நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் முன்னுரையில் நமது நாடு “ஜனநாயக குடியரசு – Democratic Republic” என்று குறிப்பிட்டுள்ளது; ஆனால், நீதித்துறையின் சுதந்திரமே இன்று சவாலாக உள்ளது. இன்னும் இங்கு பெண்களுக்கும், சாதியில் கீழடுக்கில் உள்ளோருக்கும் சம வாய்ப்பு உள்ளதா?மாநில அரசுகள் சுயாதீனமாக செயல்பட முடிகிறதா..? ஹரிபரந்தாமன் அறச் சீற்றம்;
1946–49 காலகட்டம் மிகுந்த குழப்பங்களும் அசாதாரண சூழல்களும் நிறைந்தது. 1946 -ல் அரசியல் அமைப்பு வரைவுக் குழு அமைக்கப்பட்ட போது, நாடு பிரிவினையை எதிர்பார்க்கவில்லை.
1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், நாடு குடியரசானது 1950 ஜனவரி 26 ஆம் தேதியில் தான். முன்னதாக அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்குவதற்கு ஏன் சுமார் மூன்றாண்டு காலத்தை அம்பேத்கர் எடுத்துக் கொண்டார் என்பதை கிண்டல் செய்து ஆங்கில இதழான சங்கர் வீக்கிலியில் அம்பேத்கர் குறித்து ஒரு கார்டூன் வரையப்பட்டது. அதில் அம்பேத்கர் ஆமை மீது உட்கார்ந்து கொண்டு சவாரி செய்வது போல சித்தரித்து இருந்தனர்.

அப்படியெல்லாம் சிரத்தையெடுத்து உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தை நிறைவேற்றம் செய்ய மூன்று மாதங்கள் ஏன் காத்திருந்தோம்?
அதற்குக் காரணம்—காங்கிரஸ் கட்சி “டொமினியன் அந்தஸ்து வேண்டாம்; முழு சுதந்திரம் வேண்டும்” என்று 1930 ல் தீர்மானம் நிறைவேற்றிய நாள் ஜனவரி 26, எனவே, அதே நாளில் நாடு குடியரசாக அறிவிக்கப் பட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டிஷார் முடிவு செய்து விட்டார்கள். “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்திற்கு பிறகு நாடு முழுவதுமாக மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெறவில்லை. அப்போது பெங்களூர் உள்ளிட்ட தென்னிந்தியாவே மெட்ராஸ் மாகாணமாக இருந்தது. மாகாண சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுவதற்கு படித்தவர்களாக இருக்க வேண்டும், வரி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். இந்த மாகாண சட்டமன்ற உறுப்பினர்களே அரசியல் அமைப்பு சட்ட நிர்ணய சபைக்கான உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தனர்.
அம்பேத்கர் அவரது சொந்த மாநிலமான பாம்பே மாகாணத்தில் இருந்து போட்டியிடாமல் அப்போதைய கிழக்கு வங்கத்தில் ( தற்போதைய பங்களாதேஷ்) மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை அரசமைப்பு உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர். பின்னர் அவரது மேதமை காரணமாகவும், காந்தியாரின் விருப்பத்தாலும் அரசியல் அமைப்பு வரைவு குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அரசியல் அமைப்பு அவை தான் முதல் பாராளுமன்றமாகவும் செயல்பட்டது.
அந்த பாராளுமன்றத்தின் அமைச்சரவையில் பிரதமராக இருந்தவர் நேரு. அதில் சட்ட அமைச்சராக இருந்தார் அம்பேத்கர்.

அரசியல் அமைப்பு சாசன வரைவுக் குழுவின் தலைவராக இருந்த அம்பேத்கர், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆனால் 1951 செப்டம்பர் 27 ஆம் தேதி, இந்து பெண்களுக்கு உரிமை வழங்கக்கூடிய சொத்துரிமை, வாரிசுரிமை, தத்தெடுக்கும் உரிமை, திருமணம் சம்பந்தமான உரிமைகள் போன்றவற்றில் பெண்களுக்கு சட்ட உரிமைகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால், அதனை எதிர்த்து ராஜினாமா செய்தார். பல சட்டங்களை வடிவமைத்தவரான அம்பேத்கரால் பெண் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை; அதனை கடுமையாக எதிர்த்ததும் காங்கிரஸ் கட்சியே. இதுவே அவரது ராஜினாமாவுக்கு வழிவகுத்தது. எனவே,பெண்கள் அனைவரும் அம்பேத்கருக்கு நன்றியுணர்வுடன் நினைவஞ்சலி செலுத்த வேண்டும்.

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் மட்டுமல்ல, நான் கல்லூரியில் படித்த காலத்தில் பெண்கள் உயர்கல்வி பெறுவது மிகவும் குறைவு. ஆனால், இன்று இங்கு அமர்ந்து இருக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேல் பெண்கள் இருப்பதை காண்கிறேன்; இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவே அரசியல் அமைப்பு சட்டத்தின் 15 (3)வது ஷரத்து உருவாக்கத்தின் வெற்றியாகும். காரணம், இது பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான சிறப்பு திட்டங்களை அரசு உருவாக்க வழி செய்கிறது.

தமிழ்நாடு இந்த விஷயத்தில் இந்தியாவின் முன்னோடி மாநிலம். நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு 1956 ல் இந்து பெண்களுக்கு உரிமை தருவது தொடர்பான சட்டம் இந்திய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அதில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கிடையாது. அதாவது மூதாதையர் சொத்தில் உரிமை கிடையாது. 1989 ஆம் ஆண்டு பெண்களுக்கு மூதாதையர் சொத்திலும் சமபங்கு வழங்கியது தமிழ்நாடு. 2005 ல் இந்திய பாராளுமன்றம் பெண்களுக்கு மூதாதையர் சொத்திலும் உரிமை வழங்க சட்டத்தில் திருத்தம் செய்தது.
இத்தகைய முன்னேற்ற மாநிலமாக இருந்தும், நீதிபதிகளை ‘லார்ட்’ என்று அழைப்பதும், பல்கலைக்கழகத்தின் Chancellor, Vice Chancellor-ஐ ‘வேந்தர்’, ‘துணை வேந்தர்’ என அழைப்பதும் தொடர்கிறது. “மை லார்ட்” என்றழைப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், பதவிக் காலத்தில் அதை சகித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஜனநாயக நாட்டில் இது எப்போது ஒழியும் எனத் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு கல்வியில் முன்னுரிமை, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு போன்ற காரணங்களால், கீழமை நீதிமன்றங்களில் 65% பணியிடங்களில் பெண்கள் உள்ளனர். ஒப்பீட்டளவில் அதிக பெண் நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் பெண்கள் பிரதிநிதித்துவம் பரிதாபமாக உள்ளது. தற்போது அங்கே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நீதிபதி நாகரத்தினம்மா மட்டுமே ஒற்றை பெண் நீதிபதியாக உள்ளார்.

ஆக, பெண்களுக்கு ஏன் இடஒதுக்கீடு அவசியம் என்பதை இப்போது புரிந்து கொள்ளலாம். நம்மில் சரி பாதியினர் பெண்கள் என்ற நிலைமையிலும் சமநிலை இல்லாமல் இருந்தால், பட்டியலின மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள் இடஒதுக்கீடு இல்லாமல் எப்படி முன்னேற முடியும்?
பட்டியலின, பழங்குடி மக்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. பழங்குடியினர் ஒரே ஒருவர் தான் கடந்த 75 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்துள்ளார். தற்போது உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகள் உள்ளனர். இந்த 75 ஆண்டுகளில் 11 பெண்கள் மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பு வகித்து உள்ளனர். அது போல பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழு பேர் மட்டுமே இதுவரை நீதிபதிகளாகி உள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இதே நிலைமை தான்.
சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி ஒருவரின் மீது உயர்சாதியாளர் ஒருவர் மூத்திரம் பாய்ச்சியதை நாம் கண்டோம். பின்னர் முதலமைச்சர் மன்னிப்பு கேட்டது என்பதெல்லாம் அரசியல் நிர்பந்தமே.
2025 ஆம் ஆண்டில் கூட, உயர் சாதியைச் சேர்ந்த அனுஜ் பாண்டே என்பவர் ஒரு பின் தங்கிய வகுப்பை சேர்ந்தவரை தன் கால்களை கழுவிக் குடிக்க நிர்பந்தித்த வழக்கில், உயர் சாதியை சேர்ந்த நபர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடுத்த தீர்ப்புக்காக அடில் ஸ்ரீதரன் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் இருந்து சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பணி மாறுதல் செய்யப்பட்டார். அங்கும் கொலீஜியத்தில் இடம் பெறுவார் என்று தெரிந்ததால், ஒன்றிய அரசின் அழுத்தத்தால் அங்கிருந்து அலகாபாத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனுடன் உச்சநீதிமன்ற பட்டியலினத்தை சேர்ந்த தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பை வீசிய நிகழ்வும் நினைவுகூரப்பட வேண்டும்.
நமது நாட்டில் 14% முஸ்லிம்கள் உள்ளனர்; ஆனால், அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப நீதித்துறையில் சரியான பிரதிநிதித்துவம் இல்லை. தற்போதைய 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே இஸ்லாமியராக உள்ளார். இதே நிலைமை தான் சட்டமன்ற மற்றும் மக்களவையிலும் நிலவுகின்றன. மக்களைவையில் 543 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 24 பேர் மட்டுமே இஸ்லாமியர். ஆனால், இருக்க வேண்டிய எண்ணிக்கை 76.
பிரிட்டிஷ் ஆட்சியில் கூட அனைத்து மதங்களுக்கும் இடஒதுக்கீடு இருந்தது. அதனால் பிரிட்டிஷ் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருந்தது. அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டதால் தான் தற்போது பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதி நிதித்துவம் கிடைக்கிறது.
Also read
அரசியல் அமைப்பு சாசனம் 12 அட்டவணைகள் கொண்டது. அதில் பெரும்பாலான அதிகாரங்கள் மைய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதன்படி மிகக் குறைந்த அதிகாரமே மாநில அரசுக்கு உள்ளது.
அட்டவணை–7 இல், மத்திய அரசுக்கான அதிகாரபட்டியல் மிக நீளமானது! மாநில அதிகாரப் பட்டியலோ சிறியது! அந்த சமயத்தில் கவர்னர், தேர்தல் ஆணையம் CAG, UPSC, RBI போன்ற அனைத்து அமைப்புகளுக்கும் நியமன அதிகாரத்தை மைய அரசு வைத்துள்ளது…!
“எவ்வளவு சிறந்ததாக அரசியல் அமைப்பு இருந்தாலும், அதனை செயல்படுத்தும் மனிதர்கள் சரியில்லை என்றால், அது மோசமானதாக மாறி விடும்” என்று அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய இறுதி உரையில் அம்பேத்கர் குறிப்பிட்டார். அதனை தற்போது நாம் நினைவில் கொள்வது பொருத்தமாக இருக்கும். குடிமக்களாக நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நமது அரசியல் சாசனத்தின் ஆன்மாவைக் கொண்டாடுவோம்.
நவம்பர் 26, அரசியல் அமைப்பு சாசன தினத்தன்று மேனாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை.
அவரது ஆங்கில உரையின் சுருக்கமான தமிழ் வடிவம்.
பேராசிரியர் நா.மணி.


















Sir Recent Supreme Court Judgement reiterate that Governor is superior to Legislative Assembly and they can hold the File indefinitely , So where comes Constitution Rights and Parliament supremacy!!