படத் தயாரிப்பாளர்களை இந்தப் பாடு படுத்தியுள்ளார், சவுக்கு சங்கர்! ஊரறிந்த ஒரு கிரிமினல் தொடர்ந்து சுதந்திரமாக செயல்பட முடிகிறது என்றால், அதை தடுக்க வேண்டியவர்களுக்கு இருக்கும் பலவீனமே காரணமாகிறது…என்பது சவுக்கு சங்கர் விவகாரத்தில் மீண்டும், மீண்டும் நிருபணமாகி வருகிறது;
எல்லோரையும் போல எனக்கும் அந்த சந்தேகம் ஏற்பட்டது…! சவுக்கு சங்கர் 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டி கைதானது என்பது பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்குமோ என்று…!
ஆனால், நேற்று பிரஸ் கிளப்பில் சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர் மகேஷ் ரம்யாவும், இயக்குனர் வணக்கம் தமிழா சாதிக்கும் சேர்ந்து சவுக்கு சங்கர் உடனான தங்கள் அனுபவத்தை பேசிய போது, பகீரென நெஞ்சம் அதிர்ந்தது.
சம்பந்தப்பட்ட இருவரும் மிக எளிமையான நடுத்தர வர்க்கப் பின்னணி கொண்ட இளைஞர்கள்! தங்களது கடின உழைப்பில் சிறுகச் சிறுக பணம் சேர்த்து Red & Follow என்ற பெயரில் ஒரு படத்தை நான்காண்டுகளாக எடுத்து வந்துள்ளனர்.
அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களில் ஒருவர் ஒரு குற்ற வழக்கில் கைதாகி பின்னர் விடுதலையாகி உள்ளார். ஆனால், அவருக்கும் கூட போதை மருந்து கடத்தலில் சம்பந்தமில்லை. அந்த சந்தர்ப்பத்தில் நடந்த அடிதடியில் கைதாகி உள்ளார்.
இந்த நடிகர் ஒரு படத்தில் நடிப்பதைக் கொண்டு, அந்த படமே போதை மருந்து கடத்தலில் கிடைத்த பணத்தில் தயாரானது என சவுக்கு சங்கர் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார்.
இதனால் பதறிப் போன இந்த இளைஞர்கள் தங்கள் சொந்தப் பணத்திலும், மனைவியின் நகையை அடமானம் வைத்தும் தாங்கள் படமெடுப்பதை விளக்கிச் சொல்லி, அந்த பதிவை நீக்கச் சொல்வதற்காக அவரை தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆகா, வீசிய வலையில் மீன் வந்து விழுந்துட்டது…என 10 லட்சம் கேட்டுள்ளார்.

ஏற்கனவே கடன் வாங்கி இருப்பதால் பொருளாதார சிரமத்தில் இருக்கும் அவர்களுக்கு 10 லட்சம் தரும் சக்தி இல்லாமையால் ஒரு லட்சம் தந்து உண்மையைச் சொன்னால், பிரச்சினை சால்வாகும் என நினைத்து சென்றுள்ளனர்.
இதுவே ஒரு தவறான அணுகுமுறை! பொய்யை சொல்லி ஒருவன் 10 லட்ச ரூபாய் கேட்கிறான் என்றால், இவர்களே சோசியல் மீடியாவில் அவனை தோலுரித்து அம்பலப்படுத்தி இருக்க வேண்டும்.
‘பாதகம் செய்பவரைக் கண்டால், நீ பயம் கொள்ளலாகாது பாப்பா’ என்று பாரதியார் பாடியது நம் அனைவருக்கும் தான்.
”ஒரு லட்சம் தானா? நான் என்ன பிச்சைக்காரனா…?’ என அலட்சியமாக பேசினாலும், அந்தப் பணத்தையும் வெடுக்கென பிடுங்கி உள்ளார், சவுக்கு சங்கர்.
ஏற்கனவே பேசியது தவறான தகவல் என்பதை விளக்கி, மற்றொரு வீடியோ போட்டால், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து விடுபடுவோம் என இந்த இளைஞர்கள் வேண்டுகோள் வைத்து போது,
அங்கே இருந்த மாலதி, ”ஏய் என்ன அவரை மன்னிப்பு கேட்க சொல்றீயா.. என அதட்டி அசிங்க, அசிங்கமாக பேசி உள்ளார்.
இதையடுத்து சவுக்கு சங்கர் உட்கார்ந்த நிலையில் சேரில் இருந்து எம்பி அந்த தயாரிப்பாளரான மகேஷ் ரம்யாவின் உயிர் நாடியில் எட்டி உதைத்துள்ளார். இதையடுத்து சவுக்கு சங்கர் அலுவலத்தில் உள்ளவர்களும் தாக்கி உள்ளனர்.
இந்த சம்பவம் நடந்தது ஜூன் 30 ஆம் தேதி.
சவுக்கு சங்கர் மீதான புகார் ஜூலை ஒன்றாம் தேதி தரப்பட்டுள்ளது.
புகார் கொடுத்தவர்களிடமே மீண்டும், மீண்டும் விசாரணை நடத்திவிட்டு, ஆதாரங்களையும் கேட்டுப் பெற்றுக் கொண்டு சுமார் ஐந்து மாதங்களாகியும் சென்னை போலீசார் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்காததை புரிந்து கொள்ள முடியவில்லை.
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் அவர்கள் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக சவுக்கு சங்கர் வீடியோ பதிவிட்ட பிறகு தான், இந்த வழக்கிற்கு உயிர் கிடைத்துள்ளது. அதாவது, சவுக்கு சங்கர் அருண் மீது சரமாரியாகச் சாடி, நாறு நாறாக அவரை கிழித்து தொங்கவிட்ட பிறகு தான் இந்த அப்பாவிகளின் வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீசாருக்கு ரோஷம் வந்துள்ளது.
ஏற்கனவே சவுக்கு சங்கர் முதலமைச்சர், முதலமைச்சரின் மருமகன் அமைச்சர்கள் அனைவரையும் படுமோசமாக தாக்கி பேசி வரும் நிலையில், இந்த வழக்கை வாராது வந்த வரப்பிரசாதமாக எடுத்து அவரை கைது செய்திருக்கலாமே…அது கூட ஏன் போலீசார் செய்யவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
அல்லது இந்த சம்பவத்தை ஒரு சாதகமாக வைத்து எங்களை பற்றி பேசினால், இந்த வழக்கில் நடவடிக்கை எடுப்போம். ஆகவே பேசாதே எனச் சொல்லி பேரம் பேச இதை பயன்படுத்தினார்களா..? என்றும் தெரியவில்லை.
ஒரு பக்கம் காவல்துறை இப்படி என்றால், ஊடகங்கள் பலவற்றின் நிலைபாட்டையும் புரிந்து கொள்ள முடியவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் அவ்வளவு கேள்விகள் கேட்ட பல பிரபல ஊடகங்களில் செய்தியே வரவில்லை. மிகச் சில ஊடகங்களே இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இவர்களை சவுக்கு சங்கரின் மறைமுக கூட்டாளி என்பதா? அல்லது கோழைகள் என்பதா?
தற்போது நான் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது இதற்கு முன்பே கூட நாங்கள் ஊடகங்களை அழைத்து பேசினோம் யாருமே பொருட்படுத்தவில்லை சார் என்றனர். மனம் வலித்தது.
கற்பழித்துக் கொல்லப்பட்ட கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதியையும் அவரது தாய் செல்வியையும் இழிவாக பேசியது தொடங்கி எண்ணற்ற விவகாரங்களில் சொந்த ஆதாயத்திற்காக சவுக்கு சங்கர் பலரை கடுமையாக காயப்படுத்தி உள்ளார்.
சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களை மிரட்டும் போது, மாலதி அவர்களிடம் ’’டேய், உங்களை கொன்று புதைத்தால் கூட இங்க கேட்க நாதியில்லை..’’ என்று ஆணவமாக பேச முடிவது எப்படி?
மொத்தத்தில் தங்கள் கடமையை செய்யத் தவறியுள்ளனர், காவல் துறையினர். இதை போலீசாரின் இயலாமை என்பதா? காவல்துறையின் கையை கட்டி போட்டது யார்?

சம்பந்தப்பட்ட சவுக்கு சங்கர் குற்றவாளி என நன்கு தெரிந்திருந்தும் கிரிமினலான சவுக்கு சங்கரை கைது செய்ய நான்கு மணி நேரமாக காவல் துறையினர் அவர் வாசலில் காத்திருந்ததால் காவல்துறை மீது மக்களுக்கு எப்படி மரியாதை வரும்.
ஆளும் தரப்பிலேயே கே.என். நேரு உள்ளிட்ட சில அமைச்சர்கள் சவுக்கு சங்கரை ஊட்டி வளர்த்துள்ள செய்திகளும் வருகின்றன. ஒரு கேபிச்சுவல் கிரிமினல் தொடர்ந்து மனிதாபிமான எல்லைகளைக் கடந்து, பலரை கடித்துக் குதறுவதை தடுக்க இயலாத அவல நிலையில் தான் இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கிறார்களா..?
ஊரறிந்த கிரிமினல் என்றாலும், திறமைசாலியான அவன் நமக்கு எப்படி பயன்படுவான் ..என்று பார்ப்பது தான் புத்திசாலித்தனம் என்ற அணுகுமுறை அரசியல்வாதிகள், ஊடகத்தினர், காவல்துறை..ஆகியோரிடம் இருப்பதால் உண்மையை ஊனப்படுத்தி, கிரிமினல்கள் கோலோச்ச முடிகிறது.
சாவித்திரி கண்ணன்















போலீஸ் துறை நேர்மையாக இருந்தால் இது போன்ற பிரச்சினைகளை வராது. சிறிதளவு நேர்மை தவறிய அதிகாரிகளை கடந்த நூற்றாண்டின் இறுதியில் பார்த்தோம். இப்போதோ நேர்மையாக செயல்படுவதற்கே பணம் தர வேண்டியுள்ளது. ஒரு காலத்தில் நேர்மையான அதிகாரிகளின் பெயர்களை சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வோம். ஆனால் இன்று?
ஊழல் ஊழல் எங்கே திரும்பினாலும் ஊழல் காவல்துறையில் மட்டுமல்லாது அனைத்து துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. கிரிமினல்கள் நடமாடுவதற்கு இதுவே காரணம்.