வலிமை பொருந்தியவர்கள் நிலத்தையும், வளத்தையும் மட்டுமல்ல, வரலாற்றையும் ஆக்கிரமித்து தங்களுக்கானதாக ஆக்கிவிடுகிறார்கள். குடியேறிகளின் தேசமான அமெரிக்காவில் வசித்த பூர்வகுடிகள் தங்கள் பூர்வீக நிலத்தை கண்டடையும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இணைய தளம் குறித்த அரிய தகவல்கள்;
அமெரிக்கா யாருடைய நிலம்? எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது ’நேட்டிவ்லாண்ட்.கே (https://native-land.ca/) இணைய தளம். இந்த தளத்தின் நோக்கத்தையும், இதன் செயல்பாட்டுத் தன்மையையும் தெரிந்து கொண்டால் வியப்பாக இருக்கும். அதோடு இணையத்தின் சாத்தியங்களை நினைத்தும் ஊக்கம் உண்டாகும்.
அமெரிக்கா குடியேறியவர்களின் தேசம். அந்த நிலப்பரப்பு கண்டுபிடிக்கப்பட்டதற்கு பின் மேற்கொள்ளப்பட்ட காலனியாதிக்கத்தையும் உலகம் அறியும். குடியேற்றத்தின் போது செவ்விந்தியர்கள் உள்ளிட்ட பூர்வகுடியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், தொடர்ந்த அடக்குமுறைகளும் வரலாற்று பக்கங்களில் பதிவாகியிருக்கிறது.
மண்ணின் மைந்தர்களாகிய பூர்வகுடி மக்கள் தங்கள் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு பின்னுக்குத் தள்ளப்பட்டனர்.
பூர்வகுடி மக்கள் தங்கள் பாரம்பரிய நிலப்பரப்பை இழந்தாலும், அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் இழக்காமல் இருக்க முயன்று கொண்டிருக்கின்றனர். கால மாற்றத்தில், அரசு தரப்பிலும் இதற்கான ஆதரவு இருக்கிறது. சமூக அளவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
டிஜிட்டல் வரைபடமாக்கலை அடிப்படையாக கொண்ட இந்த தளம், வழக்கமாக நாமறிந்த வரைபட தன்மையை தலைகீழாக மாற்றிப்போட்டு, வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கிறது. அப்படியே பூர்வகுடி மக்களுக்கான நியாயத்தையும் வழங்க முற்படுகிறது.
அமெரிக்கா என்றதும் வழக்கமாக நினைவுக்கு வரக்கூடிய எதுவும் இந்த வரைபடத்தில் கிடையாது. அதன் சமகால மாகாண எல்லைகளும், முக்கிய நகரங்களும் இந்த வரைபடத்தில் இடம் பெறவில்லை. நவீன அமெரிக்காவின் அடையாளமாக திகழும் ஹாலிவுட்டும், டிஸ்னிலாந்தும் இந்த வரைபடத்தில் இல்லை.
இது வேறு வரைபடம்
இவற்றுக்கு மாறாக, முந்தைய அமெரிக்காவின் பூர்வகுடி நிலப்பரப்புகளையும், அவற்றுக்கான எல்லைகளையும் கொண்டதாக இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பூர்வகுடிகளின் நிலப்பரப்பை நினைவில் நிறுத்துவதே இந்த தளத்தின் நோக்கமாகவும் அமைகிறது.
இதன் பூர்வகுடி வரைபடம் இந்த நோக்கத்தை பிரதிபலிக்கிறது. காலனியாதிக்கவாதிகளின் குடியேற்றத்திற்கு முந்தைய அமெரிக்காவை சித்தரிக்கும் இந்த வரைபடத்தில், எந்த நிலப்பகுதியில் மவுஸ் கர்சரை கொண்டு சென்றாலும், அந்த இடம் குறிப்பிட்ட எந்த இனக்குழுவுக்கு சொந்தமானதாக இருந்தது எனும் தகவல் சுட்டிக்காட்டப்பட்டு, அவர்கள் மொழி, கலச்சாரம் மற்றும் அவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பான விவரங்களும் தோன்றுகின்றன.
அதே போல தற்போதைய இடம் அல்லது முகவரையை இதன் தேடல் கட்டத்தில் குறிப்பிட்டால், இதற்கு முன் அந்த இடம் எந்த பூர்வகுடியினருக்கு உரியதாக இருந்தது எனும் தகவலை தெரிந்து கொள்ள முடிகிறது. இவ்விதம் பார்த்தால், அமெரிக்காவின் அடையாளங்களில் ஒன்றான சுதந்திர தேவி சிலை, லெனாப்பே (Lenape) பூர்வகுடி நிலத்தில் அமைந்திருக்கிறது. அமெரிக்க அரசின் தலைமை அலுவகமான வெள்ளை மாளிகை பமுன்கி மற்றும் பிஸ்க்டாவே ஆகிய இரண்டு பூர்வ குடிகளுக்கு உரிய நிலப்பரப்பு இணைந்த பகுதியில் அமைந்திருக்கிறது.
அப்படி அமெரிக்காவில் தற்போதுள்ள இடங்கள் உண்மையில் எந்த பூர்வகுடியினருக்கு உரியவை என்பதை இந்த பூர்வகுடி நிலம் வரைபடம் சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்கா முழுவதும்!
அமெரிக்கா எனும் போது, ஐக்கிய அமெரிக்க குடியரசு மட்டும் அல்ல, கனடா, மெக்சிகோ, அலஸ்கா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய மொத்த வட அமெரிக்காவையும் பூர்வகுடி நோக்கில் இந்த வரைபடம் பார்வையாளர்கள் முன் வைக்கிறது.
பூர்வகுடி மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில் பூர்வகுடி மக்களுக்கான தினமும் சில ஆண்டுகளுக்கு முன் அங்கீகரிக்கப்பட்டது.
பூர்வகுடிகளின் வரலாற்றுப் பின்னணியில் தான், பூர்வகுடி நிலம் வரைபடம் (Native Land) , வட அமெரிக்க மண்ணின் மைந்தர்களின் நில உரிமை மற்றும் நிலம், நீருடன் அவர்களுக்கு இருந்த நெருக்கமான பிணைப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
உலக அளவில்..
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்ட போது, கனடாவில் உள்ள பூர்வகுடி மக்கள் நிலப்பரப்பை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருந்த இந்த வரைபடம் தற்போது அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பூர்வகுடி மக்களின் வரைபடமாக விரிவடைந்துள்ளது. அடுத்த கட்டமாக ஆப்பிரிக்க கண்டத்து பூர்வகுடி மக்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
பூர்வகுடி நிலம் வரைபடம் தவிர இந்த தளத்தில் இடப் பெயர்களை குறிக்கும் இன்னொரு வரைபடமும் இருக்கிறது. அந்த வரைபடத்தை அணுகினால், அமெரிக்க நிலப்பரப்பின் மீது அதன் பூர்வகுடி இடங்களின் பெயர்களை மட்டும் காணலாம். இணையதளம் தவிர, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான செயலி வடிவிலும் இந்த சேவையை அணுகலாம்.
பூர்வகுடி மக்களின் வரலாற்று உரிமை தொடர்பான புரிதலை வழங்கும் இந்த தளம், விக்டர் டெம்பரனோ (Victor Temprano ) எனும் தனிமனிதரின் முயற்சியால் துவங்கி வளர்ந்து, இன்று பூர்வகுடி மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் லாப நோக்கிலாத அமைப்பாக உருவாகியிருக்கிறது.
கனடாவைச் சேர்ந்த மென்பொருள் வல்லுனரான டெம்பரனோ தன்னை செயற்பாட்டாளர் டெவலப்பர் என்றே வர்ணித்துக் கொள்கிறார். கடந்த பத்தாண்டுகளுக்கு முன், கனடாவில் நடைபெற்ற குழாழ் வரிசை பிரச்சனையின் போது, இவரும் அந்த போராட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.

போராட்டத்திற்கு ஆதரவாக தனது தொழில்நுட்ப திறனை பயன்படுத்த விரும்பியவர், இந்த பிரச்சனை தொடர்பான தகவல்கள் போராட்டக்காரர்கள் மத்தியில் கூட அதிகம் அறியப்படாமல் இருப்பதை கவனித்தார். இந்த தகவல்களை வழங்கும் நோக்கத்துடன் பைப்லைன் வாட்ச் எனும் இணையதளத்தையும் உண்டாக்கினார்.
போராட்டம் தந்த ஊக்கம்
இந்த போராட்டத்திற்கு ஆதரவான தகவல்களை திரட்டிய போது தான், பூர்வகுடி மக்களின் நிலப்பரப்பு உரிமை தொடர்பான தரவுகளை சேகரித்தார். அப்போது தான், இந்த தரவுகளுக்கு என்றே தனியே ஒரு இணையதளம் தேவை என்பதை உணர்ந்து, பூர்வகுடி மக்களின் பாரம்பரிய நிலப்பரப்பை அடையாளம் காட்டும் நேட்டிவ்லாண்ட் வரைபடத்தையும், அதற்கான தளத்தையும் உருவாக்கினார்.
தொடர்ந்து இந்த வரைபடத்தை விரிவாக்கியவர், பூர்வ குடி மக்களின் வாய்மொழி வரலாறு, ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து தகவல்களை சேகரிப்பதாக சொல்கிறார். இந்த தளம் விழிப்புணர்வு நோக்கிலானது என்று கூறுபவர், குடியேறியவர் என்ற முறையில் மற்ற குடியேறிவர்கள் மத்தியில் புரிதலை உண்டாக்கி, அவர்கள் வரலாற்று மனசாட்சியில் இதற்கான விதையை விதைக்கும் முயற்சி என்று நேர்காணல் ஒன்றில் இந்த திட்டம் பற்றி கூறியிருக்கிறார்.

பூர்வகுடி மக்கள் வரலாறு, அவர்கள் நில உரிமை பற்றி நினைத்துப் பார்க்காதவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முதன்மை நோக்கம் என்றும் கூறியுள்ளார்.
வரைபடத்தில் இடம்பெறும் பூர்வகுடி நிலப்பரப்பு தொடர்பான தகவல்களில் திருத்தம் அல்லது கூடுதல் தகவல்களை சேர்க்க உரியவர்கள் கோரிக்கை வைத்தால் அதையும் நிறைவேற்றுகிறார். இப்படி நூற்றுக்கணக்கான மெயில்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பூர்வகுடி மக்களையும் தனது இயக்குனர் குழுவில் கொண்டு இந்த அமைப்பு தற்போது இயங்கி வருகிறது. இதன் செயல்பாடுகள் குறித்து இணைய தளத்தில் இன்னும் விரிவாக அறியலாம்.
திறவுமூல தரவுகள்
இந்த வரைபடங்களை திறவுமூல தன்மையோடு உருவாக்கியிருக்கிறார். எனவே, யார் வேண்டுமானாலும் இந்த தரவுகளை தங்கள் திட்டங்களில் ஒருங்கிணைத்துக் கொள்ளலாம்.
‘தன்னைப் போன்ற பூர்வகுடி அல்லாதவர்களுடன் பூர்வகுடி மக்கள் வரலாற்றுடன் நட்பாக – சுவாரஸ்யமான முறையில் தொடர்பு கொள்ளும் முயற்சியாக – இந்த திட்டம் அமைகிறது’ என கூறும் டெம்பரனோ, ”தொழில்முறையாக தான் மேற்கொண்ட திட்டங்களிலேயே அதிகம் பெருமிதம் கொள்ளும் முயற்சியாக இது அமைகிறது” என்கிறார்.
‘பூர்வகுடி மக்களுக்கான வரைபடத்தை ஏன் உருவாக்கினேன்?’ என கோட்மெண்டர் தளத்தில் எழுதியுள்ள நீளமான பதிவில், இந்த திட்டத்தின் பின்னே உள்ள ஊக்கம் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார்: https://www.codementor.io/@victorgerardtemprano/how-and-why-i-built-native-land-ca-esd6ahzab
சைபர்சிம்மன்

நரசிம்மன் என்ற இயற்பெரைக் கொண்ட சைபர்சிம்மன், தமிழில், இணையம், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் குறித்து நீண்ட காலமாக எழுதி வருகிறார். இவை குறித்து நிறைய நூல்களை எழுதியுள்ள இவர் ‘இணையமலர்’ என்ற இதழின் ஆசிரியராகவும் உள்ளார்.
























Leave a Reply