பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்பு..போன்றவற்றில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. தற்போதைய பாராளுமன்றத்தில் 24 முஸ்லிம்களே உள்ளனர். மக்கள் தொகையில் 14.2 % உள்ள முஸ்லிம்களுக்கு 4.4% இடம் மட்டுமே உள்ளது. மதச்சார்பற்ற கட்சிகளே முஸ்லீம்களுக்கு உரிய இடம் தருவதில்லை;
அப்துர் ரஹ்மானாகிய நான் எழுதிய Absent in Politics and power – political exclusion of Indian muslims என்ற எனது நூல் 2023 ஏப்ரலில் வெளிவந்தது. இந்த நூலை சமூக விஞ்ஞானிகள், கலைஞர்கள், அரசியல் கட்சிகள், இசுலாமிய தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டினர். சமூக வலைத்தளங்களிலும் இது பேசப்பட்டது. இந்த நூலை மொழிபெயர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முதலில் சமூக நீதி பேசும் பெரியார் இருந்த தமிழ்நாட்டில் இருந்து தான் வந்தது. பி.ரியாஸ் அகமது இதனை ‘அரசியலிலும், அதிகாரத்திலும் இடமில்லை இந்தியாவில் ஓரம் கட்டபடும் முஸ்லீம்கள்’ என்ற தலைப்பில் நன்கு மொழி பெயர்த்துள்ளார். இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் சம்பந்தமாக இப்படிப்பட்ட ஆரோக்கியமான விவாதங்களை நடத்தும் சூழல் மற்ற மாநிலங்களில் இல்லை.
பாராளுமன்றத்தில் முஸ்லீம்களுக்கு 70% உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் 4,200 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதில், முஸ்லிம்கள் சட்டமன்ற உறுப்பினர் 300 தான். அதாவது 50 % உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு டில்லி, மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா போன்ற அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லை. மாநில அமைச்சரவையில் அவர்களுக்கு இடமில்லை. இதனால் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. பொதுவெளியில் அவர்களின் குறைகள் கேட்கப்படுவதில்லை.

இது போதாதென்று, முஸ்லிம்களை குறி வைத்து (targeted legislation) குடியுரிமை திருத்த சட்டம், பொது சிவில் சட்டம் போன்றவைகளை கொண்டு வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த கோல்வால்கர், சியாமா பிரசாத் முகர்ஜி போன்றோர் முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தலித்துகளும், முஸ்லிம்களும் அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்காக அவர்களின் வாக்குரிமையை தடுக்கப் பார்க்கிறார்கள். வாக்காளர் சிறப்பு திருத்தம் (SIR) போன்றவைகளை மேற்கொண்டுவருகிறார்கள். வேறு சில சட்டங்களும் வர உள்ளன.
மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவை கூட முஸ்லிம்களுக்கு போதுமான எண்ணிக்கையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதில்லை. பாஜக அல்லாத கட்சிகளில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 6.3 % உள்ளனர். இதுவும் குறைவு தான். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சற்று அதிகம் பிரதிநிதித்துவம் உள்ளது. ஆனாலும், அவர்களுக்கு, கிடைத்திருக்க வேண்டிய அளவில் கிட்டவில்லை. இது போன்ற விவரங்கள் எனது நூலில் விரிவாக உள்ளன.
விடுதலை அடைந்த பிறகு தற்போது பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில், முன் எப்போதும் இல்லாதவகையில் முஸ்லிம்களுக்கு குறைவான எண்ணிக்கையில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளனர். எங்களை விட்டால், உங்களுக்கு வேறு வாய்ப்பில்லை என்ற ரீதியில் முஸ்லிம்களை கையாள்கின்றனர். தேர்தல் பரப்புரைக்கு முஸ்லிம் இருக்கும் பகுதிகளுக்கு வருவதில்லை. அந்தப் பகுதி பிரச்சினைகளை சொல்லி வாக்கு கேட்பதில்லை. ஒட்டு மொத்தமாக நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அரசியல் நிர்ணய சபையில் சிறுபான்மையினர் உரிமை பற்றி விவாதம் நடந்தது. குறிப்பிட்ட சதவீதம் சிறுபான்மையினருக்கு பாராளுமன்ற, சட்டமன்றங்களில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வரைவு அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. ஆனால் அது இறுதி அறிக்கையில் இல்லை. விகிதாச்சார பிரதிநிதித்துவமும் இல்லை. எனவே, அரசியல் சட்டப்படி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இல்லை.
புத்த மதத்தைச் சார்ந்த, சீக்கிய மதத்தைச் சார்ந்த தலித்துகளுக்கு பட்டியலின மக்களுக்கு உள்ள உரிமை உண்டு. ஆனால், இசுலாமிய மதத்தில் உள்ள தலித்துகளை பட்டியலின மக்களாக ஒன்றிய அரசு ஏற்கவில்லை. இதனால் தலித் பிரிவைச் சார்ந்த முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்டோருக்கு என ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட முடியாது. உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முஸ்லிம்கள் பெருவாரியாக உள்ள தொகுதிகள் தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்டு உள்ளன. ஒரு தொகுதியில் முஸ்லிம்கள் பெருவாரியாக இருந்தால், அந்தத் தொகுதி முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம் இல்லை.

இத்தகைய பிரச்சினைகளை ஊடகங்கள், ஆய்வாளர்கள், அறிவுஜீவிகள் பேசுவதில்லை. தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி, மின்னணு வாக்குப்பதிவு, சிறிய கட்சிகளுக்கு தேர்தல் செலவு என பல்வேறு பொருள் குறித்து குழுக்கள் அமைத்து விவாதிக்கிறது. ஆனால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது பற்றி இதுவரை ஒரு குழுவைக் கூட அமைக்கவில்லை.
முஸ்லிம்களிடமிருந்து, இவற்றைப் பேச தலைவர்கள் உருவாகவில்லை. இந்த நிலையில் இருந்து விடுபட வேண்டும்.
1947 ல் இந்தியா விடுதலை அடைந்தபோது, என் தந்தை வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு இந்தியா விடுதலை ஆனது தெரியாது. இந்தியா விடுதலை ஆனது தெரியாததால், பாகிஸ்தான் பிரிந்ததும் தெரியாது. இதுதான் இந்தியாவில் அப்போது நிலமை. அரசியல் காரணங்களால், இந்தியா – பாகிஸ்தான் பிரிந்ததது. இதற்கு எந்த வகையிலும் இங்கிருந்த முஸ்லிம்கள் காரணம் அல்ல. எனவே இந்தியப் பிரிவனைக்கு முஸ்லிம்கள் காரணம் என்ற எண்ணத்தில் இருந்து முதலில் விடுபடுங்கள். அதைப் பற்றிய நிழல் கூட உங்கள் எண்ணத்தில் இருக்க வேண்டாம். உங்களது உரிமைகளை கோரிப் பெறுங்கள்.
இஸ்லாமோபோபியா, இந்துத்துவாவின் பரப்புரை போன்றவைகளால் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளது. 20 முதல் 30 % வரை, 30 முதல் 40 % வரை, 40 % க்கு மேல் முஸ்லிம்கள் வாக்காளர்களாக உள்ள தொகுதிகளைக் கணக்கிட்டால் அவர்களுக்கு 78 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருக்க வேண்டும். எனவே தேர்தல் ஜனநாயகத்தை எதிர்கொள்ளுங்கள். 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர்களாக சேருங்கள். அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்யுங்கள். பயிற்சி கொடுங்கள்.
அரசியல் அமைப்பு தினத்திற்கு முதல் நாள் அதாவது, நவம்பர் 25 அன்று அம்பேத்கர் சொன்னதை நினைவில் வைப்போம். சமூக ஜனநாயகம் இல்லையென்றால், அரசியல் ஜனநாயகத்தால் பலனில்லை.
Also read
மதச்சார்பின்மை முஸ்லிம்கள் தோளில் மட்டும் தான் இருப்பதாக எண்ண வேண்டாம். கிறிஸ்தவர் 2 % உள்ளனர். சீக்கியர் 1.8 % உள்ளனர். இதைவிட மேலாக பெரும்பான்மையான இந்துக்கள் உள்ளனர். அவர்களுக்கும் மதச்சார்பின்மை பற்றி பொறுப்பு உள்ளது. உங்களின் தேவைக்கு ஏற்ப வாக்களியுங்கள். ஜனநாயகத்தில் பங்கு பெறுங்கள். உங்களுக்கு உரிய பங்கை நீங்கள் பெறுங்கள். ஐந்து வேளை தொழும் உரிமை கூட, உங்களுக்கு அரசியல் உரிமை இல்லையென்றால் கிடைக்காது.

(அப்துர் ரஹ்மான் மகாராஷ்டிராவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி. குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்தார். ‘Absent in Politics and power’ என்ற இவரது நூல் அவர் 2024 ல் வந்தது. இதன் தமிழாக்கம் ‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் இடமில்லை’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. Muslim Mirror என்ற அமைப்பு 2024 ம் ஆண்டில் ஆளுமை மிக்க 100 முஸ்லிம்களில் ஒருவராக இவரை தேர்ந்தெடுத்தது. அவரது நூலின் தமிழ் வெளியீட்டு விழாவின் போது அவர் பேசியதை தொகுத்தவர் பீட்டர் துரைராஜ்)















As a Muslim I’m really happy that Muslim are boycotted by these politicians. Muslim are opportunist do nothing for Muslim community I’ll always vote for non Muslim if dmk give seat for Muslim candidates like senji masthan , naasar Muslim should boycott this candidates