இண்டிகோவிடம் சரணாகதியான இந்திய பாஜக அரசு!

-சாவித்திரி கண்ணன்

விமான பைலட்டாக இருப்பது  பேரவலம்! நம் சமூகத்தில் பஸ், லாரி டிரைவர்கள் சந்திப்பதைவிட அதிக துயரங்களையும், பணி நேரங்களையும் கொண்டதாக உள்ள பைலட்டுகளின் பணி நிலை! இதைச் சரி செய்ய, பாஜக அரசு செய்த ‘பாச்சா’ பலிக்கவில்லை, இண்டிகோவிடம்!  ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்தாகி, பயணிகள் படு அவஸ்த்தை! ஏன்? எதனால்?  

முறையான ஓய்வின்றி 14 மணி நேரம் வரை வேலை வாங்குவது, சவாலான பருவ நிலைகள், உடல் நல பாதிப்புக்கு கூட மருத்துவ விடுப்பு கிடைக்காத நிலைமை போன்றவற்றால், பைலட்டுகளில் சிலர் அடுத்தடுத்து ஹார்ட் அட்டாக்கில் இறந்ததும், தொடர் வேலை பளுவாலும், தூக்கமின்மையாலும் விபத்துகள் தொடர்ந்து நடப்பதும் அவர்களின் வேலை நேரத்தை வரைமுறைப்படுத்தி, அவசியமான ஓய்வை உத்திரவாதப்படுத்தும் நிலைக்கு அரசை தள்ளியது எனலாம்.

அதுவும் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக இந்த கோரிக்கையை விமானிகள் வைத்து போராடி வருவதோடு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் நீதிமன்றமும், இதில் மனிதாபிமானத்தோடு வேலை நேரத்தை நிர்ணயித்த பிறகும், ”இதை நாங்கள் அமல்படுத்த மாட்டோம்” என ஒரே ஒரு நிறுவனம் அராஜகமாக நடந்து கொள்கிறது. அந்த நிறுவனத்தை அரசாங்கத்தாலேயே ஒன்றும் செய்ய முடியாமல் தான் போட்ட உத்தரவை அரசே திருப்பி பின்வாங்கிக் கொண்டது என்றால், பாருங்களேன்…! அந்த நிறுவனத்தின் பெயர் தான் ‘இண்டிகோ’

தரையில் ஓட்டப்படும் கார், பஸ், லாரி போல விமானத்தில் ஏறி உட்கார்ந்தவுடன் துவங்குவதல்ல, விமான ஓட்டிகளான, பைலட்டுகளின் பணி.

ஒரு விமானி விமான நிலையத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் சில முன்பணிகளை செய்த பிறகே விமானத்தை ஓட்ட முடியும். இதில் தங்கள் முன்பயணக் கடமைகளாக எரிபொருள் திட்டமிடல், வானிலை குறித்த மதிப்பீடுகளை கணித்தல், விமானத்தின் முக்கிய பாகங்களை பரிசோதித்தல் ஆகியவற்றுக்கு பிறகே விமானத்தை ஓட்ட துவங்கலாம்.

அதே போல இறங்கும் இடத்தில் பார்க்கிங் பிரேக் அமைக்கப்படும் போது விமானக் கடமை காலம் முடிவடைந்தாலும், விமானிகள் அனைவரும் இறங்கும் வரை காத்திருந்து, பிறகு விமானத்திலேயே தங்கள் விமானப் பயணத்திற்குப் பிந்தைய சோதனைகளை முடித்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட ஆவணங்களை அலுவலகத்தில் தாக்கல் செய்துவிட்டு, சுங்கம் மற்றும் குடியேற்றத்தை முடித்துக் கொடுக்கும் போது தான் அவர்கள் பணி நிறைவடையும்.

ஒவ்வொரு  விமான சேவையிலும் இந்த முன் தயாரிப்பும், இறுதி கட்ட பணிகளுக்குமாக இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் ஆகிறது. நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று சேவை செய்யும் விமானிகள் விமானத்தை ஓட்டுகின்ற நேரம் எட்டு மணி நேரமென்றால், இந்தப் பணிகளுக்கு நான்கு முதல் ஆறு மணி நேரம் கூடுதலாக தருகிற போது அவர்களின் பணி நேரம் அதிகரித்துவிடுகிறது. இதில் நீண்ட தூரப் பயணச் சேவை தரும் விமானிகளை தொடர்ச்சியாக இரண்டு இரவுகள்  வேலை வாங்குவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பதையும் இண்டிகோவால் செயல்படுத்த முடியவில்லை.

பருவச் சூழல்களால் ஒழுங்கற்ற வேலை நேரம், நீண்ட நேர ஷிப்டுகள், ஜெட் லேக் மற்றும்  சுமை தரும் பொறுப்புகள் காரணமாக விமானிகள் மிகுந்த  உடல் சோர்வையும், மன அழுத்தத்தையும் எதிர் கொள்கின்றனர்.

விமான ஓட்டிகள்  அமர்ந்து செயல்படும் காக்பிட்கள் எனப்படும் வரையறுக்கப்பட்ட குறைவான இடம், காற்று நெரிசல், குறைந்த வெளிச்சம், பின்னணி இரைச்சல் மற்றும் அதிர்வு ஆகியவற்றிற்கு தொடர்ந்து ஈடு கொடுத்து விமான சேவை வழங்குகிறார்கள், விமானிகள்! பணி அழுத்தத்தில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் உடலை தொடர்ந்து மாற்றியமைக்க கட்டாயப்படுத்துகின்றன! வெவ்வேறு நாடுகளின் வெவ்வேறு சீதோஷண நிலை,  ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும் கடிகார சுழற்சி,  இரவு எது பகல் எது என அறிய முடியாத சூழல் அவர்களின் தூக்கத்தை சீர்குலைத்து சோர்வை ஏற்படுத்துவதோடு, வளி மண்டல ஆக்ஸிஜன் குறைவால் மூச்சுத் திணறலையும் எதிர் கொள்கிறார்கள்! இதன் விளைவாக அதிகப்படியான சோர்வு மற்றும் மயக்க நிலையால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றன.

இதனால் தான் விமானிகளுக்கான புதிய தளர்வான வேலை நேரங்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கொண்டு வர வேண்டிய கட்டாயம் உருவானது. ஆனால், இதை அமல்படுத்த ஒரு வருட அவகாசம் கேட்டு நிர்பந்தித்து பெற்றது இண்டிகோ.

புதிய வேலை நேரம் ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் என்று பிப்ரவரியில் தீர்ப்பளித்தது, டெல்லி உயர் நீதிமன்றம். இதன் மூலம், DGCA-வின்  பழைய 2019 விதி முறைகளுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் விமானிகளின் தொழிற்சங்கங்கள் நடத்திய ஆறு ஆண்டுகாலப் போராட்டம் முடிவுக்கு வந்தது என சந்தோஷப்பட்டதெல்லாம் தற்போது வீணாகிவிட்டது.

இதை டிசம்பரில் தான் அமல்படுத்த முடியும் இண்டிகோ கூறியதற்கும் அரசு பணிந்தது. அதே போல டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி, இந்த சட்டம் அமலுக்கு வந்தவுடன் இண்டிகோ பிரச்சினை செய்ய ஆரம்பித்துவிட்டது.

இந்தியாவின் மொத்த விமான சேவைகளில் 65 சதவிகிதத்தை தன்னகத்தே கொண்ட இண்டிகோ, நாளொன்றுக்கு சுமார் 2,200 விமான சேவைகளை தந்து வந்த சூழலில் திடீரென்று 600 முதல் 1,000 சர்வீஸ்கள் வரை ரத்து செய்தது. மேலும் விமானம் புறப்படும் நேரத்தை இஷ்டத்திற்கு காலதாமதப்படுத்தியது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இப்படி ஆயிரக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்தும், லட்சக்கணக்கான பயணிகளை, பயணிக்க இயலாமல் தவிக்கவிட்டும், ஆட்டம் காட்டி வந்தது, இண்டிகோ.

பயணிகளின் கோபத்தையும், கொந்தளிப்பையும் உணர்ந்த மத்திய அரசு சில மென்மையான நடவடிக்கைகளை எடுத்தும் ஒன்றும் சரிவரவில்லை. எனவே, தற்போது அரசே பின்வாங்கி பிப்ரவரி 10, 2026 வரை கால மீண்டும் அவகாசம் தந்துள்ளது.

இந்திய விமான சேவைகள் வரலாற்றில் இது போன்ற  அவஸ்த்தைகளை மக்கள் சந்தித்ததில்லை. ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கிலான விமானங்கள் ரத்தாவதும், மிகக் காலதாமதமாக புறப்படுவதுமாக இண்டிகோ தந்த இம்சையால் ஒரு தம்பதியினர் குறிப்பிட்ட நேரத்திற்கு தங்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் விமான நிலையத்தில் இருந்தே கான்பிரன்சில் தங்கள் வரவேற்புக்கு வந்தவர்களை வரவேற்று, சாப்பிட்டுச் செல்லும்படி கூறியுள்ள கூத்தும் அரங்கேறியது.

சாவுக்கு செல்ல முடியாதவர்கள், வியாபார சந்திப்புகளை நடத்த முடியாதவர்கள், குறிப்பிட்ட நாளில் வேலையில் சேர முடியாதவர்கள், பரிட்சை எழுத முடியாதவர்கள்.. என ஆயிரக்கணக்கானவர்கள் சந்தித்த அவஸ்த்தைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

விமானிகளை மனிதாபிமானத்தோடு நடத்துங்கள் என்ற ஒரே ஒரு நிர்பந்ததைக் கூட இந்திய அரசால் இண்டிகோ எனப்படும் ஒரு தனியார் விமான நிறுவனத்திடம் சாதிக்க முடியவில்லை. அவர்களின் லாப நோக்கம் மனிதாபிமானத்திற்கு இடம் தர மறுக்கிறது என்றால், தேர்தல் நிதியாக இண்டிகோ பாஜகவுக்கு தந்த பல கோடிகள், அதற்காக பாஜக தந்த தேர்தல் பத்திரங்கள் அவர்களின் மீதான சட்ட பூர்வ நடவடிக்கைக்கு தடையாகிறது.

லஞ்சம் வாங்குவதை சட்ட பூர்வமாக சாதித்துக் கொண்ட பாஜக அரசு, சட்ட பூர்வமாக இயங்க மறுக்கும் இண்டிகோ நிறுவனத்திடம் சரணடைந்தது. நேர்மையை பலி கொடுத்தால், உரிமையையும், அதிகாரத்தையும், பறிகொடுக்க வேண்டியிருக்கும் என்பதே இந்த விவகாரத்தில் நாம் பெறும் செய்தியாகும்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time