பெயர் மாற்றம் மட்டுமல்ல, அடையாள அழிப்பு!

-அ. குமரேசன்

உண்மையான இந்தியா கிராமங்களில் தான்  “வாழ்கிறது” என்று சொன்னார் மகாத்மா காந்தி. ‘அப்படியெல்லாம்  நிம்மதியாக வாழவிடுவதாவது’ என்று கங்கணம் கட்டி, கிராமப்புற ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்றி உள்ளனர்! பெயரில் என்ன இருக்கிறது..? பெயரில் ‘எல்லாம் இருக்கிறது’

‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்’ என்ற பெயரை, ‘வளர்ந்த பாரத கிராமிய வேலை மற்றும் வாழ்வாதாரத் திட்டம்’ – என்று மாற்றுவதற்கான சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் டிச.16,2025 தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சில ஊர்களுக்கும், சாலைகளுக்கும் பெயர் மாற்றம்,

சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் பெயர் மாற்றம்

எனப் பெயரை மாற்றுகிற கைங்கரியத்தை தொடர்ந்து செய்து வரும் பாஜக அரசு, தேசத் தந்தையின் பெயரிலான கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டப் பெயரை மாற்றியது கண்டு எதிர்கட்சிகளும், மக்களும் கொந்தளித்து போயுள்ளனர்.

‘தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம்’ என்பது, ‘ப்ரதான் மந்த்ரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா’ என்று மாற்றப்பட்டது.

‘இந்திரா காந்தி ஆவாஸ் யோஜனா திட்டம்’ என்பது,

‘ப்ரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா’ என மாற்றப்பட்டது.

‘ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற சீரமைப்புத் திட்டம்’ என்பது, அடல் நகர்ப்புற சீரமைப்பு மற்றும் மாற்றத் திட்டம் – அடல் மிஷன் ஃபார் ரெஜுவனேஷன் அண்ட் அர்பன் டிரான்ஸ்ஃபர்மேஷன் (ஏஎம்ஆர்யுடி)  என்று மாற்றினார்கள்.

‘நிர்மல் கிராம் யோஜனா’ திட்டத்திற்கு ‘ஸ்வச் பாரத் மிஷன்’ என்ற பெயரை வைத்தார்கள்.

‘ராஜீவ் காந்தி கிராமின் எல்பிஜி விநியோக திட்டம்’ என்பது, ‘ப்ரதான் மந்த்ரி உஜ்வாலா யோஜனா’ என்று பெயர் மாற்றம் பெற்றது.

நீக்கப்பட்ட வார்த்தைகளும், சேர்க்கப்பட்ட வார்த்தைகளும் இந்த ஆட்சியாளர்களின் உள் நோக்கத்தை நன்கு உணர்த்துகின்றன.

மொழித் திணிப்போடும்!

ஒன்றிய அரசின் சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் இந்தி மற்றும் சமஸ்கிருத பெயர் சூட்டுவதன் மூலமான மொழித் திணிப்பு அரசியல், ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயர் மாற்றத்திலும் புகுத்தப்பட்டிருக்கிறது. முந்தைய ஆட்சியிலும் அவ்வப்போது இது நடந்திருக்கிறது. “இந்தியாவின் திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் இந்திய மொழியில் பெயர் சூட்டுவதில் என்ன தப்பு,” என்று கேட்டார் ஒரு நண்பர்.

”தப்பே இல்லை. ஆனால் இந்திய மொழி என்றால், அது இந்தி மட்டுமில்லையே? இந்திய மொழியில் தான் பெயர் வைக்க வேண்டுமென்ற தேசப்பற்று உண்மையானதென்றால், இந்திய அரசமைப்பின் 8ஆவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளிலும் சுழற்சி முறையில் ஒவ்வொரு புதிய சட்டத்திற்கும் திட்டத்திற்கும் சூட்டலாமே? அங்கீகரிக்கப்படாத மொழிகளுக்கும் எதிர்காலத்தில் மதிப்பளிப்பதை நோக்கிச் செல்வதற்கு இது முதல்படியாக அமையுமே?” என்றேன்.

அரசின் நோக்கம்?

பெயர் மாற்றப் பிரச்சினைக்கு வருவோம்.

திட்டத்தில் உள்ள கசிவுகளை அடைப்பதும், மையமான உள்கட்டமைப்பை உருவாக்குவதுமே இதன் நோக்கமாம்! திட்டத்திலுள்ள குறைபாடுகளைக் களைவது  வரவேற்கத்தக்கது தான். ஆனால், இதையெல்லாம் செய்வதற்கு தற்போதைய பெயர் தடையாக இருக்கிறதா என்ன?

பணம் வேறு திட்டங்களுக்கு மடை மாற்றப்படுவதைத் தடுக்க, மாநில அரசுகள் கோருகிற நிதியை முழுமையாகக் கொடுப்பதல்லவா உத்தரவாதமான வழி? கசிவுகளை அடைக்க, கூடுதல் பணியாளர் நியமனம், எளிதான நிதிப் பகிர்வு ஆகியன உள்ளிட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதல்லவா சரியான ஏற்பாடு?

காந்தியை அப்புறப்படுத்திவிட்டு, இலகுவாக உச்சரிக்க வாகில்லாத பெயரை வைப்பதால் கசிவுகளும், மடை மாற்றங்களும் நின்று போகுமா? தற்போதைய திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடே கூட கடந்த ஆண்டுகளில் கணிசமாக வெட்டப்பட்டிருப்பதை அரசியல் தலைவர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் விமர்சித்து வந்திருக்கிறார்கள்.

காந்தி, நேரு, இந்திரா ஆகியோர் இந்தியா ஒற்றை மத நாடாக அடையாளம் பெறுவதைத் தடுத்து, மதச்சார்பின்மை மாண்பை உயர்த்திப் பிடித்தார்கள் என்பதற்காக, வெறுப்பு நெருப்பு உமிழ்வதா? ஆட்சியாளர்களின் மதவாத அரசியலின் தொடர்ச்சியே இந்தப் பெயர் நீக்கம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதில் முகாந்திரம் இருக்கிறது.

கிராமக் குடியரசு

“கிராம மக்கள் பொருளாதார விடுதலைக்கான சொந்தத் திறமையைக் கொண்டுள்ளனர். நாம் கிராம மக்களுக்குக் கல்வியையும், சுகாதாரத்தையும் வழங்கி சுய மரியாதையை உறுதிப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நாம் உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும்,” என்றார் காந்தி.

இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாகத் தன்னாளுமையுடன் திகழ வேண்டுமென்று கனவு கண்டவர் காந்தி. அதை நோக்கிச்  செல்வதில், ஒரு சிறப்பான முன்முயற்சி தான் இந்த வேலை உறுதித் திட்டம்.

2004 -ல் ஐமுகூ அரசு அமைந்தபோது, வெளியிலிருந்து இடதுசாரிக் கட்சிகள் ஆதரவளித்தன. அதற்கான பலனாக தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பலன் வெளிப்படத் தொடங்கிய பின்னணியில் 2009 -ல் சட்டத்தின் பெயருடன் ‘மகாத்மா காந்தி‘ சேர்க்கப்பட்டார்.

நல் விளைவு

சட்டம் செயலுக்கு வந்ததன் மிக முக்கி நல்விளைவு – வேலையின்றி நகரங்களுக்குப் புலம் பெயரும் விவசாயத் தொழிலாளர்கள், தங்கள் ஊர்களிலேயே தொடர்ந்து வாழ முடிந்தது. கடனாளியாகிற கொடுமை கணிசமாக மட்டுப்பட்டது.  கிராமங்களுக்குத் தேவையான வாய்க்கால், ஏரி, குளம் ஆகியவை தூர்வாரப்பட்டன.  சாலைகள் போடப்பட்டன. தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டன. சமூகக் காடுகள் வளர்க்கப்பட்டன. தூய்மைத் திட்டத்துடன் இணைந்ததாக வீடுகளில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. பள்ளிகளுக்குப் பாதுகாப்பான சுற்றுச் சுவர்கள் கட்டப்பட்டன. விளையாட்டு மைதானங்கள் சீர்ப்படுத்தப்பட்டன. அங்கன்வாடி மையங்கள் எழுப்பப்பட்டன. கால்நடைகளுக்கான கொட்டகைகள் ஏற்படுத்தப்பட்டன. மீன் வளர்ப்புக் குட்டைகள் வெட்டப்பட்டன. இவையெல்லாமாகச் சேர்ந்து கிராமங்களின் முகங்கள் வெகுவாக மலர்ந்தன.

குறைகள் இல்லாமல் இல்லை. நிதி பற்றாகுறையால் குறைவான கூலி வழங்கப்பட்டதுண்டு. சிலர் திட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் அல்லது சுயநல நோக்கத்தோடு புல்டோசர், கிரேன், டிராக்டர் போன்றவற்றை இறக்கிவிடுவதுண்டு. வேலை நாட்கள் குறைக்கப்படுவதுண்டு. இதையெல்லாம் எதிர்த்து மக்கள் போராட்டக் களம் காண்பதுண்டு. போராட்டங்களால் தீர்வுகள் காணப்பட்டதுண்டு.

இந்தத் திட்டத்தைத் தொடக்கத்திலிருந்தே பாஜக அலட்சியப்படுத்துகிறது. அதன் எதிரொலியாகப் பல பெரும் நில உடைமையாளர்கள், இத்திட்டத்தால்  விவசாய வேலைக்கான தொழிலாளர்கள் குறைந்துவிட்டார்கள் என்று பேசுகின்றனர். சிலர், இத்திட்டத்தால் மக்கள் சோம்பேறியாகிவிட்டார்கள் என்று    கொச்சைப்படுத்துகின்றனர்.

உரிமை பறிப்பு

எனவே, இது பெயர் மாற்றப் பிரச்சினை மட்டுமல்ல, சட்டத்தின் அடிப்படை லட்சியமே சிதைக்கப்படுவதுடன் தொடர்புடையது. குறிப்பாக இது மக்களின் சட்டப்படியான  வேலை உரிமையை ஒழித்துவிடும் என்று அருணாராய். நிகில் டே உள்ளிட்ட சமூக நலச் செயல்பாட்டாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

“உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய சட்டம் உண்மையில் சீர்திருத்தமல்ல, மாறாகப் பல்லாண்டு காலமாகத் தொழிலாளர்கள் போராடி வென்ற ஜனநாயக உரிமைகளையும், அரசமைப்பு சாசனம் அளித்துள்ள உத்தரவாதங்களையும் நீக்குகிற நடவடிக்கையே,” என்று தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டப் போராட்டக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. வேலை உரிமையை உத்திரவாதப்படுத்தும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, சட்டத்தை அகற்றும் முயற்சியே இது என்கிறார்கள்.

ஒப்பீட்டு அட்டவனை

வகைமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்விக்சித் பாரத் கிராமின் ரோஜ்கர்
நிதிப் பகிர்வு100% ஒன்றிய அரசு60% ஒன்றியம், 40% மாநிலம்
அடிப்படை அணுகல்சட்டப்பூர்வ உரிமையை அடிப்படையாகக் கொண்ட வேலைஇலக்கு சார்ந்த திட்டம் என வரம்புகள் வர வாய்ப்பு.
நிர்வாக அதிகாரம்மாநிலங்களின் தன்னாட்சிக்கு மரியாதைமையத்தில் குவிக்கப்படும் அதிகாரம்

 

காந்தியின் பெயரிலான சட்டப்படி, மாநிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான 100 சதவீத நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். ஆனால், புதிய சட்டத்தின் கீழ் 60 சதவீத நிதியைத்தான் ஒன்றியம் தருமாம். 40 சதவீதத்தை மாநில அரசுகள் கொடுக்க வேண்டுமாம். மாநிலங்களிள் தோள்களில் ஏற்றப்படுகிற பெரும் சுமை.

தாக்கப்படும் தன்னாட்சி

தற்போதைய  அனைத்து ஊரகப் பகுதிகளிலும் அந்தந்த மாநில அரசால் செயல்படுத்தப்படுகிறது. இனி, எந்தெந்த வட்டாரங்களில்  செயல்படுத்துவதென முடிவு செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. ஆக, இது மாநில சுயாட்சியின் மீதான தாக்குதலுமாகிறது.

மகாத்மா திட்டத்தின்படி, வேலை கோருகிறவர்கள்  தாங்களாகப் பதிவு செய்து கொண்டாலே போதும், வேலையைப் பெற முடியும். திட்டத்தின் சிறப்பான கூறு இது. ‘வளர்ந்த’ திட்டத்திலோ, தொழிலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு  வரம்புகள் நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது என்றும் தொழிலாளர் உரிமை அக்கறையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்னொரு கோணத்திலும் எச்சரிக்கிறார் நிகில் டே. “கோவிட்–19 நெருக்கடி தொற்றியிருந்த காலக்கட்டத்தில், கிராம மக்களுக்குப் பொருளாதார அரணாக இருந்தது இந்தத் திட்டம்தான். அந்தப் பாதுகாப்பு விலக்கப்படுமானால், எதிர்காலத்தில் அதே போன்ற நிலைமைகள் சூழ்கிறபோது மக்கள் கைவிடப்படுகிற  அபாயம் இருக்கிறது,” என்கிறார்.

“60 : 40 என்ற நிதிப் பகிர்வு மூலம் மாநில அரசுகளை நிதி நெருக்கடியில் தள்ளி, திட்டத்தையே ஓழிக்க மத்திய அரசு துவக்கமிடுகிறது. இது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயல்” என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. “கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல்,” என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது. மேற்கு வங்கத்திற்கான நிதி பெருமளவுக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், புதிய சட்டம் கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களை மிகவும் பாதிக்கும் என்று திரிணமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.

வேலை நாட்கள் 100 என்றிருப்பது 125 ஆக உயர்த்தப்படுவதானது பல ஆக்கப்பூர்வமான அம்சங்கள் மாற்றப்படுவதை மறைக்கிற உத்தியாகவே பார்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, “ஊரகப் பகுதிகளில் உச்ச அளவில் விவசாய வேலைகள் நடைபெறக்கூடிய பருவங்களில், 60 நாட்கள் வரையில் திட்டத்தின் கீழ் வேலையளிப்பதை நிறுத்தி வைக்க அனுமதிக்கப்படுகிறது. இது, உழைக்கும் கிராம மக்கள் நில உடைமையாளர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தும்,” என்று மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில், “வளர்ந்த பாரதம் என்ற பெயரில் வறுமையை மறைக்க மத்திய அரசு முயல்கிறது. வேலைக்கான உத்தரவாதத்தை நீக்கிவிட்டு, அதை ஒரு சாதாரண இலக்காக மாற்றுவது ஆபத்தானது,” என்கிறது. பாஜக கூட்டாளி அதிமுக கூட தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.

வரலாற்றுக்கு ஒரு பொறுப்பு

“பெயரில் என்ன இருக்கிறது” என்று கேட்கிறார்கள். சரி தான்! அப்படியானால் இப்போதைய பெயரே நீடிப்பதில் என்ன இருக்கிறது? சொல்லப் போனால் பெயரில் எல்லாமே இருக்கிறது.

சட்டப்படியான உரிமைகள், வாய்ப்புகள் அனைத்தும் அப்படியே இருக்க, கூடுதல் நன்மைகளுடன் புதிய சட்டம் கொண்டு வந்து, அதற்கு ஏதோவொரு பெயர் வைக்கப்படுகிறது என்றால் கூட, இக் கேள்வியில் கொஞ்சம் நியாயம் இருப்பதாக கொள்ளலாம். அப்போது கூட,  இப்போதைய பெயரே நீடிப்பதில் என்ன இருக்கிறது? ஆனால், மகாத்மா காந்தி எனும் அடையாளத்தை அழிக்கிற அடி நோக்கத்தோடும், ஊரகத் தொழிலாளர்களின் உரிமையை மறுக்கும் உள்நோக்கத்தோடும், கூடுதல் சுமைகளை மாநிலங்கள் மீது ஏற்றிவிட்டு, அதிகாரத்தைக் குவிக்கும் மைய நோக்கத்தோடும், “125” நாள் என்ற இனிப்பைத் தடவித் தரப்படும் நஞ்செனத் தெரிகிற போது, இக்கேள்வி தள்ளுபடியாகிறது. அதே போல் புதிய சட்டத்தையும் அடையாள அழிப்புப் பெயர் மாற்ற அரசியலையும் வரலாறு தள்ளுபடி செய்யும்.

கட்டுரையாளர்; அ. குமரேசன்

மூத்த பத்திரிகையாளர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time