மகாத்மா காந்தி எப்போதுமே இவர்களுக்கு சிம்ம சொப்பனம் தான்!
உயிரோடு இருக்கும் போதும் ஓயாது எதிர்த்தார்கள்!
பல முறை கொலை செய்ய முயன்று தான், இறுதியில் முடித்தார்கள்!
சங்கிகள் ராமருக்கு சனாதன விசேம் போட்டனர், காந்தியோ சாந்த சொருபியாக மாற்றினார்!
சங்கிகள் ராமரை பார்ப்பனர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்ட சத்திரியனாக காண்பித்தார்கள், காந்தியோ கடையனுக்கும் கருணை காட்டும் கருணாமூர்த்தியாக மாற்றினார்!
சங்கிகள் ராமரை சூத்திரர்களை கொல்லும் ஆக்ரோச வீரராக்கினார்கள், காந்தியோ ராமரை அகிம்ஷா மூர்த்தியாக மக்கள் மனங்களில் விதைத்தார்!
ஆகா, நம் முக்கியமான ஆயுதத்தையே காந்தி, முனை மழுங்க வைக்கிறாரே.. என்று அவர் கதையை முடித்தனர்…!
ஆனால், காந்தியின் சமரச சன்மார்க்க சிந்தனைகளோ, ஒரு முடிவுறா தொடர்கதையாக வளர்ந்து விஸ்வரூபம் எடுக்கிறது…!
வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் உலகத் தலைவர்கள் எல்லாம் சபர்மதி ஆஸ்ரமம் சென்று காந்தியை வணங்குவதை சகிக்க முடியாமல் காந்தியின் அடையாளங்களை அழிக்க சபர்மதி ஆஸ்ரமத்தை சிதைத்து புனருத்தாரணம் செய்வதாகச் சொல்லி அவரது உண்மையான அடையாளங்களை புதைத்தனர்.
உ.பியில் காந்தியின் சீடர் வினோபாவே நிறுவிய சர்வோதய நிறுவன இடத்தை புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். அங்கிருந்த காந்தியின் சீடர்களை கைது செய்தனர்.
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் வாழ்கிறது என்ற காந்தியின் நினைவாக கிராமப்புற ஏழைகளுக்கு வேலை வாய்ப்பளிக்கும் திட்டமான ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு சூட்டப்பட்ட தேசத் தந்தையின் பெயரை தற்போது தூக்கி விட்டனர்.

காந்தியை வெளிப்படையாக எதிர்க்கவும் முடியவில்லை, முற்றாக அழிக்கவும் முடியவில்லை…என்பதால், ஏழைகளின் நெஞ்சில் வீற்றிருக்கும் அந்த ஏந்தலை அழிக்க, ஏதேதோ முயற்சிகளை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.
என்ன செய்வது? கோட்சேவின் குண்டு காந்தியின் உடல் சுமந்த உருவத்தைத் தான் அழித்தது. ஆனால், காந்தியின் உள்ளம் சுமந்த சித்தாந்ததை அழிக்க முடியவில்லை. அது பன்மடங்கு விஸ்வரூபம் எடுத்து சர்வ திசைகளிலும் வியாப்பித்து சங்கிகளை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது.
காந்தியின் பொக்கை வாய் சிரிப்பு கூட, சங்கிகளின் ராஜ்ஜியத்தை இடிக்க வந்த பொக்லைன் இயந்திரமாக அவர்களின் கண்களுக்கு காட்சி தருகிறது.

பேனரில் உள்ள காந்தியின் உருவம் கூட சித்த பிரம்மை கொண்ட சங்கிகளுக்கு சிம்ம சொப்பனமாக காட்சி தருகிறது. எனவே, அவரது உருவபடத்தைக் கூட சுட்டுத் தள்ளுகின்றனர்!
இருந்து உலவிய காந்தியை விடவும், இறந்தும் உயிர் வாழும் காந்தியின் ஆன்ம பலம் மக்களை ஆகர்ஷித்தும், சங்கிகளை அச்சுறுத்தியும் வருவது தான் அகிம்சையின் ஆகப் பெரும் சக்தியாகும்.
Also read
ஆட்சியாளர்களின் அதிகாரமும், புகழும் ஆளும் வரை மட்டுமே. ஆனால், இந்த அகிம்சாமூர்த்தியின் புகழோ, இந்த அகிலம் இருக்கும் வரை- மனிதகுலம் வாழும் வரை- பிரகாசித்துக் கொண்டே இருக்கும்.
சாவித்திரி கண்ணன்















Leave a Reply