பஞ்சாப் விவசாயிகள் பற்றியெரியும் நெருப்பானது ஏன்?

-அறச்சலூர் செல்வம்

தில்லியில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் மற்ற மாநிலங்களைவிடவும் பஞ்சாப் விவசாயிகள் வீறுகொண்டு போராடி வருகின்றனர்! பொதுவாக பஞ்சாபியர்கள் வீரம் செறிந்தவர்கள் என்றாலும், இதில் ஒரு விஷேச காரணம் உள்ளது.கடந்த காலங்களில் நாட்டில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட பசுமைப் புரட்சியின் படுபாதகமான விளைவுகளை சந்தித்த பிரதேசம் பஞ்சாப் தான்! அதிலிருந்து விவசாயிகளை மீட்டு குறைந்தபட்சமேனும் பாதுகாப்பு தருவதற்காக முந்தைய அரசால் உருவாக்கப்பட்ட வேளாண் சட்டங்களை தான் தற்போதைய அரசு உருக்குலைய செய்துள்ளது என்பது மட்டுமல்ல… கட்டியுள்ள கடைசி கோவணத்தையும் உருவப்பார்க்கிறது…

இந்திய தலைநகரம் தன் சொந்த மண்ணின் மனிதர்களாலேயே முற்றுகையிடப்பட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இலட்சக்கணக்கானவர்கள் கூடிய போதும் ஒரு வன்முறையோ குற்ற நிகழ்வோ நடக்காதது போல இங்கும், ஓரிரு சம்பங்கள் தவிர, வன்முறைகள் கிடையாது!

இவ்வளவு ஆத்திரமும்,கொந்தளிப்பும் விவசாயிகளிடையே உருவாகி இருப்பதற்கு  பா.ஜ.க அரசு கொரானாவைப் பயன்படுத்திக் கொண்டு ,  நாடாளு மன்ற நெறிமுறைகளுக்கு மாறாக, ஜனநாயக நெறிகளை, அரசியல் அமைப்பு விதிகளை மிதித்தெறிந்து சட்டமாக மாற்றிய மூன்று வேளாண் சட்டங்களால் மட்டும் காரணமல்ல…, பல காரணிகள் இதன் பின்னணியில் புதைந்துள்ளன…!

பசுமைப் புரட்சியின் போது  இந்தியா மட்டுமின்றி, பிற மூன்றாம் உலக நாடுகளுக்கும் நம்பிக்கையூட்டிய மண்ணாக பஞ்சாப் இருந்தது. ஆனால் இதே பசுமைப் புரட்சி தான் பஞ்சாப்பில் வளமான மண் வறண்டு போகவும்,அதீத ரசாயம உரப் பயன்பாட்டால் புற்று நோய் உள்ளிட்ட கொடிய நோய்கள்  உருவாகி, வளரவும் காரணமாக இருந்தது.

இத்தோடு முடியவில்லை பச்சைப் புரட்சி அளித்த பரிசுகள்.

பஞ்சாப்பின் விவசாய முறை முற்றாக மாற்றியதன் விளைவாக அவர்களின் பாரம்பரியமான விவசாய முறை இன்று எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அந்தளவு அடையாள மாற்றம் நடந்தது. இரசாயன விவசாயத்தின் காரணமாக மரபு விவசாயம் மண்ணோடு மண்ணானது!

இது மட்டும் தானா என்ன?

ஒட்டு மொத்த பயணிகளும் புற்று நோய்க்கு வைத்தியம் பார்க்கச் செல்லும் பயணிகளால் நிரம்பிய கான்சர் இரயில் எனப்படும் பட்டின்டா எக்பிரஸ் இன்னொரு கொடை. இந்த இரயில் கொடையல்ல. மொத்த சமூகமும் புற்று நோயால் பீடிக்கப்பட்டிருப்பதுதான் இந்தக் கொடை.  இந்தப் படங்கள் அங்குள்ள நிலையைக் காட்டும். பிறக்கும் குழந்தை கூட புற்றோடு பிறக்கிறது. காரணம் பச்சைப் புரட்சி விவசாயத்தில் பயன்படுத்திய இரசாயனங்கள் தந்த பரிசு. 20 ரத்த மாதிரிகளை சோதித்தால் அவற்றில் 15 மாதிரிகளில் பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய நஞ்சு இருக்கிறது.

ஒவ்வொரு ரத்த மாதிரியிலும் 6 முதல் 13 பூச்சிக்கொல்லிகளின் கலவை இருக்கிறது. சில பூச்சிக் கொல்லிகளின் கலப்பு அமெரிக்காவில் இருப்பதை விட 600  மடங்கு அதிகம்.

அதிக அளவு மாதவிடாய் பிரச்சனைகள். இளம் வயதிலேயே ஆண் மலட்டுத்தன்மை அதிகம். கருச்சிதைவும் அதிகம்.

பச்சைப் பிள்ளைகளுக்கும் புற்று நோய்.

புற்று நோயின் அளவு நாம் கற்பனை செய்திரா அளவிற்கு அதிகம். இதன் காரணமாகவே ஒரு மொத்த இரயிலும் புற்று நோயர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறது. இரண்டு வயதுக் குழந்தைக்கும் மூத்த தலைமுறைக்கும் கண்ணில் புற்று நோய்.

இது பஞ்சாப் கிராமப்புறத்து மக்களின் ஆரோக்கிய நிலை. அதே சமயம் ஒவ்வொரு பஞ்சாப் விவசாயியும் கடனில் தவிக்கின்றனர். கடனின் அளவு தலைக்கு மேல் தண்ணீர் நிலை. 2002 ல் பட்டின்டா மாவட்டத்தில் உள்ள 1,170 ஏக்கர் நிலம். 125 குடும்பங்கள் உள்ள ஹர்கிஷன் புரா என்ற கிராமம் தன்னை விற்றுக் கொள்வதாக விளம்பரம் செய்தது. ஒட்டு மொத்த கிராமத்தவர்கள் கூடி எடுத்த முடிவு. தங்கள் கிராமத்தை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒவ்வொரு குடும்பத்தின் கடனை அடைத்துவிட்டு பட்டணத்திற்கு பிழைக்கச் செல்ல முடிவு. பத்திரிக்கைகளில் கூட இந்த விசயம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் வாங்கத் தான் ஆளில்லை.

2005ல்மானசா மாவட்டதில்  மால்சிங் வாலா, 2010ல் பாட்டியாலா மாவட்டத்தில் முல்லன்புரா இப்படி தன்னை விற்றுக் கொள்ள முயன்ற கிராமங்கள்.

மான்சா மாவட்டத்தின் மால்சிங்வாலா கிராமமும் இப்படித் தான், கடனில் மூழ்கிய கிராமம். வங்கிகளில் வாங்கியக் கடன் மட்டும் 5 கோடிக்கும் மேல். 2.5 கோடி தனியாரிடம் வாங்கிய கடன். ஒவ்வொருவர் தலை மேலும் 4,000 முதல் 13,000 வரை கடன். ஆகவே தான் எல்லோருமாக நிலத்தை ஒட்டு மொத்தமாக நிலத்தை, கிராமத்தை விற்று கடனை அடைக்க முயல்கிறோம் என்கிறார் பஞ்சாயத்தின் தலைவர் ஜஸ்பீர் சிங்.

புத்தால் குந்த் என்ற கிராமம், அதன் பக்கத்து கிராமமான புத்தால் குர்த். இவ்வரண்டு கிராமங்களின் மொத்த நிலத்தில் 80% தனியாரிடமும், கமிஷன் ஆட்களிடமும் அடமானத்தில்.  இப்படி வலி மேல் வலியோடு துடித்துக் கொண்டிருக்கிறது பஞ்சாப். ஒவ்வொரு பஞ்சாப்பியரின் இதயமும் இந்த வலியில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கிராமங்களையே விற்கும்  நிலை பஞ்சாப்பில் மட்டுமல்ல, மராட்டியத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் பிண்ணனியும் போராட்டத்தின் ஒரு மூல காரணமாக, ஆனால் வெளியே தெரியாத காரணமாக இருக்கிறது.

பஞ்சாப் என்ற பெயரே ஐந்து நதிகளின் நிலம் என்று பொருள். ஆனால் பச்சைப் புரட்சி இந்த ஐந்து நதித் பாயும் பூமியை  தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலப்பரப்பாக மாற்றி விட்டது. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்பது கிராமத்து பழமொழி. ரசாயன உரம் என்பதும் உப்பு தான். உப்பு இட்ட நிலத்திற்கு அதிக தண்ணீர் தந்தாக வேண்டும். பச்சைப் புரட்சி எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் வறட்சியை விளைவித்துக் கொண்டேயிருக்கிறது. தமிழகமும் கூட இப்படியான நிலையையை நோக்கி முன்னேறி வருகிறது! இந்தத் தண்ணீர் பற்றாக் குறை பிரச்சனை 1980 களிலேயே ஆரம்பித்து விடுகிறது அங்கே. 1980 ல் 3,712 கிராமங்களில் குடிநீர் பிரச்சனை இருந்தது.  1990ல் ஏறத்தாழ இரண்டு மடங்கு ஆனது. 6.287 கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை. 2000ல் 8,518 கிராமங்கள் குடிநீரில்லாத கிராமங்களாக இருந்தது. 2004ல் 11,849 கிராமங்களில் மக்கள் குடிநீருக்காக அலைந்தனர்.

19984ல் பஞ்சாப்பின் 138 ஒன்றியங்களில் 53 ஒன்றியங்கள் நிலத்தடி நீர் பாதாளத்திற்கு சென்றது, கருப்பு ஒன்றியங்களாக இருந்தது. 1995ல் இது 84 ஆக உயர்ந்நதது. 2005ல் இது 108 ஆக உயர்ந்தது.

ஐந்து நதி நிலத்தில் மக்களுக்கு குடிநீர் பிரச்சனையை பசுமைப் புரட்சி விளைவித்தது. இதுவும் பஞ்சாபியரின் வலிகளில் ஒன்று. இன்னுமொரு மூல காரணம். ரசாயண் உரங்களும்,பூச்சி கொல்லி மருந்துகளும் பல லட்சம் ஆண்விவசாயிகள் உயிரை காவு வாங்கி, பல லட்சம் பெண்களை விதவையாக்கியுள்ளது. இதனால் பஞ்சாபில் ஆண்,பெண் விகிதாச்சாரத்தில் படுபயங்கரவித்தியாசம் உருவாகியுள்ளது.

அடுத்த காரணம், பசுமைப் புரட்சி விவசாயத்தை வணிகமாக மாற்றியது. வணிகர்களிடமிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க சில வழிமுறைகளை மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு மாநில அரசுகள் உருவாக்கின. அவைகள் தான் இப்போது மத்திய அரசால் பிடுங்கப்பட்ட சட்டங்கள். வணிக நிறுவனங்கள் விளை பொருட்களை வாங்கிப் பதுக்கி வைத்து பின் மொத்தமாக சந்தையில் தள்ளி விலையைக் குறைக்கும். அப்போது விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் வாங்கி குவித்துக் கொள்ளும். பின் வெளி சந்தையில் பற்றாக்குறை உருவாக்கி அதிக விலைக்கு விற்கும். இந்த வகையில் விவசாயிகளும், நுகர்வோரும் பாதிக்கப்படாமல் இருக்கத் தான் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் உருவாக்கப்பட்டது. அந்த சட்டத்தை தான் தற்போதைய மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களால் செல்லாக்காசாக்கிவிட்டது! ஆக, வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சும் விதமாக, மூன்று வேளாண் சட்டங்களும் அமைந்துள்ளது தான் பஞ்சாப் விவசாயிகளை பற்றியெறியும் நெருப்பாக்கியுள்ளது!

விவசாயிகளின் பொருட்களை சந்தை அடிமாட்டு விலைக்கு வாங்கிவிடக்கூடாது என்பதற்காக ஒழுங்கு முறை விற்பனைக் கூட முறை உருவாக்கப்பட்டது. விவசாயம் மாநிலப்பட்டியலில் உள்ள ஒன்று என்பதால் அந்தந்த மாநிலத்தின் நிலைக்கு ஏற்றவாறு ஒழுங்கு முறை விற்பனை அமைப்புகளை உருவாக்கப்பட்டன. இவை விவசாயிகளின் விளைபொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்படாமல் இருக்க உதவின. மறு பக்கம் வணிகர்கள் தங்கள் இஷ்டத்திற்கு விலை வைக்காமல் இருக்க குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற முறையை உருவாக்கியது முந்தைய மத்திய அரசு. குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது விளைபொருட்களை விளைவிக்க ஏற்பட்ட செலவைக் கிடைக்கச் செய்யும் வழி முறையாகும். ஆனால் இது உற்பத்தி செலவை மட்டுமே திரும்பக் கிடைக்கச் செய்யும் வழியாகும். இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை இருந்த நிலையில் தான் பஞ்சாப் விவசாயிகளின் பொருளாதார நிலை கிராமங்களையே விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போட்ட முட்டுவலியை எடுக்க கொஞ்சம் உதவுகிறது குறைந்தபட்ச ஆதரவு விலை. ஆனால், ஒட்டு மொத்த நாட்டு மக்களின் உணவு உற்பத்தி செய்த விவசாயிகள் மட்டும் வளமாக இல்லை. நிரந்தரக் கடனாளிகளாக இருக்கின்றனர். விவசாயத்தை விட்டு வெளியேறத் துடிக்கின்றனர். வெளியேறும் வழி தெரியாமல் தவிக்கின்றனர்.

இந்த நிலையை மாற்றும் வழி முறைகளை கண்டறிய எம்.எஸ்.சுவாமிநாதன்  தலைமையில் உருவாக்கப்பட்ட விவசாயிகள் கமிஷன் உற்பத்தி செலவை மட்டும் உறுதிப்படுத்தினால் போதாது. உற்பத்தி செலவை மட்டும் தந்தால் அவர்கள் வாழ்வதற்கான செலவை எப்படி செய்வார்கள் என்ற கேள்வியை எழுப்பியது விவசாயிகள் கமிஷன். மாற்று வழியாக உற்பத்தி செலவுடன் 50% தொகையை வாழ்க்கைச் செலவிற்கானதாகக் கணக்கில் கொண்டு குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது தேசிய விவசாயிகள் கமிசன். இதைத் தான் பொதுவான சி2+50% (C2+50%) என்று கூறுகிறோம்.

பஞ்சாப்பியர் விளைவிக்கும் கோதுமை மற்றும் நெல் ஆகியவை இந்தியாவின் உணவு இறையாண்மைக் காக்க உதவியது. இந்தியரின் பசி போக்கியதில் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் இதற்கு பஞ்சாப்பியர் கொடுத்த விலை மிக, மிக அதிகம்.

குறைந்த பட்ச ஆதரவு விலை எப்போதும் பஞ்சாப்பியருக்கு கொஞ்சம் அதிகமாகவே கிடைத்து வந்தது. ஆனாலும் வெளி இடுபொருட்கள் அதிகம் தேவைப்படும், அதிக இயந்திர மயமான (இந்தியாவில் உள்ள டிராக்டரில் 24 % அங்கே-இப்போது அங்கு கூறுகட்டி விற்கப்படும் நிலை தற்போது) பஞ்சாப்பின் விவசாயத்திற்கு இது போதுமானதாக இல்லை.

பாங்கரா பாட்டு போல குதுகூலமான பஞ்சாபின் கிராம வாழ்வு இன்று வறுமையுற்றுள்ளது. , நோயினால் வாடுகிறது. இவையத்தனையும் சேர்ந்து தான் இன்று தில்லி முற்றுகையாக வெளிப்படுகிறது.

சமைக்கும் குக்கரில் சுடு ஏறி உள்ளே அழுத்தம் உயர்ந்து தாங்க இயலா நிலை வரும் போது அந்த நீராவி சத்தம் போட்டுக் கொண்டு வெளியேறுவதற்கு ஒப்பாக உள்ளது.

மத்திய அரசு விவசாயத்தை முற்றமுழுக்க பெரு வணிக நிறுவனங்களின் கையில் கொண்டு சேர்க்க முடிவு செய்துவிட்டது.

2013ல் மான்சான்டோவிடம் அதிக நிதி உதவி பெற்று வந்த  செனட்டர் ராய் ப்ளண்ட் ஒரு சட்டத் திருத்தத்தை சத்தமில்லாமல் கொண்டு வந்து அதிபர் ஒபாமாவின் ஒப்புதலையும் பெற்றார். இந்தச் சட்டத் திருத்தம் அமெரிக்காவின் மக்கள் மான்சான்டோவின் மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்த்து பல வழக்குகள் நீதிமன்றங்களில் தொடுத்து வந்தனர். மான்சான்டோவைக் காப்பாற்றும் விதமாக கீழமை நீதி மன்றங்கள் இத்தகு வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்பதே அந்த சட்டத் திருத்தம்.

அதை அமெரிக்க மக்கள் மான்சான்டோவைக் காப்பாற்றும் சட்டம் என்றும் – கருப்புச் சட்டமென்றும்- மான்சான்டோ சட்டம் என்றும் விமர்சித்தார்கள். அங்கு நடந்தது போலவே இங்கு இந்த சட்டங்கள் வணிக நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு அவை அரசின் சட்டங்களாக உருமாறியுள்ளன. முன்பு பசுமைப் புரட்சி காலத்திலும் உணவு தானியங்கள் குறைவாக இருந்த காலத்திலும் மக்களையும், விவசாயிகளையும் காக்க கொண்டு வந்த சட்டங்கள், பாதுகாப்பு வளையங்கள் தற்போது பெரு வணிக நிறுவனங்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது.

விதைகள், உரங்கள், உயிர்க் கொல்லிகள், இயந்திரங்கள், எரிபொருட்கள் மூலம் இந்திய விவசாயத்தை வணிக நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது. அதன் நீட்சியாக உணவையும் இனி வணிக நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றன.

அதற்கு உடன்பட மறுப்பது தான் தில்லி விவசாயிகள் போராட்டம் சொல்லும் செய்தியாகும்!

கட்டுரையாளர் – அறச்சலூர் செல்வம்: 

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்.  தமிழக இயற்கை விவசாய முன்னோடி!

நம்மாழ்வாருடன் கால் நூற்றாண்டாக   இணைந்து பயணித்த விவசாயப் போராளி! 

விவசாயம் சார்ந்த  விழிப்புணர்வை  இடையறாது  நடத்தி வருபவர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time