ஓலா, ஊபர் போன்றவை சொந்தமாக வாகனம் வாங்கி, டீசல் போட்டு ஓட்டும் வாகன ஓட்டிகளிடம் அதிக கமிஷன் எடுக்கின்றன. ஸ்விகி, சுமோட்டா போன்றவையும் ஓட்டல் முதலாளிகளிடம் நல்ல கமிஷன் பெற்று, டெலிவரிக்கு உழைப்பவர்களை சுரண்டுகின்றன. சட்டப் பாதுகாப்பற்ற நிலையில் இது போன்ற தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்கள்;
ஸ்விகி, சுமோட்டா, ஓலா, ஊபர், ராபிடோ – போன்றவை இன்றைக்கு தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. இவற்றில் பணிபுரிபவர்கள், எதிர் கொள்ளும் சிக்கல்கள் வித்தியாசமானவை. இவர்களைப் பற்றி, உலகத் தொழிலாளர் அமைப்பு (ILO) நடத்திய ஆய்வு நுட்பமானது. அந்த ஆய்வை நடத்திய சங்கம் திரிபாதியுடன் ஒரு சுவாரஷ்யமான உரையாடல்;
கர்நாடகம், தெலுங்கானா போன்ற மாநில அரசுகள், சுயாதீனத் தொழிலாளர்களுக்கானச் சட்டத்தை உருவாக்கியுள்ளன. அந்த ஆய்வை முன்னின்று நடத்தியவர் சங்கம் திரிபாதி. ஹைதராபாத்தில் நடந்த ஒரு பயிலரங்கில் பங்கேற்க, தில்லியில் இருந்து வந்திருந்த அவரிடம் நடைபெற்ற நேர்காணல் இது.
ஓலா, ஊபர் போன்றவற்றில் வாகனம் ஓட்டுபவர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள் என்ன?
இந்தியாவில் 2012 -ல், முதலில் தில்லி போன்ற நகரங்களில் இந்த ஓலா, ஊபர் போன்றவை வரத் தொடங்கின. வாகனத்தின் உரிமையாளர்களான இந்த சுயாதீனத் தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்திடம் தங்களை பதிவு செய்து கொண்டு, கைபேசி வழியாக செயல்படத் தொடங்கினார்கள். அப்போது அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 80,000 முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைத்தது…! ஓரிரு வருடங்களுக்குப் பிறகு, அவர்களுடைய அன்றாட வருமானம், ஊக்கத் தொகை குறையத் தொடங்கியது. ஒருங்கிணைக்கும் தளங்கள் தங்கள் கமிஷனாக பெரும் தொகையை எடுத்துக் கொள்வதால் தற்போது சொற்ப பணமே இவர்களுக்கு கிடைக்கிறது. அதை ஈடுகட்ட அதிக நேரம் வேலை பார்த்து உடம்பை கெடுத்துக் கொள்கிறார்கள். கிடைக்கும் பணத்தில் வாகனத்திற்கு மாதாந்திர தவணைத் தொகை கூட இன்றைக்கு கட்டமுடியவில்லை…என்பது சோகத்திலும் சோகம்! பணியில் அமர்த்திய நிறுவனங்கள் (agrregators), இவர்களின் பிரச்சினைகளுக்கு செவிமடுக்கத் தயாராக இல்லை. அரசாங்கமும் பொறுப்பேற்கவில்லை.

இந்த நிலையில் தான் தில்லியில், 2016 ஆகஸ்டு மாதம் அவர்களுக்காக சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2019 ம் ஆண்டு பத்து நகரங்களில் சிறிய அளவில் ஓலா, ஊபர் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கான சங்கங்கள் உருவாயின. 2019 வருட இறுதியில் டிசம்பரில், Indian Federation of App based Transport Workers (IFAT) – செயலிகள் சார்ந்த போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பு உருவானது. இதில் தற்போது 30,000 உறுப்பினர்கள், 13 நகரங்களில் உள்ளனர்.
இது மட்டுமின்றி, ஸ்விகி, சுமேட்டோ போன்ற செயலிகள் மூலம் உணவு விநியோகம் செய்வோர், ராபிடோ, நம் யாத்திரி, போர்டர் போன்ற செயலிகள் மூலம் பணியாற்றுபவர்களுக்காகவும், பணியாற்றி வருகிறோம்.
இந்த சுயாதீன தொழிலாளர்கள் பற்றி உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது ?

நான் 40 ஆண்டுகளாக செயல்பாட்டாளராக இருக்கிறேன். கட்டுமான தொழிலாளர்களுக்கு பணியாற்றி இருக்கிறேன்.எச்.எம்.எஸ். சங்கத்தில் இருந்திருக்கிறேன். தொழிற்சங்க கல்வியில் ஈடுபட்டிருக்கிறேன். 1997 முதல் நான் சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தில் செயல்பட்டு வந்தேன். 2005 ம் ஆண்டில் வட அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் சுயாதீன ஓட்டுநர்கள் உருவானார்கள். எனவே, இந்தப் பிரச்சினைகள் பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும்.
சுயாதீன தொழிலாளர்களின் இப்போதைய நிலமை என்ன ?
சுயாதீன தொழிலாளர்களுக்காக ராஜஸ்தான், கர்நாடகம், ஜார்கண்ட், தெலுங்கானா, பீகார் என ஐந்து மாநிலங்களில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இதற்கான விதிகள் வந்தவுடன், இந்த சட்டம் அமலாகும். 2021 ஆம் ஆண்டில், சுயாதீனத் தொழிலாளர்களை, நிறுவனங்களின் தொழிலாளர்களாக அங்கீகரிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் வலிமை, அரசாங்கத்தின் பாராமுகம் போன்றவைகளால் வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.
சொந்த வாகனம் ஓட்டுபவர்களை எப்படி தொழிலாளர்களாக கொள்ள முடியும்?
ஒரு ஓட்டுநரை இந்திதந்த இடங்களுக்கு போ என அறிவுறுத்தி வேலை வாங்குவது யார் ? அதற்கு கூலி இத்தனை ரூபாய் என நிர்ணயிப்பது யார் ? ஸ்விகி, சொமேட்டோ போன்றவைகளில் பணிபுரிபவர்களுக்கு சீருடை தருவது யார் ? அவர்களுக்கான அடையாள அட்டை தருவது யார் ? ‘என்ன வேலை செய்ய வேண்டும் யார் சொல்லுகிறார்களோ அவர்கள் தான் வேலையளிப்பவர் (employer) என்பது, பன்னெடுங்காலத்திற்கு முன்பே உருவான தொழிலாளர் சட்டமாகும் (Labour Jurisprudence). எனவே, இவர்கள் தொழிலாளர்கள் ஆவார்கள். கைபேசியில், ஆங்கில சொற்களில் இருக்கும், நெடிய ஒப்பந்தத்தை, ‘ஏற்றுக் கொள்கிறேன்’ என்ற பொத்தானை தொழிலாளர்கள் அழுத்தினால் தான் பணிபுரியமுடியும். ஒப்பந்தங்கள் தொழிலாளர்களுக்கு புரியும் மொழியில், அவர்களது உரிமைகளை உள்ளடக்கி இருக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 10 மணிநேரத்திற்கு மேல் வேலை கொடுக்கக் கூடாது. போதுமான ஓய்வு கொடுக்க வேண்டும். செயலியை நிறுத்திய பிறகு, குறைந்தது இத்தனை மணிநேரத்திற்கு பிறகு தான் அழைக்க வேண்டும் என்ற விதி இருக்க வேண்டும். இதனால், விபத்துகளைத் தவிர்க்க இயலும். ஒரே நேரத்தில் சாலையில் இத்தனை வாகனங்கள் தான் இருக்க வேண்டும் என்ற விதி இருக்க வேண்டும். இது சூழல் மாசு அடைவதையும் தடுக்கும். போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும். மேலைநாடுகளில் இத்தகைய விதிகள் உள்ளன. இது போன்ற நிபந்தனைகள் உழைப்பாளருக்கும், பொது மக்களுக்கும் நல்லது.
இந்த செயலிகளின் படிமுறைச் செயல்பாடு (algorithm) வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு ஊக்கத் தொகை அதிகமாக கிடைக்கிறது. மற்ற பலருக்கு எப்படி ஊக்கத் தொகை குறைக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரிவதில்லை. இவை பகிரங்கத் தன்மையோடு இருக்க வேண்டும். இதில் பணிபுரிவர்களின் இன்னல்கள், இப்போது தான் நுகர்வோருக்கு தெரியத் தொடங்கி இருக்கிறது. ஊடகங்களும் ஸ்விகி, போர்ட்டர் போன்றவைகளில் பணிபுரிபவர்கள் பற்றி பேசத் தொடங்கியுள்ளன. ஒரு முறை, தங்கள் கோரிக்கைகளுக்காக, ஓட்டுநர்கள் அனைவரும் ஒரு மணிநேரம் தங்கள் செல்பேசியை அணைத்து விட்டு, நகரம் முழுவதும் வாகனங்களை இயங்க விடாமல் செய்தனர்.
புதிய தொழிலாளர் சட்டங்கள் சுயாதீன தொழிலாளர்களுக்கு சாதகமாக உள்ளனவா?
சுயாதீனத் தொழிலாளர்களுக்கு – தொழிலாளர் என்ற நிலையை அரசு இன்னமும் வழங்கவில்லை. சுயாதீனத் தொழிலாளர்களுக்கு என ஒரு சட்டத்தை நீண்ட காலமாக நாங்கள் கோரி வருகிறோம்.
ஓட்டுநர், உணவுப் பொருட்களை வழங்குபவர்கள் மட்டுமின்றி வீடுகளுக்குச் செல்லும் ஒப்பனையாளர், தச்சர், மின் பணியாளர், குழாய் வேலை என பல்வேறு வேலை செய்பவர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு கோடி பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். சுயாதீனத் தொழிலாளர்களுக்கு தேசிய அடிப்படையிலான குறைந்தபட்ச சம்பளம் (floor level wage) நிர்ணயம் செய்ய வேண்டும். அதனையொட்டி அரசாங்கமும், நிறுவனங்களும் (aggregators) கூடிப்பேசி தொழில் வாரியாக குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்கலாம். புதிய சமூக நலச்சட்டத்தில் இவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, ஈட்டுறுதி வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. ஓய்வூதியம், பணிக்கொடை என்பதெல்லாம் பேச்சில் கூட இல்லை. இவர்களுக்கு வாரியம் அமைக்கலாம்.
Also read
குறை தீர்ப்பு மையம் வேண்டும் என்று கூறுகிறீர்களே?
பணியை அதிரடியாக நிறுத்திவிட்டால், பாதிக்கப்பட்டவர்கள் வேலை கொடுத்த மனிதரிடம் முறையிட முடியாது. இதுவே இவர்களின் சோகம். தொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்ட குரல் தான் பதிலாக கிடைக்கும். எனவே தான் குறைதீர்ப்பு மையம் வேண்டும் என்று கோரி வருகிறோம். கர்நாடக மாநில சட்டத்தில், மனிதன் தொடர்பு கொள்ளும் வகையில் (human point of contact) குறை தீர்ப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தலமட்ட புகார்ப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் தரப்பு நியாயத்தைச் சொல்ல முடியும். இதில் தீர்வு கிடைக்கவில்லை என்றால், மாநில அரசிடம் முறையிட முடியும். இனிவரும் காலங்களில் சுயாதீன தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
நேர்காணல் & தொகுப்பு; பீட்டர் துரைராஜ்

















இந்த பீட்டர் தங்கராஜ் என்பவர் சென்னையில் இருக்கும் ஒவ்வொரு ஆட்டோ ஸ்டாண்டிலும் சென்று குறைந்தபட்ச தூரமான மூணு கிலோமீட்டர் வாடகை ஆட்டோவை மீட்டருக்கு பேசி எடுக்க சொல்லுங்கள் என் ஒற்றைக் காதை அறுத்துக் கொள்கிறேன் இதை செய்ய முடியாதவர் ராப்பிடு போன்ற பயணிகளின் நலனுக்காக ஏற்பட்ட வீட்டுக்கு அருகே ஆப் மூலம் தொடர்பு கொண்டு எங்கு வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டு செல்கிறார்கள் அந்த ஆப்பை நிர்வாகிக்கும் ஓலா ராப்பிடு போன்ற தொழில் நிறுவனங்கள் உண்டான கமிஷனை அதாவது ப்ரோக்கரேஜை வாங்கிக் கொள்கிறார்கள் மேலும் பீக் அவர் டிராபிக் ஏற்றவாறு விலையை நிர்ணயிக்கிறார்கள் இரண்டு சக்கர வாகனங்கள் ட்ராக்டிகலாக பலருக்கும் உபயோகமாக உள்ளது இதில் குற்றம் காண்பவர் முதலில் ஆட்டோ ஸ்டாண்டுகளில் போய் குறைந்த செலவுக்கு வண்டி எடுக்கவும் இடதுசாரி சிந்தனையாளர்கள் மக்களுக்கு பயன் தரும் வகையில் இல்லாமல் தொந்தரவு செய்வதன் மூலம் தங்களை தாங்களே வீழ்த்தி கொள்கிறார்கள்