நீதிபதி சுவாமிநாதன் குறித்து கடுமையான பல விமர்சனங்கள் உள்ளன. ஆனால், சட்டப்படியாக அவர் வழங்கிய தீர்ப்பு எப்படிப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளாமல், முரட்டுத்தனமான அணுகுமுறைகளில் அவரது தீர்ப்பை அரசியல் ரீதியாக முறியடிக்க முடியுமா? சட்ட வழிமுறைகளின் சாத்தியம் என்ன என்பது குறித்த அலசல்;
திருபரங்குன்றத்தில் கார்த்திகைநாளில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சினை இரு மதத்தினருக்கு இடையிலான பிரச்சினை அல்ல.
ஒருபுறம், இந்து அமைப்பினரும் பாரதிய ஜனதாவும் திராவிட மாடல் ஆட்சியில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை, இந்துக்களின் உணர்வுகளும் உரிமைகளும் மதிக்கப்படுவதில்லை, நீதிமன்றம் அனுமதித்த பின்னரும் அதை நிறைவேற்ற தமிழக அரசு தடை போடுகிறது, அரசியல் சட்ட மாண்பை மீறுகிறது என கூறுகின்றனர்.
மற்றொருபுறம், திமுக அரசும் அதன் ஆதரவாளர்களும், அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாட்டை சங்கிகள் கலவரக் காடாக மாற்ற துடிக்கின்றனர் ‘மாமன் – மச்சான் ‘ போல் வாழ்ந்து வரும் இரு பிரிவினரிடையே தீபம் ஏற்றுவதன் மூலம் மோதலை ஏற்படுத்த முயலுகின்றனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
சமுதாயத்தில் மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் நிலைநாட்ட இந்த இரு அணுகுமுறையும் உதவுகிறதா? அல்லது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் நிலை வேறு ஒன்று இருக்கிறதா? அப்படியாகின் அதை அடைய என்ன செய்ய வேண்டும்? என்பதே நமது தேடல்.
இந்த வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டில், இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அத்தீர்ப்பு முறையானதே.அதை நிறைவேற்ற தமிழக அரசு தவறியுள்ளது என்று தீர்ப்பளித்த பின்னரும், தமிழக அரசு தீர்ப்பை நிறைவேற்றாமல் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. தற்போது வரை உச்சநீதிமன்றத்தில் இம்மனு இன்னும் அனுமதிக்கப்படவில்லை, வரிசையிடப்படவில்லை.
இதனூடே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று ( டிசம்பர் 10,2025) நீதிபதி சுவாமிநாதன் முன் வந்த பொழுது, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதை காரணம் காட்டியதால், வழக்கு விசாரணை வருகிற 17ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ் வழக்கில் இந்திய உள்துறை அமைச்சகத்தையும் இணைத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை ஏடிஜிபி ஆகிய இருவரையும் காணொலி மூலம் ஆஜராக உத்தரவிட்டுள்ளார், நீதிபதி சுவாமிநாதன்.
ஆனால், தமிழகத்தை ஆளும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் “சர்ச்சைக்குரிய தீர்ப்பை” வழங்கியுள்ளார் எனக் கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தை சபாநாயகரிடம் வழங்கியுள்ளனர்.

சட்டப்படியான மேல் முறையீடு இருக்கும் போது, மேல்முறையீட்டில் – உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற அமர்வு, உச்ச நீதிமன்றம், அடுத்து மறு விசாரணை கோரும் முறையீடு- என நான்கு அடுக்குகள் இருக்கும் பொழுது – நீதிபதியை பதவிநீக்கம் செய்யக் கூறுவது அரசியல் மாண்பா? அல்லது அரசியலா?
இத்துடன் இல்லாமல், தமிழ்நாட்டு சமூக வலைதளங்களிலும், தெருக்களிலும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனை “சங்கி”, பார்ப்பனர், ஆர் எஸ் எஸ் சின் கைக்கூலி போன்ற வசைபாடும் விமர்சனங்களும், போஸ்டர்களும் நிரம்பி வழிகின்றன. ஒரு நீதிமன்றத் தீர்ப்பை அறிவுள்ளோர் இந்த முறையில் எதிர்கொள்ளமாட்டார்கள்.
அப்படி என்ன கலவரத்தை தூண்டும் உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்? இந்த வழக்கில் அரசியல் சாசன முறைமையை ஒதுக்கிவிட்டு சனாதனத்தை எங்கே தூக்கி பிடித்தார்? அவர் முன் வந்த வழக்கு விவரம் என்ன?
ராம ரவிக்குமார் என்பவரால் இவ்வழக்கு – writ petition- ஆக தொடுக்கப்பட்டுள்ள இவ் வழக்கின் முக்கிய புள்ளிகள் என்ன? எந்தெந்த கோணங்களில் இதை நீதிபதி சுவாமி நாதன் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளார்?

# கோவில் நிருவாகத்திற்கு தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றோ, தீபத் தூணிலும் ஏற்ற வேண்டும் என்றோ நீதிமன்றம் உத்தரவிடமுடியுமா?
# இதைக் கோருவதற்கு மனுதாரர்களுக்கு அருகதை உள்ளதா?
# முந்தைய வழக்குகளின் தீர்ப்பால் இவ் வழக்கின் கோரிக்கை பாதிக்கப்படுகிறதா ?
தீபத்தூணில் தீபம் ஏற்றுவதால் தர்காவின் உரிமைகள் பாதிக்கப்படுமா? அல்லது 1991ம் ஆண்டின் வழிபாட்டுதலங்கள் சிறப்பு சட்டக் கூறுகள் மீறப்படுகிறதா ?
என்ற கேள்விகளை முன் வைத்துத் தான் நீதிபதி சுவாமிநாதன் இவ்வழக்கை ஆராய்ந்துள்ளார் என்பது தீர்ப்பை முழுவதுமாக படித்தவர்கள் புரிந்து கொள்ள முடியும். நுனிப்புல் மேயபவர்களே சமூக ஊடகங்களில் அதிகமுள்ளதால் உண்மைகள் மக்களை சென்றடைவதில்லை.
கார்த்திகை திருநாளில் குன்றில் ஒளியேற்றுவது தமிழர்களின் பழமையான மரபு என்றும், தீபத்தூண் மலையின் நடுப்பகுதியில் உள்ளது. அது கோவில் சொத்து தான் என்றும் , 1996ல் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் 3 மற்றும் 4வது சரத்துக்களின் அடிப்படையில்- வருங்காலங்களில், தர்காவின் அருகாமையை கணக்கில் கொண்டு 15 மீட்டர்களுக்கு அப்பால் குன்றின் எந்தப் பகுதியிலும் தீபம் ஏற்றலாம் என அனுமதித்து உள்ளதால், இந்துக்களின் சொத்து எல்கைக்கு உட்பட்ட தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.

இதை எதிர்த்த அரசு மற்றும் கோவில் தரப்பு வைத்த வாதங்கள்;
# கடந்த 100 ஆண்டுகளாக தீபம் உச்சிபிள்ளையார் கோவில் அருகில் தான் (மோட்ச தீபம்) ஏற்றபடுகிறது, தீபத்தூணில் அல்ல!
# இந்த விவகாரம் சிவில் கோர்ட் மூலம் எல்லைகளை வரையறை செய்த பிறகு தான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்
# 2014 ல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏற்கனவே எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என கூறியுள்ளது. இதில் மாற்றம் செய்ய வேண்டுமெனில், அது இந்து அறநிலைய சட்ட விதி 63 ன்கீழ் ‘வழக்கமான முறை’ பற்றிய கேள்விக்கு பதில் காண வேண்டும்.
# இந்த மனுதாரருக்கு இவ்வுரிமை கோர எந்த உரிமையும் இல்லை.
மனுதாரர்கள் மத கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் வழக்கு போட்டுள்ளதாக பதில் தாக்கல் செய்தனர்.
இவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக நீதிபதி கீழ்வருமாறு தீர்ப்பில் விவரித்துள்ளார்:
திருப்பரங்குன்ற மலையில், அடிவாரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவிலும், உச்சிபிள்ளையார் கோவில் நடுத்தளத்திலும்,
சிக்கந்தர் பாதுஷா தர்கா மலை உச்சியிலும்,
தீபத்தூண் கீழ் முகட்டிலும் தர்காவிலிருந்து 50 மீட்டர் (164 அடி) தொலைவில் உள்ளது .
இஸ்லாமிய மக்களுக்கு நெல்லித்தோப்பு பகுதி மற்றும் சிக்கந்தர் மசூதி உள்ள இடம் அதற்கு இட்டுச் செல்லும் பாதை ஆகிய மூன்று பகுதிகளின் மீது உரிமை உள்ளது. எஞ்சிய மலைப்பகுதி முழுவதும் இந்துக்களுக்கு பாத்தியப்பட்டது என்றும் ப்ரிவி கவுன்சில் அன்றைய பிரிட்டிஷ் காலகட்ட தீர்ப்பில் கூறியுள்ளது. எனவே, தீபத்தூண் என்பது கீழ் முகட்டில், இந்துக்களுக்கு உரிமையான இடத்தில் தான் இருக்கிறது. எனவே, இவ்வரையறையை சிவில் கோர்ட்டிற்கு சென்று தீர்மானிக்க வேண்டியதில்லை.
மனுதாரர்கள் இந்து அறநிலைய சட்டம் விதி 6(15) ன்படி கோவில் பக்தர்கள் என்பதால், அவர்களுக்கு தீபத்தூணில் தீபம் ஏற்ற அறிவுறுத்தலை கோர உரிமையுள்ளது.
மேலும் 2014 ல் கோரப்பட்ட மனுக்கள் – மலைஉச்சியில் இஸ்லாமிய மக்களுக்கு உரிமையான இடத்தில் – தீபம் ஏற்ற அனுமதி கோரிய மனுக்களே ஆகும். அவற்றை நிராகரித்து அளிக்கப்பட்ட தீர்ப்புகள் , மலை உச்சியில் தீபம் ஏற்ற கூடாது என்ற தீர்ப்புகளே ஒழிய தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான கோரிக்கையோ, அது தொடர்பான தீர்ப்போ இல்லை !
எனவே, இவ் வழக்கில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்ற கோணம் பொருந்தாது!
தீபத்தூணில் தீபம் ஏற்றுவதால், அவ்விடத்தின் சமயக் குணாதிசயத்தை யாரும் மாற்றவில்லை. இஸ்லாமிய தர்காவின் அமைப்பை, உரிமையை இது குலைக்கவுமில்லை ! ஏனெனில் தீபத்தூண் இந்த மூன்று இஸ்லாமிய பகுதிகளுக்கு அப்பால் – 1996-ல் நிர்ணயிக்கப்பட்ட இடைவெளிக்கு அப்பால்- தான் உள்ளது.
கோவில் நிருவாகம் நிராகரித்த தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியாது என நிராகரித்த முடிவு கோவில் புரவலர் குழு -டிரஸ்டு – எடுத்த முடிவல்ல, செயல் அதிகாரி எடுத்த முடிவுதான்! எனவே, அம்முடிவு அதிகாரமற்ற முடிவாகும்.

எனவே, கோவில் நிருவாகம் கார்த்திகை தீபத்தை உச்சிபிள்ளையார் கோவிலில் ஏற்றுவதோடு சேர்த்து, தீபத் தூணிலும் ஏற்ற இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதற்கு காவல்துறை உரிய பாதுகாப்பை கொடுக்கவும் நீதிமன்றம் உத்திரவிடுகிறது’’ என்று தீர்ப்பு வழங்கி உள்ளார், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் .
இதில் எங்கே “அரசியல் சாசன முறைமையை” புறக்கணித்து, ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் நீதிபதி தீர்ப்பளித்தார் என்பது நமக்கு விளங்கவில்லை!
மனுதாரர்களை அவர்களின் கோரிக்கைகளை சட்டப்படி ஆராயாமல் அணுகாமல், மனுதாரர் இந்த கட்சியை சேர்ந்தவன் என்றோ, இந்த சித்தாந்தத்தை உடையவன் என்றோ அணுக முடியுமா? சட்டத்தில் இடம் உள்ளதா? மனுதாரர் எவரையும் “சங்கி” என கூறி அவரது கோரிக்கையை நிராகரிக்க முடியுமா?
தீர்ப்பில் உடன்பாடு இல்லை என்பவர்கள் அதை முறியடிக்க சட்டத்தில் உள்ள வழி முறைகளை மறந்து, நீதிமன்ற அவமதிப்பை நியாயப்படுத்தலாமா?
நீதிபதியை தரக்குறைவாக விமர்சிக்கலாமா?
இவையெல்லாம் ஜனநாயக சட்ட வழி முறைகளா? அல்லது பாசிச குணநலன்களா?
மத நல்லிணக்கத்தை பேண வேண்டியவர்கள் , மதவெறியை முறியடிக்க உண்மைகளை துணைக்கு அழைக்க வேண்டுமே ஒழிய, அவதூறுகளை துணைக்கழைக்க கூடாது!

திருப்பரங்குன்றத்து இஸ்லாமிய மக்கள் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்க்காத சூழலில், நீதிமன்றம் உத்தரவிட்டும், திமுக அரசு அதை நிறைவேற்றாமல் பிரச்சினை செய்வது, சிறுபான்மையினரின் நலன் காக்குஞ் செயலாகுமா? இது நீதிமன்றம் மீது மக்கள் வைத்துள்ள மதிப்பையும், நம்பிக்கையையும் சிர்குலைக்காதா?
இதன் மூலம் இந்திய அரசியல்சாசன வழிமுறைகளுக்கு திமுக அரசு வேட்டு வைக்கும் நடைமுறையில் இறங்கியுள்ளதோ எனக் கருத இடமளிக்கிறது. இதனை புரிந்தோ, புரியாமலோ கூட்டணி கட்சிகள் முட்டுக்கொடுப்பது தமிழ்நாட்டின் துர்ப்பாக்கியமாகும்.
ஒரே வகையான வெறுப்பும், மோதல் போக்கும் தான் இதில் இரு தரப்பினரிடமும் தென்படுகிறது. வாக்குகளுக்காகவே கொள்கைகளும், நல்லிணக்க உணர்வும், சட்ட மாண்பும் இந்த இரு தரப்பினராலும் பலியாக்கப்படுகிறது.
Also read
ஆக, இரு தரப்பிற்கும் இப் பிரச்சினையில் ஒரேவிதமான அணுகுமுறையே உள்ளது.தனது அணுகுமுறைகளின் மூலம் திமுக அரசு தமிழகத்தில் வலதுசாரி இந்துத்துவ சக்திகள் வலுப்பெறுவதற்கான களத்தை உருவாக்கித் தருகிறதோ.. என்ற சந்தேகமே வலுக்கிறது.
நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கடமையை நிறைவேற்றும் வகையில் அங்கு தீபம் ஏற்றிவிட்டு கடந்திருந்தால், இது பெரிய பிரச்சினையாக உருவாகும் வாய்ப்பு தடுக்கப்பட்டிருக்கும். பெரும் பேசு பொருளாகும் வாய்ப்பும் தவிர்க்கப்பட்டு இருக்கும். ஆனால், நடந்திருக்கும் விவகாரங்களையும், இந்தப் பிரச்சினை செல்லும் திசையையும் பார்த்தால் இதில் பாஜக vs திமுக என்ற இருதுருவ அரசியலை கூர்மைபடுத்தும் கெடு நோக்கம் உள்ளது புரிய வரும்.
தினை விதைத்தவன் தினை அறுப்பான் ,
வினை விதைத்தவன்..?
ச.அருணாசலம்















அறம் இதழில் இந்த ஜி ஆர் சாமிநாதன் ஆதரவு கட்டுரையை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
சாமிநாதனை ஆதரிப்பவர்கள் யார் யார் என்று பார்த்தாலே சாமிநாதனின் நோக்கம் என்ன என்பது தெளிவாகும்.
தீபம் ஏற்றும் வழக்காகட்டும் எச்சில் இலையில் உருளுவது பற்றிய தீர்ப்பாகட்டும்
அவசர அவசரமாக உடனே வழங்க வேண்டிய அவசியம் என்ன
எச் ராஜாவை பாண்டே வை பொது வெளியில் போராளி என்பது போல் புகழ்ந்து பேசியதாகட்டும் என இவை எல்லாம் கட்டுரை கட்டுரையாளரின் கண்களுக்கு த் தெரியவில்லை.
கட்டுரையாளர் அருணாசலம் ஒரு சார்பாகவே இதில் எழுதியுள்ளார் .
இந்த கட்டுரையை வெளியிட்டதன் மூலம் அறம் இதழ் இதில் நடுநிலை தவறிவிட்டது என்பதே என் கருத்தாகும்
வீர எல்லாளன் அவர்களுக்கு தீர்ப்பு ஏதேனும் குறை உள்ளதா அதை மட்டும் தெரிவிக்கவும்