ஆன்மாவைத் தொடும் அற்புதப் படைப்பு!

-பீட்டர் துரைராஜ்

இந்த ஆண்டு (2026) இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்காக ஹோம்பவுண்ட்’ படத்தை அனுப்பியுள்ளனர்! முக்கியத்துவம் வாய்ந்த சமகால உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து – சாதி, மத தாக்கத்தை கடந்து – இரு இணைபிரியா நண்பர்களின் நட்பினூடாக –உருவான இந்த கலைப் படைப்பு சமூகத்திற்கு தரும் செய்திகள் நுட்பமானாவை;

2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, நூற்றுக்கணக்கான மைல்கள் கால்நடையாகத் தங்கள் ஊருக்குப் பயணம் செய்த இரு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது ஹோம்பவுண்ட் திரைப்படம்!  ‘மசான்’ (Masaan) திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நீரஜ் கய்வான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வட இந்தியாவில் உள்ள, ஒரு கிராமத்தில் வாழும் முகமது ஷாயிபும், சந்தன் குமாரும்  நணபர்கள். அவர்கள் இரயிலைப் பிடித்து, காவல் துறையில் சேர காவலர் தேர்வு எழுதச் செல்கிறார்கள். தேர்வு முடிவு இன்னும் வரவில்லை. எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.

ஷாயிபின் தந்தை, அவனை துபாய் போகச் சொல்லுகிறார். அவன் காவலர் ஆகும் கனவில் இருக்கிறான். அவனது பெயருக்கு எப்படி வேலை கிடைக்கும்!  அவன் துபாய்க்குப் போனால் தந்தையின், கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்ய முடியும். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குப் போகிறான். பணியிடத்தில் பாராமுகம், சந்தேகம், புறக்கணிப்பு போன்றவைகளை எதிர் கொள்கிறான். தொலைக்காட்சியில் கிரிக்கெட் விளையாட்டு ஓடும் போது ‘ஜோக்’ என்ற பெயரில் அவமானப்படுத்தப்படுகிறான்.

அவனது தாய் அன்போடு செய்து தரும் அல்வா அவர்களுக்கு, லாகூர் அல்வாவை ஒத்து இருக்கிறது. என்னதான் படித்து இருந்தாலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும் மனிதனிடம் இருக்கும் ‘சின்னபுத்தி’ போவதில்லை. பல எண்ணற்ற சிறு சம்பவங்கள் வருகின்றன. நம்மையே நமக்கு காட்டுகின்றன. இப்படிப்பட்ட மாந்தர்களை, அன்றாடம், நாம் காண இயலும்.

சந்தன் குமார் பட்டியல் இனத்தைச் சார்ந்தவன். அவனது தாய், பித்தவெடிப்புடன் காலில் செருப்பில்லாமல் வேலை செய்யும் கூலித் தொழிலாளி. ஒழுகும் வீடு. திருமணம் ஆக வேண்டிய நிலையில் இருக்கும் அக்கா. வயோதிக தந்தை. இவர்களின் ஊடாக ஒரு தலித் குடும்பம் வருகிறது.

இடைப்பட்ட காலத்தில்,  அவர்கள் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குப் போகிறார்கள். அப்பொழுது கொரானாவின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. 1,200 கி.மீ. தொலைவில் இருக்கும் அவர்கள் என்ன செய்வார்கள் ! ஊருக்கு  எப்படித்  திரும்புவார்கள். இது மீதி கதை.

உலகையே உலுக்கிய, கொரானாவைப் பற்றி இதுவரை திரைப்படங்கள் வரவில்லை. பீட் ( Bheed – கூட்டம்) என்ற ஒரு இந்திப்படம் வந்துள்ளது. கொரானா பற்றி ‘சொல்லும்படியான, ஆவணப்படங்கள் கூட வரவில்லை’ என்று கவலைப்படுகிறார் ஆவணப்பட இயக்குநரான ஆர்.பி. அமுதன். எனவே இந்தப் படம் வித்தியாசமானது.

படத்தின் காட்சிகள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. கொரோனா நேரத்தில் என்னவென்ன புரளிகளையெல்லாம் இந்த சமூகம் கிளப்பிவிட்டது. இது அரசு, நிர்வாகம், காவல் என யாரையும் விரலை உயர்த்தி குற்றம் சுமத்தவில்லை. எங்கோ ஒரு ஊரில், சோறில் உப்பு போட்டு ஊறுகாயை தொட்டு சாப்பிடும் இளைஞர்களை நமக்கு காட்டுகிறது. அவர்கள் நமக்குத் தம்பியாக இருக்கலாம்; மகனாக இருக்கலாம், பேரனாக இருக்கலாம். இந்த நினைவு நம்மை இழுத்துப் பிடிக்கிறது. மெதுவாகப் போனாலும் விடாமல் பார்க்க வைக்கிறது.

சாதாரண மக்களுக்கு சாதி, மதம் முக்கியமல்ல. அவர்கள் கண்ணுக்கு முன்பு தெரிவது கால்நடையாக நடக்கும் மனிதர்கள் தான். பித்தவெடிப்பு கால்களைக் கொண்ட ஒரு கிராமத்துப் பெண், எதிர்ப்பை மீறி உதவுகிறாள்.

இஷான் கட்டார் அபாரமாக நடித்துள்ளார். விஷால் ஜேத்வாவும் நன்றாக நடித்துள்ளார். தலித் –  முஸ்லிம் நண்பர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை இறுதிவரை செல்கிறது. படம் முடிந்தபின்பும் ஒற்றுமை தொடரும்; ஏனெனில் உச்சகட்டம் அப்படி இருக்கிறது. இதுதான் இந்தப் படத்தின் உயிர்ப்பும் கூட.  சந்தனின் அக்கா மூலமாக, தலித் சமூகத்திற்குள் இருக்கும் பெண் வருகிறாள்.  சந்தனுக்கு கிடைக்கும் கல்லூரிப் படிப்பு அவளுக்கு கிடைக்காது. இப்படி சாதி, மதம், பால் என பல திரைகளைப் பற்றி சொல்லாமல் சொல்கிறது.

அம்பேத்கர் படம், காட்சிகளில் இயல்பாக வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி இதில் நடித்து இருக்கிறார். சுதா என்ற பாத்திரமாக ஒருசில காட்சிகள் வந்தாலும் கச்சிதமாகப் பொருந்துகிறாள். சந்தனின் காதலியான அவள், அவனை கல்லூரியில் படிக்கச் சொல்லுகிறாள். சாதி மூலம் ஒதுக்கீடு பெறுவது ஓர் உரிமை என உணர வைக்கிறாள். அடையாளத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என சொல்லுகிறாள். அம்பேத்கர் சொல்லும் விடுதலைக் கூறுகள், போகிற போக்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புத்த முறைப்படி திருமணம் நடக்கிறது. இந்த வகையிலும் இது ஒரு வித்தியாசமான படம்.

அற்புதமான ஒரு இந்தி திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் நீரஜ் கைவான்.  இயல்பான ஒளிப்பதிவு;  கதாபாத்திரங்களோடு நாமும் பயணிக்கிறோம். ஓரிரு சொற்களே வசனங்களாக வருகின்றன. அவை திரைமொழியை உயர்த்திக் காட்டுகின்றன.  இந்தப்படம் பார்த்த அன்று இரவு எனக்கு தூக்கம் போய்விட்டது.

இரண்டு மணி நேரம் ஓடும் இப்படம் நெட்பிளிக்சில் உள்ளது. IMDb தரவரிசையில் 8 புள்ளிகள் கொடுத்துள்ளது. இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது பார்வையாளர்கள்  ஒன்பது நிமிடங்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்களாம். இது அதற்கு பொருத்தமானது ஒன்று தான்.

பஷரத் பீர் என்பவர் ‘நியூயார்க் டைம்ஸில்’ எழுதிய கட்டுரையின் தாக்கத்தால் கலைவடிவம் பெற்றதே  இப்படம் என்கிறார்கள்!

திரைப்பட விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time