இசைத் தேன் காதிலும், இன்பத் தேன் இதயத்திலும் பாய்ந்தாக இசை நாயகி நிகழ்வு நடந்தேறியது! அந்தக் காலம் தொடங்கி இந்தக் காலம் வரை இசைத் துறையில் சாதனை படைத்த அறிந்த மற்றும் அறியப்படாத பெண் ஆளுமைகள் குறித்த அரிய வரலாற்றுப் பதிவுகளையும், மக்கள் இசையே மகளிரில் இருந்து பிறந்தது என்பதையும் அறியத் தந்த நிகழ்வு;
எட்டு பெண்கள் ஒன்று சேர்ந்து எல்லா நிகழ்வுகளையும் ஒன்றிணைத்து நடத்திய இசை நாயகி எனும் ஒரு முழு நாள் நிகழ்வு டிசம்பர் இசை விழாவுக்கு கட்டியம் கூறும் விதமாக நேற்றைய தினம் ( டிசம்பர்-7, 2025 ) நடந்தது.
முதல் நிகழ்வாக பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்களின் இடைக்கால இசையில் பெண்கள் என்ற அற்புதமான ஆய்வுரையுடன் தொடங்கியது.
இசைத் துறையில் எண்ணற்ற இமாலய சாதனை படைத்த பெண்களை, குறிப்பாக இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் நட்சத்திரங்களாய் ஒளிர்ந்த இசை வேளாளர் சமூகத்து பெண்களை அடையாளம் காட்டினார் தாயம்மாள். குறிப்பாக, தாசி பெரிய குப்பு, திருவழுந்தூர் தாசி தொடங்கி பெங்களுர் நாகரத்தினம்மாள் வரை அவர் பட்டிலிட்ட போது, பிரமிப்பே ஏற்பட்டது! சிவகாமி என்பவர் தன் பெயரிலேயே சிவகாமி கும்மி பாடிருப்பதையும் பாடிக் காட்டினார். கடல் கடந்து சென்ற படிப்பறிவில்லா உழைப்பாளி பெண்களான பெரியக்காள், கிருஷ்ணம்மாள் போன்றோரின் அர்த்தம் பொதிந்த பாடல்களைக் கூட தேடித் சேகரித்துள்ளார் தாயம்மாள்!

இந்த வயதிலும் சில பாடல்களை ராகத்துடன் அவர் பாடிய போது அரங்கம் கைதட்டி மகிழ்ந்தது. ஆய்வறிஞர், பேராசிரியை மட்டுமின்றி வாழ்நாள் முழுக்க தமிழ்ச் சமூக நலன் சார்ந்த எழுத்துக்களுக்காக அதிலும், சங்கால பெண் படைப்பாளுமைகள் தொடங்கி தற்கால படைப்பாளுமைகள் வரை பதிவு செய்வதற்கு தன்னையே ஒப்புவித்துக் கொண்ட தாயம்மாள் தன் பேச்சில் சின்னத் தடங்களோ, பிசிறோ இல்லாமல் ஆற்றொழுக்காக உரையாற்றி போகிற போக்கில் அரிய தகவல்களை அள்ளி வழங்கினார்.
வழக்கறிஞர் சுமதி அதிகம் அறியப்படாத- ஆனால், அவசியம் அறிந்திருக்க வேண்டிய இரு பெண் ஆளுமைகள் குறித்து இசை வாத்திய பெண் விற்பன்னர்கள் என்ற தலைப்பில் ஆதியோடந்தமாகப் பேசி, அவர்களை கேட்போர் உள்ளத்தில் பதிய வைத்தார். காஞ்சிபுரம் தனுக்கோடி அம்மாள், வீணை தனலட்சுமி அம்மாள் ஆகியோரை குறித்த மிக நுட்பமான செய்திகளை உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். பல புகழ் பெற்ற இசைத்துறை ஆண் ஆளுமைகளையும் விஞ்சும் விதத்தில் இந்த பெண் இசையரசிகள் வலம் வந்ததை பல வரலாற்று சம்பவங்களொடு இணைத்துச் சொன்னார். எடுத்துக் கொண்ட தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் மிகச் சிறப்பாக பேசினார். சில பாடல்களையும் பாவத்தோடு ரசிக்கதக்க வகையில் பாடியது அவரது பேச்சின் ஹைலைட்டாக இருந்தது. அவர் பாடலுக்கு அரங்கில் பலத்த கைதட்டலும் எழுந்தது.

இரண்டாவது அமர்வில் பேச வந்த எழுத்தாளர் மீரான் மைதீன், சூஃபி மரபிசையில் பெண்கள் என்ற தலைப்பில் அறியப்படாத அரிய செய்திகளை அடுக்கடுக்காக தந்து அசத்தினார். இஸ்லாமிய ஆண், பெண் என இரு தரப்பிலும் உள்ள சூஃபிகள் குறித்து சொன்னார். இதில் குனங்குடி மஸ்தான், ஞானியப்பா பீமுகமது ஆகியோரை நம்ம்பில் பலர் அறிந்திருப்போம். கசல், கவாலி போன்ற இசை முறைகளில் இஸ்லாமிய பெண் சூஃபிகளுமே இருக்கிறார்கள் என்ற செய்தியே புதுமையாக இருந்தது.

செய்யிது ஆசியா உம்மாள், கச்சி பிள்ளையம்மாள் செய்யது ரசுல் பீவி பரிமணத்தாள்.. ஆகியோர் குறித்து கன்னியாகுமரி தமிழில் அழகுற சடசடவென அந்த செய்யுட் பாடல்களை மீரான் மைதீன் பேசிய போது மொத்த அவையும் சொக்கிப் போய் கேட்டது. பாரதீக தேசத்தில் வாழ்ந்த இளவரசி ராபீயா பருவாயி இறைவனை காதலனாக பாவித்து பாடிய பாடல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் அவர் படுகொலை செய்யப்பட்டார் என்ற மீரான் மைதீன் சொல்லிய செய்தி அதிர்ச்சியளித்தது. நம் தமிழ் மரபில் ஆண்டாளுக்கு கிடைத்த சுதந்திரத்தையும், சமூக மரியாதையும் நினைத்து என் மனம் நெகிழ்ந்தது!
இசை நாடக அரங்கின் நாயகியர் என்ற தலைப்பில் இசை ஆசிரியர் அரிமளம் பத்மநாபன் பேசினார்!

55 ஆண்டுகளாக இசைப் பணியை இறைப் பணி போலக் கருதி, இயங்கிக் கொண்டிருக்கும் அரிமளம் பத்மநாபன் வெங்கலக் குரலில் கணீரென்று ராக பாவத்துடன் பாடியும், பேசியும் சுமார் ஒரு மணி நேரம் முழுமையும் அரங்கை தன்வசமாக்கினார். இசை நாடக அரங்கின் நாயகியர் என்ற தலைப்பில் அந்தக் கால பாய்ஸ் நாடக கம்பெனியில் தமிழும், இசையும் எவ்வளவு சின்சியராக பயிற்றுவிக்கப்பட்டது.. போன்ற தகவல்கள் மிகவும் சுவாரஷ்யமாக இருந்தன. இன்னும், இன்னும் பாடமாட்டாரா? பேச மாட்டாரா? என அரங்கில் உள்ளோர் நினைக்கும் வண்ணம் இருந்தது அவர் பேச்சு. பார்வையாளர் வரிசையில் ரசித்து கேட்டுக் கொண்டிருந்த பிரசன்னா ராமஸ்வாமி கேட்டுக் கொண்டதற்கிணங்க, கீழே இறங்கப் போனவர், மீண்டும் அமர்ந்து பாடி கைதட்டலை அள்ளிச் சென்றார்.
அடுத்தாக சுல்ஃபத் பானு என்ற இளம் பெண் சூஃபி பாடல்களை தன் இனிய குரலில் பாடி அரங்கை இசைமயமாக்கினார். இவர் 13 மொழிகளில் பாடக்கூடியவர் என்பதும், சர்வதேச அளவில் பாடி வந்தாலும் , சாலையோரங்களிலும், தேனீர் கடைகளிலும் கூட மக்கள் மத்தியில் பாடிச் செல்லும் பண்புள்ளவர் என அறிய வந்த போது வியப்பாக இருந்தது.

அடுத்ததாக எனக்கு மிகப் பிடித்த தலைப்பான மக்களிசை பண்பாட்டில் பெண்கள் என்ற தலைப்பில் இந்த எட்டு பெண்கள் கொண்ட குழுவில் ஒருவரான பாலைவன லாந்தர் பேசினார். ’’அல்லா மீது திருப்புகழ் பாடிய காசிம் புலவரின் குடும்ப வம்சாவளி நான். பெண்ணே ஒரு இசை வடிவம் தான். அவளது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் இசையை வெளிப்படுத்தக் கூடியவையே. கைதட்டலிலும் இசை உண்டு. அவள் நடையிலும் இசையை உணர முடியும், அவளைக் காதலிப்பவனால்!

பெண்ணின் நாக்கே ஒரு இசைக் கருவி தான். அதை சுழற்றிச் சுழற்றித் தான் விதவிதமான குலவை இசை தருகிறாள். மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் குலவைப் பாடல்கள், குழந்தையை பாதுகாப்பாக உணர வைத்து தூங்கச் செய்யும் தாலாட்டுப் பாடல்கள், துக்கமான மனதை தூங்க வைக்கும் ஒப்பாரி பாடல்கள்..எனப் பல பாடல்களை பெண் பாடுகிறாள். குடும்பது நிகழ்வுகளில், சடங்குகளிலும் பாட்டுகட்டி பெண்கள் பாடியுள்ளனர். அந்தக் காலத்துல குஜிலி பாடல்கள் பாடப்பட்ட இடம் இன்றைய ஈவ்னிங் பஜாராகும். நாட்டு நடப்புகளை சொல்ல குஜிலி வகை முறைகளை கையாண்டார்கள். கானாப் பாடல்கள், ராப் பாடல்கள் யாவும் மக்களிசையே..’’என்றார்.
மூன்றாம் அமர்வில் பேச வந்த லலிதா ராம், இரு நூற்றாண்டுகளும், கர்நாடக இசை மேதைகளும் என்ற தலைப்பில் அருமையானதொரு உரையை நிகழ்த்தினார். ”1920 களில் டி.கே பட்டம்மாள் முதன்முதலில் பள்ளிக் கூடத்தில் பாடி பரிசு பெற்ற செய்தி ஒரு பத்திரிகையில் புகைப்படத்துடன் பிரசுரமான பொழுது அவரது குடும்பம் பதற்றப்பட்டது. பெண் பாடுவதும், பொதுவெளியில் அறியப்படுவதும் தவறாக கருதப்பட்ட காலத்தில் இருந்து- இந்த ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சியை பார்க்கும் போது, அளப்பரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

டிசம்பர் இசை கச்சேரிகளில் மியூசிக் அகதெமியில் சென்ற ஆண்டு மொத்தம் வழங்கப்பட்ட 80 நிகழ்வில் 38 நிகழ்வுகளை பெண் இசைக் கலைஞர்கள் தந்துள்ளனர் என்ற அளவுக்கு சூழல்கள் மாறியுள்ளன” என்றவர், கோயம்பத்தூர் தாயி என்பவர் குறித்தும், திருக்கோகர்ணம் ரங்க நாயகி அம்மாள் மன்னார்குடி சாவித்திரி அம்மாள்.. போன்றோர் குறித்தும் பேசினார். திருக்கோகர்ணம் ரங்க நாயகி அம்மாள் 1927 காங்கிரஸ் மாநாட்டில் பாடியுள்ளார். ஆண்கள் மட்டுமே பாடி வந்த ஹரிகதா என்ற காலாட்சேபத்தை முதன் முதலாக பாடிய பெண் தான் சரஸ்வதிபாய் எப்படி இசைத்துறைக்கு வந்தார் என்பதை ஒரு அழகிய கதை போல சொன்னார், லலிதா ராம்.
இறுதியாகப் பேச வந்த ஜான் சுந்தர் சுகமான திரை இசை பாடல்களுடன் இடையிடையே நகைச் சுவையோடு பெண் திரையிசைக் குரல்கள் என்ற தலைப்பில் திரை இசை பாடகிகள் பி.ஏ.பெரிய நாயகி , ஜிக்கி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, பானுமதி, பி.சுசிலா, எஸ். ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, டி.கே.கலா, வாணி ஜெயராம், உமா ரமணன், ஜென்ஸி..போன்ற பல திரை இசை பெண் ஆளுமைகள் குறித்த சொற்பொழிவை நிகழ்த்தினார்.

தன் கூட்டாளியை மனசாட்சி என்று சொல்லி கலாய்த்ததாக இருக்கட்டும், பல உண்மை சம்பவங்களை, அனுபவங்களை நக்கல் நையாண்டியாகச் சொல்லி, தன்னைத் தானே கலாய்த்தாக ஆகட்டும் மொத்த அரங்கையும் கலகலப்பாக்கினார். பார்வையாளர்களோடு நெருக்கமான பாவனையில் உரையாடியபடி அவர் வழங்கிய நிகழ்ச்சியே வெகு புதுமையாக இருந்தது.
மொத்தத்தில் பேசிய அனைவருமே மிகவும் அக்கறையெடுத்து பல தகவல்களை திரட்டிக் கொண்டு ‘ஹோம்வொர்க்’ செய்துவிட்டு வந்து தான் பேசினார்களேயன்றி, ஒருவர் கூட ஏனோ, தானோவென்று பேசவில்லை. இசை நாயகி நிகழ்ச்சியை ஒழுங்கமைவோடு, திட்டமிட்டபடி எந்த சொத்தப்பலும் இல்லாமல் எட்டு பெண்கள் குழு சிறப்பாக நடத்தியது. இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக்கிய ஜா.தீபா, தமிழ் பொன்னி, சவீதா, காயத்திரி, பாலைவனலாந்தர், ரேவா, ஜெய் ஸ்ரீ, அகிலா ஸ்ரீதர் ஆகிய எண்மரும் தமிழ் சமூகத்தின் பாராட்டுக்குரியவர்கள்.
சாவித்திரி கண்ணன்















இந்த பெண் ஆளுமைகளின் வரலாறு பதிப்பிக்கபட வேண்டும். வளர்க எண் பேர் குழுவின் பணி.
சிறப்பானதொரு தொகுப்பு, நன்றி நேரில் பார்த்தது போல இருந்தது உங்களின் எழுத்து.