ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த தமிழ்ச் சமூகத்தின் வேர்களில் நீர் பாய்ச்ச வாராது வந்துதித்த மாமணியாய் வந்தவரே பாரதியார்! அவர் வாழ்ந்த காலத்தில் அவரது எழுத்துக்கள் ஆதரிக்கப்பட்டதை விடவும் அதிகம் நிராகரிக்கப்பட்டது. வணங்காமுடியாய் இருந்த அவரை வறுமை தின்று கொன்றது குறித்த ஒரு அலசல்;
காட்டாற்று வெள்ளமாக பாய்ந்த அவரது கவிதைப் பயணத்தால் சோர்ந்திருத்த தமிழ் பயிர்கள் தழைத்தோங்கின!
சொல் புதிது, சிந்தனை புதிது, பார்வை புதிது, கற்பனை புதிது..அவரது நடை, உடை, பாவனை, செயல் அனைத்துமே முற்றிலும் புதிது.
இந்தப் புதியவனை ஏற்கும் மன நிலை அன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு இல்லை. இந்தியா பத்திரிகை ஆசிரியராக இருந்து இடி, மின்னல் போல அவர் பிரிடிஷாரை எதிர்த்து எழுதிய போது, அவரை கைது செய்ய ஆணை பிறப்பித்ததால் புதுச்சேரி சென்று தொடர்ந்து இயங்கினார்.
பிறவிக் கவிஞர் எட்டு வயதிலேயே கவிதை இயற்றும் திறமை பெற்று இருந்தார். தமிழ்ப் புலவர்களுக்கே உரிய செல்வந்தர்களிடம் தாழ்ந்து பணிந்து தங்களின் புரவலர்களாக்கிக் கொள்ளும் குணம் அவரிடம் அறவே இல்லாதிருந்தது.
பாரதியார் தன் மதிப்பீட்டில் நீதி, உயர்ந்த மதி, கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் என்று கறாராக வரையறுத்திருந்தார்.
இவை இல்லாதவர்கள் எந்த ஒரு உயர்பதவி வகிப்பினும், எவ்வளவு செல்வாக்கோடு இருந்தாலும் அவர் தலை வணங்கமாட்டார்! உண்மையான தகுதி ஒரு எளியவரிடத்து கண்டாலும், சிரம் தாழ்த்துவார். தமிழ்ச் சமூகத்தில் இப்படியான மனநிலை உள்ளவர்கள் ஏற்றம் காண்பது ஒரு போதும் சாத்தியமில்லை என்பது அன்று மட்டுமல்ல, இன்றும் கூடத்தான்.
பாரதியாரின் இந்தியா பத்திரிகை மிகக் குறைந்த வாசகர் பரப்பின் ஆதரவையே பெற்று இருந்தது. அன்றைக்கு பெருவாரியான மக்கள் சுதேசமித்திரன், இந்து போன்ற வெகுஜன பத்திரிகைகளையே வாங்கி, ஆதரித்தனர். ஒரு முறை டிராம் வண்டியில் ஒரு அரசாங்க உத்தியோகஸ்தரான தமிழர் இந்தியா வார இதழை வாசித்துக் கொண்டிருப்பதை கவனித்த பாரதியார், அவர் அருகே சென்று.. ’’என்ன எழுதப்பட்டிருக்கிறது? எனத் தெரியாதவர் போல கேட்ட போது, அவர், ’’எவ்வளவு ராஜதுவேஷமாக எழுதுறாங்க. இப்படியானவர்களை அவசியம் தண்டித்தே ஆக வேண்டும்’’ எனக் கூறி உள்ளார்.

சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக இருந்த தன்னால் நினைத்ததை எழுதமுடியவில்லை என்று தான் நண்பர்கள் உதவியுடன் சுதந்திர வேள்விக்காக இந்தியா வார இதழை ஏற்படுத்தி, ஆவேசமாக எழுதி வந்தார்.
ஒரு கட்டத்தில் அதன் அறச்சீற்றம் காரணமாக இந்தியா பத்திரிக்கை தடை செய்யப்பட்டு, பாரதியாரை கைது செய்ய ஆங்கிலேயே அரசு ஆணையிட்ட நிலையில் நவம்பர்-16, 1908 ஆம் ஆண்டு சுதேசமித்திரனில் வந்த தலையங்கம் பாரதியார் எழுத்துக்களை ஏற்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது;
’’இந்தியா பத்திரிகையில் ராஜதுவேஷ குற்றமுள்ள வியாசங்கள் தோன்றின. அதன் பிரசுரகர்த்தரான ஸ்ரீனிவாசய்யங்காருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆசிரியர் ஓடிப்போய்விட்டார். பொதுவாக இப்படி விதிக்கப்படுமென்றே எதிர்பார்க்கப்பட்டது. துவக்கத்திலேயே கவர்மெண்டார் எச்சரித்து இருப்பார்களேயானால், அவைகளால் விளையும் தீமை குறைந்திருக்கும்.’’ என எழுதப்பட்டு இருப்பதன் மூலம், பாரதியின் அறம் சார்ந்த கருத்துக்கள் தீமை விளைவித்தன..’’ என சுதேசமித்திரன் ஆங்கிலேயே அரசுக்கு ஆதரவாக எழுதியதை கவனிக்க வேண்டும்.
அதாவது, பிரிட்டிஷாருக்கு வலிக்காமல் சுதந்திரம் கேட்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இன்றும் இது தான் ஊடகங்களின் நிலை. அதிகாரத்தில் இருப்பவர்களை அண்டிப் பிழைத்துக் கொண்டு, அவர்களை பாதிக்காமல் நியாயம் கேட்பதாக பாசாங்கு செய்ய வேண்டும்…என்பதே ஊடகங்களின் எழுதப்படாத ஊடக அறமாக உள்ளது.
சமகாலத்து நேர்மையான எழுத்துக்களை சமரசங்களைவிடுத்து மக்கள் என்றுமே பெரிதாக ஆதரித்துவிடுவதில்லை. ஆதரிப்பதால் தங்களுக்கு நஷ்டம் வராது என்றான பிறகு, காலம் கடந்த நிலையில் ஆதரித்து, தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.
புதுச்சேரிக்கு சென்ற போது முன்பின் தெரியாத ஊரில் அவர் அடைந்த துன்பங்கள், அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல, ஆறு மாத அல்லல் வாழ்க்கைக்கு பிறகே அங்கிருந்து இந்தியா இதழை நடத்துகின்ற சூழல் உருவாகிறது. பின் மீண்டும் தமிழ் நாட்டுக்கு வந்த போது முதலில் தம்பு செட்டித் தெருவில் அவர் தங்கி ஒண்டு குடித்தன வீட்டில் இருந்த போது, அவரது சுதந்திரச் செயல்பாடுகளால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். கடைசியாக அவர் இருந்தது தான் பார்த்தசாரதி கோவில் பின்புறம் உள்ள இல்லம்.
பாரதியார் வாழ்ந்த காலத்தில் வெகு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டார். அதிலும் மிகச் சிலரால் மட்டுமே ஆதரிக்கப்பட்டார். அவருடைய சொந்தச் சாதியில் பதவியிலும், பணத்திலும் கொடி கட்டிப் பறந்தவர்களாலும், ஆச்சார அனுபூதிகளாலும் அவர் புறம் தள்ளப்பட்டார். ஆயினும் ஞாயிறுச் சுடரென ஒளிர்ந்த ஞானக் கிறுக்கன் பாரதியாரை எந்த எதிர்பார்ப்புகளுமற்று, ஆதரித்து அவரை அனுசரித்தவர்களிலும் பெருமளவு அவர் சாதியினரே அதிகம் இருந்தனர்.
Also read
வற்றாத அறிவாற்றல் இருந்தும், வறுமையில் உழன்ற பாரதியார் கடைசி காலத்தில் எழுதி வைத்த ஒரு குறிப்பு ஒன்றை சொல்லி, இந்தக் கட்டுரையை கண்ணீருடன் நிறைவு செய்கிறேன்;
வயிறு வேதனை செய்கிறது. உஷ்ணமிகுதியால் புகையிலை சாற்றினால் தலை கிறுகிறுக்கிறது. உடல் படுத்துக் கொண்டது. கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்துகலந்தது. வைத்தியனுக்கு கொடுக்க பணமில்லை. குழப்பம்! குழப்பம்; தீராத குழப்பம். எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!
1904 ல் தொடங்கிய பாரதியின் எழுத்து வேள்வி 18 ஆண்டுகள் மட்டுமே தொடர முடிந்ததை எண்ணி தமிழ்ச் சமூக குற்றவுணர்வு கொள்ளுமா?
சாவித்திரி கண்ணன்















பாரதி பிறந்தநாளில் வந்துள்ள அவர்பற்றிய
நினைவெழுத்து கண்களில் நீரை வரவழைத்து விட்டது.குறிப்பாகக் கடைசி பத்தி.எவர்க்கும் அஞ்சா எழுத்துப் பணி தொடரட்டும்.
பாரதி பிறந்தநாளில் வந்துள்ள அவர்பற்றிய
நினைவெழுத்து கண்களில் நீரை வரவழைத்து விட்டது!! நேர்மைக்கு என்றுமே சோதனை
Greetings Thanks for HIGHLIGHTING GREAT BARATHIS MIND , DEDICATION , PATRIOTISM , Suffering due to utter poverty .
Yet A GREAT LIGHT HOUSE FOR EVER.
Had the opportunity to visit HIS HOUSE & MEMORIAL recently.
GREAT FREEDOM WARRIOR .
With grateful heart .