கமலஹாசன் தான் உதயநிதியை அடுத்த முதல்வர் என வெளிப்படையாக அறிவிப்பதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார்.
எவ்வளவு பரிதாபகரமான நிலையில் அல்லது எவ்வளவு ஆரோக்கியமற்ற ஆபத்தான சூழலில் தமிழக அரசியல் களம் தலைமைத்துவ ஆளுமையின் பற்றாக்குறையில் உள்ளது என்பதை நினைக்கும் போது எதிர்காலம் குறித்த கலக்கம் ஏற்படுகின்றது.
Also read
மத்திய பாஜக அரசோடு மிக இணக்கமாக இருந்து கொண்டு, ஒரு பாசாங்குத்தனமான எதிர்ப்பு அரசியலை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு அடுத்த தேர்தலுக்கு பிறகு தன் மகனை முதலமைச்சராக்கும் ஒரே குறிக்கோளோடு இயங்கும் ஸ்டாலின் இந்த ஏற்பாட்டிற்கு முதன் முதலாக மோடியிடம் தான் உதய நிதியை அனுப்பி அங்கீகார ஏற்பை உருவாக்கினார்…என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அடுத்தடுத்து உதய நிதியின் அழைப்பில் பிரதமர் மோடி இரண்டு விழாக்களில் கலந்து கொண்டதையும் நாம் கவனத்தில் கொண்டே இந்த இளவரசருக்கான முடிசூட்டலை பார்க்க வேண்டும்.
ஆக, 2026 சட்டமன்றத் தேர்தலில் இத்தனை பின்புலங்களோடும், வலுவான கட்டமைப்போடும் விஜய்க்கு எதிரான அரசியலில் உதயநிதியை பிரதானப்படுத்துகிறது, திமுக.
இன்னும் ஒரு ஐந்தாண்டு காலத்திற்கு திமுகவையே இங்கு ஆட்சியைத் தொடரவிட்டால், மத்திய பாஜக ஆட்சியின் அனைத்து மக்கள் விரோத சட்ட, திட்டங்களையும் திராவிடமாடல் முத்திரையிட்டு ஸ்டாலின் செய்ததைவிட ஒருபடி அதிகமாகவே உதயநிதியை செய்ய வைத்திடுவர் பாஜகவினர்.
சாவித்திரி கண்ணன்

















1971 லிருந்து 1976 ஜனவரியில் ஆட்சி டிஸ்மிஸ் ஆவது வரை திரு மு.கருணாநிதி அவர்களின் ஒப்புதலை பெற்றும் பெறாமலும் நடைபெற்ற அரசியல் அவலங்கள் திரு உதயநிதி அவர்களின் பிறந்த நாளிலிருந்து மீட்டுருவாக்கம் செய்யப்படுவதைக் காண்கிறோம்.
1991 96 கால கட்டத்தில் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சியை நடத்திய விதத்தில் மக்கள் எவ்வாறு படு தோல்வியை தந்தார்கள் என்பதை தி.மு.க நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். செல்வி ஜெ. அவர்களின் ஸ்டார் வேல்யூ இவர்கள் யாருக்கும் கிடையாது என்பதையும் உணர்ந்து அதற்கேற்ப அடக்கி வாசிக்க வேண்டாமா? இந்த உணர்வுகளோடு தான் அவர்களுக்கு ஓட்டும் போடப் போகிறேன்.Who else is?