கட்சித் தலைவருக்கு உள்கட்சி தேர்தலும் இல்லை, கட்சியின் உயர் நிலைக் குழுவாலும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. உட் கட்சி ஜனநாயகத்தில் உன்னதமாக திகழ்கிறோம் என்று பீத்திக் கொண்ட பாஜக ஆட்சியிலும், கட்சியிலும் சகல மட்டங்களிலும் இந்த இருவர் வைத்ததே சட்டமாக மாறிய காலச் சூழல், ஆர்.எஸ்.எஸ்சை கரையில் ஒதுங்க வைத்துவிட்டதா?
ஜனசங்கத்தில் இருந்து பாரதீய ஜனதாவாக உருவெடுத்தது முதல் , கட்சித் தலைவராக யார் வரவேண்டும் என தீர்மானிப்பது ஆர்எஸ்எஸ் தலைமை தான்.
பாஜ கவின் சட்டவிதிகளின்படி அக்கட்சியின் தலைவரை தேசீய கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் மாநில குழுக்களின் உறுப்பினர்கள் அடங்கிய அமைப்பே தேர்ந்து எடுக்கும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் அப்பதவியில் 3ஆண்டுகாலம் நீடிக்கலாம் .
இந்த விதி 2012ல் மாற்றப்பட்டு ஒருவர் இரண்டு முறை ( ஆறு ஆண்டுகள்) தலைவராக நீடிக்க வழிவகை செய்ய பட்டது.
முதலில் அடல் பிகாரி வாஜ்பாய் 1980 முதல் 1986 வரை இருமுறை தலைவராக இருந்தார்.
அதன்பின் எல் கே . அத்வானி இருமுறை -1986-1991 தலைவராகவும்
முரளி மனோகர் ஜோஷி 1991-1993 வரையிலும்
பிறகு மீண்டும் அத்வானி 1998 வரை தலைவராக நீடித்தார்.
இவர்கள் எல்லாம் ஆர் எஸ் எஸ்ஸின் உறுப்பினர்கள் ஆக இருந்தாலும், மிகவும் பிரபலமான தலைவர்கள். ராஜ்நாத் சிங் ,நித்தின் கட்கரி, வெங்கையா நாயடு போன்றோரையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.
ஆனால், பங்காரு லகஷமண் ,தமிழகத்தை சார்ந்த ஜனா. கிருஷ்ணமூர்த்தி , குஷாபு தாக்கரே போன்றோர் மக்கள் தலைவர்களாக இல்லாவிடினும், ஆர் எஸ் எஸ் தலைமை விரும்பிய வண்ணம் பாஜ கட்சி வழிநடத்த நியமிக்கப்பட்ட பிரச்சாரகர்கள்.
ஆனால் மோடி பிரதமரானவுடன் பாஜகவின் சீனியர்கள் ஓரங்கட்ட பட்டனர், பாராளுமன்ற தலைமைக்குழு (parliamentary board) செல்லாக் காசாக மாற்றப்பட்டது,

தேசீய குழு (National Council) காணாமற் போனது, மாநிலக்குழுக்கள் முறையாக தேர்வு செய்யப்படவில்லை. மொத்தத்தில் செல்வாக்குள்ள மாநில தலைவர்கள் , மத்திய தலைவர்கள் ஓரங்கட்ட பட்டனர்.
வசுந்தரா தேவி, எதியூரப்பா, நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுஹான் போன்றோர் தூக்கி எறியப்பட்டனர் அல்லது பேச்சில்லா மந்திரிகளாக்கப்பட்டனர். கட்சி பொறுப்புகளில் இருந்து ஒதுக்கப்பட்டனர்.
இப்பொழுது தலைவராக உள்ள ஜே பி நட்டாவின் பதவிக் காலம் முடிந்து மூன்று ஆண்டுகள் கழித்து , தேர்தல் இல்லாமல், இதுவரை கடைபிடித்துவந்த நடைமுறைகளை தூர எறிந்துவிட்டு, இந்த நியமனத்தை இருவர் கூட்டணி அறிவித்துள்ளது.. பீகார் மாநிலத்தில் அமைச்சராக இருக்கும் நிதின் நபின் என்பவர் அகில இந்திய செயல் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜனவரியில் இவர் முறையாக கட்சித் தலைவராக ஆக்கப்படுவார் என செய்திகள் கூறுகின்றன.
யார் இந்த நிதின் நபின் ?
பீகாரில் அமைச்சர் பொறுப்பிலிருக்கும் நிதின் நபின் , ‘காயஸ்தா’ என்ற உயர் சாதியைச் சேர்ந்தவர். பீகாரில் உள்ள ஆதிக்க சாதிகளான பூமிஹார்,ராஜ்புத் மற்றும் பிராமண சமூகத்தினர் கடந்த பத்து ஆண்டுகளாக பாஜக வின் பின்னால் அதன் இந்துத்துவ முன்னெடுப்பிற்காக அணி திரண்டு வாக்களிக்கின்றனர் . அதே வேளையில் பிற்படுத்த பட்ட சாதிகளில் யாதவ சமூகத்தை ராஷ்டிரீய ஜனதா தளமும் , மிகவும் பிறபடுத்த பட்ட சக்திகளான குர்மி , மல்லா, தெல்லி, நய் போன ற நூற்றுக்கணக்கான சமூகங்களை
ஐக்கிய ஜனதா தளமும் அதன் தலைவர் நித்திஷ் குமாரும் பிரதிபலிக்கின்றனர் . நிதிஷ்குமாரின் அரசியல் காலம் முடிவுக்கு வரும் வேளையில் அவரது வாக்கு வங்கியை
பாரதீய ஜனதா கட்சியின் தலைவராகி நிதின் நபினால் ஈர்க்க முடியுமா என்பது தெரியவில்லை? பின் எதற்கு இந்த முயற்சி?

பா ஜ கவின் தலைவராக யாரை நியமிப்பது என்பதைவிட, பாஜக தலைவரை நியமிப்பது யார்? ஆர் எஸ் எஸ் தலைமையா? அல்லது ‘குஜராத் கேங் ‘ என்று அழைக்கப்படும் மோடி- ஷா கும்பலா? என்பதில் வெகுநாளாக இழுபறி இருந்து வந்தது.
ஜே பி நட்டா , 2024 தேர்தலுக்கு முன்னர், ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கெதிராக கருத்து கூறியதால்தான், ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர் தேர்தல் வேலை செய்ய மறுத்ததால் தான் மோடி 240 இடங்களில் மட்டும் வென்று கூட்டணி அமைக்க நேர்ந்தது. அவரை தக்க சமயத்தில் ஆர் எஸ் எஸ் கைகழுவி விடும் என பலர் கதையளந்தனர் ,
பல ஊடக வருடிகளும் ஆர் எஸ் எஸ்ஸின் புகழ்பாடி அந்த திருநாளுக்காக காத்திருந்தனர். மோடி நாக்பூர் சென்றதற்கும் – மோடி பணிந்துவிட்டார் என – காரணக்கதைகள் கட்டினர்.
ஆனால் அவற்றை தகர்த்து தான் இருக்கும் வரை பாஜ க ஆட்சியிலும் கட்சி யிலும் தான் கூறுவதே சட்டம் என்று சவால் விட்டுள்ளார் மோடி. ராஜஸ்தான், குஜராத் மத்திய பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட, சத்தீஸ்கர் என அனைத்து மாநிலங்களிலும் பெயர் தெரியாத நபர்களை முதல்வர்களாக நியமித்து தனது ஆளுமையை நிரூபித்த மோடி-ஷா இப்பொழுத்து
பாஜக வின் தலைவரும் தங்களது கைப்பாவை தான் என உலகிற்கு உணர்த்தியுள்ளனர்!
இதனால்தான் ஜே பி நட்டாவை இத்தனைநாள மாற்றாமல் இருந்தனர், 2024 தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தேர்தல் திருட்டு மூலம் மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் பீகார் மாநில தேர்தல்களில் சரி செய்துவிட்ட மோடி புது தெம்பு பெற்றவராக ஆர் எஸ் எஸ் சை எதிர் கொண்டுவருகிறார். மோடியின் ஒரே உறுத்தல் யோகி தான், அவரை ஓரங்கட்ட்டும் மோடியின் முயற்சிகள் இது வரை பலிக்கவில்லை. ஆனால், மோகன் பகவத்தின் இடம் என்ன என்று மோடி காட்டிவிட்டார்.

மற்ற கட்சிகளையெல்லாம் குடும்ப கட்சி என்றும், அங்குள்ள தலைவர்களெல்லாம் நியமிக்கபடுபவர்கள் தான் என்றும் தாங்கள் வித்தியாசமானவர்கள் என்று மாரடிக்கும் பா ஜ க வினர் இப் பொழுது செயல் தலைவராக நித்தின் என்பவரை உள் கட்சித் தேற்தல் மூலம் தேர்ந்தெடுக்கவில்லை, “ நியமனம்தான் “ செய்துள்ளனர். நியமனம் செய்ததும் அறிவிப்பு வந்ததும் என்னவோ
உயர்மட்டக்குழுவின் பேரால்தான் என்றாலும் இதற்கு பின்னால் இருப்பது மோடி- ஷா என்றஇருவர்களே என்பதை ஊரறியும்! அக்கட்சியினரும் அறிவர்.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி , அவர்களால் தேர்வு செய்யப்படாமல் தேசீய ஜனநாய கூட்டணியின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டு, பிரதமர் பதவியேற்ற மோடியின் “ஜனநாயகப் பாங்கு” அனைவரும் அறிந்த ஒன்றே!
நிதின் நிபின் என்பவர் முன்னாள் பா ஜ க எம்எல்ஏ, நபின் கிஷோர் சின்காவின் புதல்வராவார்.
உலகிலேயே மிகப் பெரிய தொண்டு நிறுவனம் (NGO) ஆர் எஸ் எஸ் அமைப்பு தான் என மோடி பெருமை பேசினாலும், ஆர் எஸ எஸ் தான் பா ஜ க கவின் தலைவரை தீர்மானிக்கும் என்ற பழைய வழக்கத்தை முற்றிலும் தகர்த்துவிட்டனர் குஜராத் இரட்டையர்களான மோடியும் ஷாவும்.
நீண்ட நாட்களாக நடந்துவந்த இந்த பனிப்போர் – மோடி பகவத் இடையில் நடந்த இழுபறி இன்று சொந்த மாநிலத்திற்கே தலைவராக முடியாத நிதின் நிபினை மோடியும் ஷாவும் நியமித்து இருப்பதில் முடிந்துள்ளது . இது எதை காட்டுகிறது?
2025 -ல் மோடிக்கு வயது 75 ஆகி விடும், அதற்கு பின் ஆர் எஸ் எஸ் மோடியை கழட்டி விட்டுவிடும் என்றும், அவர் பதவி விலகுவார் என்றார்கள். இது வரை நடந்து வந்த தனிநபர் துதியை ஆர் எஸ் எஸ் உடைத் தெரியும் என்று கதையளந்தவர்கள், ஆர் எஸ் எஸ்ஸின் அருமை பெருமை மற்றும் அதன் கலாச்சார புண்ணிய குணாதிசயங்களை விதந்தோதி வந்தார்கள்! இந்த பக்தர்கள் இன்று மோடி கொடுத்துள்ள அடிக்கு என்ன பதில் கூறுவார்கள்?
அரசு அதிகாரத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலும் மோடி இருந்ததால் பதவியும் , சுகமும் அதிகாரமும் பாதுகாப்பும் , பணமும் பெற்ற கார்யகர்த்தாக்களும், சத்சங்சலக்குகளும் மோடியின் மெகா ஊழலில் – ரபேலில் தொடங்கி, தேர்தல் பத்திரம் வரையான ஊழல்களில்- ஊறி திளைத்துள்ள நிலையில் மோடியை எதிர்க்க துணிபவர் எவர் ?
Also read
ஜனநாயகத்தையும் மக்களின் உரிமைகளையும் மோடி அரசு கபளீகரம் செய்வதை தடுக்காத ஆர் எஸ் எஸ் என்ற கலாச்சார இயக்கம் இருப்பதால் யாருக்கு என்ன பயன்? இவர்கள் எந்த கலாச்சார மேன்மையை நிலை நாட்ட போகிறார்கள்? எதற்கு குருவாக தங்களை கருதுகின்றனர்?
மோடி அமைத்துள்ள இந்த ராஜ்ஜியத்தில் மோடி அடித்த கொள்ளையில் இவர்களும் பங்காளிகளே ! ஆர் எஸ் எஸ் கும்பலும் மோடியின் பக்தர்களே என்பதில் எவருக்கும் ஐயமில்லை!
ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கோ இதில் வெட்கமில்லை!
ஆக்டோபஸ் போல பரந்து விரிந்து வளர்ந்திருந்தாலும், ரகசியக் கும்பலான ஆர் எஸ் எஸ் ஸின் பண வரவுகளின் ஊற்றுக்கண் மோடி அரசு தான் . அத்தகைய ஊற்றுக் கண்ணை (ஊழல் பணத்தை, அதிகார சுகத்தை) நூற்றாண்டு கொண்டாடும் வேளையில் சிதைத்திட விரும்புவார்களா?
ச.அருணாசலம்














ஆர்எஸ்எஸ் அதன் உள்கட்டமைப்பால் அழியாது. ஆனால் அதன் சமூக பொருளாதார கொள்கைதான் அது அதற்கே தோன்டிக்கொள்ளும் மமரப்படுக்கை.
கேடுவரும் பின்னே!
மதி
கெட்டு வரும் முன்னே!