புதிய பாராளுமன்ற கட்டுமானமும், புதைகுழிக்குள் தள்ளப்படும் மரபுகளும்!

சாவித்திரி கண்ணன்

உலகமே பழித்தாலும், நீதிமன்றமே தடை ஏற்படுத்தினாலும், செய்வதெல்லாம் அக்கிரமம் என்று தெரிந்தே செய்வதில் பாஜக அரசுக்கு ஈடு இணை இல்லை என்பதற்கான சிறந்த அத்தாட்சி தான் புதிய பாராளுமன்ற கட்டிட பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா!

உலகின் மிக அழகிய பாராளுமன்ற கட்டிடங்களில் நமது டெல்லி பாராளுமன்ற கட்டிடம் முதன்மையானது! இதன் கம்பீரமும்,எழிலும்,அழகியலும் பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும்! இது லார்டு பிரவீன் காலத்தில் ஆறாண்டு கட்டிடப் பணிகளையடுத்து 1927 ல் உருவானது! இன்னும் இரு நூற்றாண்டுகளுக்கும் மேல் தாக்குபிடிக்கும் வண்ணம் உறுதியான பிரிட்டிஷ் காலத்து கட்டுமானம் இது! மேலும் 1956 ல் இதில் இன்னும் இரண்டடுக்கு கட்டுமானங்கள் சேர்க்கப்பட்டது.

இதை உதாசீனப்படுத்தி தான் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது! இதற்கு நாட்டின் முன்னணி வரலாற்று ஆய்வாளர்கள், கட்டுமான,சிற்ப கலைஞர்கள், சமூக அர்வலர்கள் ஆகியோர் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதன் பின்னணி என்ன..?

”971 கோடியிலான கட்டுமானப் பணியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் எழுப்பபடுவதாக கூறப்பட்டாலும், உண்மையான மதிப்பீடு அது மட்டுமல்ல! ஏனெனில், இதற்காக 80 ஏக்கர் நிலம் மக்கள் உபயோகத்தில் இருந்து கையகப்படுத்தப்படுகிறது. நூற்றுக்கணக்கான மரங்கள் மற்றும் இயற்கை அழிக்கப்படுகிறது. மூன்று கோடி சதுர மீட்டருக்கான கட்டுமான பணி திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய அருங்காட்சியகமும், இந்திராகாந்தி தேசிய மையமும் அப்புறப்படுத்தப்படுகிறது. மேலும் ஐந்து புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு பார்த்தால் சுமார் 20,000 கோடி இதில் கொட்டப்படுகிறது’’ என்கிறார் பிரபல ஆர்கிடெக்ட் நாராயணமூர்த்தி!

 

சுற்றுச் சூழல் மதிப்பீடு செய்யவில்லை. செய்தால் இந்த கட்டுமானத்தை அங்கீகரித்திருக்கவே முடியாது! பல சட்டங்கள் நடைமுறைகள் மீறப்பட்டுள்ளது! குறிப்பாக,

# United Buildings Byelaws 2016

#  The Ancient Monuments and Archaeological Sites and Remains Act

#  General Finance Rules 2017 for procurement of consultancy services.

இவை அனைத்தும் அரசாலேயே மீறப்படுமானால், அது டெல்லிவாசிகளுக்கு தவறான முன்னுதாரணமாகிவிடாதா? என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்!

Artist Anish Kapoor 

பிரிட்டிஷ் இந்திய கலையில் புகழ்பெற்றவரான அனிஸ்கபூர் கொந்தளிக்கிறார் ”உலகத்திலேயே அதிக ஆடம்பரமான ஒரு அரசு கட்டுமானத்தை இந்திய அரசு செய்கிறது. இதன் நோக்கம் வேறு ஒன்றுமல்ல, ஒரு ஹிந்து அரசாங்கத்தின் வரலாற்று நினைவாக இந்த பிரமாண்டத்தை கட்டி எழுப்பும் நோக்கம் தான் இந்த கட்டுமானக்கள். ஏதோ திரைமறை வான ரகசியங்களை பாதுகாக்க, மர்ம அறைகளைக் கூட அதற்குள் கட்டுவார்களோ.. என்னவோ.. ஒரு அரசுக்கு மதவெறி பித்து தலைக்கேறினால் என்னவெல்லாம் நடக்குமோ அது தான் தற்போது நடந்து கொண்டுள்ளது…’’ என்கிறார்.

தற்போதுள்ள பாராளுமன்ற அவையில் இன்னும் சுமார் 150 இருக்கைகளை அதிகப்படுத்தவும் வழியுமுள்ளது,இடவசதியுமுள்ளது. முறையான திட்டமிடல் போதுமானது. ஆக, எந்த வகையில் பார்த்தாலும் புதிய கட்டிடம் அவசியமற்றது.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் புகார் மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதையடுத்து கொரானா காலகட்டத்தை பயன்படுத்தி, கட்டுமானங்களை விரைந்து முடிக்கும் தந்திரமான அணுகுமுறைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டியதாகிவிட்டது.

”சரி, தடை விதித்தீர்கள் நிறுத்திவிட்டோம்! பூமி பூஜை போட்டுக் கொள்கிறோம்.’’ என மீண்டும் கோர்ட்டை அணுகி, கர்நாடகாவின் சாரதா பீட சனாதன அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓத…,

குருபூஜை, புண்ணியவசனா பூஜை, ஆதிகேசவா பூஜை,ஆனந்த பூஜை, வாஸ்த்து பூஜை, ஷேத்திரபாலா பூஜை, புவனேஷ்வரி பூஜை ஆகியவை நடத்தப்பட்டு மிக முக்கிய மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் 200 பேர் முன்னிலையில் தடபுடலாக பூமி பூஜை போடப்பட்டுவிட்டது! டாடா புராஜெக்ட் நிறுவனம் கட்டடிட பொறுப்பை ஏற்றுள்ளது!

 

புதிய பார்லிமெண்ட் கட்டிடத்தை மக்கள் கட்டி எழுப்புவார்கள்! மக்களின் நோக்கம் நிறைவேறும் என்றெல்லாம் பிரதமர் வசனம் பேசியுள்ளார்!

# கொரானாவில் கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர்! வாழ்வாதாரங்களை பறி கொடுத்துள்ளனர்!

# நாடு முன்னெப்போதும் சந்தித்திராத பொருளாதார சரிவை கண்டு வருகிறது!

# விவசாயிகள் சரித்திரம் காணாத ஒற்றுமை மிக்க வீரம் செறிந்த போராட்டத்தை தலை நகரில் வெட்ட வெளியில் கடும் குளிரில் நடத்தி வருகின்றனர்!

இத்தனைக்கு இடையிலும், ’நாடு எக்கேடு கெட்டால் என்னா? மக்கள் என்னவானால் தான் என்ன…? வாராது வந்த மாமணி போல வந்து வாய்த்த இந்த ஆட்சியில் எங்கள் நோக்கங்கள் அனைத்தையும் ஒன்றையடுத்து ஒன்றாக நிறைவேற்றிவிட்டுத் தான் ஓய்வோம்…’ என்பது தான் பாஜக அரசின் பகிரங்க அணுகுமுறையாக உள்ளது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time