டேலர் ஸ்விப்டை (36) அமெரிக்க பாப் பாடகி என்பதை விடவும் அகில உலக பாடகி எனலாம். ஸ்விப்டின் தாக்கமும், செல்வாக்கும் பிரமிக்கத்தக்கது. இவரது இசை நிகழ்சிக்கு லட்சக்கணக்கில் திரளும் ரசிகர்களும், வசூலாகும் கோடிகளும் புதிய சாதனையை எட்டியுள்ள இந்த டிஜிட்டல் யுகத்தில் சைபர் தாக்குதலில் இருந்து தன்னை தற்காக்கும் உத்திகள் வியப்பில் ஆழ்த்துகின்றன;
20 ஆண்டுகளாக இசை உலகை கலக்கி வரும் டேலர் ஸ்விபிடின் செல்வாக்கு, இன்ஸ்டாவிலும் டிக்டாக்கிலும், கோலோச்சும் நவீன பிரபலங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளும் அளவுக்கு இருக்கிறது! பல முன்னணி பாப் பாடகர்களை பொறாமை கொள்ள வைக்கும் அளவுக்கு இசை உலகில் அவரது புகழ் கொடி பறக்கிறது.
பாடல்களை தானே எழுதிப் பாடும் திறன் கொண்டவர் ஸ்விப்ட்! மேடையில் இவர் ஆடிப் பாடுவதை பார்க்கவும், கேட்கவும் அவரது ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர். ஸ்விப்ட் ரசிகர்களை வெறும் ரசிகர்கள் என்று சொல்லி விட முடியாது. அபிமானத்திலும், ஈடுபாட்டிலும் அவர்கள் ஸ்விபிடீஸ் என குறிப்பிடப்படும் தனி ரகம்.
ஸ்விப்ட் புகழ்
இவரது இசை நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விடுகின்றனர். அதில் ஆயிரக்கணக்கானோர் ஸ்விப்டை காண்பதற்காக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் முன்னதாக கூடாரம் அமைத்து காத்து கிடக்கின்றனர். இசை நிகழ்ச்சி டிக்கெட்டிற்காக டாலர்களை கொட்டத் தயாராக உள்ளனர். பல நூறு மைல் பறந்து வந்து ஓட்டல்களில் தங்கி, அவரை தரிசிக்கவும் ஆயிரக்கணக்கானோர் தயாராக இருக்கின்றனர்.
நம்மூரில் நடந்தால் பேரணி, நின்றால் மாநாடு என அரசியல் பரப்பில் கூறப்படுவது உண்டு அல்லவா?, அது போல தான் ஸ்விப்ட் சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஈராஸ் இசை பயணத்தை, டைம் பத்திரிகை வர்ணித்திருந்தது. இவரது நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் எல்லாம் உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஓகோவென்று உயர்கிறது. சரிந்து கிடந்த அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தக் கூடியதாக ஸ்விப்டின் இசை பயணத்தை டைம் கட்டுரை புகழ்ந்து தள்ளியிருந்தது. (இதில் சுமார் 200 மில்லியன் டாலர்கள் வருமானமாம்!)

ஸ்விப்டி இசை நிகழ்ச்சியின் பொருளாதார தாக்கம் தொடர்பான டைம் கட்டுரை தந்துள்ள புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன.
இளசுகளின் மனதில் ..
ஸ்விப்டின் நட்சத்திர செல்வாக்கு பற்றி இணையம் தரும் தகவல்கள் இன்னும் பிரமிக்க வைக்கிறது. அவரது இசையின் தாக்கம் அதி உச்சத்தில் இருப்பதை அறிய முடிகிறது. இக்கால இளசுகள் அவரது இசைக்கு உருகி வழிகின்றனர். இளம் மனதில் வெளிப்படும் கோப தாபங்களை, ஏக்கங்களை, இன்னும் பிற உணர்வுகள் எல்லாம் ஸ்விப்ட் பாடல்களில் வெளிப்படுவதால் அவரது ரசிகர்கள் சொக்கிப் போகின்றனர்.
ஸ்விப்ட்டின் தாக்கத்தை இன்னும் மேலதிகமாக அறிய, அவரது பாடல்களை ரசிக்கும் இக்கால இளசுகளிடம் பேசிப் பார்க்கவும்.
நிற்க, ஸ்விப்ட் இசை உலகில் மட்டும் முன்னணியில் இருக்கவில்லை, நவின தொழில் நுட்ப பரப்பிலும் முன்னோடியாக இருப்பதை சொல்வதே இந்தக் கட்டுரையின் மைய அம்சம். அதிலும், குறிப்பாக தொழில்நுட்பத்தின் தாக்கத்தை உணர்த்துவதில் அவர் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
அவரது பெயரில் நடத்தப்படும் சைபர் பாதுகாப்பு டிவிட்டர் ( எக்ஸ்) பக்கமே இதற்கு உதாரணம். இன்போசெக் டேலர் ஸ்விப்ட் (InfoSec Taylor Swift) எனும் அந்த டிவிட்டர் பக்கத்தை பார்ப்பதற்கு முன், டேலர் ஸ்விபிடின் தொழில் நுட்ப முகத்தை தெரிந்து கொள்வோம்.

ஈஊ டேலர் ஸ்விப்டின் புகழாலும், செல்வாக்காலும் உண்டான இன்னொரு முகம் என்றாலும், இது நம் காலத்தின் இருண்ட பக்கத்தை உணர்த்தும் முகமாகவே இருக்கிறது!
தனியுரிமை கோட்டை
ஆம், டேலர் ஸ்விப்ட் பிரைவசியை காப்பதில் தீவிரம் கொண்டவராக அறியப்படுகிறார். அவரது இசை நிகழ்ச்சிகளில் ரசிகர்களுக்கு ராஜ மரியாதை என்றாலும், தீவிர கண்காணிப்பும், கட்டுப்பாடுகளும் இருக்கும். துரத்தி துரத்தி படம் எடுக்கும் புகைப்பட கலைஞர்கள் அத்துமீறி நுழைந்து ஏடாகூடமாக படம் எடுத்து விட முடியாது. அதில் மிக கவனமாக இருப்பார்கள்.
ஸ்விப்டிற்கு பாதுகாவலர்கள் உண்டு. அவரை அத்தனை எளிதாக யாரும் நெருங்க முடியாது. ஆனால், ரசிகர்களுக்கு இனிமையானவர்.
அவரது பாடல் ஆல்பங்கள் கோடியில் விற்பனையாகின்றன என்பதால், அவை தொடர்பான தகவலோ, பாடல் வரிகளோ கசிந்துவிடக் கூடாது என அதி தீவிர கண்காணிப்பு இருக்கும். ஒரு முறை, அவரது பாடல் ஆல்பத்திற்கான வீடியோ படப்பிடிப்பு, ஏதோ ராணுவ நிகழ்ச்சி ஒத்திகை போல நடந்ததாக ஒரு அமெரிக்க ஊடகம் எழுதியது.
ஸ்விப்டுடன் இணைந்து செயல்பட்ட இசை கலைஞர் ஒருவர், இதற்கான பாடல் தனி சூட்கேசில் ஒரு ஐபோனில் சேமிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டு இசைக்கப்பட்டதாகவும், பின்னர் அதே சூட்கேசில் எடுத்து செல்லப்பட்டதாகவும் அந்த கட்டுரையில் கூறியிருக்கிறார்.

ஜன்னல்கள் எச்சரிக்கை
அது மட்டும் அல்ல, அந்த கட்டுரைக்காக அளித்த பேட்டியில் ஸ்விப்ட், ஆபாசமாக படம் எடுக்கப்படுவதற்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளையும் விவரித்திருந்தார். வீட்டில் இருக்கும் போது கூட ஜன்னல்களை திறந்து வைத்து ஆட மாட்டேன் என்று கூறியிருந்தார். அத்தனை பாதுகாப்பு.
ஸ்விப்ட் தரப்பில் மேற்கொள்ளும் தனியுரிமை பாதுகாப்பு நடவடிக்கைகளை விவரிக்கும் இந்த கட்டுரையை சுட்டிக் காட்டி, அவரது பெயரிலான சைபர் பாதுகாப்பு டிவிட்டர் பக்கத்தை அறிமுகம் செய்யும் கட்டுரையின் தலைப்பும் கவனிக்கத்தக்கது.
’டேலர் ஸ்விப்டின் சரியான நேரத்து தொழில்நுட்ப பேரச்சம்’. (Taylor Swift’s Timely Technoparanoia) இது தான் தலைப்பு.
ஆம், டேலர் ஸ்விப்ட் டிஜிட்டல் யுகத்தில் தனது தனியுரிமையை பாதுகாத்து கொள்வதற்காக மிகவும் தீவிரம் காட்டுகிறார் என்பதே விஷயம். இதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார். இசை நிகழ்ச்சியில், ஸ்டாக்கர்கள் எனப்படும் விஷமிகளை விலக்கி வைக்க, முகமறிதல் நுட்பத்தையும் அவரது தரப்பில் பயன்படுத்தியுள்ளனர்.
வர்த்தக நோக்கில் விளம்பர வலை விரிக்கவும், இணைய தாக்குதல் நடத்த விஷமத்தனமான நோக்கிலும் தனிமனிதர்கள் தரவுகள் தொடர்ச்சியாக சேகரிக்கப்பட்டு, களவாடப்பட்டு வரும் பின்னணியில் தனியுரிமையை காப்பதற்காக ஸ்விப்ட் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தரவு காப்போம்
ஒரு விதத்தில் , இதை செல்வாக்கான பாடகியின் தன்னலம் காக்கும் நடவடிக்கையாக என்றாலும், இணைய பரப்பில் தரவுகள் தொடர்ந்து வேட்டையாடப்படும் சூழலில், தரவுகளை தற்காத்து கொள்வதை உணர்த்தும் செயலாகவும் இதை கருத வேண்டும். எனவே தான், ஸ்விப்டின் தொழில்நுட்ப அச்சம் கொண்டாடப்படுகிறது.
இந்த பின்னணியில் தான், சைபர் பாதுகாப்பு அம்சங்களுக்காக மேலே குறிப்பிடப்பட்ட டிவிட்டர் பக்கம் டேலர் ஸ்விப்ட் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்திற்கும் ஸ்விப்டிற்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும், அவரது பெயரை பயன்படுத்தி இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த டிவிட்டர் பக்கம் முன்னிறுத்துகிறது.
ஸ்விப்டின் செல்வாக்கு மற்றும் அவரது தனியுரிமைக்காக சைபர் தாக்குதலுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இந்த டிவிட்டர் பக்கம் தொடர்ச்சியாக பகிர்கிறது. ஸ்விப்ட் படங்கள், மீம்கள் மற்றும் அவரது மேற்கோள்கள் ஆகியவற்றோடு தரவு பாதுகாப்பையும் இந்த பக்கம் வலியுறுத்துகிறது.
தரவு பாதுகாப்பு என்பது ஸ்விப்ட் போன்ற பெரும் புகழ் பெற்றவர்களுக்கானது மட்டும் அல்ல, வர்த்தக நோக்கத்திலும், கண்காணிப்பு நோக்கிலும் சராசரி பயனாளிகளின் தரவுகள் இணைய வெளியில் பல தரப்பினரால் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், நம் தரவுகளை நாம் பாதுகாக்கும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே பாடகி ஸ்விப்ட் உணர்த்தும் பாடமாகும்.
- ஸ்விப்ட் தொழில்நுட்ப அச்சம் தொடர்பான கட்டுரையை வாசிக்க:https://grantland.com/hollywood-prospectus/taylor-swifts-timely-technoparanoia/
- ஸ்விப்ட் சைபார் பாதுகாப்பு அறிவுரைகள்:https://x.com/SwiftOnSecurity
கட்டுரையாளர் ; சைபர்சிம்மன்

நரசிம்மன் என்ற இயற்பெரைக் கொண்ட சைபர்சிம்மன், தமிழில், இணையம், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் குறித்து நீண்ட காலமாக எழுதி வருகிறார். இவை குறித்து நிறைய நூல்களை எழுதியுள்ள இவர் ‘இணையமலர்’ என்ற இதழின் ஆசிரியராகவும் உள்ளார்.















Leave a Reply