எல்லா நியாயங்களும் தங்கள் பக்கம் இருப்பதாக தமிழக ஆட்சியாளர்கள் அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ‘சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தை அணுகி இருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ‘அரசு தரப்பில் தவறில்லை’ எனில், தயக்கம் எதற்கு? உண்மை என்னவோ, அது வெளிவரட்டுமே;
‘அரசு தரப்பில் எந்தத் தவறுமில்லை’ என்று உறுதியாக நம்பும் பட்சத்தில், சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு மருத்துவ சிகிச்சைகள் வழங்கியது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தர முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஓடோடி வந்து உதவியது என்ற வகையில்.. தமிழக அரசின் நடவடிக்கைகள் அகில இந்த அளவில் கவனம் பெறட்டுமே!
‘சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டிய தேவை என்ன?
‘சி.பி.ஐ விசாரணை பாரபட்சமற்று போய்க் கொண்டிருக்கிறது’ என நம்பக்கதக்க வகையில், நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், மதியழகன், பவன்ராஜ் உள்ளிட்டோரிடம் சிபிஐ கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தியது.
மேலும், இது தொடர்பாக 300 க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒன்றரை மாத விசாரணையில் 100-க்கும் மேற்பட்டோருடன் விசாரணை நடந்துள்ள நிலையில், சம்பவ இடத்தில் உள்ள பலரை நேரில் சென்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அனைத்துக்கும் மேலாக கரூர் சுற்றுலா மாளிகைக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் ஏடிஜிபி சோனல் மிஸ்ரா மற்றும் சுமித் சரண் ஆகியோர் வந்து, விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில், அதிரடியாக உச்ச நீதிமன்றம் சென்று தடை கோரினால், அப்படிக் கோருபவர்கள் மீது தான் மக்களுக்கு பலத்த சந்தேகம் வரும். ஆகவே, இதை தவிர்ப்பதே, நியாயம் தங்கள் பக்கம் இருக்கிறது என நம்பும் ஆட்சியாளர்களுக்கு அழகாகும்.
![]()
தற்போது வரைக்கும் கரூர் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் கூட்ட நெரிசலில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றவும், மருத்துவ சிகிச்சையளிக்கவும் துடிப்பாக செயல்பட்டது தமிழக மக்களால் மட்டுமே பாராட்டப்பட்ட நிலையில், அகில இந்தியாவும் அதை பாராட்டும் வாய்ப்பு சிபிஐ விசாரணை மூலம் ஏற்படுவது கழக வளர்ச்சிக்கு நல்லது தானே.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட நிகழ்வில், தமிழக அரசே விசாரித்து உடனடியாக குற்றவாளிகளை தண்டிக்கும் வாய்ப்பை புறந் தள்ளி, யாரும் எதிர்பாராமல், அதை சிபிஐ விசாரணைக்கு கொடுத்தவரே நமது தமிழக முதல்வர் ஸ்டாலின் தானே. அந்த அளவுக்கு தங்களுக்கு தமிழக காவல்துறையை விடவும், சிபிஐ மீது நம்பிக்கை இருக்கிறது என்பதை மிகச் சமீபத்தில் தான் உணர்த்தி இருந்தார், முதல்வர் ஸ்டாலின்.
தற்போது சிபிஐ விசாரணையை மறுப்பது தமிழக மக்களால் எப்படி பார்க்கப்படுமென்றால், ‘எங்க அப்பன் குதிருக்குள் இல்லை’ என்று வலிந்து சொல்வதைப் போல ஆகிவிடும். எப்படி என்றால், பீகாரில், ‘நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது’ என தேர்தல் ஆணையம் இப்படி நீதிமன்றத்தில் சொல்லியதன் மூலம் அம்பலப்பட்டது. ‘தவறு தங்களிடம் இருப்பதால் தான் மறுக்கிறார்கள்’ என புரிந்து கொள்ளப்பட்டது.
அதுவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக உள்துறை செயலாளரைக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,
# இந்த பிரச்சினையில் முக்கியமான காரணம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான். எங்களின் வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை.
# தவெக தலைவர் விஜய்யை பார்ப்பதற்கு நிறைய கூட்டம் வரும் என்று அவர்களுக்கு முன்கூட்டியே தெரியும். நாங்களும் போதிய எண்ணிக்கையில் காவல்துறை பணியை செய்தோம். ஆனால் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மெத்தனமாக நடந்து கொண்டனர்.
என்றெல்லாம் வலிந்து குற்றம் சாட்டி விசாரணைக்கு முன்பாகவே தீர்ப்பை அறுதியிட்டு வழங்கும் ஒரு அரசு எப்படி பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி உண்மையைச் சொல்லும்? என்ற பலத்த சந்தேகத்தையே மேலும் உறுதிபடுத்துகிறது. எந்த ஒரு சம்பவத்திலும் ஒரு தரப்பு மட்டுமே தவறு செய்திருக்க வாய்ப்பில்லை. இரு தரப்பிலும் உள்ள குறைகள் தவறுகள் தெரிய வரும் போது தான் எதிர்காலத்தில் இது போல நிகழ்வதை தவிர்க்க முடியும்.
ஏற்கனவே இந்தவழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் குட்டு வாங்கியது. அதை தற்போது நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.
# கரூர் நெரிசல் சம்பவத்தின் வழக்கு உயர்நீதிமன்ற மதுரையின் விசாரணை வரம்பிற்கு உட்பட்டது. மதுரை அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த பிறகு அதை சென்னை உயர்நீதிமன்றத் தனி நீதிபதி ( செந்தில்குமார்) விசாரித்தது ஏன்?
# சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கானது சாலையில் நடக்கும் அரசியல் கூட்டங்களை முறைப்படுத்துவது தொடர்பாக நிலையான செயல்பாட்டு நடைமுறையை வகுக்கக் கோரும் மனுவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் போது, இந்த வழக்கை வலிந்து கிரிமினல் வழக்காக மாற்றி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து எப்படி சிறப்பு விசாரணை குழுவின் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தார்?
# இரு நீதிபதிகள் ஒரு வழக்கை விசாரிக்கும் போது, அதே வழக்கை ஒரு தனி நீதிபதி தானும் விசாரிக்க துணிவதில்லை. அவர் தானாக பின் வாங்கி விடுவதைத் தான் அனுபவத்தில் கண்டுள்ளோம். ஆனால், சென்னையிலோ மனுதாரரின் கோரிக்கையையும் தாண்டி, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்திரவிட்டது எப்படி? என்பது எங்களுக்கு புரியவில்லை.
இப்படி ஏற்கனவே, கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கிய தமிழக அரசு மேலும் குட்டு வாங்கவே தற்போது சி.பி.ஐ விசாரணையை ரத்து செய்யக் கோருவது சென்று முடியும்.

மேலும் த.வெ.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டதாவது; சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையில் தவெக தரப்பை விசாரிக்கவோ, எது ஒன்றையும் கேட்கவோ இல்லை. ஆனாலும் முதல் நாளிலேயே நீதிமன்றத்தால் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதோடு, தவெக மற்றும் விஜய்க்கு எதிராக உயர்நீதிமன்ற தனி நீதிபதி கடுமையான கருத்துக்களை வெளியிட்டார். இது விசாரணை நேர்மையாக நடைபெறுவதை பாதிக்கும்.
ஆக, எந்த லட்சணத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாரால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது என்பது அம்பலமாகிவிட்டது.
அப்போது உச்ச நிதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் வில்சன், ”தற்போது வரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் நேரில் சென்று பார்க்கவில்லை’’ என கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார்.
Also read
ஆனால், தற்போதைய மனுவில், தமிழக அரசோ, விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் வழங்கிய நிகழ்வை கொச்சைப்படுத்தி, ”இந்த சந்திப்பு ஏதோ ஒரு வகையில் சாட்சிகளை மாற்ற வாய்ப்புள்ளது. ஆதாரங்களை அழிக்கக் கூடும். இனிமேல் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பார்க்க கூடாது…’’ என முன்னுக்கு பின் முரணாக கூறுவதில், தமிழக அரசின் பதற்றமே வெளிப்படுகிறது. மாநிலத்தில் ஆட்சியை கைவசம் வைத்துக் கொண்டு, சர்வ அதிகாரங்களும் உள்ளவர்கள் மனிதாபிமானமின்றி இப்படி பேசுவதை எப்படி புரிந்து கொள்வது?
‘சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்’ என உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு கதறுவதை தமிழக மக்கள் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இந்த அரசின் ஒப்புதல் வாக்குமாலமாகவே பார்க்கிறார்கள்.
சாவித்த்ரி கண்ணன்

















நடிகர் விஜய்யின் கரூர் மாநாட்டில் நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் இறந்து போனது எல்லோரும் அறிந்தது. ஆனால் அந்த விபத்தில் அரசு காட்டிய வேகம் இதற்கு முன்பு இவரிடமும் இருந்தது கிடையாது,
அதற்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன ஆனால் அதில் தனது வேகத்தை கரூர் அளவிற்கு அரசு காட்டவில்லை. ஆனால் சமீப காலமாக பல பிரச்சனைகளுக்கு அமைச்சர்களே நேரில் களம் இறங்குவது கண்கூடாக பார்க்க முடிகிறது. காரணம் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வருகிறது. தங்களை விட வேறு எவரும் களப்பணி ஆற்றுவதில் சிறந்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கவும் தங்கள் தொகுதிகளை தங்க வைத்துக் கொள்ளவும் அவ்வாறு செய்யப்படுகின்றன.
தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது, கரூர் நெரிசலில் சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டுமென. காரணம் சிபிஐவிசாரித்தால் உண்மைகள் வெளிப்படும். அது தேர்தல் நேரத்தில் தங்களுக்கு பாதகமாகவும் அமையக்கூடும் என்பதாலேயே!!