கேரளத்தின் உள்ளாட்சி தேர்தல்களில் ஆளுகின்ற இடதுசாரி அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதற்கான காரணங்கள் என்ன? பாஜக அங்கே மெல்ல பலம் பெற்று மூன்றாம் அரசியல் சக்தியாக வளரும் அபாயம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி வெற்றிகளை குவித்துள்ளதை குறித்த அலசல்;
கேரளத் தலைநகரமான திருவனந்தபுரம் மாநாகராட்சில் மொத்தமுள்ள 101 இடங்களில் , 50 இடங்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளதானது கேரள அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது.
1980 முதல் திருவனந்தபுரத்தை தங்கள் கைகளில் வைத்திருந்த இடதுசாரிகள் இப்பொழுது அதை இழந்திருக்கிறார்கள் என்பதை விட , நடந்த மும்முனை போட்டியில் இதுவரை தூரத்து வெளியாளாக திகழ்ந்த பாஜ க இம்முறை முதலிடத்தில் (50/101 ) வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது கேரளத்தை தாண்டியும் பாரதூர விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கேரளா முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பஞ்சாய்த்துகள் என்ற வேறுபாடின்றி வெற்றிகளை குவித்துள்ளது. இத்தகைய மாபெரும் வெற்றிக்கு ஊடகங்கள் உரிய வெளிச்சத்தை கொடுக்கவில்லை என்றாலும், அதன் தாக்கத்தை வருங் காலங்கள் உணர்த்தும்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி கோட்டையாக திகழ்ந்த கேரளாவிலும் தோல்விகளை சந்திக்க நேர்ந்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த தோல்வி இடதுசாரி சிந்தனைக்கும், கொள்கைகளுக்கும் ஏற்பட்ட தோல்வியா? மேற்கு வங்கம், திரிபுரா கேரளம் என மூன்று மாநிலங்களில், செல்வாக்கோடு ஆட்சி அதிகாரத்தை கொண்டிருந்த இடதுசாரிகள் இன்று எஞ்சி இருந்த கேரளத்திலும் செல்வாக்கு குறைந்து வருகின்றனர். சட்டசபை தேர்தல்களுக்கு ஐந்து மாதங்களே உள்ள நிலையில், இந்த தோல்வி ஆட்சி மாற்றத்தை, அதாவது ஆட்சியிலிருந்து இடதுசாரிகள் அகற்றப்படுவதை கட்டியங் கூறுகிறதா…?

நிதர்சனம் என்னவென்று பார்ப்போம்;
இது கொள்கைகளின் தோல்வியா? மக்களிடமிருந்து விலகி நின்ற ஆட்சிமுறையின் தோல்வியா? அல்லது ஆட்சியினர் செய்த சமரசங்களின் விளைவா? அல்லது பத்தாண்டுகால ஆட்சியின் மீதான மக்களின் சலிப்பா? என்ற ஆய்வுகள் இனி தொடங்கும்.
ஆறு மாநகராட்சிகள், 86 நகராட்சிகள் உட்பட, 1,119 உள்ளாட்சி அமைப்புகளுக்கு, கடந்த 9 மற்றும் 11ல் தேர்தல் நடந்தது.
மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளில், கொல்லம், கொச்சி, திருச்சூர், கண்ணுார் ஆகிய மாநகராட்சிகளை, காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றி உள்ளது. இதில், கொல்லம் மாநகராட்சி, 25 ஆண்டுகளாகவும், திருச்சூர் மாநகராட்சி, 10 ஆண்டுகளாகவும் இடது ஜனநாயக முன்னணி வசமிருந்தது என்பது கவனத்திற்குரியதாகும். கோழிக்கோடு மாநகராட்சி ஒன்றில் மட்டுமே இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது!
இதே போல, 86 நகராட்சிகளில், ஐக்கிய ஜனநாயக முன்னணி 54; இடது ஜனநாயக முன்னணி 28, பா.ஜ., கூட்டணி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மற்றவை இரண்டு இடங்களில் வென்றுள்ளன.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 500 கிராம பஞ்சாயத்துகளிலும், 80 பஞ்சாயத்து ஒன்றியங்களிலும், 54 நகர்மன்றங்களிலும் , 4 மாநகராட்சிகளிலும் வென்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் 50 இடங்களில் வென்று கைப்பற்றியுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சி 45 வருடமாக இடதுசாரி அணியிடம் இருந்து பாஜக வசம் போனது அதிசயமாக பார்க்கப்படுகிறது. இது தவிர பாலக்காடு மற்றும் திருப்பனித்துரா ஆகிய இரண்டு நகராட்சிகளிலும் 26 கிராம பஞ்சாயத்துகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது . பல இடங்களில் இரண்டாம் நிலைக்கு வந்துள்ளது.
மாவட்ட பஞ்சாயத்துகளை பொறுத்த அளவில் 14 மாவட்ட பஞ்சாயத்துகளில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி அகியவை தலா ஏழு இடங்களை கைப்பற்றி, சமபலத்துடன் இருந்து கொண்டு பாஜகவை தூர நிறுத்தி உள்ளன.
இத்தகைய மாற்றங்களும்,, இடதுசாரிகளின் சரிவுகளும் ஏன் ஏற்பட்டன?
இடதுசாரிகளின் அடித்தளமான ஈழவா மக்களின் ஆதரவில் ஏற்பட்டுள்ள சார்பு மாற்றங்களே இத் தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது எனலாம். வட கேரளாவில் மலப்புரம் மற்றும் கண்ணூர், கோழிக்கோடு ஆகியவை இஸ்லாமியர் அதிகம் வாழ்கின்ற பகுதிகளாகும். இங்கு செல்வாக்கு பெற்றிருந்த இடதுசாரிகள், சற்று சரிவை சந்தித்து வருகின்றனர்.
அதே வேளையில் பாஜகவிற்கான போட்டி அரசியலாக சபரிமலை பக்தர்களை (இந்துக்களை) கவருவதற்காக குளோபல் அய்யப்பா சங்கமம் என்ற மாநாட்டை இடதுசாரி அரசு கூட்டியதும், இந்து மத பற்றாளர்களிடையே இடதுசாரிகள் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தவில்லை.

காங் கூட்டணியில் உள்ள முஸ்லீம் லீகை எதிர்த்து இந்துத்துவ அமைப்பான எஸ் என் டி பி யோகம் அமைப்பை ஊக்குவிப்பதும், அதன் தலைவர் வெள்ளப்பள்ளி நடேசனின் சிறுபான்மை வெறுப்பு முன்னெடுப்புகளுக்கு இடதுசாரிகள் எதிர்வினையாற்றாமல் அமைதி காத்ததும் சிறுபான்மை மக்களை இடதுசாரிகளிடமிருந்து விலக்கியதாக கருதப்படுகிறது.
முஸ்லீம் லீக்கிற்கு எதிரான அரசியலை முன்னெடுத்ததாலும் , மோடி அரசின் பி எம்- ஶ்ரீ பள்ளித்திட்டத்தை – மாநில உரிமைகளை மறுக்கும் திட்டத்தை- ஆதரித்து பினாரயி விஜயன் அரசு ஒப்புதல் அளித்ததாலும்
சிறுபான்மையினர் தங்களை பாதுகாக்க காங்கிரஸ் நோக்கி நகர்வதற்கு வழி வகுத்தது.
தென்கேரள பகுதியில் வசிக்கும் ஈழவ மற்றும் நாயர் சமூக மக்களிடையே குறிப்பாக – இந்துக்களிடையே நற்பெயர் வாங்க – அய்யப்பா மாநாடு நடத்தினாலும், அவை இந்து பற்றாளர்களை திருப்திபடுத்தவில்லை, சபரிமலை கோவிலில் தங்கம் திருடு போனதும், அதில் மார்க்சிஸ்டு கட்சி பிரமுகர் கைதானதும் இடதுசாரிகளின் செல்வாக்கை இம்மக்கள் மத்தியில் கணிசமான அளவு சரித்துள்ளது.
பொது சுகாதாரத்தின் உண்மையான முதுகெலும்பாகத் திகழும் 26,000 ஆஷா சுகாதார பெண் பணியாளர்களுக்கு அடிமாட்டு சம்பளம் தந்து கசக்கி வேலை வாங்கி வந்த இடது முன்னணி அரசு, அவர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடியதை காவல்துறை அடக்குமுறையல் கடுமையாக ஒடுக்கியது பெரும் பின்னடைவை தந்தது எனலாம். 
இதுபோக கிறித்துவர்கள் அதிகம் வாழும் கோட்டயம் போன்ற பகுதிகளிலும் கத்தோலிக்க கிறித்தவர்கள் மத்தியிலும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கங்களின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் எடுபட்டிருப்பதை இத் தேர்தல்கள் உணர்த்துகின்றன.
இஸ்லாமியருக்கு இடதுசாரிகள் ஊக்கம் கொடுக்கின்றனர் என்றெண்ணி ஆளும் கட்சிக்கு எதிரான இங்குள்ள கிறித்துவ மக்களின் மக்களின் மனநிலையை இந்துத்துவ சக்திகள் அறுவடை செய்துள்ளன,
மதச் சார்பற்ற சக்திகளான கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரசும் இங்கு கோட்டை விட்டுள்ளனர்.
தேர்தல் அரசியலில் அதிகாரம் மத்தியில் மோடி கையில் நீடிப்பதால் சிறுபான்மையினரிடையே ஏற்படும் குமுறல்களை, பிணக்குகளை பத்து ஆண்டு ஆட்சியில் இருக்கும் இடது சாரிகளால்
செவ்வன தீர்க்க இயலவில்லை. நெருக்கடிகளில் சிக்கி, கொள்கை தடுமாற்றங்களில் இடதுசாரி அரசு சிக்கியதால் தோல்வியை தழுவி உள்ளது.
மோடி அரசும் பா ஜ கட்சி ஆட்சி செய்யும் அரசு மட்டுமே ‘வாக்கு திருட்டின் ‘ மூலம் ஆட்சிக்கெதிரான மக்கள் மனநிலையிலிருந்து ( anti incumbency) தப்பமுடியுமே ஒழிய , மற்ற அரசுகள் அவ்வாறு தப்ப முடியாது என்பதற்கு கேரளா தேர்தல் முடிவுகள் ஒரு எடுத்து காட்டாகும்.
பெரும்பான்மை மதவாதப் போக்கிற்கும் (majority communalism) சிறு பான்மை மதவாதப் போக்கிற்கும் (minority communalism) இடையில் நூல் பிடித்தவாறு பயணிக்கும் வித்தையை இ எம் எஸ் நம்பூதிரிபாட் அவர்களிடமிருந்து இடதுசாரிகள் இன்னும் முழுமையாக கற்றுக் கொள்ளவில்லை என்பதையே இத்தோல்விகள் காட்டுகின்றன.
Also read
ஒரு ஆபத்தை எதிர்க்க மற்றொரு ஆபத்தை சார்வது தேர்தல்களில் வென்றவுடன் வேண்டுமானால் இனிக்கலாம். ஆனால் அதுவே தோல்வியில் முடியுமென்றால் அதிலிருந்து மீள்வது மட்டுமின்றி, தொடர்ந்து இருப்பதும் கேள்விக்குறி ஆகிவிடும் . இத்தகைய ஆபத்தில் இருந்து மீண்டு எழுவதுவும், அரசியலில் தங்கள் இருப்பை தொடர்ந்து உறுதி செய்யவுமானச் சூழலில் ( it is not a question of recovery, but it is a question of survival for the left) – இன்று இடது சாரியினர் கேரளத்தில் உள்ளனர் என்பது உண்மை.
பொதுவாக கேரளாவில் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் மாறி, மாறி பலம் பெறுவார்கள். பத்தாண்டு இடது முன்னணி அரசு மீதான அதிருப்திகள், மெத்தன போக்குகள், ஊழல் குற்றச்சாட்டுகள், சில வன்முறைகள் ஆகியவை தற்போது இடதுசாரிகளை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் பழைய தலைமுறை ஒதுங்கி, நம்பிக்கைக்குரிய புதிய தலைமுறையை அடையாளம் காட்ட வேண்டும். பாஜக வராமல் காங்கிரஸ் அங்கே வெற்றி வாகை சூடியிருப்பது ஒருவகை ஆறுதலா? என்பதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும்.
ச. அருணாசலம்















2026 கேரள சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது 2036 ல் கேரளாவில் பாஜக ஆட்சி மலரலாம், ஆத் ஆத்மி கட்சி வேரூன்றி விடும் திமுக அதிமுக விசிக கட்சிகளுக்கு கேரளாவில் இடம் இல்லை